இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0978



பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

(அதிகாரம்:பெருமை குறள் எண்:978)

பொழிப்பு (மு வரதராசன்): பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.

மணக்குடவர் உரை: பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும்.
இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர்.
(பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.)

சி இலக்குவனார் உரை: பெருமையுடையார் எப்பொழுதும் பணிவர்; சிறுமைக் குணமுடைய சிறியார் பெருமையில்லாதபோதும் தம்மை வியந்து புகழ்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமை என்றும் பணியுமாம் சிறுமை தன்னை வியந்து அணியுமாம்.

பதவுரை: பணியுமாம்-அமைந்தொழுகுமாம்; என்றும்-எந்நாளும்; பெருமை-பெருமைக் குணம், பெருமையுடையார்; சிறுமை-சிறுமைக் குணம், சிறுமையுடையோர்; அணியுமாம்-புனைந்து நிற்குமாம்; தன்னை-தன்னை; வியந்து-நன்கு மதித்து.


பணியுமாம் என்றும் பெருமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்:
மணக்குடவர் குறிப்புரை: இது பெருமையாவது பணிந்தொழுகுதலென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: செல்வமும் கல்வியும் தனக்கு உள்ளதாகுங் காலத்துத் தாம் பணிந்தொழுகுவார் எந்நாளும் பெருமைக் குணம் உடையார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பணிந்தொழுகுதலும் பெருமை என்றது.
பரிதி: மரபிற் பெரியார் செல்வம் பெற்றால் எல்லாரையும் பணியும்;
காலிங்கர்: உலகத்து என்றும் யாவர்க்கும் தண்ணளி கொண்டு தாழ்ந்து ஒழுகுவதாம் பெருமை;
பரிமேலழகர்: பெருமையுடையார் அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி அமைந்தொழுகுவர்;

'பெருமை எக்காலத்தும் பிறரைத் தாழ்ந்தொழுகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் பணிதல் பெருமையின் இயல்பு', 'பெருமையுடையவர் எக்காலத்தும் செருக்கின்றி அடங்கியொழுகுவார்', 'உண்மையாகவே பெருமை மனமுள்ளவர்கள் எப்போதும் பிறருக்கு வணங்கிப் பணிவாக நடந்து கொள்வார்கள்', 'பெரியோர்கள் எக்காலத்தும் பணிவுடையோர்களாய் இருப்பார்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெருமையுடையவர் எக்காலத்தும் பணிவுடையவர்களாய் இருப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

சிறுமை அணியுமாம் தன்னை வியந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறுமை தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும்.
பரிப்பெருமாள்: சிறுமைக்குணம் உடையார் அவை உளதாங்காலந் தொடங்கித் தம்மை வியந்து கொண்டு அணிவர் என்றவாறு,
பரிதி: சிறியார் செல்வம் பெற்றால் தன்னை வியந்துரைக்கும் என்றவாறு.
காலிங்கர்: இனிச் சிறுமை தன்னைத் தானே மதித்துச் சாலத் தன் திறம் அலங்கரித்து ஒழுகும் என்றவாறு.
பரிமேலழகர்: மற்றைச் சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்பட்டன. இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை'(குறள் 980) என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து இயைந்தது. ஆம் என்பன இரண்டும் அசை. புனைதல் - பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக்கோடல். இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார், இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர். [பின்னும்-என்றும் என்பது சிறுமை என்பதனோடும் வந்து இயைந்து நின்றது; ஆம் - பணியுமாம், அணியுமாம்- இவ்விரண்டும் அசைநிலை; விரோதம் - முரண்; கூறிற்று ஆக்குவாரும் உளர் - இக்குறள் கூறியது என்று பொருள் கூறுவாரும் உண்டு என்பது.

