இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0969



மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

(அதிகாரம்:மானம் குறள் எண்:969)

பொழிப்பு (மு வரதராசன்): தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.



மணக்குடவர் உரை: ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார், மானம் அழியவரின் உயிர்விடுவர்.

பரிமேலழகர் உரை: மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது.)

வ சுப மாணிக்கம் உரை: மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர் மானம் போவதாயின் உயிரைப் போக்குவர்.

பொருள்கோள் வரிஅமைப்பு:
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் மானம் வரின் உயிர் நீப்பர்.

பதவுரை: மயிர்-முடி; நீப்பின்-நீங்கினால்; வாழா-உயிரோடிராத, வாழமுடியாத; கவரிமா-கவரிமான், மான்களில் ஒரு வகை, ஒருவகை விலங்கு; அன்னார்-ஒத்தவர்; உயிர்நீப்பர்-உயிர் துறப்பர்; மானம் வரின்--மானம் கெட நேர்ந்தால்.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார்;
பரிப்பெருமாள்: ஒரு மயிர் நீங்கின் உயிர்வாழாத கவரிமாவைப் போன்ற மானமுடையார்;
பரிதி: ஒரு மயிர் சிக்கினால் பிராணனைவிடும் கவரிமான் போல;
காலிங்கர்: தனக்கு அலங்காரமாகிய மயிர்க் கற்றையின் ஒரு மயிர் போகின் மானித்துப்பின் உயிர் வாழாது. அம் மயிர் துவக்கு உண்ட இடத்து நின்று, வற்றிவிடூஉம் கவரிமா அன்ன கட்டுப்பாடுடையார்; [துவக்கு உண்ட இடத்து- சிக்கியபோது; வற்றிவிடூஉம்- சோர்ந்து போகின்ற]
பரிமேலழகர்: தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்;
பரிமேலழகர் குறிப்புரை: இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. [நீப்பினும் என்னும் இழிவு சிறப்பு உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது]

'ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் அனைவரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்', 'தன்னுடைய உடலின் மீதுள்ள மயிரை பிறர் நீக்கின உடனே தன் உயிரை விட்டு விடுகிற கவரிமானைப் போன்றவர்கள் மானிகள்', 'தனது மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வைத்துக்கொண்டிராத கவரிமான் போன்ற இயல்புடையவர்கள்', 'மயிர் ஒன்று நீங்கினால் வாழாத கவரிமானை ஒப்பார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மயிர் நீங்கின் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போன்றோர் என்பது இப்பகுதியின் பொருள்.

உயிர்நீப்பர் மானம் வரின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மானம் அழியவரின் உயிர்விடுவர்.
பரிப்பெருமாள்: மானம் அழியவரின் உயிர்விடுவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் சாவ வேண்டும் என்றார். அது செய்யல் ஆகுமோ என்றாற்கு மானம் உடையார் சாவார் என்றது.
பரிதி: மானம் வந்தால் பிராணனையும் விடுவர் நல்லோர்.
காலிங்கர்: தம் குடிமையின் சிறிது நீங்கி மானிப்பதோர் மானம் வந்துறின் அப்பொழுதே தம் உயிர் துறப்பர்.
பரிமேலழகர்: உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின், அதனைத் தாங்காது இறப்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: உயிரும் மானமும் உடன் நில்லாமைக்கண் பின்னும் போவதாய உயிரை நீத்து, எஞ்ஞான்றும் நிற்பதாய மானத்தை எய்துவர் என்பதாம். உவமை அவர்க்கு அஃது இயல்பு என்பது விளக்கி நின்றது. [உடன் நில்லாமைக்கண் - ஒரு சேர இயைந்து நில்லாத விடத்து; உயிரை நீத்து - உயிரைத் துறந்து]

