இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0959நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்

(அதிகாரம்:குடிமை குறள் எண்:959)

பொழிப்பு (மு வரதராசன்): இன்ன நிலத்தில் இருந்து முளைத்தது என்பதை முளை காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் வாய்ச்சொல் அவருடைய குடிப்பிறப்பைக் காட்டும்.

மணக்குடவர் உரை: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும். அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.

பரிமேலழகர் உரை: நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் - நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்; குலத்திற்பிறந்தார் வாய்ச் சொல் காட்டும் - அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும்.
(கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: நிலத்தின் தன்மையை முளை காட்டும்; குலத்தின் தன்மையை சொல் காட்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல் காட்டும்.

பதவுரை: நிலத்தில்-நிலத்தில்; கிடந்தமை-மறைந்துகிடந்தமை, உள்ளபடி(இயல்பு); கால்-முளை, வேர்; காட்டும்- அறிவிக்கும், காண்பிக்கும்; காட்டும்-விளக்கும்; குலத்தில்-குடிப் பிறப்பினிடத்தில்; பிறந்தார்-தோன்றியவர்; வாய்-வாய்; சொல்-மொழி.


நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும்;
பரிப்பெருமாள்: வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடவாமையை அதன் முளை யறிவிக்கும்;
பரிதி: நிலத்தில் கிடந்த விதையை இன்னவிதை என்று அங்குரம் காட்டும்; [அங்குரம்-முளை]
காலிங்கர்: முன்னம் புலப்படாது நிலத்தின்கண் ஒரு விதை கிடந்தால் கிடந்தமையை முதல் தோன்றிய தழைத்த தண்டே காட்டிக் கொடுக்கும்;
பரிமேலழகர்: நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்;
பரிமேலழகர் குறிப்புரை: கிடந்தமை உள்ளபடி முளைத்தமாத்திரத்தானே நன்மையும் தீமையும் தெரிதலின், இலை முதலிய கூறாராயினார். ஆகவே, பொருளினும் செயல் முதலியன வேண்டாவாயின. [பொருளிலும்-உவமேயத்திலும்]

'வித்து நிலத்தின்கண் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்தமையை அதன் முளை யறிவிக்கும்' என மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நிலத்தில் கிடந்த விதையை இன்னவிதை என்று அங்குரம் காட்டும்' என்றார். காலிங்கர் 'புலப்படாது நிலத்தின்கண் ஒரு விதை கிடந்தால் கிடந்தமையை முதல் தோன்றிய தழைத்த தண்டே காட்டிக் கொடுக்கும்' எனக் கூறினார். பரிமேலழகர் 'நிலத்தினியல்பை அதன் கண் முளைத்த முளை காட்டும்' என மொழிந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விதை நிலத்தில் மறைந்து கிடப்பினும் அது மறைந்து கிடந்ததை அதன் முளை அறிவிக்கும்', 'ஒரு விளைநிலத்திலுள்ள பூமி சாரத்தை அந்த நிலத்திலிருந்து வெளியே கிளம்புகிற முளையே காட்டிவிடும்', 'நிலத்தின் இயல்பை முளை காட்டும்', 'நிலத்தின் இயல்பை அதில் முளைத்த முளை காட்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நிலத்தின் தன்மையைப் பயிர் காட்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
பரிப்பெருமாள்: அதுபோல உயர்குடிப்பிறந்தாரை அவர் வாயிற்சொல் அறிவிக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனானே குடிப்பிறந்தார் இன்னாத சொல்லார் என்றவாறாயிற்று.
பரிதி: அதுபோலக் குலத்தில் பிறந்தவர் இவரென்று வார்த்தை காட்டும் என்றவாறு.
காலிங்கர்: அதுபோலக் குலத்தில் பிறந்தாரையும் காட்டிக் கொடுக்கும்; யாது எனின், வாய்ப்பிறக்கும் சொல்தானே என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோலக் குலத்தின் இயல்பை அதன் கண் பிறந்தார் வாயிற் சொல் காட்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: குலத்து இயல்பு அறிதற்கருவி கூறுவார் போன்று, இன்சொல் வேண்டுமென்றவாறாயிற்று. [கருவி- சாதனமாகிய சொல்]

