இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0963பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

(அதிகாரம்:மானம் குறள் எண்:963)

பொழிப்பு (மு வரதராசன்): செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

மணக்குடவர் உரை: செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்: செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.

பரிமேலழகர் உரை: பெருக்கத்துப் பணிதல் வேண்டும் - குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்; சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும் - குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும்,
(பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற் காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: வளம் பெருகும்போது பணிவு வேண்டும்; வளம் சுருங்கும்போது பெருமிதம் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருக்கத்து பணிதல் வேண்டும் சிறிய சுருக்கத்து உயர்வு வேண்டும்.

பதவுரை: பெருக்கத்து-செல்வம் பெருகிய காலத்து, நிறைந்த செல்வ முளதாய வழி, செல்வம், பதவி முதலியன உயர்ந்து இருக்கும் நிலையில்; வேண்டும்-வேண்டும்; பணிதல்-தாழ்தல்; சிறிய-சிறிதான, குறைந்த; சுருக்கத்து-சுருங்கியபோது, வறுமையில்; வேண்டும்-வேண்டும்; உயர்வு-பெருமிதம், பணியாமை.


பெருக்கத்து வேண்டும் பணிதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிதல் வேண்டும்:
பரிப்பெருமாள்: செல்வம் பெருகிய காலத்து எல்லார்க்கும் பணிந் தொழுகுதல் வேண்டும்:
பரிதி: தனக்கு வாழ்வு வந்தால் எல்லாரிடத்தும் வணக்கம் வேண்டும்;
காலிங்கர்: குடிப்பிறந்தோர்க்கு என்றும் செல்வச் சிறப்பின்கண் வேண்டும், அச்செல்வம் செருக்கின இடத்தும் அதற்கு மறுதலையாகிய பணிவு உடையவர் ஆதல்;
பரிமேலழகர்: குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும்;

'செல்வம் பெருகிய காலத்து பணிவு வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிப்பிறந்தார் வளமான காலத்தில் யாவர்க்கும் பணிதல் வேண்டும்', 'செல்வம் நிறைந்தவர்களாக இருக்கும்போது யாரிடத்தும் பணிவுடையவர்களாக நடந்து கொள்ள வேண்டும்', 'நல்ல செல்வமுள்ளபோது, யாவர்க்கும் பணிவாக நடத்தல் வேண்டற் பாலதே', 'நல்ல குடியில் பிறந்தவருக்கு உயர்ந்த நிலையில் இருக்கும்போது யாவரிடம் பணிதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வளமான காலத்தில் பணிதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்.
பரிப்பெருமாள்: செல்வம் மிகவுஞ் சுருங்கின காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுக வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, திரு உடையார் பணிவு புகழப்படும்; திரு இலாதார் பணிதல் இகழப்படும்; ஆதலான் நல்கூர்ந்த காலத்தும் தன்மை குறைவன செய்யற்க என்றது.
பரிதி: மிடியனானால் தாழ்ச்சி சொல்லாமல் கனமாய் இருக்க வேண்டும் என்றவாறு. [கனமாய் - கனவான் போல]
காலிங்கர்: இனி அச்செல்வம் நீங்கிய மிக்க வறுமைக்கண் வேண்டும், அவ்வறுமையால் பிறர்க்குத் தாம் குறைகூற மானித்து ஒழுகும் மேம்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: குறைந்த நல்குரவுளதாயவழிப் பணியாமை வேண்டும்,
பரிமேலழகர் குறிப்புரை: பணியாமை - தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல். செல்வக்காலை அஃது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும், அல்லற் காலை அது தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் தாம் தாழ்தற்கு ஏதுவாயின செய்யாமைச் சிறப்புக் கூறப்பட்டது.

'செல்வம் மிகவுஞ் சுருங்கின் காலத்துத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல் வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் வளம் குறைந்த வறுமைக்காலத்தில் பெருமித உணர்வு கொள்ள வேண்டும்', 'சிறுமை தரக்கூடிய தரித்திரமுள்ளவர்களாக இருக்கும்போது (அதற்காகப் பணிந்துவிடாமல்) நிமிர்ந்து நின்று சமாளிக்க வேண்டும். (என்பது மானமுடைமை.)', 'பொருள் மிகக்குறைந்த காலத்துத் தகாதார்க்குத் தாழ்ந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்ளாது தனது குடியுயர்வைக் காப்பாற்ற வேண்டும்', 'செல்வம் சுருங்கிய காலத்தில் தாழ்வு வராமல் இருத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வளம் மிகக்குறைந்த காலத்தில் பெருமித உணர்வு கொள்ள வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வளமான காலத்தில் பணிதல் வேண்டும்; வளம் மிகக்குறைந்த காலத்தில் உயர்வு உணர்வு கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'உயர்வு' என்ற சொல்லின் பொருள் என்ன?

நற்குடிப்பிறந்தார் வறுமையிலும் நிமிர்ந்து நின்று பெருமிதம் காட்டுவர்.

