இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0964



தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

(அதிகாரம்:மானம் குறள் எண்:964)

பொழிப்பு (மு வரதராசன்): மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

மணக்குடவர் உரை: தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.

பரிமேலழகர் உரை: மாந்தர் - குடிப்பிறந்த மாந்தர்; நிலையின் இழிந்தக்கடை - தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி; தலையின் இழிந்த மயிர் அனையர் - தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்,
{அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: மனிதர்கள் மானம் என்ற, உயர்ந்த நிலையிலிருந்து தவறிவிட்டால், தலையிலிருந்து வேரோடு விழுந்துவிட்ட மயிருக்குச் சமானமாகிவிடுகிறார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாந்தர் நிலையின் இழிந்தக் கடை தலையின் இழிந்த மயிர்அனையர்.

பதவுரை: தலையின்-தலையினின்றும்; இழிந்த-நீங்கிய, வீழ்ந்த; மயிர்-மயிர், முடி, உரோமம்; அனையர்-ஒப்பர்; மாந்தர்-மக்கள்; நிலையின்-உயர்ந்த தன்மையினின்றும்; இழிந்தக் கடை-தாழ்ந்தபோது.


தலையின் இழிந்த மயிர்அனையர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர்:
பரிப்பெருமாள்: தலையினின்று நீங்கின மயிரைப்போல இகழப்படுவர்:
பரிதி: தலையின் இழிந்த மயிரொப்பர்;
காலிங்கர்: ஒருவர்க்கு எல்லா உறுப்பினும் தலைமைப்பாடு உடையது தலை, ஆதலால் மற்று அதனின்று இழிந்த மயிரானது பின்பு அத்தலைமைப்பாடு பெறுதல் இல்லை; மற்று அதனை ஒப்பர்; [தலைமைப்பாடு- சிறப்பு]
பரிமேலழகர்: தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்;

'தலையை விட்டு அதனினின்றும் வீழ்ந்த மயிரினை ஒப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தலையிலிருந்து விழுந்த மயிர் போல்வர்', தலையிலிருந்து விழுந்த மயிர்போலப் பேணப் பெறாது இழிக்கப் பெறுவர்', 'தலையை விட்டு நீங்கிய மயிரினைப் போன்று இகழப்படுவர்', 'தலையிலிருந்து வீழ்ந்த மயிரை ஒப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தலையிலிருந்து வீழ்ந்த மயிர் போல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

மாந்தர் நிலையின் இழிந்தக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.
பரிப்பெருமாள்: மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தலைமக்கள் செய்யார் என்றதனால் குற்றம் என்னை என்றாற்குக் கூறப்பட்டது.
பரிதி: நிலை கெட்ட மனிதர் என்றவாறு.
காலிங்கர்: குலமேம்பாடு உடைய மாந்தர் தம் நிலையினின்றும் இழிந்த இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: குடிப்பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டு அதனின்றும் தாழ்ந்த வழி.
பரிமேலழகர் குறிப்புரை: அந்நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம். [அந்நிலையை - தமது உயர்ந்த நிலையை]

'மாந்தர் தமது நிலையினின்று நீங்கித் தாழ ஒழுகின விடத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மாந்தர் என்ற சொல்லுக்கு குலமேம்பாடு உடைய மாந்தர்' என்று காலிங்கரும் 'குடிப்பிறந்த மாந்தர்' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மக்கள் உயர்ந்த தரத்திலிருந்து இறங்கினால்', ''நற்குடியில் தோன்றியவர் தம் உயர்நிலையிலிருந்து தாழ்ந்தவிடத்து', 'நற்குடியிற் பிறந்த மக்கள் தமது உயர்ந்த தன்மையில் நீங்கி இழிவுற்ற காலத்து', 'குடிப்பிறந்த மாந்தர் தம் நிலையிலிருந்து தாழ்ந்தபோது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மக்கள் மானம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்தபோது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மக்கள் மானம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்தபோது தலையின் இழிந்த மயிர் போல்வர் என்பது பாடலின் பொருள்.
'தலையின் இழிந்த மயிர்' குறிப்பது என்ன?

