இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0919வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

(அதிகாரம்:வரைவில்மகளிர் குறள் எண்:919)

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.

மணக்குடவர் உரை: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது, உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம்.
இஃது இழிந்தார் சார்வரென்றது.

பரிமேலழகர் உரை: வரைவு இலா மாண் இழையார் மென்தோள் - உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்; புரை இலாப் பூரியர்கள் ஆழும் அளறு - அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம்.
(உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.)

இரா இளங்குமரனார் உரை: ஒழுக்க வரம்பு இல்லாத மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் தாமே சென்று அழுந்துகின்ற சேறு போல்வதாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.

பதவுரை: வரைவிலா-வரம்பின்றி; மாண்-சிறந்த, மாட்சிமையுடைய; இழையார்-அணி அணிந்தவர்; மென்-மென்மையான; தோள்-தோள்; புரையிலா-உயர்வு இல்லா; பூரியர்கள்-கீழ்மக்கள்; ஆழும்-புக்கு அழுந்தும்; அளறு-நரகம், நிரயம், சேறு.


வரைவிலா மாணிழையார் மென்தோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது;
பரிப்பெருமாள்: முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது;
பரிதி: வரைவில்லாதார் இன்பம்;
காலிங்கர்: வரைவின் மகளிராகிய பரத்தையரது மென்றோள் அவ்வுருவிற்று ஆயினும் அது அன்று;
பரிமேலழகர்: உயர்ந்தோர் இழிந்தோர் என்னாது, விலை கொடுப்பார் யாவரையும் முயங்கும் மகளிரது மெல்லிய தோள்கள்;

'முயக்கத்தில் வரைவில்லாத மாணிழையாரது மெல்லிய தோளாவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவரம்பில்லாத பரத்தையரின் தோளாகும்', 'உயர்ந்தோர், தாழ்ந்தோர், இளைஞர், முதியர் என வேறுபாடு கருதாமல் வரையறையின்றிப் பொருள் கொடுப்பார் எல்லாரையும் முயங்கும் சிறந்த அணிகளைப் பூண்ட பொதுமகளிரின் மெல்லிய தோள்', 'ஆபரணங்களால் தம்மை அலங்கரித்துக் கொண்டு வரைமுறை இல்லாமல் (பணங்கொடுத்த யாரையும் புணர்கின்ற) விலைமாதரின் மென்மையான தோள்களைத் தழுவுவதேயாம்', 'திருமணம் செய்துகொள்ளாத (வரையறையில்லாத) அழகிய அணிகலன்களை அணிந்துள்ள பெண்களின் மென்மையான தோள்கள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்க வரையறையில்லாத, அழகிய அணிகலன்களை அணிந்துள்ளவர்களின், மென்மையான தோள்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம். [அழுந்தும் - மூழ்கும்]
மணக்குடவர் குறிப்புரை: இஃது இழிந்தார் சார்வரென்றது.
பரிப்பெருமாள்: உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: கயவர் அழுந்துவது நரகின்கண் ஆதலின் நரகு எனப்பட்டது. இஃது இழிந்தார் சார்வர் என்றது.
பரிதி: அறிவில்லாதார் விழுகிற நரகம் என்றவாறு.
காலிங்கர்: மற்று என்னை எனின் அறிவு மேம்பாடு இல்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் கும்பிநரகம் என்றவாறு. [கும்பி நரகம் - ஒருவகை நரகம்]
காலிங்கர் குறிப்புரை: புரைவு-உயர்வு. பூரியர்கள் - கீழ்மக்கள்.
பரிமேலழகர்: அக்குற்றத்தையறியும் அறிவில்லாத கீழ்மக்கள் புக்கு அழுந்தும் நிரயம். [அக்குற்றத்தை - பொதுமகளிர் யாவரையும் புணரும் குற்றத்தை; நிரயம்-நரகம்]
பரிமேலழகர் குறிப்புரை: உயர்தற்கு ஏதுவாகலின், 'புரை' எனப்பட்டது. சாதியான் இழிந்தாரின் நீக்குவதற்குப் 'புரை இலாப் பூரியர்கள்' என்றும், அவர் ஆழ்தற்கு ஏதுவாகிய உருவம் முதலிய மூன்றும் என்பது தோன்ற 'மாணிழையார் மென்தோள்' என்றும், அவர்க்கு அளற்றினை இடையின்றிப் பயக்கும் என்பது தோன்ற உருவகமாக்கியும் கூறினார்.

'உயர்வில்லாத கயவர் அழுந்தும் நரகம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மிக இழிந்தவர் கிடக்கும் நரகம் எது?', 'உணர்ச்சி இல்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கும் நரகமாகும்', 'வேறு குற்றம் ஒன்றும் செய்யாமல் வெறும் பகுத்தறிவில்லாததற்காக, முட்டாள்கள் விழுந்து தவிக்கின்ற நரகம் எதுவென்றால்', 'அறிவில்லாத இழிந்தவர்கள் புக்கு வருந்தும் சேறாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயர்வில்லாத இழிந்தவர்கள் அழுந்தி வருந்தும் நரகம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்க வரையறையில்லாத, அழகிய அணிகலன்களை அணிந்துள்ளவர்களின், மென்மையான தோள்கள் உயர்வில்லாத இழிந்தவர்கள் ஆழும் அளறு என்பது பாடலின் பொருள்.
'ஆழும் அளறு' என்றால் என்ன?