மானம் அழியவரின்/மானம் வந்தால்/மானம் வந்துறின்/உயிர் நீக்கத்தான் மானம் எய்தும் எல்லை வரின் உயிர்விடுவர் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மானம் கெடவரின் உயிரைத் துறப்பர்', 'மானக்கேடு வந்தால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்', 'உயிர்விடுவதனாலேயே மானம் நிலைக்குமாயின் உயிரை விட்டுவிடுவர்', 'மானம் கெடவரின் உயிரை விட்டுவிடுவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மானத்துக்கு கேடு நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மயிர் நீங்கின் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போன்றோர் மானத்துக்கு கேடு நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர் என்பது பாடலின் பொருள்.
'கவரிமா' என்பது என்ன?

மானத்துக்காக வாழ்வைத் துறப்பது மாந்தரின் வீரச்செயலாம்.

மயிர் நீங்கியபின் உயிர் வாழமுடியாத கவரி போன்ற இயல்புடையவர் மானம் கெட நேர்ந்தால் தம் உயிரை அழித்துக்கொள்வர்.
கவரிமா என்பது ஒரு வகை விலங்கு. அதன் உடல் முழுவதும் மயிர் நிறைந்திருக்கும். தன் மயிர்த்திரளிலிருந்து மயிர் நீக்கப்பட்டால், அது உயிர் வாழ இயலாது என்பது அதன் இயற்கை. அதுபோல, 'மானம் உயிர்நிலை' என்று மனிதர் பலர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் மானத்துக்கு கேடு உண்டானால், இயல்பாகவே தம்முடைய உயிரை விட்டுவிடுவர்.

மானம் என்பது மதிப்பு என்ற சொல்லோடு தொடர்புபடுத்தப்படுவது. மானம், உயிர் இவற்றில் ஒன்றுதான் தங்கும் என்னும் நிலை வந்தால் உயிரைப் பலியாகக் கொடுத்து மானம் காப்பர் நற்பண்பு ஓம்பும் உணர்வுள்ள மாந்தர். உயிரா மானமா என்ற நிலை வரும்போது வாழ்வைத் துறப்பது சிறந்தது என்பது வள்ளுவக் கோட்பாடு.
'மானம் வரின்' என்பதற்கு 'மானம் கெடவரின்' அதாவது 'மானம் கெடநேர்ந்தால்' என்று பொருள் கொள்வர். மானம் கெடும் நிலை எப்போது ஏற்படும்? வள்ளுவரே சொல்லியபடி தன் நிலையின் இழிந்தபோது, தன்னை இகழ்வார்மாட்டுச் செல்லும் நிலை உண்டாகும்போது, பெருந்தன்மையாகிய மானம் தன் பெருமை கெடுமிடத்து, இளிவரவு ஏற்படும்போது - இவை போன்ற நிலைகளில் மானம் கெடும். பரிமேலழகர் உயிர் நீங்க மானம் எய்தும் எல்லைவரின் என்றுரைப்பார்.
உயிரை நீக்கியேனும் விழுமங்களைப் போற்றவேண்டும் என்பதை ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.(ஒழுக்கமுடைமை 131 பொருள்: ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.), தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. (கொல்லாமை 327 பொருள்: தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத் தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.), புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்.(புறங்கூறாமை 183 பொருள்: புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.) போன்ற பிற இடங்களிலும் வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
மானம் இழந்ததால் உயிர் துறந்தவர்கள் கதைகள்/வரலாறுகள் பல உண்டு. இழந்த தன் மானத்தைக் காப்பாற்ற மன்னன் ஒருவன் உயிரை விட்ட நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டு உள்ளது. அரசியின் காற்சிலம்பைத் திருடிய பொற்கொல்லனின் சூழ்ச்சியால், கோவலன் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. நன்கு ஆராயாமல், கோவலனுக்குச் சாவுத்தண்டனை வழங்குகிறான் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன். கொலையுண்ட கோவலனின் மனைவி கண்ணகி, தன் கணவன் குற்றமற்றவன் என்பதை அரசனின் அவையில் சான்று காட்டி நிறுவினாள். உண்மையை உணர்ந்த மன்னன் நீதி தவறிய தன் தீர்ப்பால், தன் குலத்தின் மானம் போய்விட்டதே என்று வருந்தி உடனே அவ்விடத்தே தன் உயிரை நீத்தான்.

