இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0985ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:985)

பொழிப்பு (மு வரதராசன்): ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

மணக்குடவர் உரை: பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்; சான்றோர் தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே என்றவாறு.

பரிமேலழகர் உரை: ஆற்றுவார் ஆற்றல் பணிதல் - ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்; சான்றோர் மாற்றாரை மாற்றும் படை அது - இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.
(ஆற்றல், அது வல்லராந்தன்மை. இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார்.)

இரா இளங்குமரன் உரை: செயலாற்றுதலில் தேர்ந்தவரின் வலிமையாவது பணிவுடைமையாகும்; அது சால்புடையவர் தம் பகைவரைப் பகை நீங்கச் செய்து நண்பராக மாற்றும் படைக் கருவியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை.

பதவுரை: ஆற்றுவார்-செயல்வீரர், செய்யவல்லவர்; ஆற்றல்-வலிமை, வல்லமை, திறன்; பணிதல்-பணிந்து நடத்தல்; அது-அது; சான்றோர்-பல நற்குணங்களாலும் நிரம்பியவர்; மாற்றாரை-பகைவரை; மாற்றும்-திருத்தும், வழிமாற்றும்; படை-கருவி.


ஆற்றுவார் ஆற்றல் பணிதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெரியார் பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்தொழுகுதல்;
பரிப்பெருமாள்: பெரியாரது பெருமையாவது எல்லார்க்கும் தாழ்ந்து ஒழுகுதல்;
பரிதி: நல்லோர்க்கு தொழிலாவது பெரியோர் தாழ்ந்தோர் என்னாமல் யாவரையும் இதஞ்செய்து கூட்டிக்கொள்வது; [இதஞ்செய்து- நன்மை செய்து]
காலிங்கர்: ஐம்புலன்களின் வேகத்தை ஆற்றுவாரது ஆற்றலாவது யாதோ எனின், தாம் யாவர்மாட்டும் பணிவு உடையவர் ஆதல்;
பரிமேலழகர்: ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது, அதற்குத் துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்;
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றல், அது வல்லராந்தன்மை. [அது வல்லாராம் தன்மை- பணிதலில் வல்லாராகின்ற தன்மை]

'பெரியார் பெருமையாவது/நல்லோர்க்கு தொழிலாவது/ஐம்புலன்களின் வேகத்தை ஆற்றுவாரது ஆற்றலாவது/ஒரு கருமத்தைச் செய்து முடிப்பாரது ஆற்றலாவது யாவர்மாட்டும்/ தாழ்ந்தொழுகுதல்/துணையாவாரைத் தாழ்ந்து கூட்டிக் கொள்ளுதல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வலியார்க்கு வலியாவது தாழ்ந்து போதல்', 'ஒரு செயலைச் செய்வாரது ஆற்றலாவது எல்லார்க்கும் பணிவாக நடத்தல்', 'தம்மினும் மிகுந்த சிறப்புடையவர்களுக்குப் பணிந்து மரியாதை காட்டுகின்ற அந்தக் குணம்', 'பணிவாய் நடத்தல் காரியமுடிப்போரது திறமையைக் காட்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயல்வீரரின் வலிமை பணிவு உடையவர் ஆதல் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர் தம் பகைவரை ஒழிக்கும் கருவியும் அதுவே என்றவாறு.
பரிப்பெருமாள்: அதுவே சான்றவர் மாறுபட்டவரை வெல்லும் கருவி என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, சான்றவர்க்கு வலியாவது தாழ்ந்து ஒழுகுதல் என்றவாறு.
பரிதி: அதுவே மாற்றாரை வெட்டும் ஆயுதம் என்றவாறு.
காலிங்கர் ('யாற்றும்' பாடம்): மற்று அது அச்சான்றோர் தம்மொடு மாறுபடும் பகைவரை எதிர் ஆற்றும் கருவி என்றவாறு.
பரிமேலழகர்: இனிச் சால்புடையார் தம் பகைவரைப் பகைமையொழிக்கும் கருவியும் அதுவே.
பரிமேலழகர் குறிப்புரை: இறந்தது தழீஇய எச்சஉம்மை விகாரத்தால் தொக்கது. சால்பிற்கு ஏற்ற பணிதற் குணத்தது சிறப்புக் கூறுவார், ஏனையதும் உடன்கூறினார். [படையும் என வரவேண்டியது படை என வந்துளது. ஒரு கருமத்தைச் செய்து முடித்தலே யன்றி என்று பொருள்படுதலால், படை என்பதை இறந்து தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது என்றார்; ஏனையதும் - ஆற்றுவார் ஆற்றல் பணிதல் என்பதும்]

