இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0918



ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு

(அதிகாரம்:வரைவில்மகளிர் குறள் எண்:918)

பொழிப்பு (மு வரதராசன்): வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை.
இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.

பரிமேலழகர் உரை: மாய மகளிர் முயக்கு - உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப - அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர்.
(அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்.தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: ஆராய்ந்தறியும் அறிவுடையார் அல்லாதார்க்கு வஞ்சிக்கும் திறங்கொண்ட மகளிரது புணர்ச்சியைக் காமுறு தெய்வத்தின் (மோகினி) முயக்கம் என்பர் நூலோர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாய மகளிர் முயக்கு ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப.

பதவுரை: ஆயும்-ஆராய்ந்து அறியும்; அறிவினர்-அறிவுடையவர்; அல்லார்க்கு-அல்லாதவர்க்கு; அணங்கு-தெய்வ மகள்; என்ப-என்று சொல்லுவர்; மாய-வஞ்சித்தலை வல்ல; மகளிர்-மகளிர்; முயக்கு-தழுவல், புணர்ச்சி.


ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர்;
பரிப்பெருமாள்: யாதானும் ஒரு பொருளை உள்ளவாறு ஆராய்ந்து காணும் அறிவில்லாதார்க்கு வருத்தமாமென்று சொல்லுவர்;
பரிதி: அறிவாராய்ந்த குணத்தார் அல்லாதார்க்கு அவர்களைத் தெய்வமாகக் கொள்ளுவர் என்றவாறு.
காலிங்கர்: இவர் இப்படிப்பட்டவர் என்று ஆராயும் அறிவு இல்லாதார்க்குத் தெய்வத்தன்மை உடைத்து என்பர்,
பரிமேலழகர்: அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்கு தாக்கு என்று சொல்லுவர் நூலோர். [அணங்கு தாக்கு- காமத்தெய்வம் (மோகினி) பிடித்தல்]
பரிமேலழகர் குறிப்புரை: அணங்கு - காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள். தாக்கு -தீண்டல். இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார். அப்பெயர் அவாய் நிலையான் வந்தது.

'உள்ளவாறு ஆராய்ந்தறியும் அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாம்/தெய்வமாகக் கொள்ளுவர்/தெய்வத்தன்மை உடைத்து/அணங்கு தாக்கு என்று சொல்லுவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிந்தனையற்றவர்க்குத் தெய்வப்பேறு ஆகும்', 'பகுத்தறியும் தன்மை இல்லாதவர்களுக்கு (விட்டு விலக முடியாத) பேய்ப்பிடிப்பு போன்றது', 'அதனை ஆராய்ந்தறிந்து விலகும் அறிஞர் அல்லாதார்க்கு உயிரைக் கவர்கின்ற பேய்ப்பிடி போலாம்', 'ஆராய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்குத் துன்பமாகும் என்று கூறுவர் அறிவுடையார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சிந்தனையற்றவர்க்குக் காமத் தெய்வம் போன்று என்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

மாய மகளிர் முயக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாயத்தை வல்ல மகளிரது முயக்கத்தை. [மாயத்தை - மயக்கும் தன்மை, வஞ்சனை]
மணக்குடவர் குறிப்புரை: இஃது இவரை அறிவில்லாதவர் சேர்வரென்றது.
பரிப்பெருமாள்: மாயத்தை வல்ல மகளிர் முயக்கம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இவரை அறிவில்லாதவர் சார்வர் என்றது.
பரிதி: சூது பொருந்தி மாயமகளிர் முயக்கம் பொருந்தும் என்றவாறு.
காலிங்கர்: வஞ்சனையால் பொருள் வரையும் மாயப் பொதுமகளிர் முயக்கு என்றவாறு.
பரிமேலழகர்: உருவு சொல் செயல்களான் வஞ்சித்தலை வல்ல மகளிரது முயக்கத்தை;

'மாயத்தை வல்ல மகளிர் முயக்கம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாயம்வல்ல பரத்தையரின் தழுவல்', 'வஞ்சகமுள்ள விலை மாதருடைய காம உறவு', 'வஞ்சனை மிக்க பொதுமகளிரது சேர்க்கை', 'உருவத்தாலும், சொல்லாலும், செயலாலும் வஞ்சித்தலில் வல்ல மகளிரின் தழுவல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாயம் செய்வதில்வல்ல மகளிரது சேர்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாயம் செய்வதில்வல்ல மகளிரது சேர்க்கை சிந்தனையற்றவர்க்கு அணங்கென்ப என்பது பாடலின் பொருள்.
'அணங்கென்ப' குறிப்பது என்ன?

