இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0953நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகைஎன்ப வாய்மைக் குடிக்கு

(அதிகாரம்:குடிமை குறள் எண்:0953)

பொழிப்பு (மு வரதராசன்): உண்மையான உயர்குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, ஈகை, இனிய சொல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கும் நல்ல பண்புகள் என்பர்.

மணக்குடவர் உரை: முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு அங்கமென்று சொல்லுவர்.

பரிமேலழகர் உரை: வாய்மைக்குடிக்கு - எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு; நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகை என்ப - வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.
(பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: முகமலர்ச்சி, கொடுத்தல், இனியமொழி கூறல், இகழாதிருத்தல் ஆகிய நான்கும் நற்குடிப் பிறந்தார்க்கு வேண்டிய கூறுகளாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வாய்மைக் குடிக்கு நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப.

பதவுரை: நகை-முகமலர்ச்சி; ஈகை-கொடுத்தல்; இன்சொல்-இனிய மொழி; இகழாமை-பழியாதிருத்தல்; நான்கும்-நான்கும்; வகை-கூறு; என்ப-என்று சொல்லுவர்; வாய்மை-மெய்ம்மை; குடிக்கு-நற்குடியினர்க்கு.


நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகைஎன்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('நான்கின்வகை' பாடம்):: முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் அங்கமென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள் ('நான்கின்வகை' பாடம்):: முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் அங்கமென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தொகை என்பது பிண்டத்தின் பெயர் ஆதலின் வகை என்பது உறுப்பிற்குப் பெயர் ஆயிற்று. இவை நான்கினையும் தமக்கு உறுப்பாக உடையார் என்றும் கூறிற்று.
பரிதி: மகிழ்ச்சி கொடை நல்வார்த்தை இகழ்ச்சியின்மை இந்த நாலு குணமும் உள்ளவன்.
காலிங்கர்: யாவர்மாட்டும் முகமலர்ச்சி உடையராகையும், வறியவர் யாவர்க்கும் யாதானும் ஒன்றைக் கொடுத்தலும், யாவர்மாட்டும் முகம் மலர்ந்து இனியவை கூறலும், ஒருவரை நெஞ்சினான் இகழ்ந்திராமையும் இந்நான்கும் என்று சொல்லுப சான்றோர்.
பரிமேலழகர்: வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்.
பரிமேலழகர் குறிப்புரை: பொய்ம்மை திரிபு உடைமையின் திரிபின்மையை 'வாய்மை' என்றும். 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார். [ 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர்' - குறள் 752. இதன் பொருள்: பொருளில்லாதவரை யாவரும் இகழ்வர் என்பது; அவர் கூறாக்கியும் - குடியின்கண் பிறந்தாரது பகுதியாக்கியும்]

'முகமலர்ச்சியும், கொடையும், இனியவை கூறுதலும், பிறரை இகழாமையுமாகிய நான்கினையும் அங்கமென்று சொல்லுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகமலர்ச்சி கொடை இன்சொல் மதித்தல் இவை இயல்புகள்', 'சிரிப்பு தவழும் மலர்ந்த முகம், வேண்டியதைக் கொடுக்கும் தன்மை, இனிமையான சொற்கள், நிந்தனையான சொற்களைப் பேசாமை ஆகிய இந்த நான்கும் சொந்தமான இனக் குறிகள் எனப்படும்', 'முகமலர்ச்சியும், கொடையும், இன் சொல்லும், பிறரை இகழாமையுமாகிய நான்கும் இயல்பாக உரியன என்று நூலோர் சொல்லுவர்', 'முக மலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொல் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய பகுதி என்று சொல்லுவார் பெரியோர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிரித்தமுகம், கொடுத்தல், இன்சொல், யாரையும் இகழாமை ஆகிய இந்நான்கும் கூறுகள் என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

வாய்மைக் குடிக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு.
பரிப்பெருமாள்: குலத்தினுள்ளார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மெய்ம்மைக் குடி என்றதனானே எஞ்ஞான்றும் தப்பு இல்லாக் குடி என்று கொள்ளப்படும்.
பரிதி: குடிசெய்வான் என்றவாறு.
காலிங்கர்: குடிப் பிறந்தார்க்கு வாய்ப்புடைமை என்றவாறு.
பரிமேலழகர்: எக்காலத்தும் திரிபில்லாத குடியின்கண் பிறந்தார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'குடி' ஆகுபெயர். 'நான்கின்வகை' என்பது பாடமாயின், வாய்மைக் குடிப்பிறந்தார்க்குப் பிறரின் வேறுபாடு இந்நான்கால் உளதாம் என்று உரைக்க. இவை மூன்று பாட்டானும் குடிப்பிறந்தாரது இயல்பு கூறப்பட்டது. [குடி என்னும் இடப்பெயர் குடியிற் பிறந்தவரை உணர்த்துதலால், இடவாகு பெயராம்]

'மெய்ம்மையுடைய குலத்தினுள்ளார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுங்கான குடியின்', 'உண்மையான நல்ல குடிப்பிறப்புக்கு', 'மெய்யான நற்குடியிற் பிறந்தவர்களுக்கு', 'உண்மையான நற்குடிக்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நற்குடியிற் பிறந்தவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குடியிற் பிறந்தவர்களுக்கு சிரித்தமுகம், கொடுத்தல், இன்சொல், யாரையும் இகழாமை ஆகிய இந்நான்கும் கூறுகள் என்பர் என்பது பாடலின் பொருள்.
'வகை' குறிப்பது என்ன?

