வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று
(அதிகாரம்:குடிமை
குறள் எண்:955)
பொழிப்பு (மு வரதராசன்): தாம் பிறர்க்குக் கொடுத்துதவும் வண்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.
|
மணக்குடவர் உரை:
வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார் தமது இயல்பினின்றும் நீங்குத லிலர்.
இது பண்புடைமை விடாரென்றது.
பரிமேலழகர் உரை:
பழங்குடி - தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்; வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் - தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; பண்பின் தலைப் பிரிதல் இன்று - தம் பண்புடைமையின் நீங்கார்.
(தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார்.)
இரா இளங்குமரனார் உரை:
மிகப் பழமையாம் குடியில் பிறந்தவர், தாம் கொடுத்தற்குரிய செல்வம் இல்லாமல் சுருங்கிய இடத்தும் தம் நற்பண்பில் இருந்து நீங்குவது இல்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பழங்குடி வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பண்பின் தலைப்பிரிதல் இன்று.
பதவுரை: வழங்குவது-கொடுப்பது; உள் வீழ்தல்-சுருங்க நேர்தல், குறைவாகக் கொடுக்க நேர்தல்; கண்ணும்-பொழுதும்; பழங்குடி- பழைய மரபு வழுவாத குடிப்பிறந்தார், பல தலைமுறையாக நல்ல குடும்பம் என்று பேரெடுத்து வந்த குடும்பம், தொன்று தொட்டு வருகின்ற குடியினர்; பண்பின்-குணத்தினின்றும், இயல்பினின்றும்; தலைப்பிரிதல்-நீங்குதல்; இன்று-இல்லை.
|
வழங்குவது உள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார்;
பரிப்பெருமாள்: வழங்கும் பொருள் தம்மளவிற்குக் குன்றிச் சுருங்கியவிடத்தும், பழைய மரபு வழுவாத குடிப்பிறந்தார்;
பரிதி: ஒருவர்க்குக் கொடுக்க வகையற்றாலும் குடிப்பிறந்தார்;
காலிங்கர்: தமது இல்லின்கண் வழங்கிவரு பொருள் இனி மற்று யாதும் இல் என மாய்ந்தக்கண்ணும் நெடுநாள் பழகி வருகின்ற குடிப்பிறந்தோர்;
பரிமேலழகர்: தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார் தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்; [பண்டையில் சுருங்கியவிடத்தும்-முன்னைய நிலையில் குறைந்த காலத்தும்]
பரிமேலழகர் குறிப்புரை: தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்; அவர்க்கு நல்குரவாவது, வழங்குவது உள் வீழ்வது ஆகலின், அதனையே கூறினார். [படைப்புக் காலம்- இறைவன் உலகைத் தோற்றுவித்த காலம்]
'தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார் தாம் கொடுக்கும் பொருள் பண்டையில் சுருங்கியவிடத்தும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழங்குடி மக்கள்', 'ஒருவருக்குக் கொடை செய்ய இயலாதவாறு பொருள் குறைந்தவிடத்தும் தொன்று தொட்டு வரும் பழங்குடியில் பிறந்தவர்', 'பிறருக்குக் கொடுக்கக்கூடிய செல்வ நிலைமை மிகவும் குறைந்துவிட்ட காலத்திலும், பரம்பரையாக பெருமையுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்', 'தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார், கொடுக்கக் கூடிய பொருள் குறைந்த விடத்தும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழம்பெருமை கொண்ட குடிப்பிறப்பினர் என்பது இப்பகுதியின் பொருள்.
பண்பின் தலைப்பிரிதல் இன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது இயல்பினின்றும் நீங்குத லிலர்.
மணக்குடவர் குறிப்புரை: இது பண்புடைமை விடாரென்றது.
