இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0984கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:984)

பொழிப்பு (மு வரதராசன்): தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

மணக்குடவர் உரை: தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டு ஆயினும், கொல்லாத நலத்தையுடையது தவம்; அதுபோலச் சான்றாண்மைக்கு உறுப்பான நற் குணங்கள் பல உண்டு ஆயினும், பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு என்றவாறு.

பரிமேலழகர் உரை: நோன்மை கொல்லா நலத்தது - பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்; சால்பு பிறர் தீமை சொல்லா நலத்தது - அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம்.
(நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தவம் செய்வது பிற உயிரைக் கொல்லாமை என்ற கொள்கையைச் சிறப்பாகக் கொண்டது; சான்றாண்மையோ பிறருக்குத் தீமை உண்டாகக்கூடிய எதையும் வாயாலும் சொல்லாமை என்ற கொள்கையைச் சிறப்பாகக் கொண்டது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோன்மை கொல்லா நலத்தது சால்பு பிறர்தீமை சொல்லா நலத்தது.

பதவுரை: கொல்லா-கொலை செய்யாத; நலத்தது-அறத்தின் கண்ணது; நோன்மை-நோன்பு, தவம்; பிறர்-மற்றவர்; தீமை-குற்றம்; சொல்லா-சொல்லாத; நலத்தது-குணத்தின் கண்ணது; சால்பு-நிறைகுணம்.


கொல்லா நலத்தது நோன்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உண்டு ஆயினும், கொல்லாத நலத்தையுடையது தவம்;
பரிப்பெருமாள்: தவத்துக்கு உறுப்பான சீலங்கள் பல உள ஆயினும், கொல்லாத நலத்தையுடையது தவம்;
பரிதி: கொல்லாமையான விரதத்திலும் பெரியது இல்லை;
காலிங்கர்: யாதானும் ஒன்றினையும் தான் கொல்லாமையாகிய விரதம் கொண்ட இந்த நலத்தின் கண்ணதே நோன்பின் நன்மையாவது;
பரிமேலழகர்: பிற அறங்களும் வேண்டுமாயினும், தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்;

'தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணதாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓருயிரையும் கொல்லாமை தவமாகும்', 'தவத்திற்குப் பிற அறங்கள் வேண்டுமாயினும், அது கொல்லாமை அறத்தைச் சிறப்பாக வேண்டுவது', 'தவம் என்பது கொல்லாமையாகிய நன்மையின் பாற்படும்', 'நோன்பு ஓர் உயிரையும் கொல்லாத அறத்தின் கண்ணது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உயிர்களைக் கொல்லாமை சிறப்பான நோன்பாம் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலச் சான்றாண்மைக்கு உறுப்பான நற் குணங்கள் பல உண்டு ஆயினும், பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு என்றவாறு.
பரிப்பெருமாள்: அதுபோலச் சான்றாண்மைக் குணங்கள் பல உண்டு ஆயினும், பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது சால்பு என்றவாறு.
பரிதி: அதினும் பெரியது தனக்கு ஒருவன் செய்த குற்றத்தைச் சொல்லாதிருப்பது என்றவாறு.
காலிங்கர்: மற்று இதுபோலத் தம்மாட்டு ஆயினும் பிறர் செய்தது ஓர் தீங்கினை 'இவர் இது செய்தனர்' என்று எடுத்துரையாத நன்மனக்4 கூறுடையது யாது, மற்று அதன் கண்ணதே சால்பு உடைமையும் என்றவாறு.
பரிமேலழகர்: அது போலப் பிற குணங்களும் வேண்டுமாயினும் சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணதாம்.
பரிமேலழகர் குறிப்புரை: நலம் என்னும் ஆகுபெயர்ப் பொருள் இரண்டனையும், தலைமை தோன்ற, இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார். தவத்திற்குக் கொல்லா வரம் சிறந்தாற்போலச் சால்பிற்குப் பிறர் குற்றம் சொல்லாக் குணம் சிறந்தது என்பதாம். [இவ்விரண்டற்கும் அதிகாரமாக்கிக் கூறினார் - இத்தவத்திற்கும் சால்பிற்கும் சிறப்பிடம் தந்து கூறினார் என்பது]