நிறைந்த செல்வம் பெற்றபோது நல்லகுடியில் பிறந்தவர்க்கு பணிவுடைமை வேண்டும்; செல்வம் குறைந்து சுருங்கிய காலத்தில் அவர் தம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல் உயர்வு உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்.
வளமான நிலையில் அடக்க உணர்வும் அந்த நிலை மாறி வளம் குன்றிய சூழலில் யாருக்கும் அடிமையாக அடங்கி நடக்காத மான உணர்வும் வேண்டும். செல்வச் சிறப்பினாலோ அல்லது பதவியின் காரணமாகவோ சிலர் உயர்ந்த நிலை பெறுவர். வாழ்வில் பிறரால் மதிக்கப்படும் அந்த உயர்ந்த நிலை வந்தபொழுது, பணிவாக நடந்து கொள்ளவேண்டும். அதுதான் அவருக்குப் பெருமையைத் தரும். அவ்வாறில்லாமல் ஒருவர் தன் செல்வச் செழிப்பையோ, பதவியையோ நினைத்து, உணர்ச்சியால் துள்ளித் திரியும் மனவெழுச்சியை மட்டுப்படுத்தாமல், செருக்குடன் ஒழுகினால் அது பல மனமாசுகளை விளைவிக்கும். செல்வமில்லாக்காலத்துப் பணிவு காட்டினால், இல்லாமையாற் வணங்குகின்றான் என உலகம் ஏளனம் செய்யும் ஆதலால், வாழ்வில் தாழ்வு ஏற்படும்போது பணியாமை வேண்டும்; மனம் முடக்கமுறாமல், தன் மதிப்பை விட்டுக் கொடுக்காமல், ஒழுக வேண்டும். உரிமையும் மதிப்பும் உடையவர் போல் பெருமிதத்துடன் நடந்துகொள்ள வேண்டும். புறநிலைக் கேற்றாற்போல அகநிலையறம் பின்பற்றி சமனிலை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வாழ்வில் வளம் வந்தபோது பணிவதாலும், அது சுருங்கியபோது தாழ்வு உணர்வில்லா உயர்வு மனப்பான்மை கொள்வதாலும் பெருமையே சேரும்.

இக்குறளைப் படிக்கும்போது இரண்டாம் உலகப்போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்த இங்கிலாந்து நாட்டு வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய 'வெற்றியில் பெருந்தன்மை, தோல்வியில் வைராக்கியம்' (“In Victory: Magnanimity, In Defeat: Defiance- Winston S. Churchill) என்ற உரை நினைவிற்கு வரலாம்.

'உயர்வு' என்ற சொல்லின் பொருள் என்ன?

'உயர்வு' என்ற சொல்லுக்குத் தமது தன்மை குறைவுபடாமல் ஒழுகல், தாழ்ச்சி சொல்லாமல் கனமாய் இருத்தல், பிறர்க்குத் தாம் குறைகூற மானித்து ஒழுகும் மேம்பாடு, தாழ்வு வாராமற் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல், விரதசீலங்களுடனே கூடியிருத்தல், பணியாத உயர்வு, தம் உயர்வு தோன்ற நடந்துகொள்ளல், பெருமித உணர்வு, பெருமிதம், பெருமித உணர்வு கொள்ளல், பணிந்துவிடாமல் நிமிர்ந்து நிற்றல், உயர்ந்த பெருமித நிலை, தாழ்வு வராமல் இருத்தல், (தம்மைத் தாழ்த்திக் கொள்ளாமல்) தம் குடிப்பிறப்பின் உயர்வைக் காப்பாற்றிக் கொள்ளுதல், உயர்ந்த கொள்கை கொண்டொழுகல், வறுமைக் குறையை நிறைத்தற் பொருட்டுத் தாழ்மையில்லாதிருத்தல், தன்னுடைய தகுதிக்குத் தாழ்வாக நடந்துவிடாதிருத்தல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வறுமை வந்துற்ற காலத்தில் வணங்கினால் உலகோர் தாழ்வாகவே எண்ணுவார்கள். வறியவர்கள் தலைவணங்கிச் செல்லச் செல்ல அவர்களை மற்றவர்கள் எள்ளி இகழ்ந்து பேசுதல் இயல்பு. ஆனால் நற்குடிப்பிறந்தார் எந்நிலை வரினும், அடங்கி அடிமையாகாமல் தன் குடும்ப மானம் காப்பர். பரிப்பெருமாள் 'திருஇலாதார்பணிதல் இகழப்படும் ஆதலான் நல்கூர்ந்த காலத்தும் தன்மை குறைவன செய்யற்க' என உயர்வான தன்மை குன்றாமல் ஒழுகுக என இதை விளக்குவார். எனவே பொருள் சுருங்கிய நிலையில் மான உணர்வில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்த உயர்வு என்ற சொல் ஆளப்பட்டது. பணியாத உயர்வுடன் பெருமிதத்துடன் நடந்து கொள்வது உயர்வாம்.

பெருமித உணர்வு 'உயர்வு' என்ற சொல்லால் குறிக்கப்பெற்றது.

வளமான காலத்தில் பணிதல் வேண்டும்; வளம் மிகக்குறைந்த காலத்தில் பெருமித உணர்வு கொள்ள வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பணிவுடைமைகூட மானம் நிலைநிறுத்தச் செய்யும்.

பொழிப்பு

வளம் பெருகும்போது பணிதல் வேண்டும்; வளம் குறைந்தகாலத்தில் பெருமிதம் வேண்டும்.