இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0987இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:987)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?

மணக்குடவர் உரை: ....................................................

பரிமேலழகர் உரை: இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யக்கால் - தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்; சால்பு என்ன பயத்தது - அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து?
(சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது. ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: துன்பம் செய்தவருக்கும் இன்பம் செய்யாவிடின் நிறைகுணத்துக்கு என்ன பொருள்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் சால்பு என்ன பயத்ததோ.

பதவுரை: இன்னா-தீயவை; செய்தார்க்கும்-செய்தவர்க்கும்; இனியவே-இனிமையானவையாகவே; செய்யாக்கால்-செய்யாதபோது; என்ன-எத்தகைய; பயத்ததோ-பயனையுடையதோ, பயனைத் தரக்கூடியதோ; சால்பு-நிறைகுணம்.


இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: தமக்கு இன்னாத செய்தவர்கட்கும் இனியவற்றைச் செய்யாத காலத்து;
பரிதி: தமக்கு ஒருவர் பொல்லாங்கு செய்தால்தான் அவர்க்கு நல்ல காரியம் செய்யாதபோது;
காலிங்கர்: இன்னாங்கு செய்து ஒழுகுவார்க்கும் தாம் எப்பொழுதும் இனியவையே செய்யாத இடத்து;
பரிமேலழகர்: தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை அவர் இன்னாசெய்தற்கு இடனாதல் விளக்கி நின்றது.

'தமக்கு இன்னாதவற்றைச் செய்தார்க்கும் சால்புடையார் இனியவற்றைச் செய்யாராயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் இன்பம் தரும் செயல்களைச் செய்யாவிட்டால்', 'தமக்குத் துன்பம் செய்தவர்களுக்கும் இன்பமே செய்யாவிடின்', 'தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்யாத இடத்து', 'தமக்குத் தீயனவற்றைச் செய்தார்க்கும், நன்மையானவற்றைச் செய்யாவிட்டால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிமையானவற்றைச் செய்யாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

என்ன பயத்ததோ சால்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: சால்புடைமையால் பயன் யாதோ என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இன்னாதார்க்கும் இனியவை செய்ய வேண்டும் என்றது.
பரிதி: சான்றாண்மையால் என்ன பயன் என்றவாறு.
காலிங்கர்: மற்று என்னை பயன் உடையதோ, உலகத்துச் சான்றோர் தம் சால்புடைமை என்றவாறு.
பரிமேலழகர்: அச்சால்பு வேறு என்ன பயனை உடைத்து?
பரிமேலழகர் குறிப்புரை: ஓகாரம், அசை. வினா எதிர்மறைப் பொருட்டு. தாமும் இன்னா செய்வராயின், சால்பால் ஒரு பயனுமில்லை என்பதாம். இவை ஐந்து பாட்டானும் சிறப்பு வகையால் கூறப்பட்டது.)

'சால்புடைமையால் பயன் யாதோ' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நிறைகுணத்தால் உண்டாகும் பயனென்ன?', 'சான்றாண்மை என்ற பெருங் குணத்தினால் என்ன பயன்?', 'சால்பென்பதால் உண்டாகக் கூடிய பயன் யாது?', 'சால்பு என்ன பயனையுடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றாண்மைக் குணத்திற்கு என்ன பொருளாகும்? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிமையானவற்றைச் செய்யாவிட்டால் என்ன பயத்ததோ சால்பு? என்பது பாடலின் பொருள்.
'என்ன பயத்ததோ சால்பு' குறிப்பது என்ன?

தீயன செய்தார்க்கும் இரங்கி இனியவற்றைச் செய்வர் சான்றோர்.

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் சான்றோர் இனியவற்றைச் செய்யாவிட்டால் சால்பு என்பதற்கு என்ன பொருளோ?
நமக்கு ஒருவர் தீங்கு செய்துவிட்டால் நமக்கு உடனே சினம் உண்டாகிறது. பதிலுக்கு அத்தீங்கின் அளவாவது அவரை ஒறுக்க வேண்டும் என்று துடிக்கிறோம். இது மனித இயற்கை. பொதுவாக மக்கள் தாம் உறுப்பு இழந்தால் தனக்கு ஊறு விளைத்தவனது உறுப்பை நீக்கியும், பணம் இழந்தால் அத்துன்பத்துக் காரணமானவனுக்கு அதே துன்பம் உண்டாகவேண்டுமென்றும் விரும்பி அவனுக்கும் பணம் இழக்கச் செய்தும் மனத்தை ஆற்றிக்கொள்வர். இவ்விதம் வஞ்சம் தீர்க்கும் ஒறுத்தலை விரும்பாத குணம் சான்றோர்க்கு உண்டு. சினம் பொங்குமிடத்திலும், இரக்கமே காட்டுவர். அவர் தமக்குச் செய்யப்பட்ட தீயனவற்றைப் பொறுத்துக்கொண்டு தீமை புரிந்தார்க்கும் இனியனவே செய்வர்; இது அவர்களது ஒறுக்கும் நெறி. இவ்விதம் இயற்கைக்கு மாறாக நடந்து கொள்ளுவதற்கு நெஞ்சிலே உரம் வேண்டும்; ஆண்மையும் இருக்க வேண்டும். பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுக்கும் பண்பில் தோன்றும் மனத்திண்மை சால்புக் குணங்களில் ஒன்று.
மக்களிடை பகைமை வளராதிருப்பதற்காக வள்ளுவர் காட்டும் வழி இது. துன்பம் செய்தவனுக்கு இன்பம் செய்தால் அவன் நாணுவான். இத்தகைய நல்ல மனிதருக்கா கொடுமைகள் செய்தோம் என்று எண்ணி உள்ளம் வருந்துவான். இவ்விதம் இன்னா செய்தார்க்கு தீமை மறந்து நன்மை செய்து மற்றவர்க்கு எடுத்துக்காட்டாக நின்று சான்றோர் தீயோர்களை நல்வழிப்படுத்துவர். இது சான்றோர் வாழ்வின் அடிப்படையாகிறது.