இனிய குணங்கள் உண்மை பேசும் நல்ல குடும்பத்திலுள்ளவர்களுக்கே உரியன.

முகமலர்ச்சி, உவப்போடு கொடுக்குங் குணம், இனிய சொல் உரைத்தல், பிறரை இகழ்ந்து பேசாமை, ஆகிய நான்கும், மாறாத நல்ல குடும்பத்தில் பிறந்தவர்க்கு உரிய கூறுபாடுகள் என்று சொல்லுவர்.
'குடி' என்னும் சுருக்கப் பெயர் இங்கு நற்குடிப்பிறந்தாரைக் குறிப்பது.
நகை:
'நகை' என்பது மனத்தின் நிறைவாக வெளிப்படும் மகிழ்ச்சியின் விளைவாக முகத்தில் காணப்படும் மலர்ச்சியைக் குறிக்கும் சொல். இங்கு சொல்லப்படும் நகை இன்ப நுகர்ச்சி, எள்ளல், இகழ்ச்சிக் குறிப்பு ஆகியவற்றான் தோன்றுவன அல்ல. நற்குடிப்பிறந்தார் எல்லோரிடமும் நகைமுகம் காட்டுவர். சிரித்தமுகத்தோடு தோன்றிப் பழகுவது இறுக்கமற்ற இதமான சூழலை உருவாக்கும். அது யாரையும் நம்மை எளிதாக அணுகச் செய்யும். எல்லோரிடமும் நகை முகங் காட்டிப் பேசுவது நல்ல பண்பு. முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு பேசுகின்றவர்கள் மற்றவர்கள் நட்பைப் பெற முடியாது.
ஈகை:
தகுதியுடையார்க்கு ஈயும் குணத்தைச் சொல்வது இது. உள்ளதை ஒளிக்காமல் உதவி செய்வதைக் குறிப்பது. ஈகை என்பது வறியவர்க்குக்கு வழங்குவதுமாம். இக்குணம் நற்குடியில் பிறந்தவர்களிடத்தில் இயல்பாக இருப்பதாகும்.
இன்சொல்:
இன்சொல் இனியது, எவரிடமும் இனிமையாகப் பேச வேண்டும். யாரிடமும் எரிந்துவிழக்கூடாது. கடுஞ்சொற்கள் கூறுவது நல்ல பண்பல்ல. இனிய சொற்களே நன்மையைத் தரும். ஈடுபட்ட செயல்களில் வெற்றியை உண்டாக்கும். நகையும் ஈகையும் செயல்படுகின்ற இடத்தில் இன்சொல் தப்பாமல் காணப்படும். இனிமையான சொற்களைப் பேசுவதென்பது ஒருவருடைய உள்ளப் பாங்கினையும் வழிமுறையையும் காட்டிக்கொடுக்கும். ஒருவர் பேசும் சொற்களைக் கொண்டே அவருடைய குடிப்பிறப்பு புலப்பட்டுவிடும். நல்ல குடும்பத்திலிருந்து வந்தவர்கள் எப்பொழுதும் இன்சொல்லே பேசுவர்.
இகழாமை:
'இகழாமை' என்றதற்கு இகழ்ச்சியின்மை, ஒருவரை நெஞ்சினால் இகழ்ந்திராமை, பிறரை இகழாமை, தாழ்வாகக் கருதாமை, பிறர்பழி கூறாமை என்றவாறு பொருள் கூறினர். இச்சொல் யாரையும் எள்ளி நகையாடமையைக் குறிப்பது. யாரையும் எந்த நிலையிலும் இகழ்ந்து பேசிவிடக்கூடாது என்பது வாய்மைக் குடியினர்க்குரிய ஒரு தகைமை என்கிறது இப்பாடல். நகையும் இன்சொல்லும் இருந்தாலும் ஒருவரிடம் இகழ்தல் இருக்குமாயின் நன்றாகாது; ஈதல் புரிவராயினும் ஏற்பாரை கஞ்சிக்கில்லாதார், அறிவிலார் என்று இகழ்ச்சியாகக் கருதியும் கூறியும் செய்தால் அது தவறு என்பது உணர்த்தப்படுகிறது. நற்குடியிற் பிறந்தவர்களிடம் பிறரை இகழ்ந்து பேசுகின்ற கீழான குணம் காணப்படாது.
இனி, இகழாமை என்பது இகழ்ச்சியாகக் கருதாமையையா அல்லது இகழ்ந்து பேசாமையா எனின் 'இன்சொல்' சொல்லியபின் 'இகழாமை' கூறப்பட்டுள்ளதால் அது இகழ்ச்சியாகக் கருதாமையைக் குறிப்பது என்பது பெறப்படும்.