'அது அச்சான்றோர் தம்மொடு மாறுபடும் பகைவரை எதிர் ஆற்றும் கருவி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுவே சான்றோர் பகைவரைத் திருத்தும்படை', 'அப்பணிவு சால்புடையார் தம் பகைவரையும் திருத்தும் படைக்கருவியாம்', 'சான்றோர்கள் பகைவர்களையும் நண்பர்களாக மாற்றிவிடுகிற உபாயம்', 'சான்றோர் தமக்குப் பகைவரை நண்பராக்குங் கருவியும் அதுவே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றோர் மாறுபட்டவரையும் மாற்றும் கருவியும் அதுவே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயல்வீரரின் வலிமை பணிவு உடையவர் ஆதல்; மாறுபட்டவரையும் மாற்றும் சான்றோரது படையும் அதுவே என்பது பாடலின் பொருள்.
பணிதல் ''மாற்றாரை மாற்றும் படை' என்று சொல்லப்பட்டது ஏன்?

பணிவாகச் செயல்பட்டும் சான்றோர் பகை வெல்வர்.

செயல்முடிப்பாரது வல்லமை எல்லாருக்கும் பணிவாக இருத்தலாம்; அந்தப் பணிதலையே சான்றோர் தம்முடன் மாறுபட்டவரைப் பகை மறக்கச்செய்யும் கருவியாகப் பயன்படுத்துவர்.
வெற்றியாளர்க்கு பணிவு உதவுகின்றதுபோல அது சான்றோருக்குப் பகைவரைப் பகை மறந்து நட்பாக்கவும் துணைசெய்யும். ஒருவர்க்கும் பணியாமல் செருக்கோடு நடக்கும் ஆற்றலே வெற்றியை ஈட்டித்தரும் என்று செல்வம் படைத்தவருள்ளும் நல்ல பதவியில் இருப்பவருள்ளும் பெரும்பான்மையர் எண்ணுவர். ஆனால் எதையும் செய்து முடிக்கவல்ல சான்றோர் தம் செயலில் வெற்றி பெறுதற்கு பணிவு பேராற்றலைத்தரும் என நினைப்பவர் ஆவர். அந்தப் பணிவுத் தன்மையையே படையாகக் கொண்டு அவர்கள் பகைவர் பகைமையையும் மாற்றுவர். இச்சான்றோர் தம் கடமையைப் பெரிதாக மதிப்பவர்கள். அதற்காகத் தம் புகழையும் மதிப்பையும் பொருட்படுத்தாமல் பணிவுடன் நடந்து தம் நோக்கத்தை நிறைவேற்றுவர்.

'ஆற்றுதல் என்ற சொல் செய்தல் என்ற பொருள் தருவதால் ஆற்றுபவர் செய்து முடிக்க வல்லார் எனப்பட்டார். குறளில் 'ஆற்றுவார்' என்னும் சொல் பயிலப்பட்ட இடங்களில் செய்து முடிக்க வல்லவர் என்ற பொருளிலேயே வந்துள்ளது. 'ஆற்றல்' ஒன்றைச் செய்து முடிக்கும் திறமையாம். ஆற்றுவார் ஆற்றல் என்பது செயல் முடிக்க வல்லாரின் திறனைக் (பணிதல்) குறிப்பதாகிறது. செயல் முடிப்பதுதான் சான்றோர் நோக்கமாதலால் அவர் பிறரிடம் பணிவாக நடந்து கொள்வதை இழிவாக எண்ணமாட்டார்.
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் (இகல் 855 பொருள்: மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும்), செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை (காலமறிதல் 488 பொருள்: பகைவரைக் காணும்போது பணிக; அவரது இறுதி எல்லை நெருங்கும்போது நிலைமை தலை கீழாகும்) எனப் பணிவு மூலம் பகைவரை மாற்றுதலையும் அவரை வெல்லும் வழியையும் சொல்லும் பிற குறட்பாக்களையும் இணைத்து எண்ணலாம்.

