இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0962



சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்

(அதிகாரம்:மானம் குறள் எண்:962)

பொழிப்பு (மு வரதராசன்): புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

மணக்குடவர் உரை: தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார், தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.

பரிமேலழகர் உரை: சீரினும் சீர் அல்ல செய்யார் - புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; சீரொடு பேராண்மை வேண்டுபவர் - புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார்.
(எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: புகழொடு மானமும் விரும்புகிறவர்கள் தாம் புகழொடு திகழுங்காலத்தும், இழிவு வரக்கூடிய செய்கைகளைச் செய்யமாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டுபவர்.

பதவுரை: சீரினும்-புகழ் செய்யுமிடத்தும்; சீர்-சிறப்பு, புகழ், செல்வம்; அல்ல-ஆகாதவை; செய்யாரே-செய்யமாட்டர்களே; சீரொடு-புகழொடு; பேராண்மை-மானம், பெரிய ஆண்மையாகிய மானம்; வேண்டுபவர்-விரும்புபவர்.


சீரினும் சீரல்ல செய்யாரே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார்;
பரிப்பெருமாள்: தமக்குப் பொருள் மிகுதி உண்டாமாயினும் நிகரல்லாதன செய்யார்;
பரிதி: நன்மை செய்யினும் சீராக விசாரித்துச் செய்வார்;
காலிங்கர்: சீரிய செல்வம் பெரிது உய்ப்பினும் சீர் அல்லனவற்றைச் செய்யக் கருதாரே;
பரிமேலழகர்: புகழ் செய்யுமிடத்தும் தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யார்; [இளிவரவு-இழிதொழில்]

'பொருள் மிகுதி உண்டாமாயினும்/நன்மை செய்யினும்/சீரிய செல்வம் பெரிது உய்ப்பினும்/புகழ் செய்யுமிடத்தும் நிகரல்லாதன/சீர் அல்லனவற்றை/தம் குடிமைக்கு ஒவ்வாத இளிவரவுகளைச் செய்யக் கருதாரே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழ்களில் மானக் குறைவானவை செய்யார்', 'புகழை நிலைநிறுத்தும்போதும் தம் குடிமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்ய மாட்டார்', 'செல்வம் வருவதானாலும் நேர்மையற்ற காரியங்களைச் செய்ய மாட்டார்கள்', 'புகழுக்காவன செய்யுமிடத்து இழிந்த செயல்களைச் செய்யார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

புகழ் மிகுதி உண்டாகுமென்றாலும் நேர்மையற்ற செயல்கள் ஆற்ற மாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

சீரொடு பேராண்மை வேண்டு பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.
பரிப்பெருமாள்: தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை விரும்புவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, நல்கூர்ந்த காலத்துச் செல்வம் உளதாயின் தமது தன்மை குறைந்து குடிசெய்தல் வேண்டாவோ என்றாற்குத் தலைமக்கள் செய்யார் என்று கூறப்பட்டது.
பரிதி: நன்மையும் மேன்மையும் வேண்டுபவர் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் தம் குடிமையாகிய சீர்மைப்பாட்டோடு பெரிய ஆண்மைப்பாடும் விரும்புவார் என்றவாறு.
பரிமேலழகர்: புகழுடனே மானத்தை நிறுத்துதலை விரும்புவார்.
பரிமேலழகர் குறிப்புரை: எவ்விடத்தும் நிலைகுலையாத திண்மையான் உளதாதல் பற்றிப் 'பேராண்மை' எனப்பட்டது. நிலையுடைய புகழின் பொருட்டாகவும் செய்யார் என்பதாம். [திண்மையான் - உறுதிப்பாட்டால்; செய்யார்- (இளிவரவுகளைச்) செய்யமாட்டார்]

'தலைமையோடே கூடப் பெரிய ஆண்மையை/நன்மையும் மேன்மையும்/தம் குடிமையாகிய சீர்மைப்பாட்டோடு பெரிய ஆண்மைப்பாடும் விரும்புவார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருமையொடு பேராற்றல் வேண்டுபவர்', 'புகழுடனே தம் மானத்தை நிலைநிறுத்த விரும்புவோர்', 'புகழோடு கூடிய மானத்தை விரும்புகிறவர்கள்', 'புகழோடு மானத்தையும் நிலை நிறுத்த விரும்புவோர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

புகழோடு மானம் காத்தலையும் விரும்புபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புகழோடு பேராண்மை விரும்புபவர் புகழ் மிகுதி உண்டாகுமென்றாலும் நேர்மையற்ற செயல்கள் ஆற்ற மாட்டார்களே என்பது பாடலின் பொருள்.
'பேராண்மை' என்பதன் பொருள் என்ன?

எப்பொழுதும் தலை நிமிர்ந்து நடக்க விரும்புபவர் இழிவானவற்றைச் செய்யார்.

