இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0960நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு

(அதிகாரம்:குடிமை குறள் எண்:960)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும்; குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

மணக்குடவர் உரை: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக.
இது பணிந்தொழுக வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் - ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக; குலம் வேண்டின் யாரக்கும் பணிவு வேண்டுக - குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக.
(நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது. 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.)

இரா இளங்குமரன் உரை: ஒருவன் நன்மையை விரும்பினால் பழிக்குநாணும் தன்மை வேண்டும். அதுபோல், குடிப்பெருமை விரும்பினால் எவர்க்கும் பணிவுடையனாதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் யார்க்கும் பணிவு வேண்டுக.

பதவுரை: நலம்-நலனுடைமை, புகழ் பெருமை; வேண்டின்-விரும்பினால்; நாணுடைமை-இழி தொழில்களில் மனஞ் செல்லாமை; வேண்டும்-வேண்டும்; குலம்-குடிச்சிறப்பு; வேண்டின்-விரும்பினால்; வேண்டுக-விரும்புக; யார்க்கும்-எவர்க்கும்; பணிவு-பணிவு.


நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக:
பரிப்பெருமாள்: ஒருவர் தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக:
பரிதி: நல்லவராகப் பேர்பெற வேண்டினால் நாணம் வேண்டும்;
காலிங்கர்: தமது நல்லொழுக்கம் குன்றாமை வேண்டின், நம்மாட்டு ஒரு குறைவரின் என்னை என்னும் இந்நாணுடைமையை வேண்டும்;
பரிமேலழகர்: ஒருவன் தனக்கு நலனுடைமையை வேண்டுவானாயின், தான் நாணுடையன் ஆதலை வேண்டுக;
பரிமேலழகர் குறிப்புரை: நலம் - புகழ் புண்ணியங்கள். 'வேண்டும்' என்பது. விதிப் பொருட்டாய் நின்றது.

'தமக்கு நலத்தை வேண்டுவாராயின் நாணுடமையை விரும்புக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை வேண்டின் தீயது செய்ய நாணுக', 'ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணுடைமை வேண்டும்', 'சுகவாழ்வு வேண்டுமென்றால் பழி பாவங்களுக்கு அஞ்சி நடக்க வேண்டும்', 'ஒருவன் புகழ் புண்ணியம் முதலிய நன்மைகளை விரும்பினால், பழிபாவங்கட்குப் பயப்படும் நாணம் அவனுக்கு வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக.
மணக்குடவர் குறிப்புரை: இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: அவ்வண்ணமே குலத்தை விரும்புவாராயின் யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பணிந்தொழுக வேண்டு மென்றது.
பரிதி: குலம் வேண்டினால் எல்லோர்க்கும் வணக்கம் உண்டாயிருக்கவேண்டும் என்றவாறு.
காலிங்கர்: இனி நீர் நும்குலனுக்கு வேண்டினது யாவர்க்கும் இனிது இயலும் பணிவுடைமையை வேண்டும் என்றவாறு.
பரிமேலழகர்: குலனுடைமையை வேண்டுவானாயின், பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக.
பரிமேலழகர் குறிப்புரை: 'வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும்' (தொல்.சொல்.கிளவி.33) என்புழிப்போல, 'அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்' எல்லாரும் அடங்க 'யாரக்கும்' என்றார். பணிவு - இருக்கை எழலும் எதிர் செலவும் முதலாயின. இவை இரண்டு பாட்டானும் குடிமைக்கு வேண்டுவன கூறப்பட்டன.

