பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்
(அதிகாரம்:பெருமை
குறள் எண்:979)
பொழிப்பு (மு வரதராசன்): பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ்தல்: சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
|
மணக்குடவர் உரை:
பெருமையாவது செருக்கின்மை: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான்.
மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.
பரிமேலழகர் உரை:
பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல் - சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்.
('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.)
தமிழண்ணல் உரை:
பெருமை எனப்படுவது பெருமைப்படுவதற்கு ஏதுவான சிறப்புகள் தம்மிடம் இருந்த போதும் தருக்கின்றி இருத்தலாகும். சிறுமை எனப்படுவது பெருமைப்பட ஒன்றுமில்லாதவிடத்தும் பெருமிதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு, செருக்குதலாகும். ஊர்ந்துவிடல்- மரபுத்தொடர். பெருமிதத்தில் உலாவருதல்; அதில் மிதத்தல்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்.
பதவுரை: பெருமை-பெருமை, பெருமையுடையார்; பெருமிதம்-பெருமைப்பட்டுக்கொள்ளல்; இன்மை-இல்லாதிருத்தல்; சிறுமை-சிறுமைக் குணம்; பெருமிதம்--தருக்கு, ஆணவம். தற்பெருமை; ஊர்ந்துவிடல்-ஏறிபோய் முடிவின்கண்ணே நின்றுவிடுதல், மேற்கொள்ளல், உலாவருதல்.
|
பெருமை பெருமிதம் இன்மை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமையாவது செருக்கின்மை;
மணக்குடவர் குறிப்புரை: மேல் குலத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளல் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கின்மை பெருமையென்று கூறினார்.
பரிப்பெருமாள்: பெருமையாவது செருக்கின்மை;
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் குலத்தினாலும் செல்வத்தினாலும் பெரியாரைப் பெரியாரென்று கொள்ளப் படாதென்றார். இனிப் பெருமை யிலக்கணங் கூறுவார், முற்படச்செருக்கு இல்லாமையே பெருமையென்று கூறினார்.
பரிதி: எல்லாரிடத்தும் தாழ்ச்சியான சொல்பெருமை கொடுக்கும்;
காலிங்கர்: பெரியோர்க்குத் தம் பெருமையாவது தம் குறிப்பான் ஒரு பெருந்தன்மை பாவியாமை;
பரிமேலழகர்: பெருமைக்குணமாவது காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித் தருக்கின்றியிருத்தல்;
'பெருமையாவது செருக்கின்மை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தற்செருக்கு இன்மை பெருமையின் குணம்', 'பெருமைப்பண்பாவது செருக்கில்லாமல் இருத்தலாகும்', 'பெருமைக் குணம் என்பது அகங்காரமே இல்லாதிருப்பது', 'பெருமைக் குணமாவது தருக்கின்றி இருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
செருக்கில்லாமல் இருத்தல் பெருமை என்பது இப்பகுதியின் பொருள்.
சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான்.
பரிப்பெருமாள்: சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான்.
பரிதி: பெருமையான சொல் சிறுமை கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர் ('விடும்' பாடம்): மற்றுச் சிறுமையாவது தம் சிறுமைக்குப் பெரிதும் கூசி மற்று அது மறைத்தற்காகப் பிற பெருந்தன்மை மேல் கொண்டுவிடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே பெரியோர் பெருமையைத் தம்மேல் ஏறட்டுக்கொண்டு தாமும் பெரியோராகப் பாவித்து நடப்பர், ஒரு பயன் இல்லை ஆயினும்; என்னை பாவம் என்றவாறு. [ஏறட்டுக் கொண்டு - மேற்போட்டுக் கொண்டு]
பரிமேலழகர்: சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை ஏற்றுக்கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்' என்று பாடம் ஓதுவாரும் உளர், முற்றுத்தொடரும் எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது பாடமன்மை உணர்க.