'குடிப்பிறந்தாரை அவரவர் வாயிற்சொல் அறிவிக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோலப் பிறர் மறைப்பினும் நற்குடியிற் பிறந்தார் பேசும் சொற்களே அவர்தம் பண்பைப் புலப்படுத்தும்', 'அதைப்போல் ஒருவனுடைய குடிப்பிறப்பை அவன் வாயிலிருந்து வெளியே வருகிற வார்த்தைகள் காட்டிவிடும்', 'அதுபோலக் குலத்தின் இயல்பை அதன்கண் பிறந்தார் வாய்ச்சொல் விளக்கும்', 'அதுபோலக் குலத்தின் இயல்பை, அதில் பிறந்தார் வாய்ச்சொல் அறிவிக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நற்குடியிற் பிறந்தமையை பேசும் சொற்களே புலப்படுத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிலத்தின் தன்மையைக் கால்காட்டும் நற்குடியிற் பிறந்தமையை பேசும் சொற்களே புலப்படுத்தும் என்பது பாடலின் பொருள்.
'கால்காட்டும்' குறிப்பது என்ன?

வாய்மையும் இன்சொல்கூறலும் ஒருவன் நற்குடிப் பிறந்தவன் எனக் காட்டும்.

நிலத்தின் இயல்பை அந்த நிலத்தில் முளைத்த முளை தெரிவிக்கும்; அதுபோல நல்ல குலத்தில் பிறந்தவரது இயல்பினை அவர் வாய்ச்சொல் எடுத்துக் காட்டும்.
பலகுடிகளும் சேர்ந்தது குலமாகும். இங்கு குலம் என்ற சொல் நற்குடிகளைக் குறிப்பதாம்.
கிடந்தமை என்ற சொல்லுக்கு நிலத்திற்கு இருக்கும் உள்ளபடியான -இயல்பான தன்மை, 'கிடந்தமை' இருந்த நிலைமை எனப் பொருள் கூறுவர். மற்றையோர் அதற்கு மறைந்து கிடந்தமை எனப் பொருளுரைத்தனர். மறைந்து கிடந்தமை என்பது விதை அல்லது பயிர் மறைந்து கிடந்தமையைக் குறிப்பதாகக் கொள்வர். இவற்றுள் இரண்டாவதான கருத்து பொருத்தம்.
நல்ல நிலத்தில் இட்ட வித்து நல்லமுறையில் முளைவிட்டுச் செழித்து வளரும். விதைத்த விதை முளைத்து வெளிப்பட்டு வீறிநிற்கும் நிலையில் அந்நிலத்தின் செழுமையை அளவிட்டு விடலாம். முளை செழுமையாக வெளிப்படுமாயின் அது வளமான நிலம் என அறியலாம்; நல்ல பயன் கொடுக்கும். இது மண்ணின் வளப்பத்தையும் குறைபாடுகளையும் கண்டறிய வாய்ப்பாக உள்ளது. அதுபோல, நற்குடியில் பிறந்தவரியல்பு அவர் வழங்கும் சொற்களாலேயே அறியப்பெறும். களர் நிலம் எனப்படும் உவர் நிலத்தில் ஒரு பயிரும் விளையாது.