'குலனுடைமையை வேண்டுவானாயின், யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதலை விரும்புக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் யார்க்கும் என்பதற்கு 'பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதலை வேண்டுக' எனச் சிறிது வேறுபடக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குலப்பெருமை வேண்டின் யார்க்கும் பணிக', 'குடியுயர்ச்சி வேண்டுமானால் எல்லாரிடத்தும் பணிவு வேண்டும்', 'நல்ல இனம் என்ற மதிப்பு வேண்டுமென்றால் பிறரிடத்தில் வணக்கமுள்ளவனாக நடந்து கொள்ளும் தன்மை இருக்க வேண்டும்', 'குலச்சிறப்பு வேண்டுவனாயின் யார்க்கும் பணிந்து நடத்தலை விரும்ப வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

குலப்பெருமை வேண்டுமானால் எல்லாரிடத்தும் வணக்கமாக நடந்து கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால் யார்க்கும் பணிவு விரும்புக என்பது பாடலின் பொருள்.
'யார்க்கும் பணிவு' குறிப்பது என்ன?

தீவினையச்சம் உன்நலம் காக்கும்; பணிவுடைமை உன் குலப்பெருமையை உயரச் செய்யும்.

ஒருவன் தனது நலம் காக்க விரும்புவானானால் அவன் தீயன செய்தல் அஞ்சுதல் வேண்டும்; குடியின் உயர்வை விரும்புவானானால் அவன் யாவரிடத்தும் பணிந்து நடத்தலை விரும்புவானாக.
இங்குள்ள நலம் என்ற சொல்லுக்கு நலனுடைமை என்பது நேரிய பொருள். பரிதி இதற்கு 'நல்லவராக' எனப் பொருள் கூறிப் 'பேர்பெற வேண்டினால் நாணம் வேண்டும்' என விளக்கம் தந்தார். குலம் என்ற சொல் குடிப்பிறப்பு குறிக்க வந்தது. இப்பாடலில் தீவினைஅச்சம் பணிவுடைமை என்னும் இரண்டு குடிமைப் பண்புகள் பேசப்படுகின்றன.
தனக்கு நலம் வேண்டுபவர், எச்சமயத்திலும் தீச்செயல் செய்யவே மாட்டேன் என்று நாணி ஒதுங்கிட வேண்டும். குடிப்பிறப்பாளர் தீவினை செய்ய இயல்பாகவே நாணுவர். ஏற்கனவே இதே அதிகாரத்திலேயே இருமுறை (951, 952) நாணுடைமை பற்றிச் சொல்லப்பட்டது. மறுபடியும் நாண் குணத்தின் நலன் பற்றி இங்கு கூறப்படுவதால் அது குடிப்பிறந்தார்க்கு எத்துணை இன்றியமையாத பண்பு என்று வள்ளுவர் கருதுகிறார் என்பதை அறியலாம். பின்னும் நாணுடைமை அதிகாரத்தில் 'நாணில்லாத தன்மை நிலை பெற்றால் அது நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்' என்று இக்குறளின் கருத்துப்பட குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை (நாணுடைமை 1019 பொருள்: ஒருவன் கொள்கை தவறினால், அத் தவறு அவனுடைய குடிப்பிறப்பைக் கெடுக்கும். நாணில்லாத தன்மை நிலை பெற்றால் நன்மை எல்லாவற்றையும் கெடுக்கும்) எனக் கூறப்படும்
நல்ல குடும்பத்தில் பிறந்தவன் என்று பெயர்பெற வேண்டும் என்று நினைப்பவர், யாவரிடமும் செருக்கின்றி பணிவாக நடந்துகொள்ள வேண்டும். பணிவு மாந்தர்க்கு ஓர் அணி என்பது வள்ளுவரது உறுதியான கருத்து. 'பணிவுடன் நடந்தால் யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பார்கள் என எண்ணாதே; அது உனக்கு உயர்வையே தரும்' என்கிறார் வள்ளுவர். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து (அடக்கமுடைமை 125 பொருள்: பணிவாய் நடத்தல் யாவர்க்கும் நல்லதாம்; அவருள்ளும் பொருளுடையவர்கள் பணிதல் அவர்க்கு அதுவும் ஓர் செல்வம் ஆகும் தன்மையுடையது) என்னும் குறள் இங்கு நினையத் தக்கது. தானடங்கத் தன்குலம் விளங்க நாணுடைமையும் பணிவுடைமயும் வேண்டும். 'வேண்டும்' என்பது கட்டாயம் பற்றிய நெறியீடாக (விதியாக) அமைந்தது.