கீழ்மக்களே பொருட்பெண்டிர் என்னும் சேற்றினுள் மூழ்குவர்.

உயர்வகை அணிகள் பூண்டுள்ள கட்டுபாடில்லாத மகளிரின் மெல்லியஉடல் உயர்வு சிறிதும் இல்லாத கீழ்மக்கள் அழுந்தும் நரகம் ஆகும்.
யார் பொருள் கொடுத்தாலும் தன் உடலை விற்கும் வாழ்வியல் கொண்ட பெண்டிரிடம் உறவு கொள்பவர்கள் கீழ்மக்களாகத் தான் இருப்பார்கள். வரைவில் மகளிரின் மெல்லிய தோள் இன்பம் தரலாம்; ஆனால் அது நரகக் குழியுமாகும் என்கிறது பாடல். நோய்த்துன்பத்தையும் வறுமைத் துயரையும் சமூகத்தில் கீழாகக் கருதப்படும் இழிவையும் அவர்கள் எதிர்கொள்வார்கள் என்பதால் நரகத் துன்பத்தை எய்துவர் எனவும் சொல்லப்பட்டது. பொதுமகளிரை நாடிச் செல்லக்கூடிய ஆண் துன்பத்தைத் தேடிச் செல்பவன் என்று ஆடவரின் ஒழுக்கக் கேடான வாழ்க்கையைக் கடிந்தும் அப்பெண்டிரின் உடல் நரகக்குழி போன்றது என்று உருவகப்படுத்தி இழித்தும் உரைக்கிறது இப்பாடல்.

புரை உயர்வாகும் எனத் தொல்காப்பிய நூற்பா கூறும். புரை என்பது தொல்காப்பியக் காலத்தில் உயர்ச்சியிலும், சங்க நூலாட்சியில் உயர்வு-குற்றம் ஆகிய இரண்டு பொருளிலும் வழங்குமாறு அறிக (தண்டபாணி தேசிகர்). 'புரையிலாப்பூரியார்' என்ற தொடர் உயர்வு சிறிதுமில்லாத கயவர் என்ற பொருள் தருவது. பெருமை இல்லாத இழிமக்கள் அழுக்கிலே அமிழ்ந்து உழல்பவர்கள்.

'ஆழும் அளறு' என்றால் என்ன?

'ஆழும் அளறு' என்ற தொடர்க்கு அழுந்தும் நரகம், விழுகிற நரகம், புக்கு அழுந்தும் கும்பிநரகம், புக்கு அழுந்தும் நிரயம், புகுந்து அழுந்தும் நரகமாம், ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும், புகுந்து அழுந்தி அழியும் நரகமாகும், கிடக்கும் நரகம், விழுந்து தவிக்கின்ற நரகம், அழுந்துகின்ற சேறு, புக்கு வருந்தும் சேறாகும், அழுந்திச் வருந்தும் நரகமாகும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஆழும் என்ற சொல் அழுந்தும் என்ற பொருள் தருவது. அளறு என்றதற்கு பெரும்பான்மையர் நரகம் எனப் பொருள் கூறியுள்ளனர். சிலர் சேறு என்னும் பொருள்பட புதைகுழி, சேறு நிறைந்த சகதிக் குழி, நரகச் சேறு என்றவாறு உரைத்தனர். இவ்வதிகாரத்து முந்தைய குறள் ஒன்றில் (913) பொருட்பெண்டிரைச் சேர்தல் பிணத்தைத் தழுவியது போலும் என்று அருவருப்புத் தோன்றுமாறு ஓர் உவமை கூறப்பட்டது. அளறு என்பதற்கு நரகம் என்று பொருள் கொண்டால் அது அளப்பரிய துன்பம் தருவது என்பதைக் குறிக்கும்; ஆனால் அதையே சேறு எனப் பொருள் கொள்ளும்போது இடக்கரடக்கலாக வரைவில் மகளிர் உடம்பு சகதிக் குழி என்றாகிறது. இச்சொல் இழிவை மிகுதியாக்கிக் காட்டுகிறது; நெறியல்லா நெறியில் துய்க்கும் இன்பம் அருவருப்பும் இழிந்ததும் என்பதைச் சொல்கிறது. எனவே இப்பொருளும் ஏற்கத்தக்கதாகவே உள்ளது.

'ஆழும் அளறு' என்றது அழுந்தும் நரகம் அல்லது மூழ்கும் சேறு எனப் பொருள்படும்.

ஒழுக்க வரையறையில்லாத, அழகிய அணிகலன்களை அணிந்துள்ளவர்களின், மென்மையான தோள்கள் அறிவில்லாத இழிந்தவர்கள் அழுந்தி வருந்தும் நரகம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வரைவில்மகளிர் உறவு புதைச்சேற்றில் மறைவு.

பொழிப்பு

ஒருவரம்பில்லாத. உயர்வகை அணிகள் பூண்ட பொதுமகளிரின் தோள் இழிவானவர்கள் மூழ்கும் புதைகுழியாம்.