தனது நிலைதாழ்ந்தவர் மயிரே போச்சு என ஒதுக்கப்படக்கூடியவராகிறார்.

மக்கள் பெருமைக்குரிய நிலையிலிருந்து தங்களைத் தாழ்த்திக் கொள்ளுமாறு ஒழுகினவிடத்து தலையிலிருந்து உதிர்ந்த முடியைப் போல இகழ்ச்சிபெறுவர்.
இருக்குமிடத்தில் இருந்தால்தான் மயிர்க்கும் மதிப்பு. உயர்ந்த இடமான தலையில் மயிர் தங்கி இருக்குமளவு தான் நறுநெய்பூசி, நன்மலர்சூடி, பூவும் புகையும் மேவிய விரையும் பேணப்பட்டு சிறப்பாக இருக்கமுடியும்; தலையில் இருக்கும் மயிர் அழகு கூட்டுவதால் அதனை மிகவும் போற்றுகிறோம். ஆறடி கூந்தல் காலடி மீதில் மோதுவது காண்போர்க்கு மிக்க மகிழ்ச்சி தரக்கூடியதுதான். ஆனால் அதுவே தலையினின்று கீழே உதிர்ந்து விழுந்தபின் அதற்கு எந்த அக்கறையும் காட்டப்படமாட்டாது; தரையில் விழுந்த அதைத் தொடக்கூடக் கூச்சப்படுவர்.
அதுபோல மக்கள் தங்களின் உயர்வுக்குரிய மான நிலையில் ஒழுகுகின்றவரை மதிக்கப்படுவர்; அதிலிருந்து தாழ்கின்றபோது தலையிலிருந்து கீழே விழுகின்ற மயிரினைப் போன்று இகழ்ச்சிக்குள்ளாவர். மானநிலை என்பது நல்ல குடும்பத்தில் உள்ளவரது நேர்மை, நாணம், ஒழுக்கம் முதலிய பண்பாலான உயர்வைக் குறிப்பது. மானத்தோடு வாழநினையாமல் இழிந்த நடத்தை உடையவராய், பொய் வஞ்சனையுடன். நேர்மையிழந்து, கையூட்டுப்பெற்று, கீழான செயல்களில் ஈடுபடுபவரை இழிந்த மயிராகவே மதிப்பர் உலகோர்.

தம் கருத்துக்கள் நீண்ட நெடுங்காலம் விளங்க வேண்டும் என்பதால், எளிய இனிய நிலைத்த காட்சிப் பொருள்களை உவமை செய்பவர் வள்ளுவர். இங்கு சொல்லப்பட்ட தலைமயிர் உவமையும் அத்தகையதே. இது காலங்கடந்தும் உண்மையாய் இருப்பது. நிலையின் இழிந்தமனிதருக்குத் தலையினின்றும் இழிந்த மயிர் உவமிக்கப்பட்டது எந்தநிலையினரும் எளிதில் புரிந்து கொள்ளும்படியானதாக உள்ளது.
தலைமயிருக்கும் ஒருவரது மானநிலைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்று நாம் எண்ணுவோம். ஆனால் வள்ளுவர் தொடர்பில்லாத பொருள்களுக்கு ஒற்றுமைநயம் கற்பித்து உவமாகக் கொள்கிறார் இங்கு.
நிலையின் இழிந்தக் கடை என வரும் இப்பாடலின் ஈற்றடியில் 'கடை' என்னும் இறுதிச்சீர் நிற்கும் சொன்னடை நிலையில் இழிந்த மாந்தர் கடைப்பட்டவர் என்னும் பொருட்குறிப்பும் தோன்றப் பெய்யப்பட்டது என்பது அறியத்தகும். இழிந்த பொழுது இழிந்த நிலையையும் அது குறிப்பால் வெளிப்படுத்துகிறது.