'மயிர்' என்பது பேச்சு வழக்கில் தவிர்க்கப்படவேண்டிய சொல்லாக இன்று உள்ளது. மயிர், மயிராண்டி என்பன வசைச் சொற்களாம். ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில் மயிர் என்கின்ற சொல் இயல்பாய்ப் பயின்று வந்திருக்கின்றது. தலை மயிருக்கு நாம் செலுத்தும் அக்கறையையும் கவனிப்பும் உதிர்ந்துவிட்ட மயிர்க்கு இல்லை என்ற பொருளிலும் இச்சொல்லை வள்ளுவர் தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை என இதே அதிகாரத்து 964-இல் ஆண்டுள்ளார்.
மயிர் நீங்கினால் உயிர்விடும் கவரிமானை ஒத்தவர்கள் மானமிழந்தால் உயிரை விடுவர் என்று இங்கு மயிரை மானத்திற்கு உவமை கூறியது ஆனந்தவுவமை (ஆனந்தவுவமை: மிகவும் இழிந்தபொருளோடு ஒப்பிடு தலாகிய உவமைக்குற்றம்) எனக் குறை கண்டனர். இதற்குத் தண்டபாணி தேசிகர் 'கவரிமானிற்கு மயிர்மீது அன்பு இன்றியமையாததாக இருத்தல்போல இவர்க்கு மானத்தின் மீது ஆர்வம் வேண்டும் என்பது குறிக்கோள்; ஆதலால் ஆர்வம் என்ற உயர்வு பற்றி வந்ததேயாம். நாயனையார் கேண்மை கெழீஇக்கொளல் வேண்டும், என்பதைக் குணம்பற்றிக் கொள்வதல்லது நாய்ப்பிறப்புப்பற்றி இழிவு கூறுவதில்லையே என்க' என விளக்கம் அளிப்பார்.

கவரிமா என்பது என்ன?

'கவரிமா'' என்றதற்குக் கவரிமா எனத் தொல்லாசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகியோரும் கவரிமான் எனப் பரிதியும் பொருள் கூறினர். மா என்ற சொல், எல்லா விலங்கையும் குறிக்கின்ற பொதுச் சொல். கவரி, விலங்கு ஆதலின் அதனைக் கவரிமா என்றனர். காலப்போக்கில் கவரிமா என்ற சொற்றொடர், ‘கவரிமான்’ ஆகிவிட்டது. இதனால் கவரியை மான் இனத்தில் ஒன்றாகக் கருதிவிட்டனர் என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். கவரி என்பது யாக்(Yak) என்று அறியப்படுவதாகும். இது இமயமலையில் திபெத்து பகுதியில் மிகக் குளிர்ந்தவையும் மிக உயர்ந்தவையுமான மலைகளில் வாழ்கின்ற எருது வகை விலங்குகளில் ஒன்று. இதன் உடம்பு முழுக்க மயிர் வளர்ந்து அதன் முதுகு, மார்பு, வயிறு ஆகியவை மூடினாற் போல் காட்சியளிக்கும். மூடிக் கிடப்பதால் இந்த மயிர் கவரி என்று சொல்லப் பட்டது. கவரியைக் கொண்ட மா கவரிமா ஆகும். இமயமலையில் வாழும் இந்த விலங்கு, உடம்பில் மயிரை இழந்துவிட்டால், குளிரைத் தாங்க முடியாமல் இறந்துவிடும். இதைத்தான் வள்ளுவர் இக்குறளில் குறிப்பிட்டார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

