சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு
(அதிகாரம்:பெருமை
குறள் எண்:976)
பொழிப்பு (மு வரதராசன்): பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
|
மணக்குடவர் உரை:
சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை, பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து.
இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு - அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; சிறியார் உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது.
(குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம்.)
இரா இளங்குமரன் உரை:
பெருமைக்குரியவரைப் போற்றி, அவர் வழியைக் கொள்வோம் என்னும் கொள்கை, சிறுமைப் பண்பினர் உள்ளத்தில் தோன்றுவதில்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு சிறியார் உணர்ச்சியுள் இல்லை.
பதவுரை: சிறியார்-அறிவிற் சிறியார், குண நலன்களில் சிறுமையுடையவர்; உணர்ச்சியுள்-அறிவில், மனத்தின்கண்; இல்லை-இல்லை; பெரியாரை-பெருமையுடையவரை; பேணிக் கொள்வேம்- போற்றிக் கொள்வோம்; என்னும்-என்கின்ற; நோக்கு-கருத்து.
|
சிறியார் உணர்ச்சியுள் இல்லை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை;
பரிப்பெருமாள்: சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை;
பரிதி: சிறியார்களிடத்து இல்லை;
காலிங்கர்: சிறியவர் உணரும் உணர்ச்சியுள் இல்லை;
பரிமேலழகர்: மற்றைச் சிறியராயினார் மனத்தின்கண் உளதாகாது.
'சிறுமையுடையார் உணர்வின்கண் இல்லை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சிறியவர்கள் அறிவிற் படுவதில்லை', 'சிறியவர்களது உணர்ச்சியுள் இருக்காது', 'சிறு மனமுடையவர்களிடத்தில் இருப்பதில்லை (அது உண்மையாகவே பெருமை மனம் உடையவர்களிடத்தில்தான் உண்டு.)', 'சிறியர் ஆயினார் அறிவினுள் இல்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
சிறுமைக்குணம் கொண்டோர் அறிவிற் தோன்றுவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
பெரியாரைப் பேணிக்கொள்வேம் என்னும் நோக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது பெரியாரைப் பெறுதலும் பெருமையென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, பெருமையுடையார்மாட்டு உண்டு என்றவாறாயிற்று. இது பெரியாரைப் பேணுதலும் பெருமையென்று கூறப்பட்டது.
பரிதி: பெரியாரைப் பேணிக்கொள்ளவேணும் என்ற பெருமை என்றவாறு.
காலிங்கர்: யாது எனின், பெரியோரைப் பொருள் எனக் கருதி நமக்கு இது வேண்டும் என்று விரும்பிக் கைக்கொள்வோம் என்னும் விசாரம் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து; [அப்பெற்றியராய - செயற்கரிய செயல்களைச் செய்யும் வழியால் முடிவு பெறச் செய்யுந் தன்மையராகிய; யாம் கோடும் -நாம் கொள்வோம்]
பரிமேலழகர் குறிப்புரை: குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு, அஃது உடையராதல் கூடாது என்பதாம். [அஃது உடையராதல் கூடாது - அவ்வியல்பினை உடையராதல் இயலாது]
பெருமை யுடையாரைப் போற்றித் துணையாகக் கொள்வேமென்னும் கருத்து/பெரியாரைப் பேணிக்கொள்ளவேணும் என்ற பெருமை/பெரியோரைப் பொருள் எனக் கருதி நமக்கு இது வேண்டும் என்று விரும்பிக் கைக்கொள்வோம் என்னும் விசாரம்/பெரியாரை வழிபட்டு அவர் இயல்பினை யாம் கோடும் என்னும் கருத்து என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பெரியவர்களைப் போற்றிக் கொள்ளும் கருத்து', 'பெரியவர்களைப் போற்றி அவர்களை வாழ்க்கைக்குத் துணையாக ஏற்றுக்கொள்வோம் என்னும் நோக்கம்', 'தம்மினும் பெரியவர்களை நத்தி, (தமக்குத் தெரியாதவற்றைத் தெரிந்து) கொள்ளலாம் என்ற எண்ணம்', 'பெரியாரை வழிபட்டு அவரைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பெரியவர்களைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பெரியவர்களைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து சிறுமைக்குணம் கொண்டோர் உணர்ச்சியுள் இல்லை என்பது பாடலின் பொருள்.
'உணர்ச்சியுள் இல்லை' என்பதன் பொருள் என்ன?
|
பெருமை உடையாரை அடையாளம் கண்டு துணையாகக் கொள்க.
பெரியாரைப் போற்றி அவரைத் துணையாக ஏற்றுக்கொள்வோம் என்னும் கருத்து சிறுமையுடையார் அறிவில் புலப்படுதல் இல்லை.
பெரியாரது பெருமைக்குரிய வழிகளைப் பின்பற்றுவோம் என்கிற எண்ணம் சிறுமைக் குணம் கொண்டோர்க்குத் தோன்றுவதில்லை.
அவரைப் போற்றிக் கொள்வதும் பெருமை கொள்வதற்குரியதுதான் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
பெருந்தன்மையாளர் கல்வி ஆற்றல் ஒழுக்கங்களிற் சிறந்த பெரியாரைப் போற்றிப் பயன்பெறுவர்; ஆனால் பெருமை பெற்றவர்களது சிறப்பைப் புரிந்துகொள்ளமுடியாத சிறுமதியாளர்க்கு அவர்களைப் போற்றி அவர் வழி நடப்போம் என்கிற நினைப்புகூட உண்டாவதில்லை. பெரியோருடன் பழக வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாதிருக்கிறார்களே என இரங்குகிறார் வள்ளுவர்.