'தலையின் இழிந்த மயிர்' குறிப்பது என்ன?

'தலையின் இழிந்த மயிர்' என்ற உவமையைத் தலையினின்று இறங்கிய மயிரைப்போல இகழப்படுவர், இழிந்த மயிரானது பின்பு தலைமைப்பாடு பெறுதல் இல்லை, தமது உயர்ந்த நிலையை விடாது நின்ற வழிப் பேணப்படுதலும், விட்டுத் தாழ்ந்த வழி இழிக்கப்படுதலும் உவமையாற் பெற்றாம், மயிர் தாழ விழுந்தால் கையாலும் தீண்டாமல் இகழப்படும், தலைவிட்டு நீங்கின் இழிவு செய்வர், தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர், தலையிலிருந்து விழுந்த மயிர்போலப் பேணப் பெறாது இழிக்கப் பெறுவர், தலையிலிருந்து வேரோடு விழுந்துவிட்ட மயிருக்குச் சமானம், தலையை விட்டு நீங்கிய மயிரினைப் போன்று இகழப்படுவர், மயிர் தலையிலிருந்து உதிர்ந்துவிட்டால் வெறுத்து ஒதுக்கப்படுகிறது, தலையிலிருந்து உதிர்ந்த முடிபோல் இழிவு அடைவர், மயிர் கீழே விழுந்துவிடுமானால் இகழப்படுகிறது என்றவாறு உரையாசிரியர்கள் விளக்கினர்.

'மயிர்' என்ற சொல் இழிவான பொருளில் வழங்கப்படுவதால், அது பேச்சு வழக்கில் தவிர்க்கப்படவேண்டிய சொல்லாகவே உள்ளது. தலையிலிருந்து விழுந்த மயிரே இழிவாகக் கருதப்படுகிறது; அம்மயிரே இக்குறளில் மானமிழந்த நிலையில் உள்ள மாந்தர்க்கு உவமையாகச் சொல்லப்பட்டது.
தலைமுடியின் பெருமை, அது தலையில் உள்ளவரைதான்; தலையிலிருந்து நீங்கி கீழே விழுந்தால், அது மதிப்பற்ற இழிவான பொருளாகிவிடுகிறது. அது போன்றே உயர்ந்த நிலையில் இருப்போர் மானம் குன்றும் செயல்களில் ஈடுபட்டால் இழிந்தவராகிவிடுவர். உயர்ந்த நிலையிலிருந்து தாழ்வது என்பது செல்வத்தால் குறைவதைச் சொல்வது அல்ல. இங்கு சொல்லப்படும் இழிந்த நிலை என்பது மானம் இழிந்தநிலையாகும். ஒருவர் குற்றம் செய்வது, ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வது, இழிவான செயல்களில் ஈடுபடுவது, பொதுச்சொத்தைக் கவர்வது இன்னபிறவற்றால் இழிந்த நிலையை அடைவர். உலகோர் உள்ளத்திலே நன்கு மதிக்கப்பட்டு இருந்த ஒருத்தர் மானக்கேடுற்று தாழ்ந்துவிட்டாரென்றால் தலையிலேயிருந்து உதிர்ந்து கிடக்கின்ற தலைமயிருக்குச் சமமாக நினைக்கப்படுவார் என்பது இக்குறள் தரும் செய்தி.

'தலையின் இழிந்த மயிர்' என்ற தொடர் தலையிலேயிருந்து உதிர்ந்து தரையில் கிடக்கின்ற மயிர் என்ற பொருள் தருவது.

மக்கள் மானம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்தபோது தலையிலிருந்து வீழ்ந்த மயிர் போல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம் இழிந்தபின் மதிப்பில்லை.

பொழிப்பு

மக்கள் தம் மானஉணர்வு நிலையிலிருந்து நீங்கியவிடத்துத் தலையிலிருந்து விழுந்த மயிர்போல இழிக்கப் பெறுவர்.