பரிப்பெருமாள்: தமது இயல்பினின்றும் நீங்குத லிலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, பொருள் இல்லாத காலத்தும் இயல்பு குறையார் என்றமையின், ஒப்புரவு செய்தலும் தவிரார் என்றவாறு ஆயிற்று. இது பண்புடைமை விடாரென்றது. இவை ஏழும் குடிப்பிறந்தார் இலட்சணம் கூறின.
பரிதி: குலநெறிக்கு ஒத்த ஒழுக்கம் கெடார் என்றவாறு.
காலிங்கர்: என்றும் தமது மரபின்கண் தலை அழிதல் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தம் பண்புடைமையின் நீங்கார்.
தமது இயல்பினின்றும் நீங்குத லிலர்/குலநெறிக்கு ஒத்த ஒழுக்கம் கெடார்/தமது மரபின்கண் தலை அழிதல் இல்லை/தம் பண்புடைமையின் நீங்கார் என்றவாறு பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'கொடைத்தன்மையை விடார்', 'தம் பண்புடைமையிலிருந்து நீங்க மாட்டார்', 'தம்முடைய நற்குணங்களை விட்டுவிட மாட்டார்கள்', 'தம் நற்குணத்திலிருந்து நீங்கார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தம் நற்குணத்திலிருந்து நீங்க மாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழங்குடி தம் நற்குணத்திலிருந்து நீங்க மாட்டார் என்பது பாடலின் பொருள்.
'பழங்குடி' யார்?
|
இருக்கும்வரை இல்லையென்னாமல் கொடுத்துக் கொண்டிருப்பர் நற்குடிப்பிறப்பாளர்கள்.
தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கிய போதும், பழம் பெருமையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள் தம் குடிஇயல்பிலிருந்து நீங்குவது இல்லை.
நற்குடிப்பிறந்தாரே 'பழங்குடி' என்று இங்கு அழைக்கப்படுகின்றார். பழம்பெருமை உடைய குடியிலிருந்து வந்தவர்களைப் பழங்குடி எனச் சொல்வர். வழங்குவது என்றது கொடுத்தல் என்ற பொருளில் வந்தது. உள்வீழ்தல் என்ற தொடர் உள்ளது ஒழிந்து போதல்- உள்ளனவெல்லாம் இல்லையாய் வீழ்ந்துபடுதல் என்ற பொருள் தரும். இது தன்னிடம் உள்ளவற்றையெல்லாம் இழந்துவிடுதலைக் குறிப்பது.
நற்குடிப் பிறந்தார் கொடுத்துப் பழகியவர்கள். தமது இல்லின்கண் வழங்கிவரு பொருள் இனி ஒன்றும் இல்லை எனச் சுருங்கும்போதும், அதாவது
வழங்குவதற்கு முடியாத நிலைமை நெருங்கியபோதும், இல்லையென்று சொல்லாது இருப்பதிலிருந்து ஏதாவது கொடுத்துதவுவர் அவர்கள். ஈகைத்தன்மையிற் சுருங்காது முடிந்ததைச் செய்வார். இதையே தம்முடைய வழங்குகின்ற பண்பினின்றும் மாறுபடார் பழங்குடி என்று பாடல் சொல்கிறது.
'நற்குடிப் பிறப்பினர் கொடுப்பதற்கு ஏதும் இல்லாதபோது, நல்ல குணங்களினின்று நீங்காமல், நல்ல வார்த்தை சொல்வார்கள்' என்கிறது இக்குறளுக்கான கவிராசர் உரை.
தம் நிதிநிலை மாறுபட்டு, மற்றவர்களுக்கு கொடுத்து உதவும்பொருள் குறைந்து போனாலும், பழம் பெருமை கொண்டவர்கள் தாம் பழகிவந்த கொடுக்கின்ற குணத்தை விடமாட்டார்கள். நல்லகுடும்ப மரபில் வந்தவர்களின் மேன்மையை விளக்க. தம்முடைய வாழ்க்கை வளம் வற்றி, தமது வள்ளன்மைக்கு கேடு உற்றபோதும், அவர்கள், தமது கொடுக்கும் குணத்திலிருந்து நீங்காத இயல்பினராயிருப்பர் என்கிறார் வள்ளுவர்.
