இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0966



புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை

(அதிகாரம்:மானம் குறள் எண்:966)

பொழிப்பு (மு வரதராசன்): மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?

மணக்குடவர் உரை: இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது பின்னை என்ன பயனைக் கருதி?
இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.

பரிமேலழகர் உரை: இகழ்வார்பின் சென்று நிலை - மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை; புகழ் இன்று - இவ்வுலகத்துப் புகழ் பயவாது; புத்தேள் நாட்டு உய்யாது - ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; மற்று என் - இனி அவனுக்கு அது செய்வது யாது?
(புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன்னை இகழ்வார் பின்னே செல்லும் நிலை புகழைத் தாராது; தேவருலகத்தும் செலுத்தாது; இனி அவனுக்குச் செய்வது யாது? ஒன்றும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகழ்வார்பின் சென்று நிலை புகழின்று (ஆல்); புத்தேள்நாட்டு உய்யாது (ஆல்); மற்று என்?.

பதவுரை: புகழ்-புகழ், இசை; இன்று(ஆல்)-இல்லை; புத்தேள்-வானவர்; நாட்டு-உலகத்தில்; உய்யாது(ஆல்)-செலுத்தாது; என்-என்ன; மற்று- அசைநிலை (அவ்வாறன்று, ஆனால், பின் என்னும் பொருளது); இகழ்வார்பின்-அவமதிப்பார் பின்னே; சென்று-போய்; நிலை-நிற்குந் தன்மை.


புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், பின்னை என்ன பயனைக் கருதி?
பரிப்பெருமாள்: இம்மைப் பயனாகிய புகழைத் தாராதாயின், மறுமைப் பயனாகிய சுவர்க்கத்துப் புகுதலில்லை ஆயின், பின்னை என்ன பயனைக் கருதி?
பரிதி: புகழில்லாதார்க்குத் தெய்வலோகம் இல்லை;
காலிங்கர்: இங்ஙனம் குடிப்பிறந்தோர்க்கு இம்மைக்கண் பெரியதோர் இகழ்ச்சி அல்லது புகழ்ச்சி இல்லை; ஆயின் மறுமைக்கண் வானுலகு உய்க்கும் வாய்ப்பு இல்லை; ஆதலால், இனி மற்று என்னை கொல்லோ?
பரிமேலழகர்: இவ்வுலகத்துப் புகழ் பயவாது; ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?
பரிமேலழகர் குறிப்புரை: புகழ் பயப்பதனைப் 'புகழ்' என்றார். பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது என்னை என்பதாம். [கொன்னே - பயனின்றி (வீணாக)]

'புகழ் பயவாது; ஏனைப் புத்தேளுலகத்துச் செலுத்தாது; இனி அவனுக்கு அது செய்வது யாது?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழ் வருமா? தேவருலகு கிடைக்குமா?', 'புகழினையும் தாராது; தேவருலகத்துக்கும் கொண்டு சேர்க்காது. வேறு என்ன பயன்?', 'புகழ்தரக் கூடியதும் அல்ல; (புண்ணியமாக) மோட்சத்துக்குக் கொண்டு போய் விடக்கூடியதும் அல்ல; பின் எதற்காக அப்படியும் மானத்தை விட்டு பலர் உயிர் வாழ்கின்றார்கள்?', 'இம்மையிற் புகழையுந் தராது; மறுமையில் விண்ணுலகத்திலுஞ் செலுத்தாது; பின் அதனால் என்ன பயன்?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புகழ் இல்லை; நல்வினைப் பயனும் கிடையாது; பின் எதற்கு? என்பது இப்பகுதியின் பொருள்.

இகழ்வார்பின் சென்று நிலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது தம்மை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.
பரிப்பெருமாள்: தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தன்னை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க வென்றது.
பரிதி: அப்படி அறிந்திருந்தும் சத்துருக்களிடத்துப் போய் ஒதுங்கி வாழலாமோ என்றவாறு. [சத்துருக்களிடத்து-பகைவரிடத்து]
காலிங்கர்: தம்மை இகழ்வார் பின்னரே தாம் சென்று நிற்கும் நிலை; எனவே மானக்கேடல்லது மற்று ஒரு பயனில்லை என்றவாறு.
பரிமேலழகர்: மானத்தை விட்டுத் தன்னை அவமதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலை;
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் அவை செய்தற் குற்றம் கூறப்பட்டது.

'தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மதியார் பின்னே மானங்கெட்டு நிற்பதேன்?', 'தன்னை அவமதிப்பார் பின்னே மானங்கெட்டு நிற்பது', 'தம்மை அவமதிக்கிறவர்களை நத்தி, அவர்களுக்கு அடங்கி மானத்தைவிட்டு உயிர் வாழ்வது', 'தன்னை அவமதிப்பார் பின்சென்று நிற்கின்ற நிலை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது புகழ் இல்லை; நல்வினைப் பயனும் கிடையாது; பின் எதற்கு? என்பது பாடலின் பொருள்.
'இகழ்வார்பின் சென்று நிலை' குறிப்பது என்ன?

அவன் உன்னை இகழ்கிறான் என்பது உனக்கு உறைக்கவில்லையா?