'யார்க்கும் பணிவு' குறிப்பது என்ன?

'யார்க்கும் பணிவு' என்ற தொடர்க்கு யாவர்மாட்டும் தாழ்ந்தொழுகுதல், எல்லோர்க்கும் வணக்கம் உண்டாக, யாவர்க்கும் இனிது இயலும் பணிவுடைமை, பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதல், வணங்கினவர்களுக்குத் தானும் வணக்கமுடையவனாயிருத்தல், தன்னால் பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதல், எல்லோரிடத்தும் பணிவு, பணியத் தக்கார் அனைவரிடமும் பணிதல், எல்லோர்க்கும் பணிதல், யார்க்கும் பணிக, பிறரிடத்தில் வணக்கமுள்ளவனாக நடந்து கொள்ளும் தன்மை, எவர்க்கும் பணிவுடையனாதல், யார்க்கும் பணிந்து நடத்தல், எல்லாரிடத்தும் பணிந்து நடத்தல், அனைவரிடமும் பணிவுடன் நடந்துகொள்ளல், பெரிய ரெல்லாரிடத்தும் பணிவுடைய வனாயிருத்தல், எல்லாரிடமும் பணிவாக நடந்து ஒழுகல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பணிவுடைமையைக் குடிப்பிறந்தார்க்கு ஓர் ஒழுக்கக் கூறாக இப்பாடல் விதிக்கிறது. யார்க்கும் பணிவு என்றதற்கு 'யாவர் மாட்டும் பணிதல்' என்றும் 'பணியப்படுவார் யாவர் மாட்டும் பணிதல்' என்றும் 'தன்னை வணங்கினவர்களுக்குத் தானும் வணக்கமுடையவனாயிருத்தல்' என்றும் உரை செய்தனர். 'யார்க்கும் பணிவு' எனத் பொதுமையில் நிற்பதாகச் சொல்லப்பட்டுள்ளபோது யாரிடம் பணிவு காட்டுவது என்பதற்கு அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர் என வரம்பு கட்டுதல் பொருத்தமாகத் தோன்றவில்லை,
நாமக்கல் இராமலிங்கம் 'சொல்லப்பட்டவர்களுக்குப் (அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தை தாய் என்றிவர்) பணிவு காட்டுவது கடமையைச் சேர்ந்தது. குலனுடைமை என்ற பெருமையைச் சேர்ந்ததல்ல. பின் பணிவு என்றது என்னவெனில், 'கீழோராயினும் தாழ உரை' என்றபடி யாருக்கும் பணிவாக நடந்து கொள்ளுதல்' என்று பரிமேலழகர் உரையை மறுப்பார். 'தக்காரைப் பணிதலே தகும் என்றமை சாலப் பொருந்துவதாம்' என்று தண்டபாணி தேசிகர் கருத்துரைப்பார்.

எல்லோரிடத்தும் பணிவு காட்டுதல் குடிச்சிறப்பை உயர்த்தும் என்பதால் நற்குடிப்பிறந்தோர் அதை விரும்புதல் வேண்டும் என்பதே வள்ளுவர் கருத்தாக இருக்கமுடியும்.

'யார்க்கும் பணிவு' என்ற தொடர் எல்லோரிடத்தும் பணிவு எனப் பொருள்படும்.

தனக்கு நலம் வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சவேண்டும்; குலப்பெருமை வேண்டுமானால் எல்லாரிடத்தும் வணக்கமாக நடந்து கொள்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தீவினையச்சமும் பணிந்தொழுகலும் நல்ல குடிமைப் பண்புகள்.

பொழிப்பு

நன்மை வேண்டுமானால் தீயன செய்ய அஞ்சுக; குலப்பெருமை வேண்டுமானால் எல்லாரிடத்தும் பணிவு வேண்டும்.