இப்பாடலின் கருத்தமைந்த மற்றொரு குறள் இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர் (ஒப்புரவறிதல் 218 பொருள்: ஒப்புரவுக் கடமையை உணர்ந்த அறிவுடையார் உதவும் வாய்ப்பு இல்லாத போதும் பொதுநலம் குறையார்) என்பது.
|
'பழங்குடி' யார்?
'பழங்குடி' என்ற சொல்லுக்குப் பழைய பண்பு வழுவாத குடிப்பிறந்தார், பழைய மரபு வழுவாத குடிப்பிறந்தார், குடிப்பிறந்தார், நெடுநாள் பழகி வருகின்ற குடிப்பிறந்தோர், தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார், பாரம்பரியமாய் நல்லதாய் இருக்கிற குடியிலே பிறந்தவர்கள், பழம்பெருமை உடைய குடியில் பிறந்தவர், தொன்றுதொட்டு விளங்கிவரும் பழங்குடியில் பிறந்தவர்கள், பழங்காலந்தொட்டு வழிவழி வரும் குடிமரபினர், பழங்குடி மக்கள், தொன்று தொட்டு வரும் பழங்குடியில் பிறந்தவர், பரம்பரையாக பெருமையுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மிகப் பழமையாம் குடியில் பிறந்தவர், தொன்றுதொட்டுப் பெருமையாய் வாழ்ந்து வருகிற பழங்குடியிலுள்ளவர்கள், பழம் பெருமையுடைய குடும்பத்தில் பிறந்தவர்கள், பழம் பெருமை வாய்ந்த குடியினர், தொன்று தொட்டு வருகின்ற நற்குடியிற் பிறந்தார், நல்ல பழமையான பரம்பரையில் வந்த பெருமகன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
சுற்றுலா நோக்கில் நாட்டைப் பார்த்துச் செல்பவர்களும், வாழ்வின் பொருட்டுச் சிலகாலம் தங்கி இருப்பவர்களும், ஒரு நாட்டின் மொழி, பண்பாடு, சட்டம், நீதிமுறை போன்றவைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களும் அந்நாட்டிற்குரிய குடிமக்களாகக் கருதப்படமாட்டார்கள். நாட்டின் மண்ணில் நெடுங்காலமாக நிலைத்து வாழ்வோரே குடிமக்கள் எனச் சிறப்பித்துச் சொல்லத் தக்கவர்கள். பரிமேலழகர் பழங்குடி என்பதற்குத் 'தொன்று தொட்டு வருகின்ற குடியின்கண் பிறந்தார்' எனப் பதவுரை கூறிச் சிறப்புரையில் 'தொன்று தொட்டு வருதல்; 'சேர, சோழ, பாண்டியர்' என்றாற்போலப் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வருதல்' என உலகு தோன்றிய காலம் தொடங்கி இம்மண்ணில் விளங்கி வருபவர்களே பழங்குடி எனக் கூறுகிறார். இவர் பண்டைத் தமிழ்மரபு மன்னர்களை உரையிடை கொண்டுவந்து மகிழ்கிறார். 'அன்றைய தமிழக வளர்ச்சி வரலாற்றில் இம்முன்று குடிகளின் வழிவந்தவைகளாகவே, பல சிற்றரசுகள் காணப்படுகின்றன' என்பார் தமிழண்ணல்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தரும் குறிப்பின் விளக்கமாகப் பரிமேலழகர் உரை அமைந்துள்ளது; அது மங்கல வாழ்த்துப் பாடலில்,
