இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0965



குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

(அதிகாரம்:மானம் குறள் எண்:965)

பொழிப்பு (மு வரதராசன்): மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.

மணக்குடவர் உரை: மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின்.
இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.

பரிமேலழகர் உரை: குன்றின் அனையாரும் - குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும்; குன்றுவ குன்றி அனைய செயின் குன்றுவர் - தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின் தாழ்வர்.
('குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன. சொற்பின் வருநிலை.)

இரா இளங்குமரன் உரை: மலை போன்ற உயர்ந்தவரும், மானத்தில் இழிந்த செயல்களை ஒரு குன்றிமணி அளவாகச் செய்வாராயினும், இழிந்தவராகி விடுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குன்றுவ குன்றி அனைய செயின் குன்றின் அனையாரும் குன்றுவர்.

பதவுரை: குன்றின் அனையாரும்-மலைபோல உயர்ந்தவரும்; குன்றுவர்-தாழ்வர்; குன்றுவ-தாழ்தற்குக் காரணமாகும் கீழான செயல்கள்; குன்றி-குன்றிமணி; அனைய-அளவாயினவற்றை; செயின்-செய்தால்.


குன்றின் அனையாரும் குன்றுவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்;
பரிப்பெருமாள்: மலைபோலப் பெரிய உயர்வுடையாரும் தமது தன்மை குறைபடுவர்;
பரிதி: மலைபோலப் பெருமை பெற்றோரும் குன்றுவர்;
காலிங்கர்: குன்றினை ஒத்த பெருமையோரும் குன்றுவர்;
பரிமேலழகர்: குடிப்பிறப்பான் மலைபோல உயர்ந்தோரும் தாழ்வர்;
பரிமேலழகர் குறிப்புரை: தாழ்தற்கு ஏதுவாய செயல்களாவன, இளிவந்தன.

'குன்றினை ஒத்த பெருமையோரும் குன்றுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலைபோல் உயர்ந்தவரும் தாழ்வர்', 'குடிப்பிறப்பால் மலைபோல உயர்ந்து நின்றவரும் தாழ்வர்', 'மலை போன்ற மிகப் பெரிய மனிதரும், பிறருடைய மதிப்பில் குறைந்து போவார்கள்', 'மலை போன்ற பெருமை வாய்ந்தவர்கள் தமது மேன்மையின் குறைபட்டவர் ஆவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மலை போன்ற உயர்வுடையாரும் தாழ்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

குன்றுவ குன்றி அனைய செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு குறைவு வருவனவற்றைக் குன்றி அளவாயினும் செய்வாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது.
பரிப்பெருமாள்: குறைவு வருவன குன்றி அளவாயினும் செய்வாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மிக்காராயினும் இகழப்படுவ ரென்றது. இத்துணையும் தன்மை குறைய ஒழுகல் ஆகாது என்று கூறப்பட்டது.
பரிதி: குன்றுகிற காரியம் குன்றியத்தனை செய்வாராயின் என்றவாறு.
காலிங்கர்: தமது மானம் குன்றுவனவாகிய சிறுமை ஒரு குன்றி அனைய செய்யினும் என்றவாறு.
பரிமேலழகர்: தாழ்தற்கு ஏதுவாகிய செயல்களை ஒரு குன்றி அளவாயினும் செய்வராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றியனையவும்' என்னும் இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்பின் வருநிலை.

