இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0973மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:973)

பொழிப்பு (மு வரதராசன்): மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

மணக்குடவர் உரை: மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார்.
இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.

பரிமேலழகர் உரை: மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார்.
(மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உயர்ந்த இடத்தில் இருந்தாலும் மேம்பட்ட தன்மை இல்லாதவர்கள் பெரியர் அல்லர்; தாழ்ந்த இடத்தில் இருந்தாலும் கீழான தன்மையில்லாதவர்கள் தாழ்ந்தவர் ஆகார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மேலல்லார் மேலிருந்தும் மேலல்லர்; கீழல்லவர் கீழிருந்தும் கீழல்லார்.

பதவுரை: மேல்-உயர்ந்த இடம்; இருந்தும்-இருந்தாலும்; மேல்-மேன்மை; அல்லார்-இல்லாதவர்; மேல்-மேலானவர்; அல்லர்-ஆகமாட்டார்; கீழ்-கீழான இடம்; இருந்தும்-இருந்தாலும்; கீழ்-சிறியர்; அல்லார்-ஆகமாட்டார்; கீழ்-கீழ்மை; அல்லவர்-இல்லாதவர்.


மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்;
பரிப்பெருமாள்: மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்;
பரிதி: நற்குலத்தார் அல்லாதார் மேலிருந்தும் கீழ்மையாவர்;
காலிங்கர்: மனையும் மாடும் பொருளும் பூமியும் முதலியவற்றான் மேலாயினாரும் தம் குலமும் ஒழுக்கமும் குணமும் ஞானமும் முதலியவற்றான் மேம்பாடுடையவர் அல்லாதார் யாவர்; அவர் எஞ்ஞான்றும் சாலச் சிறியரே;
பரிமேலழகர்: செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்; [அமளி- இருக்கை]

'மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்' எனப் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நற்குலத்தார் அல்லாதார் மேலிருந்தும் கீழ்மையாவர்' எனக் குலம் பற்றிப் பேசுகிறார். காலிங்கர் 'செல்வத்தில் மேலாக இருந்தாலும் தம் குலமும் ஒழுக்கமும் குணமும் ஞானமும் முதலியவற்றான் மேம்பாடுடையவர் அல்லாதார் சிறியரே' என்கிறார். 'செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்' எனச் செயலில் சிறியர் பெரியாராக முடியாது என்ற பொருளில் பரிமேலழகர் உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேலிருந்தும் மேலான செய்யாதார் சிறியவர்', 'உயர்நிலையிலிருந்தாலும் உயர்ந்த பண்பில்லாதவர் மேன்மக்களாகார்', 'மேலான மனம் இல்லாதவர்கள் மேலான இடத்திலிருந்தாலும் மேலானவர்கள் ஆகிவிடமாட்டார்கள்', 'மேல் நிலையில் இருந்தும் மேன்மையான செயல்களுக்கு உரியர் அல்லார் மேலானவர் அல்லர் ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேலிருந்தும் மேன்மையில்லாதார் மேலானவராகார் என்பது இப்பகுதியின் பொருள்.

கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார்.
மணக்குடவர் குறிப்புரை: இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
பரிப்பெருமாள்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம். இது செல்வத்தினால் பெரியாரையும் பெரியார் என்று கொள்ளப்படாது என்றது.
பரிதி: நற்குலத்தார் கீழிருந்தும் மேன்மையாவர் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அம் மனையும் மாடும் முதலியவற்றால் சிறிதும் கீழ்மைப்பாடு உடையரல்லாதார் யாவர்; மற்று அவர் எஞ்ஞான்றும் கீழ் அல்லர்; எனவே அவரே சாலப் பெருமையர் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். [அவை - செயற்கரிய செயல்கள்; வறுநிலத்து - வெறுந்தரையில்]
பரிமேலழகர் குறிப்புரை: மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.

'கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார்' எனப் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நற்குலத்தார் கீழிருந்தும் மேன்மையாவர்' என்கிறார். காலிங்கர் 'செல்வத்தில் சிறிதும் கீழ்மைப்பாடு உடையரல்லாதார் எஞ்ஞான்றும் கீழ் அல்லர்; எனவே அவரே சாலப் பெருமையர் என்பது பொருளாயிற்று' எனப் பொருளுரைத்தார். 'செயலில் பெரியராயினார் தாழ்ந்த வெறுந்தரையிலிருந்தாலும் சிறியராகார்' எனப் பரிமேலழகர் உரை வரைகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கீழிருந்தும் கீழான செய்யாதார் பெரியவர்', 'தாழ்ந்த நிலையிருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்களாகார்', 'கீழான மனம் இல்லாதவர்கள் கீழான இடத்தில் இருந்தாலும் கீழானவர்கள் ஆகிவிடமாட்டார்கள்', 'கீழ் நிலையில் இருந்தும் இழிந்த செயல்களுக்கு உரியர் அல்லார் கீழானவர் அல்லர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கீழ்நிலையில் இருந்தும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மேலிருந்தும் மேலல்லார் மேலானவராகார்; கீழ்நிலையில் இருந்தும் கீழல்லார் கீழ்மக்களாகார் என்பது பாடலின் பொருள்.
'மேலல்லார்' என்பதிலுள்ள 'மேல்' குறிப்பது என்ன?