ஒருவரது குணஇயல்பு சார்பின் காரணமாக அமைவது. அவருடைய பண்பாக்கம் பெரிதும் குடும்ப உறவின் சார்பின் காரணமாக வருவது. அவரது சொல்லும் செயலும் பெரிதும் சார்ந்த குலத்தின் தன்மையைத் தன்னகத்தே கொண்டிருக்கும். அது குலத்தின் இயல்பை அடையாளம் காட்டுவதாக அமையும். அவரது சொல்லொழுக்கங்களிலிருந்து அவர் நற்குடியாளர் என எளிதில் அறியலாம். கீழான குடும்பத்தில் பிறந்தவன் கேட்போர் மனம் நோகும்படி தகாத சொற்களை - இழிவான, அடாவடித்தனமான பேச்சுக்களைப் பேசுவான். இவ்விதம், அவரவருடைய சொற்களே அவரவரது குலத்தின் இயல்பைக் காட்டிவிடும்.
ஒருவன் தன் எண்ணங்களைப் புறத்தோர்க்குப் புலனாக்கும் முதற்கருவி மொழி. மொழிதான் உலகை இயங்கச் செய்கின்றது. சொல், பிறரோடு உறவாடுங்கால் வெளிப்படுவது. அது ஓர் அகப்புறக் கருவி. நல்ல குடும்பத்தில் தோன்றி வளர்ந்தவன் பொய்யாது வாய்மை நெஞ்சம் கொண்டொழுகுவான். எல்லோரிடமும் இனிமையாகவே பேசுவான், உள்ளத் தூய்மையின் அடிப்படையாக வந்த அன்போடு கலந்து வருகின்ற சொற்களுக்கு இன்சொல் என்று பெயர். சொல் பற்றிய குற்றங்கள் உயர்திணைக்கே உரியன ஆதலால், வாய்மை, இனியவை கூறல், புறங்கூறாமை, பயனில சொல்லாமை போன்ற சொல்லறங்கள்வழி அவனது குணங்கள் வெளிப்படும். வாய்மையாளன் புறங்கூறான், வையான், பிறர் இழிபுகளைச் சொல்லி மகிழான்; உளறமாட்டான்; புறங்கூறினாலும் தலை குனிந்து நாளை ஒப்ப வேண்டும் என்று அஞ்சி, குற்றம் புகாமற் காத்துக் கொள்வான். பிறர் கேள்வி கேட்க நேரும்போது, 'ஆம், செய்தேன்; இல்லை. நான் செய்யவில்லை'' எனத் துணிந்து ஒப்புவான்.

இக்குறளில் உவமானத்திற்கு உவமேயத்திற்கும் இடையில் 'அது போல' என்ற தொடர் இல்லை; அதாவது அது 'கெடுக்கப்பட்டுள்ளது' காணலாம். இதை எடுத்துக்காட்டுவமையணி என்பர் இலக்கணவியலார். இத்தகைய 'கெடுதல்' பாடல்களுக்கு ஒரு செறிவைக் கொடுத்துச் செம்மைப்படுத்துதலைக் காணமுடிகிறது. இத்தகைய பாடல்களுக்கு உரை எழுதும் போது உரையாளர்கள் 'அதுபோல்' என்பதை வருவித்துப் பொருள் எழுதுவர். இவ்வாறு சில சொற்கள், உருபுகளைக் கெடுத்துக் கவிதைகளை உருவாக்கும்போது கவிதைகளின் ஓட்டமும் கவிதைப் பண்பும் சிறந்து விளங்குகின்றன என்பார் ச அகத்தியலிங்கம்.

'கால்காட்டும்' குறிப்பது என்ன?

'கால்காட்டும்' என்றதற்கு முளை அறிவிக்கும், இன்னவிதை என்று அங்குரம் காட்டும், முதல் தோன்றிய தழைத்த தண்டே காட்டிக் கொடுக்கும், முளைத்த முளை காட்டும், முளை காட்டும், முளைத்த பயிர்முளை காட்டிவிடும், கால்கள் காட்டும், முளை அறிவிக்கும், வெளியே கிளம்புகிற முளையே காட்டிவிடும், முளைத்த முளை வெளிப்படக் காட்டும், முளைத்த முளை தெரிவிக்கும், பயிரின் முளை புலப்படுத்திவிடும், முளைத்த விதையின் முளை தெரிவிக்கும், பாத்தியிலே உற்பத்தியாகும் சிறிய முளை காட்டும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