'தமது மானம் குன்றுவனவாகிய சிறுமை ஒரு குன்றி அனைய செய்யினும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குண்டுமணி அளவு தரக்குறைவாக நடந்தால்', 'தாழ்வுக்கு உரிய செயல்களைக் குன்றிமணியளவு செய்வாராயினும் நிலையில்', 'மானக் குறைவான காரியத்தை, குன்றி மணியளவு மிகச் சிறிதாகவேனும் செய்துவிட்டால்', 'குடியின் உயர்வு குறைதற்கு ஏதுவாகிய செயலை ஒரு குன்றி மணியளவு செய்தாலும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தமது மானம் குறைதற்கு ஏதுவாகிய சிறுமைகளைக் குன்றிமணியளவு செய்யினும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமது மானம் குன்றுவ குன்றிமணியளவு செய்யினும் மலை போன்ற உயர்வுடையாரும் தாழ்வர் என்பது பாடலின் பொருள்.
'குன்றுவ' என்ற சொல்லின் பொருள் என்ன?

மானமுடையோர் சிறிதளவும் வழுக்காதவாறு நடந்துகொள்வர்.

சிறப்பில் மலையளவு உயர்ந்த நிலையில் உள்ளவரும் ஒரு குன்றி மணி அளவு இழிவானவற்றைச் செய்தாலும் தமக்குரிய மதிப்பில் தாழ்ச்சி அடைவார்கள்.
அறிவு ஆற்றல் முயற்சி போன்றவற்றால் மலையத்தனை பெருமைபெற்று உயர்ந்தவர்கள் அந்நிலை தாழாதபடி அதைப் பேணிக் கொள்ளவேண்டும். உயர்ந்த நிலையில் வாழ்பவர் குன்றிமணியளவு குற்றம் செய்தாலும் அவர் மனம் குன்றுமளவு தாழ்வர்; அதிலிருந்து மீண்டு பழைய நிலையை அடைவது அரிது.
குன்று என்பது நல்ல குடும்பத்தில் உள்ளவர்களின் தோற்றம், ஏற்றம், அசையாமை, ஆகியவற்றைக் குறிக்க வந்தது. குன்றிமணி குன்றிக்காய் என்றும் குன்றி முத்து என்றும் வழங்கப்படுவது. குன்றிமணி கொடி மரத்தில் படர்ந்திருக்கும். குன்றிமணியின் பெரும்பகுதி செம்மையான நிறத்தைக் கொண்டிருக்கும். அதன் ஒரு சிறுபகுதி - அதை மூக்கு எனச் சொல்கிறது குறள் 277 - சிறிது திட்டாக கறுமை நிறத்தில் இருக்கும். முன்பு இது பொற்கொல்லர்களால் நிறுத்தல் எடையாக பயன்படுத்தப்பட்டது. அளவில் சிறியதாக இருக்கும் குன்றிமணி குற்றத்தின் சிறுமைகளின் அளவு குறித்து உவமையாக்கப்பட்டது இங்கு. குன்றிமணி போன்ற மிகச்சிறிய அளவில் இழிவான செயல் புரிந்தாலே குன்று போல் உயர்ந்த நிலையில் உள்ளோரும் தாழ்ந்து விடுவார்கள்.
குன்றுவர்' என்பதற்கு 'இகழப்படுவர்' எனச் செயப்பாட்டு வினையாய்ப் 'பிறரால் இகழப்படுவர்' என்ற பொருள்பட பெரும்பான்மை உரையாசிரியர்கள் பொருள் கூறினர். நல்ல குடும்பத்தில் உள்ளவர்கள் நாணம் என்னும் பண்பு உடையராதலால், 'மனங்குன்றுவர்' என்றும் சிலர் உரைத்தனர்.
உயர்ந்தநிலை என்பது அவர் செய்யும் குற்றங்களுக்குக் கேடயமாக அமைந்து அவரைக் காக்காது. தவறுகள் எந்தநிலையில் உள்ளவரையும் கீழ்மைப்படுத்திவிடும். மேல்நிலையில் உள்ளவர் எப்பொழுதும் விழிப்பாக இருந்து எந்த மாசும் தம்மீது படாதவாறு நடந்து கொள்வதுதான் அவரது பெருமையைக் காப்பாற்றும்.

