இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0961



இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்

(அதிகாரம்:மானம் குறள் எண்:961)

பொழிப்பு (மு வரதராசன்): இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விடவேண்டும்.

மணக்குடவர் உரை: இன்றியமையாத சிறப்புடையனவாயினும் தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக.
இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.

பரிமேலழகர் உரை: இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் - செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; குன்ற வருப விடல் - தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக.
(அமையாமை - இறத்தல். 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: கட்டாயம் செய்ய வேண்டியன என்றாலும் பெருமைக்குக் குறைவானவற்றைச் செய்யற்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல்.

பதவுரை: இன்றிஅமையா-இல்லாமல் முடியாத, இதனை இன்றி இது அமையாத; சிறப்பின-உயர்வுடையன; ஆயினும்-ஆனாலும்; குன்ற-தாழ; வருப-வருவன, வருஞ்செயல்கள்; விடல்-விடுக, விட்டொழிக.


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்றியமையாத சிறப்புடையனவாயினும்;
பரிப்பெருமாள்: இன்றியமையாத சிறப்புடையனவாயினும்;
பரிதி: அளவில்லாத சிறப்பும் செல்வமும் வருமாயினும்;
காலிங்கர்: இதனை இன்றி இது அமையாது எனினும் பெரும் சிறப்பினை உடையவனாயினும்;
பரிமேலழகர்: செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்; [தாம் அமையாத- தாம் உயிரோடு இருத்தற்கு இயலாத]
பரிமேலழகர் குறிப்புரை: அமையாமை - இறத்தல்.

'இன்றியமையாத சிறப்புடையனவாயினும்/அளவில்லாத சிறப்பும் செல்வமும் வருமாயினும்/இதனை இன்றி இது அமையாது எனினும் பெரும் சிறப்பினை உடையவனாயினும்/செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவேயெனினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கட்டாயம் செய்ய வேண்டிய சிறப்புடைய செயல்களாயினும்', 'இல்லாமல் தீராது என்னத் தகுந்த மிகவும் அவசியமான பொருள்களானாலும்', 'தனக்கு இன்றியமையாத செல்வ மேன்மைகளைத் தருவனவாய் இருந்தாலும்', 'வாழ்வதற்குத் தவிர்க்க முடியாதவைகளாக இருந்தபோதிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்தே ஆகவேண்டிய சிறப்புடைய செயல்களாயினும் என்பது இப்பகுதியின் பொருள்.

குன்ற வருப விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.
பரிப்பெருமாள்: தனது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும் விடுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருளும் இன்பமும் மிகினும் தன்மை குறைவன செய்யற்க வென்றது.
பரிதி: குற்றம் வருமாகில் அந்தக் காரியத்தைக் கைவிடுக என்றவாறு.
காலிங்கர்: தன் குடிப்பண்பு குன்ற வருவனவற்றைக் கைவிடுக.
பரிமேலழகர்: தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை ஒழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'குடிப்பிறப்பு' என்பது அதிகார முறைமையான் வந்தது. 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம். [தூக்கி- ஆராய்ந்து]

தமது தன்மை குறையவரும் பொருளையும் இன்பத்தையும்/குற்றம் வருமாகில் அந்தக் காரியத்தை/தன் குடிப்பண்பு குன்ற வருவனவற்றை/தம் குடிப்பிறப்புத் தாழ வரும் செயல்களை விடுக என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடிப்பெருமை குறையக்கூடிய செயல்களைச் செய்யாதொழிக', 'ஒருவனுடைய கண்ணியம் குறைந்துவிடக்கூடிய முறையில் வருவதானால் அவற்றை ஏற்றுக் கொள்ள மறுத்துவிடுதலே மானமுடைமை', 'குடிப்பெருமை குறைவுபடுதற்கு ஏதுவாய செயல்களைச் செய்யாது விடவேண்டும்', 'அவைகளை அடைவதற்கு மானம்கெட வரும் செயல்களைச் செய்தலை ஒழிக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மானம்கெட வருவனவற்றைச் செய்தலை விடுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் மானம்கெட வருவனவற்றைச் செய்தலை விடுக என்பது பாடலின் பொருள்.
'இன்றியமையாச் சிறப்பின' குறிப்பது என்ன?

