இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0952ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்

(அதிகாரம்:குடிமை குறள் எண்:952)

பொழிப்பு (மு வரதராசன்): உயர்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர்.

மணக்குடவர் உரை: ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும் தப்பார் உயர்குடிப்பிறந்தார்.

பரிமேலழகர் உரை: குடிப்பிறந்தார் - உயர்ந்த குடியின்கண் பிறந்தார்; ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார் - தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும், கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்.
(ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின. இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: ஒழுக்கம், உண்மைச்சொல் நாணம் மூன்றிலும் குடிப்பிறந்தவர் என்றும் குறையார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
குடிப்பிறந்தார் ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம்மூன்றும் இழுக்கார்.

பதவுரை: ஒழுக்கமும்-நன்னடத்தையும்; வாய்மையும்-மெய்ம்மையும்; நாணும்-நாணமுடைமையும்; இம்மூன்றும்-இந்த மூன்றும்; இழுக்கார்-வழுவார்; குடிப்பிறந்தார்-நற்குடியில் தோன்றியவர்.


ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் ஆகிய இம்மூன்றினையும்;
பரிப்பெருமாள்: ஒழுக்க முடைமையும் மெய்ம்மை கூறுதலும் அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமையும் இம்மூன்றினையும்;
பரிதி: ஒழுக்கமுடைமையும், சத்திய வசனமும், நாணமும்;
காலிங்கர்: கீழ்ச் சொல்லிப் போந்த ஒழுக்கமுடைமையும் வாய்மை நிகழ்ச்சியும், அங்குத் தோற்றம் செய்த நாணமுடைமையும் என்னும் இம்மூன்றும்; [கீழ்ச் சொல்லிப் போந்த- அறத்துப் பாலில் ஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்தில் சொல்லிய]
பரிமேலழகர்: தமக்குரிய ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒழுக்கம் முதலியன மெய்ம்மொழி மனங்களினவாகலின், அம் முறையவாயின.

'ஒழுக்கம் மெய்ம்மை நாண் எனப்பட்ட இம்மூன்றன் கண்ணும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் நாணமுடைமைக்கு 'அற்றம் மறைத்தல்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம், வாய்மை, நாணம் -இம்மூன்றிடத்தும்', 'நல்ல நடத்தை, சத்தியம், பழிபாவங்களுக்கு அஞ்சுதல் ஆகிய இந்த மூன்றிலும்', 'ஒழுக்கம், மெய்ம்மை, மானம் ஆகிய மூன்றிலும்', 'ஒழுக்கம், வாய்மை, நாண் எனப்பட்ட மூன்றிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்கம், வாய்மை, நாண் இம்மூன்றிலும் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்கார் குடிப்பிறந் தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தப்பார் உயர்குடிப்பிறந்தார்.
பரிப்பெருமாள்: தப்பார் குடிப்பிறந்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை மூன்றினையும் தப்பி ஒழுகார் என்றவாறு.
பரிதி: குடிப் பிறந்தார்க்குக் கைவரும் என்றவாறு.
காலிங்கர்: சிறிதும் வழுவகில்லார்; யார் எனின் குடிப்பிறந்தார் என்றவாறு.
பரிமேலழகர்: உயர்ந்த குடியின்கண் பிறந்தார் கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார். [தாமாகவே வழுவார் - தாம் இயல்பாகவே தவறாது நடப்பர்]
பரிமேலழகர் குறிப்புரை: இழுக்குதல் அறியாது வருகின்றமையின் 'இழுக்கார்' என்றார்.

'உயர்குடிப்பிறந்தார் தப்பார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'கல்வியான் அன்றித் தாமாகவே வழுவார்' எனக் கூடுதலாகச் சில சொற்கள் சேர்த்து உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்குடிப் பிறந்தவர் தவறி நடக்க மாட்டார்', 'நல்ல குடியிற் பிறந்தவர்கள் தவறமாட்டார்கள்', 'உயர்ந்த குடியிற் பிறந்தோர்கள் தமது நிலை தவறமாட்டார்கள்', 'நற்குடியில் பிறந்தார் தவறார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நற்குடிப் பிறந்தவர் தவறமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குடிப் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாண் இம்மூன்றிலும் இழுக்கார் என்பது பாடலின் பொருள்.
'இழுக்கார்' என்பதன் பொருள் என்ன?