கிட்டத்தட்ட அனைத்து உரையாளர்களுமே கால் காட்டும் என்பதற்கு முளை காட்டும் என்றே பொருளுரைத்தனர். முளை என்பது முதலில் தோன்றும் தழைத்த தண்டைக் குறிக்கும். அதைப் பார்த்தவுடனே விதைபோட்ட நிலத்தின் தன்மையைச் சொல்லிவிடுவர்-செழிப்பான மண்ணா அல்லவா என்று. அதுபோலவே ஒருவரது பேச்சிலிருந்தே அவர் எந்தவகையான குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதை அறிந்துகொள்ளலாம் என்கிறது பாடல், இவ்விதம் குடிப்பிறந்தார் சொல்லுக்கு முளை உவமிக்கப்பட்டது.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் என்பதற்கு 'முளையைக் கொண்டு நிலத்தில் மறைந்துள்ள விதையையறியலாம்' என்றும் 'முளையைக் கொண்டு நிலத்திற் கிடந்த விதை இன்ன விதை என்பதையறிவது' என்றும் 'முளையைக் கொண்டு நிலவளத்தையறிதல்' என்றும் உரை செய்தனர்.
கால்-கால் பதிவு எனப் பதவுரை கூறி 'கால்காட்டும் என்பதற்குக் காலாகிய உறுப்புக்காட்டும்' என்பதாகக் காலில் ஒட்டியிருக்கும் மண்ணால், செம்மண் பூமியில் நடந்தான், சாம்பல் மண்ணில் நடந்தான் என்பதை யறிவதுபோல என்றவாறும் பொருளுரைத்தனர்.
காற்று படர்ந்து வந்த வழியில் கிடந்த பொருள்களின் இயல்பிற்கேற்றவாறு அமையும். காற்று, அது படர்ந்து வரும் வழியில், நிலத்தில் கிடந்த பொருள்களின் தன்மையை மணத்தால் காட்டும். அதுபோல் குடியிற் சிறந்தாருடைய மனத்தில் குடிப்பிறப்புற்குரிய உயர் பண்புகள் அமைந்து கிடப்பதை அவர்தம் வாய்ச்சொல் காட்டும். என்றவாறும் உரை உளது. நிலத்திற் பிறந்தாரைக்கார் காட்டும் என்பதாகப் பாடம் உள்ளதாக பழைய உரை (உ வே சா) கூறுகிறது.

'நிலத்தினுடைய இயல்பினை அந்நிலத்தில் முளைத்த முளை, வேர் காட்டுவது போல, ஒருவன் பிறந்த குலத்தின் தன்மையினை அவனுடைய வாய்மொழி காட்டிவிடும் என்பதாம். ஒருவனுடைய அறிவுடைமையோ, கல்வியோ, செல்வமோ, தோற்றப்பொலிவோ, அவன் பிறந்த குடி நற்குடியா அல்லவா என்பதைக் காட்டிவிடாது. அவனுடைய வாயிலிருந்து வருகின்ற சொற்களைக் கொண்டே அவன் பிறந்த குடும்பத்தின் இயல்பை புரிந்துகொள்ளலாம்.

'கால்காட்டும்' என்பதற்கு முளை அறிவிக்கும் என்பதே பொருத்தம்.

நிலத்தின் தன்மையைப் பயிர் காட்டும்; நற்குடியிற் பிறந்தமையை பேசும் சொற்களே புலப்படுத்தும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இன்சொல் கூறல் சிறந்த குடிமைப் பண்பாம்.

பொழிப்பு

நிலத்தின் தன்மையை பயிர் காட்டும்; குடியிற் பிறந்தமையை பேசும் சொற்கள் காட்டும்.