இக்குறளை ஒரே தொடராகக் கொண்டு, 'வினைமுடிக்கும் பெரியோர் வேண்டிய துணையை தாழ்ந்து தேடிக்கொள்வார்கள், அதுவே பகையொழிக்கும் படையாம்' என்பதைவிட 'பணிவாக இருத்தலே செயல்முடிப்பாரது வல்லமை; அதுபோல, பணிவையே தம் படையாகக் கொண்டு சான்றோர் பகைவரது பகை மாற்றுவர்' எனக் கொள்வது இக்குறட்கருத்தைத் தெளிவாக்க உதவும்.

பணிதல் ''மாற்றாரை மாற்றும் படை' என்று சொல்லப்பட்டது ஏன்?

பணிதல் தாழ்ந்தொழுகுதலைக் குறிக்கும் சொல். செயல் நிறைவேற்றுபவர் பணிந்தும் கடமையாற்றுவர் என்று முதலடியில் சொல்லியபின் அப்பணிவையே சான்றோர் பகை நீக்குவதற்கும் பயன்படுத்துவர் என அடுத்த பகுதியில் கூறுகிறது இப்பாடல்.
பொதுவாக ஒருவர் தம்மைவிட உயர்நிலையுள்ளோரிடமும் ஒத்தநிலையிலுள்ளோரிடமும் பணிவைக் காட்டல் இயல்பு. இங்கு. சான்றோர் பகைவரிடமும் பணிவுடன் நடந்து பகையை மாற்றுவர் எனச் சொல்லப்படுகிறது. சான்றோர் எனப்பட்டதால் அது ஒருவர் காலில் வீழ்ந்து கிடப்பதையோ அல்லது தன்னை இகழ்வார்பின் கெஞ்சிக்கொண்டு செல்வதையோ குறிக்காது; குட்டக் குட்டக் குனிவதைச் சொல்வதும் அன்று. வலியில்லாதார் பணிந்துபோவது வேறு, வலிமை மிக்கவர் விட்டுக்கொடுத்துப் பிறரை அணைத்து நடந்து செயல் முடித்துக்கொள்வது இது. பெரியாரது மானம் கெடாத இப்பணிவு வன்னெஞ்சையும் இளக்கி உருக்கிக் குழைத்துவிடும். அவரது அறிவுடைப் பணிவு பகைவரைப் பணியச்செய்யும் வல்லமை கொண்டது. செயல் திறன் கொண்டவரின் பணிவு சொல்லப்படுகிறது. அந்த ஆற்றலே பகைமை மாற்றும் படையாம். சான்றோர் ஏமாந்து நிற்பதாகக் கூறப்படவில்லை, மாற்றுகருத்துடையாரை உணரச்செய்து பணிவை அகப்படையாகப் பயன்படுத்தி அவரையும் தம்வயப்படுத்திக் கொள்வது சொல்லப்படுகிறது.
சால்புடையார்க்கு இது கைவரப்பெறும். பணிதலின் ஆற்றல் மிகவும் பெரியது என்பது பெறப்பட்டது. பணிதல் தாழ்வைக் குறிக்காதா எனக் கேட்பார்க்கு அது படையாம் என உடன் கூறப்பட்டது. படை என்றால் கொலைக்கருவியல்ல; பகைவரின் பகை எண்ணத்தை மாற்றும் கருவியாம். நாட்டிற்கு விடுதலை பெற்றுத்தந்த பெரியவர் காந்தியின் (அகிம்சை வழி) அறவழிப் போராட்டமும் பணிவு சார்ந்ததே; ஆங்கிலேயர்தம் ஆதிக்க எண்ணத்தை மாற்றச் செய்த படையாகவும் அது பயன்பட்டது என்பதை நாம் அறிவோம்,

செயல்வீரரின் வலிமை பணிவு உடையவர் ஆதல்; சான்றோர் மாறுபட்டவரையும் மாற்றும் கருவியும் அதுவே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பணிவுடைமை கொண்டு திகழ்வது சான்றாண்மை.

பொழிப்பு

செயல் நிறைவேற்றுவாரது திறமை பணிந்து போதல்; அதுவே சான்றோர் மாறுபட்டவரையும் தம்பக்கம் திருப்பும் கருவியாம்.