'சிறுமை செருக்கினை மேற்கொண்டொழுகுதலான்/பெருமையான சொல் சிறுமை கொடுக்கும்/சிறுமையாவது தம் சிறுமை மறைத்தற்காகப் பிற பெருந்தன்மை மேல் கொண்டுவிடும்/தருக்கின் முடிவின்கண்ணே நின்றுவிடுதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தற்செருக்கின் வடிவு சிறுமையின் குணம்', 'சிறுமைப் பண்பாவது செருக்கின் உச்சநிலையில் நிற்றலாகும்', 'சிறுமைக் குணம் என்பது அகங்காரமே நடத்தித் தீர்ப்பது', 'சிறுமைக் குணமாவது தருக்கினை ஏற்றுக் கொண்டாடுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
செருக்கில்லாமல் இருத்தல் பெருமை, சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல் என்பது பாடலின் பொருள்.
'பெருமிதம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
பெருமைக்கு ஊர்கோலம் தேவையில்லை.
பெருமைக் குணமாவது செருக்கு இல்லாமல் இருத்தல்; சிறுமைக் குணமாவது பெருமை இல்லாத நிலையிலும் அளவு கடந்த செருக்கினை மேற்கொள்ளல்.
பெருமையானது பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுக்கள் இருந்தும் ஆணவமின்றி ஒழுகுவது, சிறுமையானது காரணம் இல்லாதிருந்தும் பெருமைப்பட்டுக் கொண்டு செருக்கின் எல்லைக்கே சென்றுவிடுவது. ஒருவருக்கு உண்மையான பெருமை தருவது, அவரது செருக்கற்ற தன்மையாகும். பெருமைக்குரியவராக இருப்பினும், அப்பெருமை தம்மைச் சற்றும் பாதிக்காமல் இருத்தலே உண்மையான பெருமையாகும். ஒருவர் கல்வியில் மேம்பாடுடையவராய் இருப்பதற்காகவோ அல்லது திறனறிந்து தீதின்றி வந்த பொருள் சேர்த்ததற்காகவோ பெருமிதம் கொள்கிறார் என்றால் அது இயல்பானது; அந்தப் பெருமித உணர்வும் இல்லாமல் இருப்பதும் பெருமைக்குரியதே என்கிறது இக்குறள். பெருமை செருக்காக ஆகிவிடுகிற போது அது பெருமையல்ல. சிறுமையின் இயல்பானது தன்னைக்குறித்து அளவுக்கு மீறி நினைத்து தனக்கு இல்லாத பெருமிதத்தின் மேலேறிச் சென்று விடுவது.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (அறன் வலியுறுத்தல் 37 பொருள்: பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செலுத்துபவர் இவர்களிடத்து அறவழி இது என்று கூற வேண்டாம்) என்ற பாடலில் ஊர்ந்தான் என்பது சிவிகையைச் செலுத்துபவன் அதாவது அதில் ஏறிப் பயணம் செய்பவனைக் குறித்தது. அதுபோல் இங்கு ஊர்ந்துவிடல் என்பது செருக்கையே மேற்கொண்டு செல்வதை உணர்த்திற்று.
|
'பெருமிதம்' என்ற சொல்லின் பொருள் என்ன?
இக்குறளில் பெருமிதம் என்ற சொல் இரண்டிடங்களில் வருகிறது. அவ்விரு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் ஆளப்பட்டுள்ளது.
இப்பாடலின் முற்பகுதி பெருமிதமின்மை பெருமை எனச் சொல்கிறது. இதிலுள்ள பெருமிதம் என்பதற்குப் பெருமித உணர்வு அதாவது பெருமைப்பட்டுக்கொள்வது என்பது பொருள்.
குறளில் செருக்கு என்ற சொல் பெருமிதம், ஆணவம் என்ற இரண்டு பொருள்களிலும் பயன் படுத்தப்படுகிறது.
பெருமிதப் பொருளில் ‘செருக்கு’ எனும் சொல் பல அதிகாரங்களில் பல குறட்பாக்களில் காணக் கிடைக்கிறது.
‘படைச்செருக்கு’ என்ற அதிகாரத்தின் தலைப்பிலுள்ள ‘செருக்கு’ என்னும் சொல் படையின் பெருமிதம் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது.