சிறப்போடு மானம் நிலைப்பதையும் விரும்புகிறவர்கள் புகழ்மிகுதி ஏற்படுமாயினும் சிறப்பில்லாதவற்றைச் செய்யமாட்டார்கள்.
இப்பாடலில் மூன்றிடங்களில் சீர் எனும் சொல் வருகிறது. முதலில் உள்ள சீரினும் என்றதற்கு புகழ் செய்யுமிடத்து என்றும் நல்கூர்ந்த காலத்துச் செல்வம் உண்டாயினும் என்றும் பொருள் கூறினர். இரண்டாவதான சீரல்ல என்பதற்கு சிறப்பல்லாத அதாவது இழிவான என்பது பொருள். கடைசியில் வரும் சீரொடு என்பது புகழுடனே என்ற பொருள் தருவது.
நேரிய புகழையும் என்றும் குன்றா மானத்தையும் விரும்புகின்ற நல்லோர், எத்தகைய மேன்மைகள் வரினும் இழிவு தரும் செயல்களைச் செய்யார் என்கிறது பாடல். ஒருவர் ஒருபக்கம் நற்செயல்கள் புரிந்து மிகநல்ல பெயர் பெறுகிறார். அவரே மறுபக்கம் குறுக்குவழிகளில் தீதான செயல்கள் மூலம் பொருள் குவிக்கிறார். இவர் மானத்துடன் உலவ முடியுமா? முடியாது. எனவே புகழ் மிக்க வாழ்க்கையோடு மானம் நிலைக்கவும் விரும்புகின்றவர்கள், பொய், வஞ்சம் போன்ற புகழ் குன்றச் செய்யும் இளிவரவுகளைச் செய்யார் எனச் சொல்லப்பட்டது.

'பேராண்மை' என்பதன் பொருள் என்ன?

இக்குறளிலுள்ள 'பேராண்மை' என்ற சொல்லுக்குப் பெரிய ஆண்மை, நன்மை, பெரிய ஆண்மைப்பாடு, மானம், பேராற்றல், மானம் என்னும் பேராண்மை. மிகுந்த உறுதிப்பாடு (மானம்), மதிப்புமிக்க ஆளுமை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பேராண்மை' என்ற சொல் இக்குறள் தவிர்த்து இன்னும் இரண்டு இடங்களில் பயின்று வந்துள்ளது. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (பிறனில் விழையாமை 148 பொருள்: வேறொருவனுடைய மனைவியைக் காமக் குறியோடு பார்க்காத ஆண்மைத்திண்மை சால்புடையவர்க்கு அறம் மட்டுமா? நிறைந்த ஒழுக்கமும் ஆகும்) என்பது ஓரிடம். இதிலுள்ள பேராண்மை என்ற சொல்லுக்கு பெரிய ஆண் தகைமை என்பது பொருள் - பெரிய ஆண்மையாகிய மானம் எனவும் கொள்ளலாம். புறப்பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை யடக்கிய ஆண்மை 'பேராண்மை' எனப்பட்டது.
மற்றொரு இடமான பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு (படைச்செருக்கு 773 பொருள்: பகைவர்மேல் கண்ணோடாது போர்புரிதலைப் பெரிய வீரம் என்று சொல்லுவர்; அவர்க்குத் துன்பம்வரின் உதவுதல் அவ்வீரத்தின் கூர்மையான தன்மையாகும்) என்றதில் பேராண்மை பெரிய வீரம் என்ற பொருளில் வந்தது.

'சீரினும் சீரல்ல..' என்னும் இப்பாடலிலுள்ள பேராண்மை என்பதற்கும் 'பெரிய ஆண்மையாகிய மானம்' என்றே பொருள் கொள்வர். புகழுடன் தன் குடும்ப மானத்தையும் நிலை குலையாமல் காப்பாற்றும் 'திண்மையான உள்ளம்' உடையவரே பேராண்மை உள்ளவராகக் காட்டப்படுகிறார் இங்கு. அத்தகையவர் எவ்வளவுதான் புகழ் கிடைக்கும் என்றாலும், தனக்கும், தன் குடும்பத்துக்கும் களங்கம் ஏற்படுத்தக் கூடிய தீய செயல்களை செய்யாமல் மானம் காப்பர் எனச் சொல்லப்பட்டது.
தகுதி என்ற சொல்லுக்குத் தகுதி எனஒன்று நன்றே... (நடுவு நிலைமை 111) என்ற பாடலில் நடுவுநிலைமை என்ற பொருளிலும் ...... தாம்தம் தகுதியான் வென்று விடல் (பொறையுடைமை 158) என்ற குறளில் பொறையுடமை என்ற பொருளிலும் உரை காணப்பட்டது. அதுபோல, இங்குள்ள பேராண்மை என்ற சொல்லுக்கும், அதிகாரத்திற்கு ஏற்ப, மானம் என்று பொருள் கொள்வது சிறக்கும்.

புகழோடு மானம் காத்தலையும் விரும்புபவர் புகழ் மிகுதி உண்டாகுமென்றாலும் நேர்மையற்ற செயல்கள் ஆற்ற மாட்டார்களே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மானம்கெட வரும் சிறப்பு வேண்டாம்.

பொழிப்பு

பெருமையொடு தறுகண்மை வேண்டுபவர் பொருளுக்காக மானக் குறைவானவற்றைச் செய்யமாட்டார்.