இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0977இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:977)

பொழிப்பு (மு வரதராசன்): சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்.

மணக்குடவர் உரை: செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின், நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம்.
சீரல்லவர்- பெரியரல்லர்.

பரிமேலழகர் உரை: சிறப்பும் தான் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர் அல்லவர்கண்படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்; இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.
(தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: சிறப்புக்கள் இழிந்தவர்களைச் சேருமாயின் தாறுமாறான காரியங்களே நடக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின் இறப்பே புரிந்த தொழிற்றாம்.

பதவுரை: இறப்பே-மிகை, வரம்பு, தருக்கு; புரிந்த-மிக்க; தொழிற்றுஆம்-தொழிலையுடையது ஆகும், செயலையுடையது ஆகும்; சிறப்புந்தான்-பெருமைதானும் (தேற்றப் பொருள்); சீர்-பெருமை; அல்லவர்கண்-அல்லாதவரிடத்தில்; படின்-உண்டாகுமாயின்.


இறப்பே புரிந்த தொழிற்றாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம்;
பரிப்பெருமாள்: நிதியை இழத்தலிலே பொருந்தின தொழிலை உடைத்தாம்;
பரிதி: இறப்பதற்கு இடமாகிய சிறப்பாகிய சிறுமையல்லது பெருமையல்ல;
காலிங்கர்: மற்று அது தானே முறையின் நீங்கிய மிகையே புரிந்த தொழிலினை உடைத்தாகும் அவர்க்கு என்றவாறு.
பரிமேலழகர்: அதனை ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்.

'நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம்/முறையின் நீங்கிய மிகையே புரிந்த தொழிலினை உடைத்தாகும்/தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தன்மையுடையதாகும்', 'அது அதிக்கிரமங்களைச் செய்வதே வேலையாக இருக்கும்', 'அவை வரம்புகடந்த செயல்களைச் செய்விக்குந் தன்மையுடையவாம்', 'நெறிகடந்து செய்யும் செயலுக்கு உரியதாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெறிகடந்த செயல்களை உடைத்தாம் என்பது இப்பகுதியின் பொருள்.

சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: சீரல்லவர்- பெரியரல்லர்.
பரிப்பெருமாள்: செல்வமானது தனக்கு நிகர் இல்லாதவிடத்தே நிற்குமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சீரல்லவர்- பெரியரவல்லவர். மேல் கூறியவற்றிற்குக் காரணம் கூறிற்று
பரிதி: சிறியோர் செய்த சிறப்பும்.
காலிங்கர்: ஒருவர்க்குச் செல்வச் சிறப்பு உளதாயின் அதுவும் பெருமைக்குக் காரணம் அன்றே; அங்ஙனம் சிறந்த செல்வச் சிறப்பும் சீர் அல்லாதவர் மாட்டதாமாயின்.
பரிமேலழகர்: தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும், தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின். [அமைந்திருத்தல் - அடங்கி ஒழுகுதல்]
பரிமேலழகர் குறிப்புரை: தருக்கினை மிகச்செய்யும் என்பதாயிற்று. சிறப்பு - குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது. [தருக்கினை மிகச் செய்யும்- சிறியாரிடத்து உண்டாய சிறப்பானது செருக்கினை (கர்வத்தை) மிகச்செய்யும்]

'செல்வமானது தனக்கு நிகரில்லாதார்மாட்டே நிற்குமாயின்/சிறியோர் செய்த சிறப்பும்/சிறப்புத்தானும், தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப் படுமாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறப்பு நிலையும் தனக்குப் பொருத்தமில்லாத சீரற்ற இழிந்த உயிரிடத்துப் பொருந்தினால்', 'சிறப்பும்கூட, தகுதியற்றவர்களுக்கு வந்துவிட்டால்', 'கல்வி செல்வம் முதலிய சிறப்புக்கள் சிறியாரிடத்துப் பொருந்துமாயின்', 'பெருமைக்குணம் உடையார்க்குரிய சிறப்பும் பெருமைக் குணம் இல்லாத சிறியாரிடம் படுமாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிறப்புக்கள் சிறியாரிடத்துப் படுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறப்புக்கள் சிறியாரிடத்துப் படுமாயின் அது இறப்பே புரிந்த தொழிற்றுஆம் என்பது பாடலின் பொருள்.
'இறப்பே புரிந்த தொழிற்றாம்' என்றால் என்ன?

சும்மாவே தறிகெட்டுத் திரிவான். அவனுக்குச் சிறப்பும் சேர்ந்துவிட்டால்?