இப்பாடல் ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார் (சான்றாண்மை 989 பொருள்: சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப் படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்) என்னும் குறள்நடை போன்று அமைந்து மேன்மை நிலை தாழாமையை விளக்குகிறது.
குன்றின், குன்றுவர், குன்றுவ, குன்றி என ஒரே வகையான ஒலியுடைய சொற்கள் வெவ்வேறு பொருளை உணர்த்துவதாக வந்துள்ள பாடல் இது. 'குன்று’ என்ற சொல் ஓரிடத்தில் `மலை’ என்ற பொருளிலும் இன்னோர் இடத்தில் 'குன்றுதல்’ என்ற பொருளிலும் இடம்பெறுகிறது. இவ்வாறு இயற்றப்பெறும் செய்யுட்களைச் 'சொற்பொருள் பின்வரு நிலையணி' என்பர். இவ்வணி பாடற்கருத்தைக் கேட்பவர் அல்லது கற்பவர் உள்ளத்தில் ஆழப்பதியுமாறு செய்யும்திறன் கொண்டது.

'குன்றுவ' என்ற சொல்லின் பொருள் என்ன?

'குன்றுவ' என்ற சொல்லுக்குக் குறைவு வருவன, குன்றுகிற காரியம், தமது மானம் குன்றுவனவாகிய சிறுமை, தாழ்தற்கு ஏதுவாகிய செயல்கள், தாழ்வுக்குக் காரணமான செயல்கள், இழிவுபடுவதற்குக் காரணமான செயல், குடிப்பிறப்புக்கு ஒவ்வாத காரியங்கள், தரக்குறைவாக நடத்தல், தாழ்வுக்கு உரிய செயல்கள், தம் ஒழுக்கம் குறைவதற்குரிய செயல்கள், மானக் குறைவான காரியம், இழிவுக்குரிய செயல்கள், கீழான செயல், தாம் தாழ்தற் கேதுவான இழி செயல்கள், தாழ்வான செயல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மிகுந்த குடிப்பெருமை யுடையோரும் சிறு தகாத செயல் ஒன்று செய்தாலும் பெருமை குன்றுவர். நல்ல குடும்பத்தில் உள்ளவர் என்று அறியப்படும் ஒருவர் உயர்நிலை எய்தி சிறப்புப் பெற்றுப் பலரும் போற்றும் நிலையில் உள்ளார். ஒரு சமயம் அவர் பொது இடம் ஒன்றில், முன் அறிமுகம் இல்லாத ஒர் இளம்பெண்ணைப் பார்த்து உள்ளக் கிளர்ச்சியுற்று, யாரும் தன்னப் பார்க்கவில்லை என்று கருதி அவளுக்கு முதுகுப்புறம் சென்று அவளது இடையைத் தொட்டுக் கிள்ளி மகிழ்ச்சியடைகிறார். ஆனால் இது வெளியில் தெரிந்து அவர்க்கு மானக்கேடு உண்டாகிறது. அதன்பின் அவரை ஊரார் இகழ்ச்சியுடனும் வெறுப்புடனும் பார்க்கத் தொடங்கினர். சிறுமை பயத்த அந்நிகழ்வை குன்றிமணி அளவுதானே என மக்கள் எண்ணவில்லை. அவருடைய பழைய மதிப்பு நீங்கிற்று.

'குன்றுவ' என்றது மானம் குன்றவரும் சிறுமைகள் எனப் பொருள்படும்.

தமது மானம் குறைதற்கு ஏதுவாகிய சிறுமையை குன்றிமணியளவு செய்யினும் மலை போன்ற உயர்வுடையாரும் தாழ்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம் குன்றுவதற்கான செய்கைகளில் சிறிது, பெரிது என்பதாக ஒன்றுமில்லை.

பொழிப்பு

மானம் குறைதற்கு ஏதுவாகிய சிறுமையை குன்றிமணியளவு செய்யினும் மலை போன்று உயர்ந்து நிற்பவரும் தாழ்வர்.