'சிறுமை தன்னைத் தானே மதித்துச் சாலத் தன் திறம் அலங்கரித்து ஒழுகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தற்புகழ்ச்சி பாடுதல் சிறுமையின் இயல்பு', 'ஏனைச் சிறுமையுடையார் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொள்வார்', '(போலிச் சிறப்புடைய) சிறுமை மனமுள்ளவர்கள் எப்போதும் தம்மைத் தாங்களே மெச்சிப் புகழ் சூட்டிக் கொள்வார்கள்', 'சிறியோர்கள் தம்மை வியந்து தம் பெருமை பாராட்டுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிறியோர்கள் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருமையுடையவர் எக்காலத்தும் பணிவுடையவர்களாய் இருப்பர்; சிறுமை அணியுமாம் தன்னை வியந்து என்பது பாடலின் பொருள்.
'அணியுமாம் தன்னை வியந்து' குறிப்பது என்ன?

தம்மைத் தாமே பெருமைப்படுத்திக் கொள்பவர் பெருமையுடையவர் ஆகார்.

பெருமைக் குணமானது எக்காலத்திலும் பணிவோடு இருக்கும்; மற்றைச் சிறுமைக் குணமோ தன்னைத் தானே வியந்து புனைந்து கொள்ளும்.
பெருமை சிறுமை என்பன அதனை உடையார்மேல் நின்றன; அவை முறையே பெருந்தன்மை வாய்ந்த பெரியாரையும், சிறுமைக் குணமுடைய சிறியாரையும் குறிக்க வந்தவைகளாம். பெருமை கொண்டவர் எனச் சொல்லப்படுபவர் சிறப்பான நிலையில் உள்ளபோதும் செருக்கு இல்லாமல் பணிவுகொண்டு ஒழுகுவர்; தம் புகழ்கேட்க நாணுவார். ஆனால் சிறியார்களோ சிறப்பு இல்லாத போதும் தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு அலைவர்; பொருட்செலவு செய்தும் புகழ்தேட விரும்புவர்; செருக்குடன் திரிவர்; இச்சிறியவர்கள் பெருமை உடையவர் அல்லர்.

இக்குறள் பணிவுடைமையைப் போற்றுவதோடு பணிவின்மையின் தாழ்வையும் எடுத்துரைக்கிறது. பெருமை யாரிடமும் செருக்குடன் ஒழுகாது தாழ்ந்து நடக்கும். சிறுமையோ தருக்கித் தலைநிமிர்ந்து திரியும். பெருமையுள்ளவர்கள் எப்போதும் பணிவுடையவர்களாக இருப்பார்கள், தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்வர் சிறுமையாளர் எனப் பெருமையின் தன்மை இன்னது; சிறுமையின் தன்மை இன்னது என்பதை இக்குறள் விளக்கியுரைத்தது.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் ................ (அடக்கமுடைமை 125) என முன்பு அறத்துபாலில் பணிவு வலியுறுத்தப்பட்டது. இங்கு பெருமை உடையவர் பணிவுடன் இருப்பர் எனக் கூறப்படுகிறது.
பரிமேலழகர் விளக்கவுரையில், 'இதற்கு உயந்தார் தாழ்வர், தாழ்ந்தார் உயர்வார் - இஃது ஒரு விரோதம் இருந்தவாறு என் என உலகியலை வியந்து இக்குறள் கூறியது என்று பொருள் கூறுவாரும் உண்டு' எனக் கூறியுள்ளார். உயர்ந்தவர் தாழ்வதும் தாழ்ந்தவர் உயர்வதும் உலக இயல்பு இதனிடை ஏன் இந்த ஆர்ப்பாட்டம்? என்ற பொருளில் கூறப்பட்ட உரை ஒன்றை அவர் சுட்டுகிறார். அவ்வுரை யாருடையது என்பது அறியக்கூடவில்லை.

நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம்... (இன்னாசெய்யாமை 320) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்.... (செய்ந்நன்றி அறிதல் 110) என்றவிடங்களில் 'ஆம்' அசைநிலையாதல் போல, பணியுமாம், அணியுமாம் என்றவிடத்தும் அசைநிலையாகக் கொள்கிறார் பரிமேலழகர். 'ஆம்' என்னும் அசை நிலை புதுமைப் போக்கு எனலாம். பணியுமாம், அணியுமாம் என ஈரிடங்களிலும் 'ஆம்' அசைநிலை என்பர் பரிமேலழகர். பொருள் உணர்த்தாத அசையும் இங்கு வியத்தலைச் சுட்டுமாறு தம் மொழிநடையில் அமைந்திருப்பது எண்ணுதற்குரியது' என்பார் இ சுந்தரமூர்த்தி.

'அணியுமாம் தன்னை வியந்து' குறிப்பது என்ன?

'அணியுமாம் தன்னை வியந்து' என்றதற்குத் 'தன்னைப் பெருக்க நினைத்து அலங்கரிக்கும், தம்மை வியந்து கொண்டு அணிவர், தன்னை வியந்துரைக்கும், தன்னைத் தானே மதித்துச் சாலத் தன் திறம் அலங்கரித்து ஒழுகும், பெருமையில்லாத ஞான்றும் தம்மை வியந்து புனையா நிற்பர், தம்மைத் தாமே மகிழ்ந்துகொண்டு இருப்பர், சிறப்புண்டாகில் தம்மைக் கொண்டாடி அலங்கரித்துக் கொள்வார், தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும், சிறப்பில்லாத வழியும் தன்னைத் தானே வியந்து பெரிதுபடுத்திக்கொள்ளும், தன்னைத் தானே வியந்து தருக்கித் திரிவர், தற்புகழ்ச்சி பாடுதல் இயல்பு, தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொள்வார், தம்மைத் தாங்களே மெச்சிப் புகழ் சூட்டிக் கொள்வார்கள், தம்மைத்தாமே புகழ்ந்து பாராட்டிக் கொள்வர், தம்மை வியந்து தம் பெருமை பாராட்டுவர், பெருமையில்லாதபோதும் தம்மை வியந்து புகழ்வர், தற்புகழ்ச்சியில் மயங்கித் தம்மைத் தாமே பாராட்டிக் கொள்வர், தம்மை மெச்சி உயர்வுபடுத்திக் கூறுவர்' என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

சிறியோர் என்றும் தன்னிலையின் தருக்குவர் என்று குறளின் பிற்பகுதி சொல்கிறது. தம்மைத் தாமே பெரியவர் என்று உயர்த்திக் கூறித் தற்பெருமை பேசுவதும் தனக்குத்தானே மிகைபடப்புகழ்ந்து ஆரவார அறிவிப்புகள் செய்வதும் சிறியோர் செயல்களாம். அவர்கள் தம்மைத் தாமே புகழ்ந்துகொண்டு தம்முடைய பெருமைக்குரியதல்லாத செயல்களையும் வியத்தகுவனவாகக் கூறி பீற்றிக் கொண்டிருப்பர். தகுதியுள்ள பெருமை உடையோருக்கு தன்னைத்தான் உயர்த்தித் தெரிவித்துக் கொள்ளத் தேவையில்லை; அதை விரும்பவும் மாட்டார்கள். சிறுமைக் குணம் உடையோர் மற்றவர்கள் தம்மை மறந்துவிடுவர் என்பதால் எப்போதும் தம்மைப் பற்றி அறிவித்து கொண்டே இருப்பர்.

அணியுமாம் தன்னை வியந்து' என்பது தம்மைத் தாமே மகிழ்ந்து புகழ்ந்து கொண்டு இருக்கும் என்ற பொருள் தரும்,

பெருமையுடையவர் எக்காலத்தும் பணிவுடையவர்களாய் இருப்பர்; சிறியோர்கள் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொள்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பணிந்தொழுகுதலும் பெருமைக்குரியதே.

பொழிப்பு

பெருமையுடையவர் எந்நாளும் பணிவோடு இருப்பர்; சிறுமையுடையார் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.