இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0982



குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஅம் அன்று

(அதிகாரம்:சான்றாண்மை குறள் எண்:982)

பொழிப்பு (மு வரதராசன்): சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

மணக்குடவர் உரை: சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்; குணநலம் பிறநலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று என்றவாறு.
இது, குணநலம் சால்பிற்கு அழகு என்றது.

பரிமேலழகர் உரை: சான்றோர் நலன் குணநலமே - சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே; பிற நலம் எந்நலத்தும் உள்ளது அன்று - அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
(அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன.)

இரா இளங்குமரன் உரை: சான்றோர் சிறப்பு என்று சொல்லப்படுவது பண்புச் சிறப்பே ஆகும். அப்பண்புச் சிறப்பு, பிற சிறப்புகளாகிய எந்தச் சிறப்புகளிலும் உள்ளடங்காத உயர்வினதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சான்றோர் நலனே குணநலம் பிறநலம் எந்நலத்து உள்ளதூஅம் அன்று.

பதவுரை: குணநலம்-நற்குணங்களாலாகிய அழகு; சான்றோர்-சான்றோரது; நலனே-நன்மையே; பிறநலம்-பிறவாகிய அழகு; எந்நலத்து-எந்த நன்மையுள்; உள்ளதூஅம்-இருப்பதும்; அன்று-இல்லை .


குணநலம் சான்றோர் நலனே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்;
பரிப்பெருமாள்: சான்றோர்க்கு நலமாவது குணநல்லராகுதல்;
பரிதி: குணநலம் சான்றோர்க்குப் பொறுமை;
காலிங்கர்: சான்றோர் நலம் யாதோ எனின், தமது உள்ளத்து அமைவு உடையர் என்னும் இந்நலமே ஆகலான்;
பரிமேலழகர்: சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே;

'சான்றோர் நலமாவது குணங்களானாய நலமே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்குணமே பெரியவர்தம் நலம்', 'சான்றோர் நலமாவது குணங்களாலாய நலங்களே', 'சான்றோர்கள் விரும்பும் செல்வமே குணச் சிறப்புதான்', 'சான்றோர் சிறப்பாவது குணத்தால் வரும் சிறப்பே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குணங்களாலாய நலங்களே சான்றோர் சிறப்பாம் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறநலம் எந்நலத்து உள்ளதூஅம் அன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குணநலம் பிறநலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது, குணநலம் சால்பிற்கு அழகு என்றது.
பரிப்பெருமாள்: அக்குணநலம் பிறநலமாகிய எல்லா நலத்தினும் உள்ளதொரு நலமன்று என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, குணநலம் சால்பிற்கு அழகு என்றது.
பரிதி: பிறநலம் கல்வி, ஞானம், பெருமை எல்லாம் ஒன்றாகச் சொல்லப்படாது என்றவாறு.
காலிங்கர்: இவ்வமைவுதான் வேறு யாவை சில நன்மையினும் உள்ளது ஒன்று அன்று; எனவே எல்லா நன்மையினும் இவர்க்குச் சிறந்தது அதுவே என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அகநலத்தை முன்னே பிரித்தமையின், ஏனைப் புறநலத்தைப் 'பிற நலம்' என்றும், அது குடிப் பிறப்பும் கல்வியும் முதலாக நூலோர் எடுத்த நலங்களுள் புகுதாமையின், எந்நலத்துள்ளதூஉம் அன்று என்றும் கூறினார். இவைஇரண்டு பாட்டானும் சால்பிற்கு ஏற்ற குணங்கள்பொதுவகையான் கூறப்பட்டன. [சால்பிற்கு- நிறைவிற்கு]

'அஃது ஒழிந்த உறுப்புக்களானாய நலம் ஒரு நலத்தினும் உள்ளதன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறநலங்கள் அவர்க்கு ஒரு நலமும் இல்லை', 'குணநலம் அதனை ஒழிந்த கல்வி, அறிவு முதலியவற்றான் வரும் பிறநலன்களாகிய எல்லா நலங்களிலும் உள்ளதொரு நலமன்று (சிறப்புடையது)', 'அது இல்லாத மற்றெந்தச் சிறப்பும் எந்த நன்மையிலும் சேர்ந்ததாக அவர்கள் கருத மாட்டார்கள்', 'பிற சிறப்புக்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் வைத்து எண்ணப்படுவன அல்ல' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிற நலங்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் அடங்குவன அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குணநலம் சான்றோர் சிறப்பாம்; பிற நலங்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் அடங்குவன அல்ல என்பது பாடலின் பொருள்.
'குணநலம்' குறிப்பதென்ன?

குணச்சிறப்பே சான்றோரை அடையாளப்படுத்தும்.