கவரி இமயமலையில் வாழ்கின்ற விலங்குகளில் ஒன்று என்பதற்கு புறநானூற்றுப்பாடலும் பதிற்றுப்பத்துச் செய்யுளும் சான்று பகர்கின்றன.
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி,
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமயம்
(புறநானூறு: 132 பொருள்: நரந்தையையும் நறிய புல்லையும் மேய்ந்த கவரிமா, குவளைப் பூவையுடைய பசிய சுனையின் நீரை நுகர்ந்து, அதன் பக்கத்தவாகிய தகரமரத்தினது குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும். வட திசைக் கண்ணதாகிய வானைப் பொருந்தும் இமய மலை). இதில் இமயமலையில் வாழும் கவரி என்ற குறிப்பு உள்ளது.
மேலும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் எனும் புலவர், இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கின்ற நின்புகழாகிய செல்வத்தை இனிது கண்டோம் என்று வாழ்த்திய பாவில் கவரியைக் குறிப்பிடுகிறார்:
கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
(பதிற்றுப்பத்து 11:21 – 24) பொருள்: நெருங்கி வளர்ந்துள்ள முள்ளுடை முருங்கை மரங்களின் நீழலில் துஞ்சும் கவரிமா நரந்தம் புல்லை உண்டு மகிழுவதாகக் கனாக் காணும். அருவிகள் பல நிறைந்த, ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்).
இப்பாடல்கள் கூறும் செய்திகளின் அடிப்படையில் கவரிமா என்றது இமயமலையில் வாழும் விலங்கு பற்றியே என்று துணியலாம்.

மானம் என்ற பண்பையும் கவரிமா என்ற விலங்கையும் உரையாசிரியர்கள் எவ்விதம் தொடர்படுத்திக் கூறுகின்றனர்?
மானமுடையார்க்கு கவரிமா, மானம் என்றதற்கு மயிர்த்திரள், மானம் இழத்தலுக்கு மயிர் இழத்தல், பொதுத்தன்மையாக உயிர்விடுதல் என இப்பாடலின் உவமையில் கொள்ளப்பட்டது. 'மயிர்’ என்று திருவள்ளுவர் பொதுவாகவே கூறியுள்ளார். ஆனால், பழைய உரையாசிரியர்கள் அனைவரும் ஒரு மயிர் என்று கருதிவிட்டனர். கவரிமா, மானம் மிக உடைய விலங்கு என்று கருதி ஒரு மயிரை இழந்த மானக்கேட்டால் அந்த இடத்திலேயே உயிர்விடுகின்ற இனம் என்று உரையாசிரியர்கள் மொழிந்தனர். 'மயிர் நீப்பின்' என்பதற்கு 'ஒரு மயிர் நீங்கின்' என்று எழுதிக் கவரிமானின் இயற்கையை மிகுதிப்படுத்தினர் தொல்லாசிரியர்கள்.
சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவர் ‘மானக்கவரி’ (சிந் - 2120) என்றார்
கம்பர் ‘மானமா’ என்றார்.
'வான்மயிர் துடக்கின் தானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரி' என்று பெருங்கதை (35, 233, 4) கூறியது.
வ சுப மாணிக்கம் 'மயிர் பறிப்பின் இறக்கும் கவரிமான் போன்றவர்' என்று தன் உரையில் 'பறிப்பின்' என்ற சொல்லை ஆள்கிறார்.
"காட்டில் வாழும் கவரிமான் தன்னிடமுள்ள நீண்டமுடியில் ஒரு முடி அற்று விழுந்து விடுமேயானால், அதற்கு மானம் பொறாமல் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இயல்புடையதாகும், இவ்வியல்பைத் தெரிந்த வேடர்கள் அம் மான் செல்லும் வழியில் அடர்ந்த முள்ளைக் கொண்டு போட்டிருப்பார்களென்றும் கவரிமான் அவ்வழியாகச் செல்லும்பொழுது அதன் நீண்ட முடி அம்முள்ளில் சிக்கிக் கொள்ளுமென்றும் அவ்வாறு சிக்கிக் கொண்டமுடி சிதைந்தாலும் அறுந்தாலும் அம் மான் அவ்விடத்திலேயே உயிர் துறக்குமென்றும் கூறுகின்றார்கள்." என்கிறார் ரா பி சேதுப்பிள்ளை.
குன்றக்குடி அடிகளார் "கவரிமான் என்பது மான் வகையில் ஒரு சாதி. இந்த கவரிமான் காடுகளில் ஓடித் திரிந்து வாழும். அப்படி ஓடித் திரிந்து வாழும் அந்தக் கவரிமான் ஒரு வேலியைத் தாண்டும்பொழுது வேலியில் கவரிமான் உடம்பிலுள்ள ரோமம் ஒன்று உதிர்ந்துவிட்டாலும் கவரிமான் பொறுத்துக் கொள்ளாதாம்!" என்று குறித்துள்ளார்.
கவரிமான் தனது உடல் மயிரை முழுவதுமாக இழந்தால் வாட்டமுற்று உணவேதும் உண்ணாமல் உயிரிழந்து விடும் என்றும் உரைத்தனர்.
கவரிமா ஒருமயிர் நீங்கினால் உயிர்விடும் என்று பெரும்பான்மையினரும், மொத்த மயிற்கற்றையும் உடலில் இருந்து போய்விடுவதால் உயிர் நீக்கும் என்று சிலரும் மயிர்க்கற்றை சிக்கினால் இறந்துபடும் என்று மற்றவரும் கூறியுள்ளனர். இவை எவற்றிற்கும் சான்றுகள் இல்லை. மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா என்பது கவிக் கற்பனையாகவும் இருக்கலாம்.