தன்னை இகழ்ந்துரைப்பார் பின் சென்று நிற்கும் நிலை ஒருவனுக்கு புகழைத் தாராது; புத்தேள்நாடு செல்லுதலும் எப்பொழுதும் இல்லை. பின் அவரைப் பின்பற்றிச் செல்வது எதற்காக?
ஒருவர் மற்றொருவனை மதிக்காமல் எந்த நேரமும் இகழ்ந்து கொண்டிருக்கிறார். பிறகும் இகழ்பவரின் பின்னே சென்று நிற்கிறான். அவ்விதம் ஒருவன் பிறர் பின்நிற்பது அடிமைபோல் வாழ்க்கை நடத்தும் மானம் இல்லா நிலையாகும். கெஞ்சிக்கொண்டு இகழ்வார்பின் வால்பிடித்துச் செல்பவனை யாரும் மதிப்பதில்லை; மானங்கெட்டு நடப்பதால் அவன் நற்பெயர் பெறமுடியாது என்பது வெளிப்படை. இதனால் புகழில்லை எனச்சொல்லப்பட்டது.
புத்தேள்நாடு என்பது துறக்க உலகத்தைக் குறிப்பது. விண்ணுலகம் அல்லது சொர்க்கம் என்று சொல்லப்படும் அவ்வுலகத்தில் எல்லாமே இன்பமானது; துன்பமேயில்லை. நல்வினைப்பயன் (புண்ணியம்) சேர்த்தவர்கள் அங்கு செல்வர் என்பது நம்பிக்கை. மானங்கெட்டு வாழ்வு நடத்துபவன் விண்ணடைதற்கு ஏதுவாய நல்வினையில் ஊக்கங் கொள்ளமாட்டானாதலால் நல்வினைப் பயனும் சேராது என்கிறது பாடல். அதாவது அவனுக்கு எக்காலத்தும் பேருவகையும் கிடையாது.
பின் ஏன் அவன் இகழ்வாரிடம் தொடர்ந்து இருக்கவேண்டும்? தன் மானத்தைக் காக்க வேண்டுமானால் அவரிடமிருந்து உடனே விலகிவிடவேண்டும் என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று (பகைத்திறம்தெரிதல் 875 பொருள்: தனக்கோர் துணையிலதாயின், தனக்குப் பகை இரண்டு ஆயின் அவ்விரு பகையுள் ஒன்றினைத் தனக்கு நல்ல துணையாகக் கொள்க) என்ற குறளில் வந்ததுபோல் இங்கும் இன்றாலிலுள்ள ஆல் என்பதை அசைச்சொல்லாக்கி 'இன்று' எனப்பொருள் கூறுவர்.

'இகழ்வார்பின் சென்று நிலை' குறிப்பது என்ன?

'இகழ்வார்பின் சென்றுநிலை' என்றதை இகழ்வார்மாட்டுச் சென்று நிற்றலைத் தவிர்க, சத்துருக்களிடத்துப் போய் ஒதுங்கி வாழலாமோ, மானக்கேடல்லது மற்று ஒரு பயனில்லை, பயனாய இவ்விரண்டும் இன்றிக் கொன்னே மானம் கெடுகின்றது, புகழ்பட வாழாமல் இகழ்வார் பின் சென்று நிற்றல் தகாது, மானங்கெட்டு நிற்பதேன்?, பின் எதற்காக அப்படியும் மானத்தை விட்டு பலர் உயிர் வாழ்கின்றார்கள்?, இனி அவனுக்குச் செய்வது யாது? ஒன்றும் இல்லை. இகழ்ந்துரைப்பார் பின்சென்று நிற்பவனுக்கு இழிவைத் தவிர்த்து நன்மை சிறிதும் இல்லை என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.

தன்னை இகழ்பவரின் பின் ஏன் ஒருவர் செல்கிறார்? அவ்விதம் செல்பவர் இயல்பாகவே அடிமைப்பண்பு கொண்டவாராகவோ இருக்கலாம் அல்லது வாழ்வியலைச் செலுத்துவதற்குப் பொருள் பெறுவதற்காகவோ இருக்கலாம். பொருள் பெறச் செல்பவர் வறுமையில் உழல்பவராக இருப்பர்.
வறுமைநிலையில் இகழ்வார்பின் சென்று நின்று மானத்தை இழப்பதைவிட வாழ்வைத் துறப்பதே மேல் என்று சிலர் உரை கண்டனர். இப்பாடலில் உயிர் நீத்தல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எனவே அப்பொருள் சிறவாது.

'இகழ்வார்பின் சென்று நிலை' என்பது மானத்தைவிட்டுச் செல்லுகின்ற நிலையைக் குறிக்கும்.

தன்னை இகழ்ந்துரைப்பார்பின் சென்று ஒருவன் நிற்கின்றது புகழ் இல்லை; நல்வினைப் பயனும் கிடையாது; பின் எதற்கு? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புகழோ மகிழ்ச்சியோ இல்லாவிட்டாலும் மானம் கெடாமல் இரு.

பொழிப்பு

தன்னை மதியார் பின்னே மானங்கெட்டு நிற்பது புகழ் இல்லை; நல்வினைப் பயனும் (புண்ணியமும்) கிடைக்காது. பின் எதற்கு?