மானத்தை இழந்தபின் என்ன சிறப்பு வேண்டிக் கிடக்குது?

இன்றியமையாத சிறப்பு தரக்கூடிய செயல்களே ஆயினும் அவற்றால் மானம் கெட நேரின் அச்செயல்களை மேற்கொள்ளாமல் விட்டுவிட வேண்டும்.
குன்ற வருப என்ற தொடர் தாழவருவன எனப் பொருள்படும். அது தன் தன்மை தாழ்வாகக் கருதப்படத்தக்க செயல்களைக் குறிக்கும். அதிகாரம் நோக்கி இதற்கு மானம் குறைய எனப் பொருள் கூறுவர். அதிகாரம் குடியியலில் பகுக்கப்பட்டுள்ளதால் குடிப்பண்பு குன்ற எனவும் கொள்வர். நல்ல குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் சமுதாயத்தில் மானம் என்ற ஓர் நிலை உண்டு. அது ஒருவரின் உணர்வு நிலையில் விளங்கி வருவது; அது நிலைநிற்கின்றவரை அவர் நன்கு மதிக்கப்படுவர். அந்நிலையில் தாழ்வு உண்டாகுமாறு நடத்தல் கூடாது என்கிறது பாடல். ஒரு செயலைச் செய்வதால் மட்டுமே சிறப்பு பெறமுடியும் என்றாலும், அது மானம் என்னும் பெருமையினைக் குன்றச் செய்வதாயின், அதைச் செய்யாது ஒழியவேண்டும். எப்படியாவது சிறப்படைவது என்ற நோக்கில் சிலர் செயல்படுவர். ஏதாவது பதவி கிடைக்குமென்றால் தரையில் ஊர்ந்து சென்றாகிலும் அதைப் பெற நினைப்பர். அத்தகையவர்களை நோக்கிப் பாடப்பட்டது இது.
மானத்தைப் பெரிதாக மதிப்பவர்கள் பெருமை குன்றும்படியான செயல்களைச் செய்யாமல் விடவேண்டும். அது 'இல்லாது முடியாது' எனத்தக்க சிறப்பைக்கொண்டதானாலும் கூட மானம் கெடவந்தால் அச்செயலை ஏற்கவே கூடாது என்று உறுதிபட எதிர்மறை ஏவல் வினையாக இட்டுக் கூறுகிறார் வள்ளுவர். தனி வாழ்வானாலும் பொது வாழ்வானாலும் மானம் உயிர்போல் காக்கப்படவேண்டும் என்பது வள்ளுவம். 'இல்லாது முடியாது' என்ற அளவிற்கான முதன்மையானவை உணவு, உடை போன்றனவே; ஒருவரது அடிப்படைத் தேவைக்கான பொருள்கள் பெறுவதாக இருந்தாலும் பெருமை குன்றுவனவற்றைச் செய்யக்கூடாது எனச் சொல்லப்பட்டது.

இக்குறளுக்கான தனது உரையில் பரிமேலழகர் 'இறப்பவரும் வழி இளிவந்தன செய்தாயினும் உய்க' என்னும் வடநுல் முறையை மறுத்து, உடம்பினது நிலையின்மையையும், மானத்தினது நிலையுடைமையையும் தூக்கி, அவை செய்யற்க என்பதாம்' என்கிறார். வள்ளுவர் கருத்துக்கு மாறாக வடநூற்கருத்தைப் பலவிடங்களில் ஏற்றியுரைக்கும் பரிமேலழகர் இங்கு வடநூல் முறையை வெளிப்படையாக மறுப்பது நோக்கத்தக்கது.
இவ்வாறே ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (வினைத்துய்மை 656 பொருள்: பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக) என்றவிடத்தும் 'இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ் செய்தாயினும் புறந்தருக' என்ற வடநூல் அறநூற் பொதுவிதியைச் சுட்டிக்காட்டி மறுத்துள்ளார் பரிமேலழகர். அங்கு அது வினைத்தூய்மை காக்கப்படவேண்டும் என்பதற்காகச் சொல்லப்பட்டது.

'இன்றியமையாச் சிறப்பின' குறிப்பது என்ன?