'பிறர் பழியைச் சொல்லாத நலத்தையுடையது/தனக்கு ஒருவன் செய்த குற்றத்தைச் சொல்லாதிருப்பது/பிறர் செய்தது ஓர் தீங்கினை 'இவர் இது செய்தனர்' என்று எடுத்துரையாத நன்மனக் கூறுடையது/பிறர் குற்றத்தைச் சொல்லாதிருப்பது சால்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாரையும் குறைகூறாமை சால்பாகும்', 'அதுபோலச் சால்புக்கும் பிற குணங்கள் வேண்டுமாயினும் அது பிறரது தீமை கூறாமையைச் சிறப்பாக வேண்டுவது', 'சால்பு என்பது பிறருடைய குற்றத்தை எடுத்துரையாத குணத்தின் பாற்படும்', 'அதுபோல சால்பு பிறர் குற்றத்தைச் சொல்லாத குணத்தின் கண்ணது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறருக்குத் தீமை உண்டாகக்கூடியதைச் சொல்லாமை சிறப்பான சால்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உயிர்களைக் கொல்லாமை சிறப்பான நோன்பாம்; பிறர்தீமை சொல்லாமை சிறப்பான சால்பு என்பது பாடலின் பொருள்.
'பிறர்தீமை சொல்லா' குறிப்பது என்ன?

சால்புக்கழகு பிறர் குற்றத்தைச் சொல்லாமை.

நோன்பு என்பது ஓர் உயிரையும் கொல்லாத நன்மையாம்; சால்பு என்பது பிறர் குற்றத்தை வெளியே சொல்லித் திரியாத நற்குணத்தைச் சிறப்பாகக் கொண்டது.
ஒரு நீதியை விளக்குமிடத்தில் தாம் வற்புறுத்திக் கூற விரும்பும் மற்றொரு நீதியை உவமானமாக எடுத்துக்காட்டும் வள்ளுவரது உத்தி இக்குறளில் பயன்பட்டது. கொல்லாமைஅறம் நோற்றல் சிறந்தது; அதுபோலப் பிறர்தீமையை எடுத்துச் சொல்லாமலிருப்பது சிறந்த சால்புக் குணமாகும். சால்பு என்பது நற்குணங்களால் நிறைந்திருப்பதைக் குறிக்கும். சால்பை அடைந்து பின் அதில் இருந்து வழுவாமல் அவற்றை எப்போதும் கடைப்பிடித்து வாழ்வர் சான்றாண்மை மேற்கொள்பவர்கள். இக்குறளில் சான்றாண்மையின் சிறப்புக் கூறாக 'பிறர் தீமை சொல்லாமை' நிற்கிறது.
கொல்லா நலத்தினை 'நோன்மை' என்றும், பிறர் தீமை சொல்லா நலத்தினை 'சால்பு' என்றும் வள்ளுவர் வகுத்துக் காட்டுகிறார். நோன்மை என்பது தவம் என்ற பொருளது. தவம் என்பது ஓருயிரையும் கொல்லாது அருளுள்ளம் கொண்டு அற வழியிலே ஒழுகுதலைக் குறிக்கும்; நோன்பென் பதுவே கொன்று தின்னாமை (கொன்றைவேந்தன் 58. பொருள்: தவமென்று சொல்லப்படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம்) என்பது ஔவையார் வாக்கு.
சால்பு என்பது, பிறரது குற்றங்குறைகளைப் பண்பு கருதிச் சொல்லாமல் இருப்பதைக் குறிக்கும். ஒருவரது தீமைகளை மன்னிப்பதும் அது குறித்து, அவர் மானத்துக்கு இழுக்குநேரா வண்ணம், பிறரிடம் பேசாமல் கட்டுப்படுத்திக்கொள்வதும் உயர்ந்தோர் பண்பு. தவம் செய்பவர்கள் உயிர்களைக் கொல்ல மாட்டார்கள். அதேபோல் சான்றோர்கள், பிறரது தீமையை வெளியே எடுத்துக் கூற மாட்டார்கள். இந்தப் பண்பு தவத்துடன் உவமித்து இங்கு உரைக்கப்பட்டது. பிற உயிருக்குத் தீங்கு செய்யாமலிருப்பதுபோல பிறருக்குத் தீங்கு வரக்கூடிய எதையும் எந்தச் சூழ்நிலையிலும் சொல்லாமல் இருப்பதை நோன்பெனச் சான்றோர் காப்பர் என்பது கூறப்பட்டது.

