இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0920இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

(அதிகாரம்:வரைவில்மகளிர் குறள் எண்:920)

பொழிப்பு (மு வரதராசன்): இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

மணக்குடவர் உரை: கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும் திருமகளால் கடியப்பட்டாரது நட்பு.
இது நல்குரவாவார் சார்வரென்றது.

பரிமேலழகர் உரை: இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் - கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; திருநீக்கப்பட்டார் தொடர்பு - திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு.
(இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: ஒரே காலத்தில் இருமனப்பட ஒழுகும் மகளிரும், மதிமயக்கும் கள்ளும், உள்ளதையெல்லாம் இழக்கச் செய்யும் சூதும் செல்வத்தினின்று நீக்கப்பட்டவர் பெற்ற தொடர்புடையவை ஆகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு.

பதவுரை: இருமன-இரண்டுபட்ட மனத்தினையுடைய, பிளவுபட்ட மனமுடைய; பெண்டிரும்-(பொது)மகளிரும்; கள்ளும்-நறவும், கள்ளும்; கவறும்-சூதும்; திரு-செல்வம், திருமகள்; நீக்கப்பட்டார்-துறக்கப்பட்டவர்; தொடர்பு-நட்பு.


இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும்;
பரிப்பெருமாள்: கவர்த்த மனத்தையுடைய பெண்டிரும், கள்ளும், கவறும்;
பரிதி: பொதுமகளும் கள்ளும் சூதும் ஆகிய இந்த மூன்றிடத்தில்;
காலிங்கர்: (இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் என்னும்) இம்மூவகைப் பொருள் அனைத்தும்;
பரிமேலழகர்: கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்; [கவர்த்த - இரண்டுபட்ட]
பரிமேலழகர் குறிப்புரை: இருமனம் - ஒருவனோடு புணர்தலும் புணராமையும் ஒரு காலத்தேயுடைய மனம். கவறு - ஆகுபெயர். ஒத்த குற்றத்தவாகலின், கள்ளும் சூதும் உடன் கூறப்பட்டன. [கவறு - சூதாடு கருவி]

'கவர்த்த மனத்தினையுடைய மகளிரும் கள்ளும் சூதும் என இம்மூன்றும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பரத்தையும் கள்ளும் சூதாட்டமும் ஆம்', 'பொருள் மேல் விருப்பும் ஆள் மேல் அன்பின்மையும் என இருவேறு மனம் படைத்த விலைமகளிரும், கள்ளும், சூதும் ஆகிய மூன்றும்', 'இரண்டு மனமுள்ள விலைமாதரும், கள் குடியும், சூதாட்டமும்', 'வேறுபட்ட மனத்தினை உடைய விலை மகளிரும், கள்ளும், சூதும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் என்பது இப்பகுதியின் பொருள்.

திருநீக்கப் பட்டார் தொடர்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: திருமகளால் கடியப்பட்டாரது நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது நல்குரவாவார் சார்வரென்றது.
பரிப்பெருமாள்: திருமகளால் கடியப்பட்டாரது நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்குரவிலார் சாராரென்றது. பின்பு கள்ளும் கவறும் கூறுகின்றார் ஆதலின், அவை மூன்றும் ஒத்த இயல்பின என்று அறிதற்குப் பின் கூறப்பட்டது. இவை நான்கினானுன் அவரைச் சார்வார் (கெடுவர் என்பது) கூறப்பட்டது.
பரிதி: மூதேவியிருப்பாள் என்று பெரியவர் விரும்பார் என்றவாறு.
காலிங்கர்: தாமே தம்வயின் நீக்கல் ஆற்றாரது மனத் தொடர்ச்சி என்றவாறு. [காலிங்கர் உரைப்பகுதி சிதைந்துள்ளது]
காலிங்கர் குறிப்புரை: 'இம்மையே தவஞ்செ யார்கை இருநிதி யகற்றல் வேண்டி நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்துவிட்டான்' என்றார் பிறரும் என அறிக.
பரிமேலழகர்: திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு.
பரிமேலழகர் குறிப்புரை: வடநூலாரும் இக்கருத்தான் 'விதனம்' என உடன் கூறினார். வருகின்ற அதிகார முறைமையும் இதனான் அறிக. திணைவிராய் எண்ணியவழிப் பன்மைபற்றி முடிபு கோடலின் ஈண்டு அஃறிணையாற் கொண்டது. திரு நீக்கப் பட்டமை இக்குறிகளான் அறியப்படும் என்பதாம். இவை நான்கு பாட்டானும் சேர்வார் இழிந்தோர் என்பது கூறப்பட்டது. [குறிகளான் - அடையாளங்களால்; சேர்வார் - புணர்வார்]

'திருமகளால் துறக்கப்பட்டார்க்கு நட்பு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திருமகள் கைவிட்டவர்களுக்கு உறவாவன', 'திருமகளால் கைவிடப்பட்டார்க்கு உறவாகும்', 'செல்வ மகளாகிய இலக்குமியால் விலக்கிவிடப் பட்டவர்களுடைய உறவுகள்', 'செல்வத்தினின்றும் நீக்கப்பட்டவர்க்கு நட்பு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இருமனப் பெண்டிரும், கள்ளும், சூதும் செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு என்பது பாடலின் பொருள்.
'இருமனப் பெண்டிர்' குறிப்பது என்ன?