இக்குறளில் 'உன்னை ஒருவன் வலது கன்னத்தில் அறைந்தால் உனது இடது கன்னத்தையும் காட்டு' என்ற இயேசு பெருமானது பொழிவு போன்று உள்ளது. கண்ணுக்குக்கண், பல்லுக்குப்பல் என்பன வன்முறைச் சமுதாயத்தின் கோட்பாடுகள், அவற்றால் பூசல் உண்டாகி போர் மூண்டு, அழிவுதான் மிஞ்சும். அன்பும் அமைதியும் பெருமையும் முன்னேற்றமும் வேண்டும் சான்றோர் நிறைந்த சமுதாயத்தில் துன்பத்திற்குத் துன்பம் என்பதற்கு இடமில்லை. நமக்குத் தீயன செய்பவனிடத்து பொறுமை காட்டி நன்மை செய்து இன்பமூட்டுவர் சான்றோர் என்கிறது குறள். தீமை செய்தவரை வெறுக்காது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அவர்களை மன்னித்து அவர்களுக்கு இனியவையே அவர் செய்வார். தாங்கிக் கொள்ளலும் மன்னித்து இனியவை செய்தலும் நல்வழிகள். கெடுதல் செய்தவர்க்கும் நல்லது செய்யாவிட்டால் என்ன பயன் சான்றாண்மையால்? 'தீங்கு செய்தவர்க்குத் தீங்கு செய்வதன் மூலம் தீமையை நீக்க இயலாது. பகைமையினைப் பகைமையினால் போக்க முடியாது. அன்பினால்தான் பகையினைத் தணித்தல் இயலும். நன்மை புரிதல் சான்றோர்க்கு இயல்பு. அவர் தனக்குத் தீமை செய்தவர்க்கும் இனியவையே செய்வார்.

'என்ன பயத்ததோ சால்பு' குறிப்பது என்ன?

இக்குறள் சான்றோர்க்குச் சொல்லப்பட்டது. தனக்கு தீமை செய்கிறவர்களுக்கும் இனியன செய்யாமல் போனால் சான்றாண்மை என்கிற நல்ல குணம் இருந்தும் என்ன பயன்? என வினவுகிறது இது.
நம்மை வெறுத்தவர்களை நாமும் வெறுக்க வேண்டும் என்பதுதான் உலக இயற்கை. சான்றோர் என்பவர் பிற மனிதர்களினும் வேறானவர்; மிகவும் மேம்பாடானவர். தனக்கு உற்ற நோய் பொறுத்துப் பிற உயிர்க்கு உறுகண் செய்யாத தவப்பண்பு கொண்டவர் அவர். தனக்கு ஒருவன் கேடு செய்தாலும் அவனை வெறுப்புடன் நோக்காமல் அவனுக்கும் நன்மை செய்யவே முன்வருவார்கள். தமக்கு உரிய நன்மை தமக்கு உற்ற தீமை என்ற எண்ணங்கள் இல்லாமல் எல்லார்க்கும் நன்மையே செய்வார்கள். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பெருந்தகைமை கொண்டு திகழ்பவர்கள். அப்படிச் செய்யாவிட்டால், அவர் மேன்மையான பண்பு நலன்களைக் கொண்டு உயர்ந்திருப்பதால் என்ன பயன்?

இக்குறளில் சொல்லப்பட்டது போன்ற சால்புக் குணம் உள்ளவர் உலகில் காணப்பெறுகின்றனரா?
நீதிமன்றத்தில் சிறைத் தண்டனை பெற்ற காந்தியடிகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரியாக இருந்தவர் மகாத்மாவின் மார்பில் மிதித்துச் சிறையுள் தள்ளுகிறார். சான்றோரான காந்தியடிகள் அதைப் பொருட்படுத்தவில்லை. சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது அங்கு கிடைத்த தோல்பொருட்களைக் கொண்டு தாமே ஒரு மிதியடி தைத்தார். சிறைத் தண்டனை முடித்து வெளிவந்தபோது அவர் அதை அந்த சிறை அதிகாரிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். சிறை அதிகாரி அதிர்ந்து போய் 'மிதியடி கொடுத்தமைக்கு நன்றி. எனது காலின் சரியான அளவு உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?” எனக்கேட்டாராம். காந்தியடிகள் புன்னகையுடன் 'நீங்கள் உங்கள் பூட்ஸ் காலால் என்னை உதைத்தீர்களே அந்தத் தடயம் என் மார்பில் இருந்தது. அதிலிருந்து எடுத்துக் கொண்டேன்' என்று கூறி தம் உயர்வை நிலைநாட்டி அதிகாரியை நாணச்செய்தார். மிகுதியான் மிக்கவை செய்வாரைத் தகுதியான் வெல்வதும் இதுதான். இவ்வரலாற்றுச் செய்தி இக்குறளுக்கு நல்ல காட்டாக அமைகிறது. சால்புடையோர் உலகில் என்றும் எங்கும் உளர்.

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிமையானவற்றைச் செய்யாவிட்டால் சான்றாண்மைக் குணத்திற்கு என்ன பொருளாம்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வஞ்சம் தீர்க்கும் நெறி இல்லாதிருப்பது சான்றாண்மை

பொழிப்பு

தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் இனிமையானவற்றைச் செய்யாவிட்டால் சான்றாண்மை என்பதற்கு பொருள் உண்டா?