நலத்தின்கண் நாரின்மை தோன்றின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின்;
பரிப்பெருமாள்: ஒருவன் குடிநலத்தின்கண்ணே நீர்மை யின்மை தோன்றுமாயின்;
பரிதி: மனிதனாகப் பிறந்து கிருபையற்றவனாகில்;
காலிங்கர்: நல்லொழுக்கத்தின்கண் தமக்குச் சிறிதும் கிருபை இல்லாமை தோன்றின்; [கிருபை- கருணை]
பரிமேலழகர்: குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: நாரின்மையால் கொடாமையும் கடுஞ்சொல்லும் முதலிய கூறப்பட்டன. 'தோன்றின்' என்பது தோன்றாமை விளக்கி நின்றது. நலனுடையனாய் வருதலினிடையே இவை தோன்றலின், உள்ளது ஐயமாயிற்று. [நார் - அன்பு]
'குலநலமுடையனாய் வருகின்றவன்கண்ணே ஈரம் இன்மை உளதாமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையே அன்பின்மை காணப்படுமேல்', 'ஒருவன் செல்வ நலங்களுடன் சுகமாக வாழும் போதும் அவனிடத்தில் அன்பில்லாத தன்மை இருக்கக் கண்டால்', 'ஒருவனுக்கு நன்மையில் விரும்பமில்லாமை காணப்படுமாயின்', 'ஒருவனுடைய பண்பில் அன்பு இன்மை தோன்றினால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குடிநலமுடையவன் கண்ணே அன்பின்மை காணப்படுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.
அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஐயப்படல்' பாடம்): அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
பரிப்பெருமாள் ('ஐயப்படல்' பாடம்): அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனானும் குடிப்பிறந்தார் நீரல்ல செய்யார் என்று நன்கு மதித்தவறாயிற்று.
பரிதி: அவனது குலம் யாது என்று சந்தேகப்படுவர் என்றவாறு.
காலிங்கர் ('ஐயப்படல்' பாடம்): மற்று அவரைப் பிறந்த குலத்தின் கண் ஐயப்படுதல்; எனவே அவர் ஏக்கழுத்தின்கண் நலம் இல்லாமையால் அவர்மாட்டு அஞ்சத் தகும் என்றவாறு. [ஏக்கழுத்தின் கண் - இறுமாப்பின் கண்]
பரிமேலழகர்: அவனை அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்.
பரிமேலழகர் குறிப்புரை: நலமும் குலமும், ஆகுபெயர். உலகம் என்பது அவாய் நிலையான் வந்தது. ஐயப்படல் என்பது பாடமாயின், ஐயப்படுக என விதியாக்கி உரைக்க. இவை இரண்டு பாட்டானும் வேறுபட்ட வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.
'அவனைக் குலத்தின்கண் தப்பினவனென்று ஐயப்படுக/அக்குலப்பிறப்பின் கண்ணே ஐயப்படும் உலகம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உலகம் அவனைக் குடிப்பிறப்பில் ஐயப்படும்', 'அவன் நல்ல குடிப்பிறப்பு உள்ளவன் அல்ல என்று சந்தேகிக்க இடமுண்டு', 'அவன் குலப்பிறப்பைப்பற்றி உலகத்தார் ஐயப்படுவர்', 'அவனுடைய குலப் பிறப்பில் உலகம் ஐயப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அவனது குடிப்பிறப்பில் ஐயம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|