கடன்என்ப நல்லவை எல்லாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நல்லவாயின எல்லாம் இயல்பு என்று சொல்லுவர் அறிவோர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, மேற்கூறியவாறே அன்றி நற்குணங்கள் எல்லாம் வேண்டும் என்றது.
பரிதி: பூலோகத்திலே வழங்குகின்ற நன்மையெல்லாம்;
காலிங்கர்: மற்று அவர்க்கு இச்சான்றாண்மை அடியாக மற்றும் இதுபோலும் நல்லவை எல்லாம் கைக்கொண்டு ஒழுகுதல் கடன் என்று சொல்லுப யாவரும்;
பரிமேலழகர்: நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் நூலோர்.
பரிமேலழகர் குறிப்புரை: சில குணங்கள் இலவாயவழியும், உள்ளன செய்துகொண்டனவாய வழியும் சான்றாண்மை என்னும் சொற்பொருள் கூடாமையின், நூலோர் இவ்வேதுப் பெயர் பற்றி அவர் இலக்கணம் இவ்வாறு கூறுவர் என்பதாம்.
'நல்லனவாய குணங்கள் எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்லுவர் அறிவோர்/நூலோர்/யாவரும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவை எல்லாமே கடமைகள் என்பர்', 'நல்ல குணங்கள் எல்லாம் செய்யத்தக்க இயல்பான கடமைகளாம்', '(ஒரு காரியம் நல்லதா கெட்டதா என்ற) இயல்பை அறிந்த (நல்ல காரியம் எனத் தெரிகிற) நல்ல காரியங்கள் எல்லாம் (கட்டாயமாகச் செய்ய வேண்டிய) கடமைகளாகும்', 'நல்ல முயற்சிகள் எல்லாம் கடமையாமென்று அறிஞர் சொல்லுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நல்லவாயின எல்லாம் இயல்பான கடமை எனச் சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.
கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: உலகியற்கை அறிந்து சான்றாண்மையை மேலிட்டுக்கொள்ளும் அவர்களுக்கு என்றவாறு.
பரிதி: உண்மையறிந்த நன்மையோர் செய்த ஒழுக்கம் என்றவாறு.
காலிங்கர்: நமக்குக் கடன் இஃது என்று இருந்து சான்றாண்மையைக் கைவிடாது தம்மாட்டுக் கைக்கொண்டு ஒழுகுமவர் யாவர்;
பரிமேலழகர்: நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு.
'உலகியற்கை அறிந்து/நமக்குத் தகுவது இது என்று அறிந்து சான்றாண்மையை மேற்கொண்டொழுகுவார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கடமை அறிந்து நிறைகுணம் கொண்டவர்க்கு', 'கடமையை அறிந்து நிறைபண்புகளை மேற்கொண்டு நடப்பவர்க்கு', 'சான்றாண்மை என்னும் மிகப் பெருங் குணத்தை மேற்கொண்டு நடப்பவர்களுக்கு', 'தம் கடமைகள் இவை என்று அறிந்து குணநிறைவை மேற்கொள்ளுபவருக்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
கடமை உணர்ந்து நிறைகுணம் கொண்டவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.
|
எல்லா நற்செயல்களையும் தமக்கானவை என வரிந்துகொள்வர் சான்றவர்.
கடமையை அறிந்து நிறைகுணம் மேற்கொள்ளுபவருக்கு நல்லவாயின எல்லாம் இயல்பாயிருக்கும் என்று சொல்வர்.
கடன்:
இப்பாடலில் கடன் என்ற சொல் இருமுறை வந்துள்ளது. கடன்என்ப என்ற தொடரிலுள்ள கடன் என்ற சொல்லுக்குக் கடமை என்றும் அடுத்துள்ள கடன்அறிந்து என்ற தொடரிலுள்ளதற்கு இயல்பு என்றும் பொருள்.
'கடமை என்பது என்ன?'
மக்கள் தங்கள் நல்வாழ்விற்கெனச் சில நெறிமுறைகளையும் வகுத்துக்கொண்டுள்ளனர். ஒருவரின் பழக்கம் பலரால் பின்பற்றப்படும்போது, அது அச்சமுதாயத்தின் வழக்கமாக மாறிவிடுகிறது. இவ்வாறான வழக்கமே கடமை எனப்படுகிறது. வழக்காற்று ஒழுக்க நெறியின் அடிப்படையில் 'கடமை' என்பது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தன்னைச் சார்ந்துள்ள உற்றவர், உறவினருக்கும், சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் உலகிற்கும் ஆற்றவேண்டிய அரும்பணிகளாகக் கருதப்படலாயின, அவற்றைச் செய்கின்றபொழுது பயன் கருதாது- குறி எதிர்ப்பை நோக்காது- செய்வது சாலச்சிறந்தது எனச் சான்றோர்கள் போற்றினர். அதனால் அவை ஒப்புயர்வற்றதொரு நிலையினை அடைந்துவிட்டன (க த திருநாவுக்கரசு).