'கொல்லா நலத்தது' என்பதிலுள்ள நலம் என்னும் பகுதி அறத்தினையும் பிறர்தீமை சொல்லா நலத்தது என்பதிலுள்ள நலம் என்னும் பகுதி குணத்தினையும் பண்புப்பெயர்களாக உணர்த்தின. 'நலத்தது' என்ற சொல்லால் உயிரைக் கொல்லாமை, தீமையைச் சொல்லாமை ஆகிய இவ்விரண்டும் 'நல்லதைச் சார்ந்தது' என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது.

'பிறர்தீமை சொல்லா' குறிப்பது என்ன?

'பிறர்தீமை சொல்லா' என்ற தொடர்க்குப் பிறர் பழியைச் சொல்லாத, தனக்கு ஒருவன் செய்த குற்றத்தைச் சொல்லாதிருப்பது, தம்மாட்டு ஆயினும் பிறர் செய்தது ஓர் தீங்கினை 'இவர் இது செய்தனர்' என்று எடுத்துரையாத, பிறர் குற்றத்தைச் சொல்லாத, பிறருடைய குற்றங்களைச் சொல்லாமலிருக்கிறதே, பிறர் குற்றத்தைச் சொல்லா, பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத, பிறர்தம் குற்றங்களை வாய்விட்டுச் சொல்லாத, பிறர் குற்றத்தைச் சொல்லா, யாரையும் குறைகூறாமை, பிறரது தீமை கூறாமை, பிறருக்குத் தீமை உண்டாகக்கூடிய எதையும் வாயாலும் சொல்லாமை, பிறர் குற்றத்தைச் சொல்லாத, பிறருடைய குற்றத்தை எடுத்துரையாத, பிறருடைய குற்றத்தை எடுத்துச் சொல்லாத, மற்றவர் குற்றங்களை புறத்தே எடுத்துச் சொல்லாமை, பிறர் குற்றத்தைச் சொல்லாமை, பிறர் தனக்குச் செய்த தீமையைச் சொல்லாதிருப்பது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பிறர் தீமைகளை வெளியில் சொல்லாத குணம் சான்றோரது சிறந்த பண்பு என்பதைச் சொல்வது இப்பாடல். பிறர் தீமை என்பதை 'பிறர் தனக்குச் செய்த குற்றங்கள்' என்றும் 'பிறருடைய குற்றங்கள்' என்றும் விளக்கினர். நாமக்கல் இராமலிங்கம் இவ்விரண்டையும் மறுத்து 'பிறருக்குத் தீமை உண்டாகக்கூடிய எதையும் வாயாலும் சொல்லாமை' எனப் பொருளுரைத்தார். இவர் கூறும் பொருள் பிறருக்குத் தீங்கு வரக்கூடிய எதையும் வாயாலும் சொல்லிவிடாமல் இருப்பது என்பது. 'ஏனோர் கூறுவன புறங்கூறல், பழிகூறல் அல்லது தன்பொறுமை வெளிப்படுத்தல் வாயிலாகத் தற்சிறப்புரைதலாக முடியும். ஆதலால் இப்பகுதியில் இராமலிங்கர் உரை சிறந்தது' என்பார் தண்டபாணி தேசிகர்.

அறத்தின் வழியில் நிற்பவர் பிறர் குறை கூறாதிருப்பர் என்று முன்னரும் அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும் (பெருமை 980 பொருள்: பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர் சிறுமையுடையவர் பிறர் குற்றங்களை மட்டும் கூறிவிடுவர்) என்ற செய்யுளில் கூறப்பட்டது.

உயிர்களைக் கொல்லாமை சிறப்பான நோன்பாம்; பிறருக்குத் தீமை உண்டாகக்கூடியதைச் சொல்லாமை சிறப்பான சால்பு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சான்றாண்மைமை தவத்தோடு ஒப்பிடப்பட்டது.

பொழிப்பு

உயிர்களைக் கொல்லாமை நோன்பு; பிறருக்குத் தீமை தரக்கூடியதைச் சொல்லாமை சால்பு.