.ஆங்கு
பெருநில முழுதாளும் பெருமகன் தலைவைத்த
ஒருதனிக் குடிகளோ டுயர்ந்தோங்கு செல்வத்தான்
வருநிதி பிறர்க்கார்த்து மாசாத்து வானென்பான் (சிலப்பதிகாரம், மங்கலவாழ்த்துப் பாடல் 30-33 பொருள்: அப் புகாரினிடத்து நெடுநிலம் முழுவதையும் தனியே ஆளும் (சோழ மன்னனை) முதற் குடியாக வைத்து எண்ணுதலை யுடைய, ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளையோடு கூடி மிக்கோங்கிய செல்வத்தை யுடையான் அறநெறியால் வந்த பொருளை வறியராய பிறர்க்கு உண்பிக்கும் மாசாத்துவான் என்று பெயர் கூறப்படுவான்) எனவரும் பகுதி கோவலனின் தந்தை மாசாத்துவானை அறிமுகப்படுத்தும்போது சொல்லப்படுவது. ஒப்பின்மையின் மிகுதி கூற ஒருதனிக் குடிகள் எனவும் மாசாத்துவன் வள்ளன்மை மிக்கவன் எனவும் சொல்லப்படுகின்றன. இப்பொருளில்தானா இக்குறளிலுள்ள பழங்குடி என்ற சொல் ஆளப்பட்டது?
இங்கு பழங்குடி என்ற சொல் குடிப்பிறந்தாரைக் குறிக்க வந்தது. நற்குணங்களில் மேலோங்கியவர்களே குடிப்பிறந்தார் என அழைக்கப்படுவர்.
பரிப்பெருமாள் என்ற தொல்லாசிரியர் பழங்குடி என்றதற்குப் 'பழைய மரபு வழுவாத குடிப்பிறந்தார்' எனப் பொருள் கூறுகிறார். இது பொருத்தமானதாக உள்ளது.
பழைய மரபுடைய குடிமக்களுக்கு என்ன சிறப்பு? குடியின் பழமை பண்பின் பாற்பட்டது. அவர்கள் சிறந்த பண்புநலன்கள் கொண்டவாராக இருப்பர். அப்பண்புகளில் ஒன்றாகக் கொடைத்தன்மை இங்கு குறிப்பிடப்பெறுகிறது.
பொதுவாக வளம் மிகுந்த புறச்சூழலில் வாழ்பவர்கள் உள்ளத்தாலும் வளம் உடையவர்களாக இருப்பர். வளங்கொழிக்க வாழ்ந்த குடும்பத்தினராதலால் தங்கள் ஈகை குணத்தால் அவர்கள் நற்குடியினர் எனப் பெயர் பெறுகிறார்கள். நல்ல குடும்பத்திலுள்ளவர்களெனவே கொடுத்தல் என்பது அவர்களிடமிருந்து நீக்கமுடியாத ஓர் பண்பு ஆகிவிடுகிறது- இது மரபு வழுவாத என்பதை விளக்கும். இக்குறளில் பழங்குடி என்ற சொல் காலத்தால் பன்னெடுங்காலம் வாழ்ந்துவரும் குடியைச் சொல்வது எனக் கொள்வதைக் கட்டிலும் பழைய மரபு வழுவாத குடிப்பிறந்தாரைக் குறிக்கிறது என்று கூறுவது பொருத்தம்.
'பழங்குடி' என்பது பழைய மரபு வழுவாத குடியில் பிறந்தவர்களைக் குறிப்பது.
|
கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் பழம்பெருமை கொண்ட குடிப்பிறப்பினர் தம் நற்குணத்திலிருந்து நீங்க மாட்டார் என்பது இக்குறட்கருத்து.
குடிமைச் சிறப்புள்ளவரது கொடுக்கும் பொருள் இளைத்தாலும் அவர் கொடைக்குணம் தவறார்.
கொடுத்தற்குப் பொருள் சுருங்கிய இடத்தும் நற்குடியினர் தம் பண்புடைமையிலிருந்து நீங்க மாட்டார்.
|