எங்கிருந்தால் என்ன? பெரியோர் பெருமைக்குரியவரே!

மேலான இடத்தில் இருந்தாலும் மேன்மைக் குணம் இல்லாதவர் மேன்மக்கள் ஆகார். கீழ்நிலையில் இருந்தாலும் கீழ்மைக் குணம் இல்லாதவர்கள் கீழ்மக்கள் எனக்கருதப்படார்.
பிறப்பால் சிறப்பில்லை; செய்யும் தொழிலால் சிறப்புகள் வேறுபடுகின்றன என்று முந்தைய குறளில் (972) சொல்லப்பட்டது. இங்கு மேல்நிலையில் இருக்கும் ஒருவர் மேன்மையான பண்புகள் கொண்டிராவிடில், அவர் மேலானவர் என்று மதிக்கப்படமாட்டார்; அதற்கு நேர்மாறாகக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்பண்புகளுடன் தீய செயல்களை எண்ணாமல் வாழ்வாரானால், அவர் மதிப்பிற்குரியவராகக் கருதப்படுவார் என்று சொல்லப்படுகிறது. மேல்நிலை என்பது செல்வத்தால், செல்வாக்கால், பதவியால் மேல்நிலையில் உள்ளவர்களையும், கீழ்நிலை என்பது வறுமையால் வாடுவோரைச் சுட்டுவதாகவும் கொள்வர். ஒருவரது குணநலன்கள் கொண்டு பெரியர், சிறியர் எனத் தெளிதல் வேண்டும் என்கிறது பாடல். நல்லொழுக்கம், அறிவு, ஈகை, வாய்மை, தூய்மை பொதுநலத் தொண்டு முதலாயன மேன்மைக் குணங்கள்; தன்னலம், மடமை, தீயொழுக்கம், ஈயாக்குணம், பொய், பொறாமை போன்றன சிறுமைக் குணங்கள்.

மாந்தர்க்குள் பெருமை- சிறுமை வேறுபாடு உண்டு. முன்பு மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு (கல்லாமை 409 பொருள்: கல்லாதார் மேல்நிலையில் பிறந்தவராயினும் தாழ்நிலையில் பிறந்த கற்றாரது பெருமை அளவு பெருமை கொண்டவர் அல்லர்) எனக் கல்வியின் காரணமாக பெருமை சிறுமை உண்டாகும் என்று சொல்லப்பட்டது.
மேலான நிலை மட்டும் ஒருவருக்கு உயர்வு தராது; தகுதிப்பாடும் ஒழுக்கமும் இல்லாத சிறியர் சில நேரங்களில் மேலான பதவிகளில் போய் அமர்ந்துவிடுகின்றனர். செல்வம், செல்வாக்கு, பதவி, ஆட்படை, கண்ணசைவில் பகைமுடிக்கும் தொண்டர்கூட்டம் என்றெல்லாம் பெற்று அவர்கள் மேலாதிக்கம் செய்தாலும், பண்பாட்டில் மேன்மை பெறாவிடில் அவர்களால் மேலோர் ஆகமுடியாது. அவர்கள் கீழோராகவே கருதப் பெறுவர். அவ்வாறே, தகுதியும் ஒழுக்கமும் பெருமையும் உடைய பெரியோர் வாய்ப்புக் கிடைக்காமலும் பொருட்செல்வமோ செல்வாக்கோ பெறாத நிலையிலும் பண்புகளில் உயர்ந்து நிற்கும்போது அவர்கள் கீழ்மக்கள் ஆகார்; உயர்வாகவே எண்ணப்படுவர். வீரமாமுனிவர் 'முத்து சேற்றிலே கிடந்தாலும் முத்துத்தானே; சேறு முத்திலே கிடந்தாலும் சேறுதானே' என்று தனது உவமையுடன் இக்குறட்கருத்தை விளக்குவார். பண்பில் தாழ்வராயின் கீழோர்; கீழ்நிலையில் இருந்தாலும் பண்பாலும் தொழிலிலும் சிறந்தாராயின் உயர்ந்தோரே என்பது இக்குறட்கருத்து.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (அறன் வலியுறுத்தல் 37 பொருள்: பல்லக்கைத் தாங்கிச் செல்வார், ஏறிச் செலுத்துபவர் இவர்களிடத்து அறவழி இது என்று கூற வேண்டாம்) எனப் பல்லக்கில் அமர்ந்திருப்போன், அதனைச் சுமப்போன் இருவரையும் ஒப்பிட்டுக் கூறும் பாடலுடன் இணைத்தும் இக்குறளை நோக்கலாம். சிவிகை ஊர்பவர் என்பதற்காக மேலோர் என்றோ அதைப் பொறுப்பவர் என்பதால் கீழோர் என்றோ கொள்ளக்கூடாது.