சிறப்பும் சிறியாரிடத்தில் பொருந்துமானால் அது வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தன்மையுடையதாகிவிடும்.
சீர் அல்லவர் அதாவது சிறுமைக்குணம் உடையவரிடம் சிறப்புச் சேர்ந்துவிட்டால் கெடுதல்கள் செய்வதற்குத்தான் துணை செய்யும். செல்வம், பதவி போன்றன ஒருவர்க்குப் பெருமை சேர்க்க உதவுவன. ஆனால் அச்சிறப்புக்கள் சிறியோரிடம் சென்றடைந்துவிட்டால் வரம்பு கடந்த செயல்கள் நிகழ்வதற்கு காராணமாகிவிடும்; அவர்கள் அறமற்றவற்றை மிகையாகச் செய்வர். சீர்மையற்ற சிறியார் கையில் செல்வம் சேருவதனால், நற்செயல்கள் ஆற்றாமல் தீமைகள் மிகையாகச் செய்வர். அதுபோல தகுதியற்றவர்க்குப் பெரிய பதவி கிடைத்து விட்டால், அதிகாரப் போதை தலைக்கேறி, அதைத் தகாத வழியில் பயன்படுத்துவர்; தனக்கு வேண்டாதவர்களைத் துன்புறுத்துவது போன்ற முறையற்ற செயல்களுக்காகவே பயன்படுத்துவர். இவ்வாறு அப்பதவியின் பெருமையையும் கெட்டுப் போகச் செய்வர். இத்தகையவர்களுக்குச் சிறப்பு வந்துவிட்டால் அவர்களுடைய தொழிலே சீரல்லவற்றைச் சிறிதும் நாணமின்றிச் செய்வதுதான் என்பதாகிப் போகும்; அவர்கள் தலைகால் புரியாமல் தாறுமாறாகச் செயல்படுவர்.
பெரியரல்லார்க்குக் கிடைக்கப்பெறும் எத்தகு சிறப்பும் பெருமையற்ற வழியிலேயே செலுத்தப்படும்.

'இறப்பே புரிந்த தொழிற்றாம்' என்றால் என்ன?

'இறப்பே புரிந்த தொழிற்றாம்' என்றதற்கு நிதியை இறப்பாரிடத்தே பொருந்தின தொழிலை உடைத்தாம், நிதியை இழத்தலிலே பொருந்தின தொழிலை உடைத்தாம், இறப்பதற்கு இடமாகிய, முறையின் நீங்கிய மிகையே புரிந்த தொழிலினை உடைத்தாகும் அவர்க்கு, தருக்கின் கண்ணே மிக்க செயலை உடைத்தாம், தருக்கிப் பலரிடத்தும் மிகையே தொழிலாகச் செய்வர், வரம்புமீறிய செயலை உடையதாகும், எல்லைமீறிய, தாறுமாறன செயல்களையே செய்விக்கும், தருக்கின் வழிப்பட்ட செயல்களையே செய்வர், தாறுமாறான காரியங்களே நடக்கும், வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தன்மையுடையதாகும், அதிக்கிரமங்களைச் செய்வதே வேலையாக இருக்கும், வரம்பு கடந்து செய்யும் செயலாகவே அமையும், வரம்புகடந்த செயல்களைச் செய்விக்குந் தன்மையுடையவாம், நெறிகடந்து செய்யும் செயலுக்கு உரியதாகும், வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தொழிலையுடையதாகும், ஏறுக்கு மாறாகவே எல்லாம் நடக்கும், செருக்கினால் அளவுகடந்து போகும் செயலை உடையவராக்கி விடும், அடக்கமின்றிச் செருக்கே மிகுந்த செயல்களைச் செய்யும் இயல்பினதாம், பெருமையும் அழிந்த தன்மையுடையனவாகும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

“இறப்பே” என்ற சொல் வரம்பு கடத்தல் அல்லது வரம்பு மீறுதலைக் குறிக்கிறது. வரம்பு கடத்தல், நெறி தவறுதல் எனப் பொருள்படும்படி, இறத்தல் என்னும் சொல்லோடு தொடர்புடைய சொற்கள் குறளில் பல இடங்களில் ஆளப்பட்டுள்ளன: இல் இறப்பான் (145, 146), பொறுத்தல் இறப்பினை (152), அளவு இறந்து ஆவது )283), மாண்பு இறந்த மானம் (432), அஃது இறந்து ஊக்கின் (476), இறந்த வெகுளியின் (531), மறை இறந்து மன்றுபடும் (1138, 1254).
‘இறப்பே புரிந்த தொழிற்றாம்’ என்பதற்குத் தருக்கினை மிகச் செய்யும் என்றும் சாவு உண்டாக்குந் துன்பத்தினைச் செய்யும் என்றும் உரைகள் உள. 'முறையின் நீங்கிய மிகையே புரிந்த தொழிலினை உடைத்தாகும்' என்னும் காலிங்கர் உரை இத்தொடர்க்குப் பொருத்தமான உரையாக அமையும்.

'இறப்பே புரிந்த தொழிற்றாம்' என்றது வரம்பு கடந்த செயல்களைச் செய்விக்கும் தன்மையுடையவாம் என்ற பொருளது.

சிறப்புக்கள் சிறியாரிடத்துப் படுமாயின் அது நெறிகடந்த செயல்களை உடைத்தாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெருமையும் உரியவர் பெற்றால்தான் சிறக்கும்.

பொழிப்பு

சிறப்புக்கள் சிறியாரிடத்துச் சேருமாயின் நெறிகடந்த செயல்களே நடக்கும்.