......வேண்டாமை என்னுஞ் செருக்கு (வெஃகாமை 180) என்பதில் வேண்டாமை அதாவது பொருளைப் பறித்துக்கொள்ள விரும்பாமை என்கிற பெருமிதம் சொல்லப்படுகிறது. ......வள்ளியம் என்னும் செருக்கு (ஊக்கமுடைமை 598) என்ற குறள் தாங்கள் கொடை வள்ளல் என்று பாராட்டப் பெறுவதால் கிடைக்கும் பெருமித உணர்வைக் குறிக்கிறது. ......வேளாண்மை என்னும் செருக்கு (ஆள்வினையுடைமை 613) என்னும் பாடல்
பிறருக்கு உதவுவதால் கிட்டும் பெருமித உணர்வு பற்றிச் சொல்கிறது.
நட்புணர்வோடு வாழ்பவர்கள் பெருமிதத்துடன் வாழ முடியும் என்று ......நன்னயம் என்னும் செருக்கு (இகல் 860) என்ற பாடல் சொல்கிறது.
....வாழுநர் என்னும் செருக்கு (தனிப்படர்மிகுதி 1193) என்னும் செய்யுள் நாம் வாழ்கின்றோம்’ என்ற பெருமித உணர்வு பற்றியது.
செருக்கு என்னும் சொல்லைப் பெருமிதம் என்ற பொருளில் அல்லாமல், ஆணவம் என்ற பொருளில் வள்ளுவர் ஆளும் இடங்களும் பல உள.
‘என்னிலும் சிறப்பாக இதை யார் செய்ய இயலும்?’ என ஒருவர் கூறுவது ஆணவத்துக்கு ஓர் எடுத்துக் காட்டு. ஆணவம் என்ற பொருளில் ஆளப்பட்ட இடங்களாவன: ......தீவினை என்னும் செருக்கு (தீவினை அச்சம் 201) என்னும் பாடலில் இறுமாப்புடன் தீயவற்றைச் செய்தலைச் சொல்கிறது.
யான் எனது என்னும் செருக்கறுப்பான் ....... (துறவு 346) என்னும் குறள் 'நான், எனது' என்று எண்ணுகிற ஆணவம் பற்றிச் சொல்கிறது.
செய்க பொருளை, செறுநர் செருக்ககற்றும் எஃகதனில் கூரியது இல் (பொருள் செயல்வகை 759) பொருள் உண்டாக்குக; அதுபோல பகைவரின் தருக்கினைப் போக்கும் கூர்மையுடைய கருவி வேறொன்றும் இல்லை என்பதில் செருக்கு ஆணவம் என்ற பொருளில் வந்தது.
.....ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு (புல்லறிவாண்மை 844) யான் கூர்த்த மதியுடையேன் எனத் தன்னைத்தான் மதித்துக்கொள்வது ஆணவமாம்.
...........பகைவர்கண் பட்ட செருக்கு (பகைத்திறம் தெரிதல் 878) என்னும் பாடலில் பகைவரின் ஆணவம் சொல்லப்பட்டது.
'பெருமிதம் என்னும் சுவையும் அதன் வழிப்பிறக்கும் மெய்ப்பாடும் கல்வி முதலிய நான்கன் நிலைக்களனாகத் தோன்றுவன. அவை தான் தாழாமைக்குக் காரணமான அடக்கத்திற்கு அடித்தளமாகும் போது பெருமை எனப்படும். அங்ஙனமன்றி என்னோடொப்பர் யார்? என்ற செருக்காம்போது சிறுமையாம். இவ்வேறுபாடு கண்டு பெருமிதத்திற்கும் பொருள்கோடல் வேண்டும் என்பார் 'பெருமை பெருமிதம் இன்மை' என்றார்' எனப் பெருமிதம் என்பதற்குச் சொல்விளக்கம் தருவார் தண்டபாணி தேசிகர். மேலும் அவர்
'பணியுமாம் என்ற குறள் (978) வாக்கால் வெளிப்படும் செருக்கையுணர்த்திற்று. இது மெய்யால் வெளிப்படும் செருக்கையுணர்த்திற்று' எனவும் உரைப்பார்.
|
செருக்கில்லாமல் இருத்தல் பெருமை, சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல் என்பது இக்குறட்கருத்து.
பெருமைப்பட்டுக் கொள்ளாதிருப்பதும் பெருமைதான்.
செருக்கு இன்மை பெருமையின் குணம்; சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல்.
|