இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0971



ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்

(அதிகாரம்:பெருமை குறள் எண்:971)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்.
இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இளி அஃது இறந்து வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.
(ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்'(குறள்.26)என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: ஒருவனுக்குச் செயற்கரிய செய்தல் கூடும் என்று தோற்றும் ஊக்கமிகுதியே, பலரிடைச் சிறந்து நிற்கும் ஒளியாகும். அத்தகைய சூழல் வரும்போது, ஊக்கத்துடன் செயற்கரியதைச் செய்யாது, அதைக் கைவிட்டு எளிதாய் வாழ்வோம் என எண்ணுதல் அவனுக்கு இழிவு தருவதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை; ஒருவற்கு இளி அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

பதவுரை: ஒளி-நன்கு மதிக்கப்படுதல்; ஒருவற்கு-ஒருவர்க்கு; உள்ள-ஊக்க; வெறுக்கை-மிகுதி; இளி-மாசு; ஒருவற்கு-ஒருவர்க்கு; அஃது-அது; இறந்து-ஒழிந்து; வாழ்தும்-வாழக்கடவோம்; எனல்-என்று கருதல்.


ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்:
மணக்குடவர் குறிப்புரை: இது பெருமையாவது நிறையுடைமை யென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, மிகக் கொடுக்க வல்லாரைப் பெரியர் என்று கூறிற்று.
பரிதி: புகழாவது தருமம்;
காலிங்கர்: தமது உள்ளம் என்றும் பெருமைக்கண் சேறலே, ஒருவர்க்கு 'இவர் பெரியர்' என்று பேர்விளங்கும் தோற்றமாவது;
பரிமேலழகர்: ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி;
பரிமேலழகர் குறிப்புரை: ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை. 'ஒளிநிறான் ஓங்குபுகழ் செய்யான்' (நாலடி.செல்வம் நிலையாமை. 9) என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார் பெரியர்' (குறள்.26) என்றாராயினும் ஈண்டு அவை அளவறிந்த ஒப்புரவு ஈகை முதலியவாம். அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின் மேலிட்டு 'உள்ளவெறுக்கை' என்றும், அது தன்னையே அதன் காரியமாகிய ஒளிஆக்கியும் கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும் ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக் கூறப்பட்டது.

ஒருவனுக்கு மனப்பெருமை புகழாம்/புகழாவது தருமம்/உள்ளம் என்றும் பெருமைக்கண் சேறலே, ஒருவர்க்கு 'இவர் பெரியர்' என்று பேர்விளங்கும் தோற்றமாவது/ஒருவனுக்கு ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று கருதும் ஊக்கமிகுதி என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு மதிப்பாகும்', 'ஒருவனுக்குப் புகழாவது ஊக்கம் மிகுதியாம்', 'ஒருவன் தன்னுடைய திறமையில் தன்னம்பிக்கை உள்ளவனாக இருப்பது புகழத்தக்கதுதான்', 'ஒருவனுக்கு பெரிய மதிப்பாவது அரியவற்றைச் செய்யக் கருதும் ஊக்க மிகுதி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர்க்கு மதிப்பாவது அவருடைய ஊக்கம் மிகுதியே என்பது இப்பகுதியின் பொருள்.

இளிஒருவற்கு அஃதுஇறந்து வாழ்தும் எனல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்.
பரிப்பெருமாள்: அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்.
பரிதி: அது இல்லையாயின் அபகீர்த்தி பெறுவர் என்றவாறு.
காலிங்கர்: அதனால் அஃது ஒழிந்து உயிர் வாழ்தும் என்று கருத்துதல் தமக்குப் பெரிதும் இளிவரவாம்.
பரிமேலழகர்: ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.

அதனை நீங்கி வாழுமென்று பிறர் சொல்லுதல் ஒருவனுக்கு இளிவாமாதலான்/ஒருவனுக்கு மாசாவது அச்செயலை யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனை விட்டு வாழ்தல் என்பது குறைவாகும்', 'ஒருவனுக்கு இழிவாவது ஊக்கமொழிந்து உயிர்வாழ்வோம் என்று கருதுதலாம்', 'ஆனால் அதை அளவுக்கு மீறி மேற்கொண்டு வாழ நினைப்பது குற்றம்', 'ஒருவனுக்கு இழிவாவது, ஊக்கமில்லாது உயிர் வாழவேண்டும் என்று எண்ணுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அதனை நீங்கி வாழ்தல் என்பது குறைபாடாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர்க்கு மதிப்பாவது அவருடைய ஊக்கம் மிகுதியே; அதனை நீங்கி வாழ்தல் என்பது குறைபாடாகும் என்பது பாடலின் பொருள்.
'ஒளி' என்பதன் பொருள் என்ன?

பெருமை இல்லாமல் வாழமுடியாதா என்று எண்ணுவது தவறு.