தன் உடம்பில் உள்ள மயிரில் ஒன்றேனும் உதிராமல் வாழ்கின்ற விலங்கு என்று எதுவும் இருக்க முடியாது. இயற்கையாகவே விலங்கின் மயிர் வெவ்வேறு வேளைகளில் உடலினின்றும் நீங்கும். தன் மயிர் உதிர்வதால் உயிர்விடுகின்ற விலங்கு என்பது கிடையாது; இது இயற்கைக்குப் பொருந்தாதது என்று விலங்கியல் நூல் அறிஞர்கள் கருதுவர்.
முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர் இருந்தது என்பதை நாம் எளிதாக நம்புகிறோம் (தொட்டாச் சிணுங்கிச் செடியை நாம் இன்று கண்ணாரக் காணமுடிவது ஒரு காரணம்). மானம் கருதி கவரிமா உயிர் நீக்காமல் இருக்கலாம்; ஆனால் மயிர் இழந்ததால் குளிர் தாங்கமுடியாமல் உயிர் இழக்கக் கூடிய விலங்கினம் இருக்க வாய்ப்பு உண்டு.
முகர்ந்தாலே வாடிவிடக்கூடிய அனிச்சமலர், பாலைமட்டுமே பிரித்து அருந்தும் நுட்பம் கொண்ட அன்னப்பறவை, சிங்கம் போன்ற உருக்கொண்ட யாளி, பெரும் உருவும் வலிவும் கொண்ட டைனோசர் ஆகியன போன்று மயிர் போயின் உயிர்நீக்கும் கவரிமா என்பதும் முன்பு வாழ்ந்து காலப்போக்கில் அழிந்து போயிருக்கலாம். எனவே மயிர் இழப்பால் உயிர் நீங்கிய கவரிமா என்றொரு விலங்கினமே கிடையாது என்றும் கூறமுடியாது.

மயிர் நீங்கின் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போன்றோர் மானத்துக்கு கேடு நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம் உயிரைவிட மேலானது.

பொழிப்பு

மயிர் நீங்கினால் உயிர்வாழ முடியாத கவரிமாவைப் போன்றவர்கள் மானம் இழந்தால் உயிர் வாழ மாட்டார்கள்.