இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0968



மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழியவந்த இடத்து

(அதிகாரம்:மானம் குறள் எண்:968)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?

மணக்குடவர் உரை: தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்துச் சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ.
பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.

பரிமேலழகர் உரை: பெருந்தகைமை பீடு அழிய வந்த இடத்து - உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி; ஊன் ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ - இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ?
('மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது. நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது.)

வ சுப மாணிக்கம் உரை: மானத்தின் ஏற்றம் அழியும் நிலையில் உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருந்தகைமை பீடு அழியவந்த இடத்து ஊன்ஓம்பும் வாழ்க்கை மற்று மருந்தோ?

பதவுரை: மருந்தோ-மருந்தாகுமா?; மற்று-அசைநிலை (அவ்வாறன்று, ஆனால், பின் என்னும் பொருளது); ஊன்-உடம்பு, தசை; ஓம்பும்-காக்கும்; வாழ்க்கை-வாழ்தல்; பெருந்தகைமை-மானம், பெருமதிப்பு; பீடு-பெருமை, வலிமை; அழிய-கெட; வந்தஇடத்து-வந்த நேரத்தில்.


மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ;
பரிப்பெருமாள்: சாவாதே இருந்து உயிர் ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ;
பரிதி: கீர்த்தி நிற்கும்; பிராணன் நிலையில்லை;
காலிங்கர்: மானித்து ஒழியாது பின்னும் இருந்து ஊனோம்பும் செய்கை மருந்தோ; எனவே, சாவா மூவாப் பதம் தரும் செய்கையோ அச்செய்கை; [மானித்து- மானத்தைக் கருதி]
பரிமேலழகர்: இறத்தலொழிந்து பயனில்லாத உடம்பினைக் காக்கும் வாழ்க்கை பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ?
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' என்பது மேற்சொல்லிய இறப்பினை மாற்றி நின்றது.

'சாவாதே இருந்து உயிரினை ஓம்பி வாழும் வாழ்க்கை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாவாது உடம்பைப் பேணி வளர்க்கும் வாழ்க்கை பின்னும் சாவாதிருக்க மருந்தாகுமா?', 'உயிரை விட்டொழிக்காமல் வாழ்ந்திருப்பது ஊனுடலை அழியாதிருக்கச் செய்யக்கூடிய அமிர்தமா?', 'இறவாது உடலைப் பாதுகாத்து வாழும் வாழ்க்கை பின் இறவாமையைத் தரும் அமிழ்தமாமோ! (ஆகாது என்றவாறு; அத்தகைய வாழ்க்கை புகழ் தராது என்பது கருத்து.)', 'இறப்பதை விட்டு உடலை வளர்க்கும் வாழ்க்கை, சாவாமலிருப்பதற்கு மருந்தாகுமோ? ஆகாது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடலை வளர்ப்பது வாழ்வுக்கு மருந்தாகுமா? என்பது இப்பகுதியின் பொருள்.

பெருந்தகைமை பீடு அழியவந்த இடத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்து. [தகைமை- தகுதி]
மணக்குடவர் குறிப்புரை: பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக.
பரிப்பெருமாள்: தனது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: பெருந்தகைமை அழியவந்தவிடத் தென்று கூட்டுக. இஃது, அதற்கு அழிவு வரவு உளதாயின் சாவவேண்டும் என்றது. [அழிவரவு-அழிதல்]
பரிதி: மான ஈனம் வந்தால் பிராணனை விட்டு மானத்தை ரக்ஷிப்பானாகில்.
காலிங்கர்: குடிப்பிறந்தோர்க்குத் தம் குடிப்பண்பாகிய பெருந்தகைமை அழிய வந்த இடத்து.
பரிமேலழகர்: உயர்குடிப் பிறப்புத் தன்வலியாகிய மானம் அழியவந்துழி?
பரிமேலழகர் குறிப்புரை: நற்குணங்கட்கு எல்லாம் இடனாதல் சிறப்புப்பற்றி, 'பெருந்தகைமை' என்றும், அவை எல்லாவற்றுள்ளும் அதற்கு வலியாதற் சிறப்புப்பற்றி, 'பீடு' என்றும், அஃது அழிந்தால் நின்ற வெற்றுடம்பு இழிக்கப்படுதலின், அதனை 'ஊன்' என்றும், பின்னால் இறத்தல் ஒருதலை என்பார் 'மருந்தோ' என்றும் கூறினார். மானத்தின் தொழில் அதற்கு இடனாகிய குடிப்பிறப்பின்மேல் நின்றது. [ஒருதலை - உறுதி]

'தமது பெரிய தகைமை வலியழிய வந்தவிடத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருந்தகைமையாகிய மானம் தன் பெருமை அழிய வந்தவிடத்து', 'மனிதருக்குப் பெருந்தன்மை தருகின்ற மானம் என்பது கெட்டுப் போனபின்', 'குடியின் பெருஞ்சிறப்பு உயர்நலங் கெட்டு அழிந்துபோகும்படி நேர்ந்தபோது', 'பெருமைக்குணமாம் மானம் கெடவந்தவிடத்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெருந்தன்மையாகிய மானம், தன் பெருமை கெடுமிடத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெருந்தன்மையாகிய மானம், தன் பெருமை கெடுமிடத்து உடலை வளர்ப்பது வாழ்வுக்கு மருந்தோ? என்பது பாடலின் பொருள்.
'மருந்தோ' என்பதன் பொருள் என்ன?