சான்றோர் நலமாவது அவருடைய குண நலத்தால் வந்த சிறப்பே. மற்ற நலம் எவ்வகையான நலத்திலும் உள்ளதொன்று அன்று; தனித்தது.
குணநலம் என்னும் அகவுடைமையே சான்றோர்க்குச் சிறப்புச் சேர்ப்பது. வேறு நன்மைகளான செல்வநலம், கல்விநலம், உடலழகு, உடையழகு, பட்டம், பதவி போன்றவற்றுடன் காட்சியளித்தாலும் அவை அவர்க்கு அந்த அளவு சிறப்புத்தராது. எல்லாவற்றினும் மேலான நல்லனவாய குணங்களின் நலனே அவர்க்கு அழகு சேர்க்கும்.
'குணநலம் சான்றோர் நலம்' என விதந்து சொல்லப்பட்டதால் மாண்புறு மாந்தரையே வள்ளுவர் சான்றோர் என அழைக்கிறார் என அறியலாம். நல்ல குணங்களெனற்பால எவையெவை உளவோ, அக்குணங்களெல்லாம் பொருந்தியிருந்தால்தான் ஒருவர் சான்றோர் ஆவார். மாந்தரெல்லாரும் சான்றோர் ஆதற்கு உரியராகலானும், சான்றோராக முயறல் அவர்தம் கடமையாதலாலும், எல்லா மாந்தரும், குணநலன்களை நலன்களாய்ப் பெற முயலுதல் வேண்டும். குணநலன் எல்லாம் வாய்த்தல் அரியவற்றுள் அரிதாயிருக்கும் ஒன்று. அதுவே சான்றோர்க்கு மிகச்சிறந்த அணியாகிறது.

'பிறநலம்' என்றதற்குக் கல்வி, ஞானம், பெருமை, குடிப்பிறப்பு, உடல் உறுப்பு நலம், உடலழகு எனப் பலவாறு பொருள் கூறினர். பிறநலம் என்பது குணநலம் அல்லாத மற்ற எந்நலத்தையும் குறிக்கும் என உரைப்பர்.

'எந்நலத்து உள்ளதூஅம் அன்று' என்ற பகுதியைக் 'குணநலம் சில நன்மைகளும் உள்ள ஒன்றன்று; சிறந்தது', 'குணநலம் என்பதனைப் பிறநலங்கள் எல்லாவற்றுள்ளும் ஒன்றாகச் சொல்லக்கூடியது அல்ல; அது தனிச்சிறப்புடையது', 'நூலோர் ஓதிய நலங்களுள் குணநலம் அடங்காது, குணநலம் ஒழிந்த அகநலத்திலும் வேறானது', 'அக அழகு வகையிலும், புற அழகுவகையிலும் அடங்காதது குண நலம், தனித்தது' என்றபடி விளக்குவர்.

'குணநலம்' குறிப்பதென்ன?

'குணநலம்' என்ற சொல்லுக்குக் குணநல்லராகுதல், பொறுமை, தமது உள்ளத்து அமைவு உடையர், குணங்களானாய நலமே, குணங்களாலாகிய நலமே, குணங்களினால் ஆய நலமே, பண்புகளின் நலமே, குணநலன்களே, நற்குணங்களால் ஆய நலம், நற்குணமே, குணங்களாலாய நலங்களே, குணச் சிறப்புதான், பண்புச் சிறப்பே, குணச் சிறப்பே, குணத்தால் வரும் சிறப்பே, குணங்களாலான நலமே, நல்ல குணங்களே என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எல்லா நலங்களிலும் குணநலம் பெரிது என்பதால் அதைச் சான்றோர்க்கு உரியதாகக் கொள்கிறார் வள்ளுவர். சான்றோரின் குணநலம் என்று கூறப்படுவது அவருடைய நற்பண்பு மட்டுமே, வேறு எத்தகைய தகுதியும் பெருமைதராது என்கிறார் அவர். 'குணமெனப்படுவது எல்லாராலும் கொள்ளப்படுவதாய், ஒருசேர இன்பம் பயப்பதாய் உள்ள பண்பு. அதனை வரையறுத்து இத்துணைய என்று கூற இயலாமையின் குணநலம் சான்றோர் நலனே எனப் பிரிநிலையேகாரம் கொடுத்துக் கூறினார்' என்பார் தண்டபாணி தேசிகர்.

குணங்களாலாய நலங்களே சான்றோர் சிறப்பாம்; பிற நலங்கள் எந்தச் சிறப்புக்களுள்ளும் அடங்குவன அல்ல என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நற்குணங்களால் நிறைந்ததே சான்றாண்மை.

பொழிப்பு

நற்குணமே சான்றோர்தம் நலம்; பிறநலன்களாகிய எல்லா நலங்களிலும் உள்ளதொரு நலமன்று.