பொருட்பெண்டிர் சேர்க்கை, கள், சூது இவற்றால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் அறிவிழந்து செல்வத்தைத் தொலைப்பர்.

இருவகைப்பட்ட மனத்தினையுடைய பொதுமகளிரும், கள்ளும், சூதும் ஆகிய இம்மூன்றும் திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நட்பாகும்.
பொதுமகளிர் தம்மிடத்தில் காம இன்பம் பெற வந்தவனிடம் புணர்தல், புணராமை இரண்டையும் ஒரே நேரத்தில் செய்யவல்ல பிளவுபட்ட மனத்தையுடையவர். காமவெறி கொண்டவன் காதற்கழிவிடம் தேடி பொருட்பெண்டிரிடம் செல்கின்றான்; அவளது உடலுக்கு இவனது பொருள் பண்டமாற்றுதல் செய்யப்படுகிறது. அவள் அவன் தரும் பொருளுக்காகக் கூடிக்கொண்டிருக்கும் ஒரு மனமும் அவனிடம் அன்பில்லாததால் சேராமலிருக்கும் ஒரு மனமும் கொண்டவளாயிருக்கிறாள் அதாவது மெய்யுறு புணர்ச்சியுண்மையும், உள்ளப்புணர்ச்சியின்மையும் ஆகிய இருதன்மைப்பட்ட மனம் கொண்டவளாயிருக்கிறாள். பொதுமகளிர் பொருள் மட்டுமே பொருள் என்று எண்ணுபவர் ஆதலால் ஒருவன் எவ்வளவு பெரிய செல்வந்தனாயிருந்தாலும் கூடிய விரைவில் தன் உடைமைகள் அனைத்தையும் அவர்களிடம் இழந்து விடுவான்.
கள் அதை அருந்துபவனது மெய் மறக்கச் செய்து அறிவை மழுங்கடிக்கும் தன்மையுடையது. கள்ளுக்கு அடிமையானவன் மயக்கத்தில் களித்து நாளும் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால்,தம் பொருளையும் தன் உடல்நலத்தையும் நற்பெயரையும் இழப்பான்.
அதுபோலவே சூதாட்டமும் பொதுமகளிரின் தொடர்பு, கள்ளுண்ணல் போன்று தொடர்ந்து அவற்றின்மேல் விருப்பங்கொள்ளச் செய்வதால் பொருள் இழக்க இழக்க மேலும் போட்டியிடும் இயல்பால் எல்லாப் பொருளையும் இழந்து நிற்பான்.
இவ்வாறாக, பொருள்விழையும் பொதுமகள் நாட்டம், கள்ளுண்ணல், சூதாடல் இம்மூன்று வேட்கைகளும் செல்வம் நீங்குதற்கான தொடர்புகள் ஆகின்றன.

கள்ளுண்டல், சூதாடல் இவற்றுடன் பொருட்பெண்டிர் தொடர்பு எண்ணப்பட்டு, இம்மூன்றும் கடியப்படவேண்டிய பழக்கங்கள் என்றாகின்றன. சமுதாய நல்வாழ்விற்குத் தடைகளாக இருந்து வெறுத்தொதுக்கப் படவேண்டிய இவை அன்றைய சமுதாயத்தாலும் இலக்கியச் சிந்தனையாலும் தவறாகவே கருதப்படவில்லை. ஒருவகையில் அரவணைக்கப்பட்டன என்றுகூடச் சொல்லலாம். ஆனால் வள்ளுவர் இவற்றை அருவருப்போடு நோக்கினார். இம்மூன்றையும் விலக்கச் சொன்னார். அது வள்ளுவரை மாபெரும் சீர்திருத்தக்காரராக அறியச் செய்கிறது.