நற்குடிப்பிறப்பினர் நல்லகுணங்களிலிருந்து என்றும் வழுவார்.

நல்ல குடியில் பிறந்தவர்கள், ஒழுக்கம், உண்மை, நாணம் ஆகிய மூன்று பண்புகளிலிருந்தும் வழுவுதல் இல்லார்.
குடிப்பிறந்தார் என்பது நற்குடிப்பிறந்தாரைக் குறிக்கும் சொல். நல்ல குடியிலே பிறந்தவர்கள், ஒழுக்கமுறைகளைப் பின்பற்றுவது, வாய்மை காத்தல், நாணுடைமை என்னும் மூன்றையும் கைவிடாமல் வாழ்பவர்கள் ஆவர். இம்மூன்றும் குறளில் ஒழுக்கமுடைமை வாய்மை நாணுடைமை என்னும் தனித்தனி அதிகாரங்களாக (14, 30, 102) வகுக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கமுடைமை: ஒழுக்கத்துக்கும் குடிப்பிறப்புக்கும் அழுத்தமான ஓர் தொடர்பு உள்ளது. ஒழுக்கம் உடைமை குடிமை......... (ஒழுக்கமுடைமை 133) என ஒழுக்கமுடைமையே குடிமை என முன்னரே அறத்துப்பாலில் அறுதியிட்டு கூறப்பட்டது. அக்குறளின் பொருளாவது உயர்குடிப்பிறப்பு, இழிபிறப்பு என்று வேறுபடுத்துவதற்கு உரைகல் ஒழுக்கமுடைமை-ஒழுக்கமின்மை என்பதாம். ஒழுக்கம் என்பது எல்லார்க்கும் ஒத்ததாய் எல்லாரானும் உயர்வென்று போற்றப்படுவதாயுள்ள கருத்தும் சொல்லும் செயலுமேயாம். ஒழுக்கங் குன்றிய மாந்தரை யாரும் மதிக்க மாட்டார்கள். ஒருவருடைய குடிப்பிறப்பு வாழுங்காலத்தில் அவரால் கடைப்பிடிக்கப்படும் நற்பண்புகளாலும், நன்னடத்தைகளாலும் அறியப்படும். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் தம்பிறப்பின் பெருமையைக் காப்பாற்றி, தம்முடைய வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார்கள். நற்குடிப்பிறந்தார் என்றறியப்பட நன்னடத்தையராக இருத்தல் வேண்டும். அது தவறும்போது, தானும் நல்ல குடிப்பிறப்பு என்ற நிலையிலிருந்து வீழ்ந்து, தன் வழிமுறைக்கும் அவ்விழுக்கினை விட்டு செல்வராவர். ஒழுக்கத்தினின்றும் வழுவுதல் மக்கட்பிறப்பில்லாத விலங்கு முதலிய இழிந்த பிறப்பாய்க் கருதி இகழப்படும்; குடிப்பழி நாணுவோர் ஒழுக்கத்திலிருந்து விலகமாட்டார்.

வாய்மை: குடிப்பிறப்பாளர்கள் எப்பொழுதும் உண்மையே பேசுவார்கள். அவர்கள் பொய் சொல்லக் கூசுவர். வாய்மை என்பது பொய் சொல்லாமை என்பது மட்டுமன்று; வாய்மை என்பது பிறர்க்குத் தீமை தராத உண்மையுமாகும். பொய் பேசித் திரிபவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பில்லை. நற்குடிப்பிறந்தவர்கள் வாய்மையாளர்களாக எப்பொழுதும் இருப்பர். உண்மை, வாய்மை, மெய்ம்மை என்ற மூன்று சொற்களிலிருந்து வாய்மையை இங்கே தேர்ந்தெடுத்து வள்ளுவர் ஆண்டிருப்பதன் நோக்கம் அது மொழியின் அடிப்படையில் இருக்க வேண்டுமென்பதற்காக.