இல்லறத்தில் ஈடுபடுவான் தன் மனைவி, மக்கள், விருந்து, அரசு முதலானவர்களுக்குச் செய்யும் கடமைகள் உள.
ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் தத்தம் கடமையைச் செய்யவேண்டியவராயினும் சிலர் சிறப்பாகக் குடும்பச் சுமையைத் தாங்கவும் குடும்பத்திலுள்ள பிறர் பொருட்டு உழைக்கவும் தம் நலத்தைத் துறக்கவும் முன் வருவர். அதுபோலவே சமுதாயத்தினர் யாவரும் பிறர் திறத்துத் தம் பொறுப்பை யுணர்ந்து வாழ வேண்டியவரேயாயினும் சிலர் சிறப்பாகச் சமுதாயப் பொறுப்பை யுணர்வர். அவரது கடமைகள் வரையறைக்குட்பட்டனவல்ல. அவர்கள் எல்லா நன்மையும் செய்ய விழைவர்.
இந்த நன்னெஞ்சமே, நன்மையான அனைத்தையுமே கடமையாகக் கொள்ள அவர்களைத் தூண்டுகிறது.
ஒரு கடமையாக ஏற்றுக்கொண்டு செய்வது என்பது குறியெதிர்ப்பில்லாமலும் விருப்பு வெறுப்பு இல்லாமலும் செய்வதைக் குறிக்கும்.
கடமை என்பதற்குக் காட்டாயமாகச் செய்ய வேண்டியது எனவும் உரைகூறினர்.
'கடன் என்றால், நாம் பிறர்பால் பெற்ற உணவு, உடை, அறிவு, இன்பம் அனைத்தையும், பிறரிடம் பெற்றோம் என்ற உணர்ச்சியோடு, அவற்றை நாமும் பிறருக்குச் செய்து வாழவேண்டும் என்ற ஒழுக்கத்தை மேற்கொள்வதாம்' என்பதாகவும் உரை உள்ளது.
கடமைக்காகச் செய்வது வேறு, கடனுக்காகச் செய்வது வேறு. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயலின் நன்மைத் தன்மை ஒன்றுக்காகவே அதனைச் செய்பவர்கள் கடனறிந்து செய்பவர்கள். தானாக முன்வந்து நற்செயல்களைத் தன் கடமையாக ஏற்றுக்கொள்வர் சான்றோர். குண நிறைவினாலேயே அமையக்கூடிய செயல்களே கடமையாகச் செய்யப்படுவன. அச்செயல்களை அவர்கள் இயல்பாகவே செய்து கொண்டிருப்பார்கள்; தம் செயல்களுக்கு பலனை எதிர்பார்க்கமாட்டார்கள். தாங்கள் கடன்பட்டிருப்பதற்காகச் செய்யும் செயல்கள் இயல்பாக இருக்க முடியாது; அவை சான்றாண்மையின்பாற்படா.
கடன்என்ப நல்லவை எல்லாம் என்ற பகுதியிலுள்ள இரண்டாவதான கடன் என்ற சொல்லுக்கு இயல்பு எனப் பொருள்கொண்டு 'நல்ல குணங்கள் யாவும் இயல்பாயிருக்கும்' எனப் பொருள்கூறுவர். இது 'சான்றோர்க்கு நல்ல குணங்களனைத்தும் இயல்பானவை; எனவே விட்டு நீங்காதன' என்ற பொருளது. எல்லாக் குணங்களும் நிறைந்து அக்குணங்களையாள்பவர்க்கு நல்லனவற்றைச் செய்தலே இயல்பாம். அவர்களுக்கு எல்லா நற்செயல்களும் இயல்பாகவே அமைந்து விடுகின்றன என்பதுமாம்.
சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு:
சான்றாண்மை என்ற சொல் நற்குணங்களால் நிறைந்திருத்தலைக் குறிப்பது. சான்றாண்மை மேற்கொள்பவர் என்பது தமக்கு உரிய கடமைகள் இன்னவென்று அறிந்து, அவற்றை நல்லவையென்றும், செய்யத்தக்கன என்றும் அறிந்து ஆற்றும் சான்றாண்மை உடையவரைக் குறிக்கும். மேற்கொள்தல் என்றதால் அது புதிதாக அடைதல் அல்லாமல் உள்ளதன் விளக்கம் காணுதலைச் சொல்வது. இங்கு அது அமைந்த குணங்களை அவ்வப்பொழுது வெளிப்படுத்துதலைச் சொல்கிறது. ஒரு கடமையை அறிந்து திட்டத்துடன் ஏற்றுக் கொள்வதை விளக்குகிறது, மேற்கொள்பவர் என்பவர் சான்றாண்மை தம்முடைய கடமை என்பதைத் தெரிந்து அந்தச் சான்றாண்மையை மேற்கொள்பவராவார்.