முன்பு அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் (பெரியாரைத் துணைக்கோடல் 443 பொருள்: அருமையான செய்திகள் யாவற்றினும் அருமையானதே பெரியோரை விரும்பித் தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்.) எனப் பெரியாரிடம் உறவு வைத்துக்கொள்வது பற்றிச் சொல்லப்பட்டது.
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் (பெரியாரைத் துணைக்கோடல் 442 பொருள்: வந்த பேரிடர் போக்கி மீண்டும் பெருந்துயர் வாராமல் காக்கவல்ல திறனுடையவர்களைப் போற்றித் துணையாகக் கொள்க) என்ற குறளில் பெரியாரைத் துணைக்கொள்வதின் பயனும் கூறப்பட்டது,
அந்தந்தத் துறையில் சிறந்தாராக உள்ளவரே பெரியார் எனப்படுகிறார்.
ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டு ஆராய முடியாது என்பதால் பெரியவர்களின் பட்டறிவைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெரியோர்களிடத்தில் கலந்து ஒழுகுதல் அவனுக்குத் தீங்கு நேராமல் காக்கும். அறிவுடைமை, ஆள்வினைத் திறத்தில் உயர்ந்து விளங்கும் பெரியோரின் சிறப்பைப் புரிந்துகொண்டு அவர்வழி நடந்தால் அது வாழ்க்கையில் வெற்றிபெறத் துணை செய்யும்; அவரது ஆற்றலைத் தனதாக்கி கொள்ள முடியும். அதனால் அவர்கள் செல்லும் வழியைப் பின்பற்றி வாழ்தல் பெருமையும் அளிக்கும்.
பெரியார்க்குமே பெரியாரைப் பேணிக் கொள்ளல் பெருமை தருவதாம்.
சிறியார் பெரியோர்களைப் பார்த்தாவது அவர்களது சிந்தனை, செயல்களைக் கைக்கொண்டு உயர்ந்து பெருமை பெற வேண்டும் என்று வள்ளுவர் விரும்புகிறார்.
சிறுமைக்குணம் உடையவர்கள் தருக்கித் திரிபவர். அவர்கள் தங்கள் உணர்ச்சிகளிலேயே பெரியவர்களைப் மதிக்கும் குணம் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். பெரியோரைப் புறக்கணித்தல் அவர்களது இயல்பான குணமாகி விடுகிறது. அவர்களுக்கு அவர்களே பெரியவர். அதனால் பிறர் நலனை அழித்துக் கொழிக்கும் சிறியார் உணர்ச்சியில், தம்மினும் உயர்ந்தோரான தன்னலம் துறந்து வாழும் பெரியோர் சென்றவழிச் செல்வோம் என்ற சிந்தனை சிறிதும் உண்டாவதில்லை.
|
'உணர்ச்சியுள் இல்லை' என்பதன் பொருள் என்ன?
'உணர்ச்சியுள் இல்லை' என்றதற்கு உணர்வின்கண் இல்லை, இல்லை, உணரும் உணர்ச்சியுள் இல்லை, மனத்தின்கண் உளதாகாது, அறிவின் இல்லை, உணர்ச்சியில் இல்லை, உள்ளத்தின்கண் இயல்பாக உளதாகாது, உணர்வில் இல்லை, அறிவிற் படுவதில்லை, உணர்ச்சியுள் இருக்காது, இருப்பதில்லை (அது உண்மையாகவே பெருமை மனம் உடையவர்களிடத்தில்தான் உண்டு), உள்ளத்தில் தோன்றுவதில்லை, மனத்தில் நிலைபெறுவது இல்லை, அறிவினுள் இல்லை, எண்ணம் ஏற்படுவதில்லை, உள்ளத்தில் தோன்றுவதில்லை, உணர்ச்சியில் உண்டாகாது என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.
பெரியோர் சென்றவழியில் நடக்கவேண்டுமென்று சிறியோர்கள் உணரக்கூட மாட்டார்கள். அந்த உணர்ச்சி உண்டானால்தான் பெரியாரைப் பின்பற்றுவது நிகழும். பெருமை படைத்தவர் பெரியார். பெரியாரிடமிருந்து பெறக்கூடியன நிறைய உள. அறியாமை, செருக்கு, தன்னலம் ஆகிய இவற்றால் பெரியாரை ஏற்கமாட்டாதவர்களும் உண்டு. சிறுமைக் குணம் உடையவர்களுக்கோ அவர்கள் உணர்வில் கூட பெரியாரை மதித்துப் போற்ற வேண்டும்; அவர் துணை கொண்டு முன்னேற்றம் பெறவேண்டும் என்ற எண்ணமும் தோன்றுவதில்லை. இதனால் இழப்பு சிறியோர்களுக்குத்தான். பெரியாரைத் துணைக்கொள்வதால் பெருமையும் பெறமுடியும். அதையும் சிறியார் தவறவிடுகிறார்கள் என்கிறது இப்பாடல்.
'உணர்ச்சியுள் இல்லை' என்றது அறிவிற் படுவதில்லை என்ற பொருள் தரும்.
|
பெரியவர்களைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து சிறுமைக்குணம் கொண்டோர் அறிவிற் தோன்றுவதில்லை என்பது இக்குறட்கருத்து.
பெரியாரின் வழியைப் பின்பற்றுவதும் பெருமைக்குரியதே.
பெரியாரைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து சிறியவர்கள் அறிவிற்குத் தோன்றுவதில்லை.
|