திரு என்ற சொல் பலபொருள் தரும். திரு என்பதற்கு 'கண்டாரால் விரும்பப்படும் தன்மை-நோக்கம்' என்று உரையாசிரியர் பேராசிரியர் பொருள் கூறினார். திரு என்ற சொல் குறளில் செல்வம், விரும்பப்படும் தன்மை, மேன்மை, சிறப்பு, பொலிவு, அழகு, தெய்வத்தன்மை, செல்வக் கடவுள் போன்ற பலபொருள்களில் பயிலப்பட்டுள்ளது.
இக்குறளில் திரு என்றதற்குச் செல்வம் என்றும் திருமகள் என்றும் பொருள் கொள்வர். திருமகள் என்றவர்கள் திருநீக்கப் பட்டார் என்ற தொடர்க்குச் செல்வத்துக்குக் கடவுளான 'திருமகளால் கைவிடப்பட்டவர்க்கு' எனப் பொருள் கொண்டனர்.
பொதுமகளிரைச் சேர்வாரையும், கள்ளுண்பாரையும், சூதாடுபவரையும் தம்வயப்படுத்தி அறிவிழக்கச் செய்தலால் மூன்றும் ஒருங்குவைத்து எண்ணப்பட்டன. திரு நீங்கும் எனக் குறித்தலின், ஒத்த தன்மையன எனக்கருதப்படும் இம்மூன்று தீய பழக்கங்கள் ஒருவனுடைய செல்வத்தைச் சிதறுண்டு போகச் செய்யும் தன்மையன என்று சொல்லப்படுகிறது.

'இருமனப் பெண்டிர்' குறிப்பது என்ன?

'இருமனப் பெண்டிர்' என்ற தொடர்க்குக் கவர்த்த மனத்தையுடைய பெண்டிர், பொதுமகள், கவர்த்த மனத்தினையுடைய மகளிர், பரபுருஷன் மேலே மனதாய் இருக்கிற பெண்டிர், இரண்டு நெஞ்சினையுடைய பொதுப் பெண்டிர், இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிர், உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் இருமனப் பெண்டிர், பரத்தை, பொருள் மேல் விருப்பும் ஆள் மேல் அன்பின்மையும் என இருவேறு மனம் படைத்த விலைமகளிர், இரண்டு மனமுள்ள விலைமாதர், ஒரே காலத்தில் இருமனப்பட ஒழுகும் மகளிர், கவர்பட்ட மனமுடைய பொதுமகளிர், வேறுபட்ட மனத்தினை உடைய விலை மகளிர், இரு வேறுபட்ட மனத்தையுடைய விலைமகளிர், பொருளின்மேல் ஆசையும், மனிதன்மேல் ஆசையின்மையுமாகிய இருவகை மனத்தைக்கொண்ட பொதுமகளிர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நாமக்கல் இராமலிங்கம் 'இருமனப் பெண்டிர்' என்பதற்கு இரு மனமுள்ள விலைமாதர் எனக்கூறி, ''இருமனம்' என்பது பணத்துக்காக ஒத்துக் கொள்வது ஒரு மனம்; பணம் கொடுத்தவன் குரூபியாகவோ, கிழவனாகவோ, நோயுள்ளவனாகவோ இருந்தால் அவனை அருவருப்பது இன்னொரு மனம்' என்று விளக்கினார். மற்றவர்கள் 'பொருள் மேலாசையும் மனிதன்மேல் ஆசையின்மையும் இருமனம்' என்றனர். சிலர் 'பொருள் கொடுத்தவரோடு புணருகிற காலத்திலேயே பொருள் கொடுக்க இருப்பவனை நினைத்துக் கொண்டிருக்கின்ற பெண்டிர்' என்று பொருள் உரைத்தனர்.
ஒத்த அன்பினராய், இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொண்டு, உள்ளும் புறம்பும் ஒத்து, தற்கொண்டானைப் பேணும் மகளிர் ஒருமனப் பெண்டிர் எனப்படுவார். அவர் மனம் திண்ணியராய்ப் பிறர் உதவியின்றித் தம்மைக் காத்துக்கொள்ளவல்லவர்.
'இருமனப் பெண்டிர்' யார்? பொதுமகளிர் இங்கு இருமனப் பெண்டிராகக் காட்டப்படுகிறார். தேடி வந்தாரைத் தம்வயப்படுத்தும் ஆற்றல் மிக்க இப்பெண்டிர் மனத்தில் பொருளாசையும், முகத்தில் மகிழ்ச்சியுங் காட்டக்கூடியவர். இங்ஙனம் மனம் வேறு செயல் வேறுபட்ட மகளிரை இருமனப் பெண்டிர் என்கிறார் வள்ளுவர். அத்தகையோரிடம் செல்பவனது செல்வம் விரைவில் நீங்கிவிடும் என எச்சரிக்கை செய்கிறார் அவர்.

இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வரைவில்மகளிர் இருமனம் கொண்ட வஞ்சகர்.

பொழிப்பு

செல்வத்தை இழக்கப்போகிறவர்களுக்கு உறவாவன பொருட்பெண்டிர் தொடர்பும் கள்ளும் சூதாட்டமும் ஆம்.