'மேலல்லார்' என்பதிலுள்ள 'மேல்' குறிப்பது என்ன?

'மேல்' என்பதற்கு மேலான இடம் அதாவது செல்வத்தால் இருக்கும் இடம், நற்குலம், செல்வத்தால் மேல், உயர்ந்த அமளி முதலியவற்றின் மிகையிருத்தல், உயர்ந்தஇடம், உயர்ந்த ஆசனம், மேலான பதவி, மேல்நிலை, உயர்நிலை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். கீழ் என்பதற்கு மேல் என்பதன் எதிர்ச்சொல்லாகக் கொண்டு பொருளுரைத்தனர்.

இக்குறளிலுள்ள மேல், கீழ் என்ற சொற்கள் சமுதாயத்தின் மேல்நிலையையும், கீழ்நிலையையும் குறிப்பன. பொதுவாக பதவி, செல்வாக்கு போன்றவை அந்நிலைகளைத் தீர்மானிக்கின்றன என்றாலும் மாந்தர் பார்வையில் ஒருவரது செல்வநிலையே அவரது மேல், கீழ் நிலைகளை உடனடியாக முடிவுசெய்கின்றன. அதனாலேயே தொல்லாசிரியர்களும் செல்வத்துடன் இணைத்தே இந்நிலைகளை வரையறுக்கின்றனர்.
மேலல்லார் மேலிருத்தலால் அவர்க்குச் செல்வமுடைமையும் கீழல்லவர் கீழிருத்தலால் அவர்க்கு வறுமை உடைமையும் உணர்த்தப்பட்டன. இனி, மேலல்லார் பெருமையிலர் என்பதையும் கீழல்லவர் சிறுமையிலராவர் என்பதையும் புலப்படுத்தின.

மேல், கீழ் என்பவற்றிற்குக் காலிங்கர் தரும் 'மனையும் மாடும் பொருளும் பூமியும் முதலியவற்றான் மேலாயினாரும் தம் குலமும் ஒழுக்கமும் குணமும் ஞானமும் முதலியவற்றான் மேம்பாடுடையவர் அல்லாதார் யாவர்; அவர் எஞ்ஞான்றும் சாலச் சிறியரே. இனி மற்று அம் மனையும் மாடும் முதலியவற்றால் சிறிதும் கீழ்மைப்பாடு உடையரல்லாதார் யாவர்; மற்று அவர் எஞ்ஞான்றும் கீழ் அல்லர்; எனவே அவரே சாலப் பெருமையர் என்பது பொருளாயிற்று' என்ற உரை தெளிவான விளக்கம் தருகிறது. இது செல்வம் முதலியவற்றால் சிறந்தாராயினும் குணம் தொழில் இவற்றாற் சிறவாராயின் இழிந்தோரேயாவர்; செல்வ வளத்தாற் கீழ்ப்பட்டாராயினும் ஒழுக்கத்தான் கீழாகாதார் உயர்ந்தாரே யாவர்' என்னும் கருத்தைத் தருவது.
செல்வம் செல்வாக்குகளாலும் அமளி முதலிய இடத்தானும் மேல்நிலை எட்டப்படுகின்றது. மேலிருத்தல் என்பது சில இயல்பு நிலையானும் பண்பு, தொழில் முதலிய செயற்கை நிலையானும் உண்டாவது. இயல்பு நிலையால் உயர்ந்தார் செயற்கை நிலையால் தாழ்ந்தாராயின் மேலல்லவராவர். அதுபோலவே கீழிருந்தார் செயற்கை நிலையான் உயர்வராயின் உயர்ந்தாராவர். மேன்மைக் குணமே உயர்வு தாழ்வை அறிவிப்பதுதாம்.

மேல் என்றது பெருமையையும், கீழ் என்றது சிறுமையையும் குறித்து வந்தன.

மேலிருந்தும் மேன்மையில்லாதார் மேலானவராகார்; கீழ்நிலையில் இருந்தும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒருவர்க்குப் பெருமை குணத்தால் வரும்.

பொழிப்பு

மேலிருந்தும் மேன்மையில்லாதார் மேன்மக்களல்லர்; கீழிருந்தும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களல்லர்.