இவ்விதம் சான்றாண்மையைத் தம் கடமையென அறிந்து மேற்கொண்டவர்களுக்கு எல்லா நல்ல செயல்களும் இயல்பாகின்றன.
கலித்தொகைப் பாடல் ஒன்று 'பிறன் நோயும் தம் நோய்போல் போற்றி, அறன் அறிதல், சான்றவர்க்கு எல்லாம் கடன்' என்று கூறியது:
சான்றவிர், வாழியோ! சான்றவிர்! என்றும்
பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி, அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ் இருந்த
சான்றீர்! உமக்கு ஒன்று அறிவுறுப்பேன்: (கலித்தொகை 139: 1-4 பொருள்: நற்குணங்கள் எல்லாம் அமைந்தீர்! நற்குணங்களெல்லாம் அமைந்தீர்! நீர் வாழ்வீராக! பிறருடைய நோயும் தம்முடைய நோய்போலே எந்நாளும் பேணி அதனாற் பெறும் அறனை அறிந்து போதுதல் உலகத்துள்ள சான்றவர்க்கெல்லாம் முறைமையானால், நுமக்கும் அது முறைமையென்று கருதி நுமக்கொன்று கூறுவேன்;]. இப்பாடலின் கருத்தை வழிமொழிவதுபோல் இக்குறட்பா அமைந்துள்ளது.
|
'நல்லவை எல்லாம்' என்ற தொடரின் பொருள் என்ன?
'நல்லவை எல்லாம்' என்றதற்கு நன்மையெல்லாம், நல்லவாயின எல்லாம், இச்சான்றாண்மை அடியாக மற்றும் இதுபோலும் நல்லவை எல்லாம், நல்லனவாய குணங்கள் எல்லாம், நல்ல குணங்களுடனே, நல்லனவாய குணங்கள், நல்லவை எல்லாம், உலகில் உள்ள நல்லவைகள் எல்லாமே செய்தற்குரிய, நல்லனவற்றையெல்லாம், நல்லவை எல்லாமே, நல்ல குணங்கள் எல்லாம், நல்ல காரியங்கள் எல்லாம், நன்மையானவற்றை எல்லாம், நல்ல முயற்சிகள் எல்லாம், நல்ல செயல்கள் எல்லாம், நல்லவை எவையோ அவையெல்லாம், நல்வினைகளெல்லாம், நல்ல செயல்கள் எல்லாவற்றையும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
எவை எவற்றை சான்றோர் கடமையாகக் கருத வேண்டும்? வள்ளுவரின் பதிலாவது நல்லவை எல்லாம் என்பது. நல்லவை எவை?
நல்லவை எல்லாம் என்பதற்கு நல்ல குணங்கள் எல்லாம், நல்ல செயல்கள் எல்லாம், நன்மையெல்லாம், நல்லவாயின எல்லாம் எனப் பொருள் கூறப்பட்டன.
'சான்றாண்மை மேற்கொள்பவர்க்கு நல்லவை எல்லாம் கடன்' என்கிறது பாடல். சான்றாண்மை என்ற சொல்லுக்கு நற்குணங்களால் நிறைந்திருந்து அவற்றை ஆள்தல் என்ற வரையறையே பொதுவாகக் கூறப்படுவது. நல்லவை என்பதற்கு நற்குணங்கள் எனப் பொருள் கொண்டால் நற்குணங்கள் மேற்கொள்பவர்க்கு நற்குணங்கள் எல்லாம் எனப் பொருள் கொள்ளமுடியாது. எனவே நல்லவை எல்லாம் என்பதற்கு நற்செயல்கள் என்பது பொருந்தலாம் எனச் சொல்லப்பட்டது. குணங்களுக்கும் செயல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாதலால் நல்லவை என்றதற்கு நற்குண நற்செயல்கள் எனக் கொள்ளலாம்.
'சான்றாண்மை நற்குணத் தொகுதியாதலின் அதை மேற்கொண்டவர்க்கு நல்வினையெல்லாங் கடமை யென்பது கருத்து' என்பார் தேவநேயப்பாவாணர்.
சான்றோர்கள் நல்லவையெல்லாமே தமது கடமைகள்தாம் என்று கருதி பணிபுரிவர்.
'நல்லவை எல்லாம்' என்பது நல்லவாயின எல்லாம் என்ற பொருள் தரும்.
|