உடலை வளர்ப்பதற்காக மட்டுமா வாழ்கிறோம்?

ஒருவர்க்குள்ள மானஉணர்வின் வலிமையை இழக்கக்கூடிய நிலை நேர்ந்தபோதும் அவன் தன் உடம்பை ஊட்டிக் காப்பது அவனை இறக்காமல் இருக்கச் செய்யுமா? செய்யாது.
உடற்காப்புக்காக வாழுகிறோம்? அல்ல. உயிருள்ளவரை மானத்துடன் வாழ்வதே நமது குறிக்கோள். நிலையாத உடலிலிருந்து ஒருநாள் உயிர் நீங்கத்தான் போகிறது. உயிர் உள்ளவரை நம் உள்ளத்தைத் தூயதாக வைத்திருக்க வேண்டும்; மானம் கெடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மானம் இழந்தும் உயிர் வாழலாம்தான். அந்தநிலையிலும் உடலை ஓம்புகிற வாழ்க்கை தேவைதானா? என்றாவது ஒருநாள் உயிர் போகத்தானே போகிறது. உடம்பைப்பேணுவதால் அப்படியே சாகாமலா இருக்கப்போகிறாய்? மானம் அழிய வரும்போது உடம்பினைக் காக்கும் வாழ்க்கை மருந்தாகுமா?
இவ்வுலகில் சாவாமல் இருப்பதற்கென்று ஒரு மருந்தும் இல்லை. எனவே உயிரினும் மானம் பெரிது என எண்ணுக. உடம்பு காக்க தந்நிலையில் தாழலாம் என நினையாதே என்கிறார் வள்ளுவர்.

'மருந்தோ' என்பதன் பொருள் என்ன?

'மருந்தோ' என்ற சொல்லை பின்பும் ஒருகாலஞ் சாவாமைக்கு மருந்தாமோ, பிராணன் நிலையில்லை, பின்னும் ஊனோம்பும் செய்கை மருந்தோ; எனவே, சாவா மூவாப் பதம் தரும் செய்கையோ அச்செய்கை, பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ, இனிமேலும் சாகாமல் இருக்கிறதற்கு மருந்தாமோ, பின் சாவாமைக்கு மருந்தாமோ, சாவாமைக்கு மருந்தோ, இறவாமல் வாழ உதவும் மருந்தாகுமோ, உயிருக்கு மருந்தாகுமா, பின்னும் சாவாதிருக்க மருந்தாகுமா, அழியாதிருக்கச் செய்யக்கூடிய அமிர்தமா, சாவாமைக்கு மருந்தாகி விடுமோ? (ஆகாது), பின் இறவாமையைத் தரும் அமிழ்தமாமோ! (ஆகாது என்றவாறு; அத்தகைய வாழ்க்கை புகழ் தராது என்பது கருத்து.), சாவாமலிருப்பதற்கு மருந்தாகுமோ? ஆகாது, இறவாமைக்கு மருந்தாகுமோ? ஆகாது, பின்பும் இறவாமலிருத்தற்கு மருந்தாகுமோ! ஆகாதே!, சாவாமைக்கு மருந்தாகுமா? என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.

மானம் கெடவரும்போது அதைப்பற்றிக் கவலைப்படாமல் வாழ்வது அதற்குரிய தீர்வு ஆகுமா என்று கேட்கிறது இக்குறள். பெருந்தகைமையாகிய மானம் அழிய வந்தபோது உடல் நலத்தில் கருத்து செலுத்துவது அதற்கு மருந்து ஆகுமா? என்று ஐயப்படுவதுபோல் அமைந்துள்ளது பாடல். 'மருந்தோ' என்பதில் ஐயம் அடங்கியுள்ளது.
'மருந்தோ’ என்பதற்குப் பின்னும் இறவாமைக்கு மருந்தாமோ என்றே அனைவரும் உரை செய்தனர். காலிங்கர் சாவா, மூப்பு இல்லாமல் செய்யும், பதம் தரும் செய்கையோ என உரைப்பார். மானம் இழந்தும் வாழும் வாழ்க்கை, சாகாமல் இருப்பதற்கு மருந்தென்று நினைக்கிறாயோ என்று வள்ளுவர் ஏளனமும் சினமும் கலந்த குரலில் கேட்பது போல உள்ளது இப்பாடல்.

'மருந்தோ' என்றது இறவாமைக்கு மருந்தாகுமா என்ற பொருள் தருவது.

மானத்தின் ஏற்றம் அழிய வந்தவிடத்து உடலை வளர்ப்பது வாழ்வுக்கு மருந்தாகுமா? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உயிருள்ளவரை மானம் கெடாமல் வாழ்வோம்.

பொழிப்பு

பெருந்தகைமையாகிய மானம் தன் பெருமை அழிய வந்தவிடத்து உடம்பைப் பேணி வளர்க்கும் வாழ்க்கைக்கு மருந்தாகுமா?