'இன்றியமையாச் சிறப்பின' என்ற தொடர்க்கு இன்றியமையாத சிறப்புடையன, இதனை இன்றி இது அமையாது பெரும் சிறப்பினை உடையவன், செய்யாத வழித்தாம் அமையாத சிறப்பினை உடையவை, இன்றியமையாத சிறப்பை உடைய செயல்கள், கட்டாயம் செய்ய வேண்டியன, கட்டாயம் செய்ய வேண்டிய சிறப்புடைய செயல்கள், இல்லாமல் முடியாத (முக்கியமான) பொருட்கள், 'இவற்றைச் செய்யாமல் வாழ முடியாது' என்னும் சிறப்புடையவை, தனக்கு இன்றியமையாத செல்வ மேன்மைகளைத் தருவன, வாழ்வதற்குத் தவிர்க்க முடியாதவை, தவிர்க்கமுடியாத சிறப்புடைய காரியங்கள், செய்யாத விடத்துத் தாம் வாழ முடியாத அளவு முதன்மை வாய்ந்தன என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒன்று இல்லாமல் முடியாது எனின் அதனை 'இன்றியமையாதது' என்கிறோம். 'இச்சொல் இன்றுவரை தேயாமல் தன்நிலையில் உள்ளது. வேண்டியது, தேவை என்பன இப்பொருளில் வரினும் இச்சொல் போன்ற அழுத்தம் அற்றவையாம்!' என்பார் இளங்குமரன். இன்றியமையா என்பதற்கு இதனை இன்றி இது அமையாது என்பது நேர்பொருள். 'என்ன வகையான நெருக்கடி உண்டாகும் காலத்திலும் கட்டாயம் செய்தே ஆகவேண்டிய' அல்லது 'மிக முக்கியமான'என்ற பொருளில் பொதுவாக ஆளப்படும் சொல் இது. சிறப்பின என்றது சிறப்பினை உடையன என்ற பொருள் தரும். இன்றியமையாச் சிறப்பின என்பது 'இது இல்லாமல் முடியாது' என்ற அளவு சிறப்புடைய செயல்கள் என்ற பொருள் தருகிறது.
'இன்றியமையாச் சிறப்பின' என்பதற்குப் பெற்ற தாயின் பசி தீர்த்தல் போல்வனவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறுவர்.

பரிமேலழகர் இன்றியமையாச் சிறப்பு என்பதற்குச் செய்யாதவழித் தாமும் அமையாத சிறப்பு எனக் கூறி 'அமையாமை -இறத்தல்' எனப் பதவுரையும் கூறுவார். 'அமையாத என்பதன் கருத்துத் தெளிவாக இல்லாமையால் அமையாத என்பதற்கு இறவாத எனக் குறிப்பு எழுதி இத்தொடர் 'இறக்க நேர்ந்தாலும் இளிவந்தன செய்யற்க' என்ற பொருள் தோன்றச் செய்தார் பரிமேலழகர்' என்பார் தண்டபாணி தேசிகர். மேலே சொல்லப்பட்டது போன்று வடநூற் கருத்தை மறுப்பது என்பதற்காகப் பரிமேலழகர் 'இன்றி-செய்யாத வழி, அமையா-தாம் அமையாத சிறப்பினவாயினும்' என 'இன்றியமையா' என்பதனைப் பிரித்தார் போலும்.
ஆனால் அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று (தூது 682 பொருள்: தூது செயலில் காதலுடைமை, பேசப் போகிற பொருளில் அறிவுடைமை. ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதவை) என்பதில் பிரிக்க வேண்டாத நிலையில் 'இன்றியமையா' என்ற சொல் ஆளப்பெற்றுள்ளது. எனவே இன்றியமையா என்னுந் தொடரைப் பிரிக்காமல் இரண்டு சொற்கள் சேர்ந்த கூட்டுச் சொல்லாகக் கொள்ளாமல் பொருள் காண்பதே தகும்.

செய்தே ஆகவேண்டிய சிறப்புடைய செயல்களாயினும் மானம்கெட வருவனவற்றைச் செய்தலை விடுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒன்று இல்லாமல் முடியாது என்ற நிலையிலும் மானம் காத்து வாழ்க.

பொழிப்பு

கட்டாயம் செய்ய வேண்டிய சிறப்புடைய செயல்களாயினும் மானம்கெட வருவனவற்றைச் செய்யற்க.