பரிமேலழகர் 'குடியின்கண் பிறந்தார்க்கு வறியார் சென்ற வழி முகமலர்ச்சியும், உள்ளன கொடுத்தலும், இன்சொற் சொல்லுதலும், இகழாமையும் ஆகிய இந்நான்கும் உரிய கூறு என்று சொல்லுவர் நூலோர்' எனக் கூறி சிறப்புரையில் 'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் ஆகலின், இகழாமையை அவர் கூறாக்கியும் கூறினார்' எனவும் கூறியுள்ளார். இது குடிப்பிறந்தார் வறியாரிடம் முகமலர்ச்சி காட்டி, கொடுத்து, இன்சொல்பேசி, இகழாதிருப்பர் என்று பொருள்படும்படியும் வறியரல்லாத பிறர் வந்தவிடத்து முகமலர்ச்சியும், இன்சொல்லும் தேவையற்றன என்பதாக ஆகிவிடுகிறது. குடிமைப் பண்புகள் கூறும் பாடலில் சொல்லப்பட்ட நான்கு பண்புகளையும் எல்லாரிடத்திலும் நற்குடியினர் காட்டுவர் என்பதே வள்ளுவர் எண்ணமாக இருக்க முடியும். எனவே வறியாரை இங்கு வருவித்துரைத்து குறளின் பொதுத்தன்மையைக் குறைக்க வேண்டுவதில்லை. எல்லாரும் என்பதில் வறியவரும் அடங்கிவிடுவர். காலிங்கரது உரை 'யாவர்மாட்டும் முகமலர்ச்சி உடையராகையும், வறியவர் யாவர்க்கும் யாதானும் ஒன்றைக் கொடுத்தலும், யாவர்மாட்டும் முகம் மலர்ந்து இனியவை கூறலும், ஒருவரை நெஞ்சினான் இகழ்ந்திராமையும் இந்நான்கும் குடிப் பிறந்தார்க்கு வாய்ப்புடைமை என்று சொல்லுப சான்றோர்' என்று தெளிவாக 'யாவர்மாட்டும்' எனத் தெரிவிக்கிறது. நற்குடியில் தோன்றியவர்கள் யாரையும் இகழமாட்டர்கள் என்பதால் வறியவர்களையும் இகழார். எல்லாரும் இல்லாரை இகழ்வர் என்பது பொதுவியல்பு; இகழாமை நற்குடிப்பிறந்தோரின் சிறப்பியல்பு ஆகும்.

வாய்மைக் குடி அதாவது எக்காலத்தும் மெய்மையையுடைய மாறுபடாத குடியினர் மனித நேயம் மிக்கவர்கள். அவர்களிடம் நகை, ஈகை, இன்சொல், இகழாமை ஆகிய நான்கு குணங்களும் அமைவு கண்டிருக்கும்.

'வகை' குறிப்பது என்ன?

'வகை' என்ற சொல்லுக்கு அங்கம், வாய்ப்புடைமை, உரிய கூறு, உரியவகை, நல்ல பண்புகள், அவர்க்கேயுரிய பண்புக் கூறுகள், இயல்புகள், கூறுகள், சொந்தமான இனக் குறிகள், சிறந்தவை, இயல்பாக உரியன, உரிய பகுதி, உரிய கூறுபாடுகள், இயல்பாக வுரிய கூறு, சிறந்த அறவழி என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு உறுப்பு, கூறு என்னும் பொருள் பொருந்தும். பரிப்பெருமாள் 'தொகை என்பது பிண்டத்தின் பெயர் ஆதலின் வகை என்பது உறுப்பிற்குப் பெயர் ஆயிற்று' என்று விரித்துக் கூறுவார். 'வகை' என்று சொன்னது முகமலர்ச்சி, கொடுக்கும் குணம், இனிய சொல் பேசுதல், இகழாதிருத்தல் ஆகிய இந்நான்கையும் குடிப்பிறந்தார் தங்களுக்கு உரிய குணங்களாகக் கொண்டிருப்பார்கள் என்பதைப் புலப்படுத்தும். அந்நான்கும் நற்குடிப் பிறந்தாருடைய தன்மையாகும் என்று சொல்வதும் ஏற்கும்.

'வகை' என்ற சொல்லுக்குக் கூறு என்பது பொருள்.

நற்குடியிற் பிறந்தவர்களுக்குச் சிரித்தமுகம், கொடுத்தல், இன்சொல், யாரையும் இகழாமை ஆகிய இந்நான்கும் கூறுகள் என்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நல்லிணக்கத் தோடியியைந்த வாழ்வு நடத்தும் குடிமைப் பண்பு கொண்டவர்களிடம் காணப்படும் நான்கு இனிய இயல்புகள்.

பொழிப்பு

முகமலர்ச்சி, கொடுத்தல், இனியசொல் கூறல், இகழாமை என்றிவை நான்கும் நற்குடிப் பிறந்தார்க்கான கூறுகளாம்