நாண்: 951-ம் பாடலிலேயே நாணப்பண்பு பற்றி உரைக்கப்பட்டுவிட்டதே, பின் மீண்டும் இங்கு ஏன் கூறப்படுகிறது என்றால் அது இங்கு வேறொரு பொருளைப் பயக்கிறது என்பதால்.
நாண் என்பதற்கு மணக்குடவர் உரை 'அற்றம் மறைத்தலாகிய நாணமுடைமை' எனப் பொருள் கூறுகிறது. 'அற்றம் என்பது சோர்வு என்னும் பண்புப்பெயரதாய்ச் சோர்வினால் மறைக்க வேண்டிய உறுப்புகளை மறையாமையையே சுட்டுவது. இதனை 'அற்றங்க காவாச் சுற்றுடைப்பூந்துகில்' என்னும் (மணிமேகலை. 3:139) அடியான் உணரலாம். ஆனால் வள்ளுவர், கேடு குற்றம் மறைத்தற்குரிய பகுதி, நோய்முதலிய பல பொருளில் ஆளுவர். ஈண்டு மறைக்க வேண்டிய உறுப்பு, பழி இவற்றையே உணர்த்தி நிற்பதை 'மறைத்தலாகிய நாணுடைமை' என்னும் சொற்குறிப்பான் உணரலாம்' என்பது தண்டபாணி தேசிகரது விளக்கம். எனவே இப்பாடலில் மறைக்க வேண்டிய உறுப்புகளை மறையாமை, பிறர் குற்றங்களைக் கூறாமல் மறைத்தல் ஆகிய பண்புகள் நாணத்தைக் குறிப்பதாம்.

ஒழுக்கம், வாய்மை, நாண் என்ற மூன்றையும் முறையே மெய், மொழி, மனம் என்ற மூன்றோடும் சார்ந்தவையாக அமைகிற முறையில் வள்ளுவர் இந்தக் குறளில் ஆண்டிருக்கிறார். குடிப்பிறந்தார் இந்த மூன்றையும் விட்டுவிலகி நிலைதடுமாறி நடக்க மாட்டார்கள்.

'இழுக்கார்' என்பதன் பொருள் என்ன?

'இழுக்கார்' என்ற சொல்லுக்குத் தப்பார், வழுவகில்லார், வழுவார், தப்பாமல் நடப்பார்கள், தம்மிடத்து இழுக்கு வராமற் காப்பார், வழுவாமல் இயல்பாகவே நன்னெறியில் வாழ்வர், தவறுபட மாட்டார்கள், குறையார், தவறி நடக்க மாட்டார், தவறமாட்டார்கள், தவறி நடவார், தமது நிலை தவறமாட்டார்கள், தவறார், விலகிச் செல்ல மாட்டார்கள், எக்காரணத்தினாலும் விட்டுவிட மாட்டார்கள் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

'இழுக்கார்' என்ற சொல்லுக்கு தப்பாமல் நடப்பார்கள் என்பது நேரிய பொருள். பரிமேலழகர் கூறும் 'கல்வியானன்றித் தாமாகவே வழுவார்' என்னும் பொருள் தெளிவின்று. நல்ல குடியிற் பிறந்தவர் உயர்விலும் தாழ்விலும் தம் தன்மையிலிருந்து மாறமாட்டார்கள். செல்வச் சிறப்போ வறுமைச் சீரழிவோ அவர்களைப் பாதிக்காது. எந்நிலைகளிலும் கலங்காது நின்று சொல்லப்பட்ட மூன்று குணங்களையும் காப்பர்.

'இழுக்கார்' என்பதற்குத் தப்பாமல் நடப்பார்கள் என்பது பொருள்

நற்குடிப் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாண் இம்மூன்றிலும் தவறமாட்டார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒழுக்கம், வாய்மை, மானம் இம்மூன்று குடிமைப் பண்புகளையும் தவறவிடமால் விழிப்புடன் காப்பர் நற்குடியினர்.

பொழிப்பு

நற்குடிப் பிறந்தவர் ஒழுக்கம், வாய்மை, நாணம் இம்மூன்றிடத்தும் தவறார்.