ஒருவர்க்குப் மதிப்பாவது செயற்கரிய செயலைச் செய்ய எண்ணும் ஊக்கமிகுதியே ஆகும்; அந்த ஊக்க மிகுதி இல்லாமலேயே உயிர் வாழலாம் என்று எண்ணுதல் இழிவாம்.
ஒருவருக்குப் பெருமை மனவூக்கமே; ஒருவர்க்கு இழிவாவது, 'மனக்கிளர்ச்சி இல்லாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும். ஏதோ இவ்வுலகில் தோன்றினோம் வாழ்வோம் பின் மறைவோம் என்றிருக்கும் மாந்தர்க்கும், அரிய செயல்கள் புரிந்து தமது வாழ்வைப் பொருளுடையதாக்குபவர்க்கும் உள்ள வேற்றுமையே பெருமையாம் என்பதை உணர்த்துகிறது இக்குறள்.
பெருமையையே வள்ளுவர் ஒளி என்ற சொல்லால் இங்கு குறிப்பிடுகின்றார். பெருமை என்பது மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுவதால் உண்டாவது. அந்தப் பெருமை செயற்கரியன செய்யவேண்டும் என்ற ஊக்கமிகுதியால் கிடைப்பது; ஊக்கமிகுதி 'உள்ள வெறுக்கை' என்ற தொடரால் குறிப்பிடப்படுகிறது. வெறுக்கை என்ற சொல் இங்கு மிகுதி என்ற பொருளைத் தருவது. எதையும் முடிக்க முடியும் என்று விரைவோடு உண்டாகின்ற உள்ள எழுச்சியே அது. உள்ள ஊக்கமாவது மனம் மெலிதல் இன்றி செயல் ஆற்றுதற்கண் எழுச்சி உடையதாதலாம். அது மனமுயற்சியின் மிகுதிக்கு இயைந்து வந்தது. உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை....(ஊக்கமுடைமை 600) என ஊக்கமுடைமை அதிகாரப்பாடலிலும் உள்ள வெறுக்கை என்பது ஊக்க மிகுதி என்ற பொருளில் வந்தது. உள்ளவெறுக்கை என்பது அதன் காரியமாய செய்தற்கரியவற்றை உணர்த்தி, பின் அதன் காரியமாய பெருமையை உணர்த்துதலின் இருமடியாகு பெயராம் என்பர் இலக்கண நூலார். பெருமையே அதன் காரியமாகிய ஒளி என்று உருவகமாக்கிக் கூறப்பட்டது.
'ஒளி' என்னும் சொல்லுக்கு எதிர்ச் சொல்லாக 'இளி' இடம்பெற்று உள்ளது. 'இது நம்மாலாகாது' என மனம் சோர்வது 'இளி'யாகும். அவ்விதம் வாழ்பவர் மதிக்கப் பெறுவதில்லை. இவர்கள் கிடைப்பதை உண்டு எதையாவது உடுத்தி ஏதோ வாழ்கிறோம் என்று எண்ணுபவர்கள்; அவ்விதம் நடப்பது மன எழுச்சி இல்லாத மாசுபடிந்த வாழ்வாகும் அதாவது இளிவரலாம் என்கிறார் வள்ளுவர்.

'ஒளி' என்பதன் பொருள் என்ன?

'ஒளி' என்றதற்குப் புகழ், பெயர் விளங்குந் தோற்றம், தாம் உளவாங் காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை, கீர்த்தி, ஒருவனைச் சிறப்பித்து அவன் பெயரை விளங்கச் செய்யும் பெருமை அதாவது ஒருவன் பெயரை விளங்கச் செய்வதால் அவனுக்கு வரும் பெருமை, தான் செய்த உதவியால் பலரும் பாராட்டும் புகழுடைமை, பலரிடைச் சிறந்து நிற்கும் ஒளி, மதிப்பு, பெருமை, பெரிய மதிப்பு, பெருமதிப்பு, ஆளுமை ஒளி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒளி என்றதற்கு அரசர்பாலுள்ள கடவுட்டன்மை, புகழ், வடிவு, மன்னவன் ஒளி, அருளாணை எனவும் பொருள் கூறுவர். ஆனால் இங்கு குடிகளது சிறப்பே சொல்லப்படுகிறது; ஆள்வோரது புகழ் அல்ல.
மதிப்பை நிலைக்கச் செய்யான் என்ற பொருளில் 'ஒளி நிறான்' என்ற தொடர் நாலடியாரில் செல்வம் நிலையாமை 9-வது பாடலில் வந்துள்ளது. அதுபோலவே ஒளி என்பது மதிப்பு அல்லது பெருமை என்ற பொருளிலேயே இக்குறளிலும் ஆளப்பட்டது. இதையே பரிமேலழகர் தானுளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை என்றார். ஒருவர் வாழ்கின்ற காலத்துப் புகழுடனும் செல்வம் செல்வாக்குடனும் திகழ்வதே ஒளியாம். பலர் கூடியுள்ள இடத்தில் அவர் பிறரினும் மேம்பட்டு சிறப்புற்றுத் தோன்றுவார்; அவரைப் பார்த்ததும் ஒரு பெருமிதமான உணர்வு வரும்; அது அவர் ஒளியுடன் திகழ்கிறார் அதாவது ஆளுமையுடன் விளங்குகிறார் என்பதைச் சொல்லும். அதுவே மிக்குத் தோன்றுதலுடைமையாம்.

ஒளி என்ற சொல் இங்கு பெரிய மதிப்பு எனப் பொருள்படும்.

ஒருவர்க்கு மதிப்பாவது அவருடைய ஊக்கம் மிகுதியே; அதனை நீங்கி வாழ்தல் என்பது குறைபாடாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மனஊக்கம் ஒருவருக்குப் பெருமை உண்டாக்கும்.

பொழிப்பு

ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு பெருமை தரும்; அதை நீங்கி வாழ்வோம் என்று கருதுதல் சிறுமையே உண்டாக்கும்.