அறிவு கெட்டுப்போனவனே காமப்பேயிடம் மாட்டிக்கொள்வான்.

வஞ்சித்தலில் வல்ல பொதுமகளிரது சேர்க்கையை, அம்மாயத்தை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லார்க்கு, ‘அணங்கு பிடித்துக் கொண்டுவிட்டது’ என்று சொல்வார்கள்.
ஆயும் அறிவினார் அல்லார் என்றதற்கு ஆராய்ந்து தெளியும் அறிவினை உடையவரல்லாதவர் என்பது பொருள். பொதுமகளிரிடம் செல்லும் ஆடவர் இங்ஙனம் குறிக்கப்பெறுகிறார். மாய மகளிர் என்ற தொடர் வஞ்சனை நிறைந்த பெண்டிர் எனப் பொருள்படும். அதிகாரத் தலைப்பு நோக்கி இங்கு அது பொருட்பெண்டிரைச் சுட்டும்.
அவள் கண்டார் மயங்கும் பேரழகி; ஆடல்கலையில் வல்லவள்; நாடகத் துறையில் நற்பெயர் பெற்றவள். அவளுக்குக் கவலையற்ற இன்பப் பெருவாழ்வியலில் நாட்டம். அதனால் பொருளையே பொருளாகக் கொண்ட மனநிலையில் வாழ்ந்து வருகிறாள். பொதுமகளிராகிறாள். ஒரு குறிப்பிட்ட உயர்பொருள்நிலையில் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டபின் அதிலிருந்து கீழிறங்கி வர விருப்பமிராது. இதனால் தன்னைக் கூட வருபவரிடம் வஞ்சனையால் பெரும்பணம் பறிக்கிறாள்.
அவன் செல்வந்தன். ஆனால் நன்மை எது தீமை எது என்று ஆராயாமல் வாழ்வு நடத்துபவன். இவனுக்கு அந்த அழகிய நடிகையுடன் நட்பு உண்டாகிறது. அதைக் கிடைத்தற்கரிய நற்பேறாகக் கருதி அவள் காலடியிலேயே கிடக்கிறான். அவளது தழுவல் அழகுத் தெய்வத்தின் அரவணைப்பு போல் அவனுக்குத் தோன்றுகிறது. அவளது வஞ்ச மனத்தை அறியக் கூடாமல் தனது செல்வத்தை, அவளிடம் பெறும் இன்பத்துக்காக, இழக்கத் தொடங்குகிறான். அதை உணராமல் இருப்பதாலும் அவளிடமிருந்து விடுபட்டு வரமுடியாமல் தவிப்பதாலும் 'அவனுக்கு மோகினிப் பிசாசு பிடித்திருக்கிறது' என்கின்றனர் வெளியார்.

'அணங்கென்ப' குறிப்பது என்ன?

'அணங்கென்ப' என்ற தொடர்க்கு வருத்தமாமென்று சொல்லுவர், தெய்வமாகக் கொள்ளுவர், தெய்வத்தன்மை உடைத்து என்பர், அணங்குதாக்கு என்று சொல்லுவர் நூலோர், அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர், அவர்களை மயக்கும் அணங்காகி விடும் என்பர் பெரியோர், தெய்வப்பேறு ஆகும், காமுறு தெய்வத்தின் (மோகினி) முயக்கம் என்பர் நூலோர், காம உறவு (விட்டு விலக முடியாத) பேய்ப்பிடிப்பு போன்றது, உயிர் கொல்லியாகும் என்று அறிவுடையார் கூறுவர், உயிரைக் கவர்கின்ற பேய்ப்பிடி போலாம், துன்பமாகும் என்று கூறுவர் அறிவுடையார், 'மோகினி மயக்கு' என்று கூறுவர், காமினிப் பேய் தாக்கு என்பர் அறிஞர், ஒரு தெய்வப் பெண்ணின் இன்பமாகக் கருதப்படும் என்று நூலோர் கூறுவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அணங்கு என்றது தெய்வப்பெண், பேய்ப்பெண் இரண்டற்குப் பொதுச்சொல். இச்சொல்லுக்குத் தன் வடிவழகால் ஆடவரை வருத்தும் பெண் என்று பொருள் கூறுவர். 'அறிவுடையரல்லாதார்க்கு வருத்தமாம்' என்ற மணக்குடவர் உரை பொருட்பெண்டிர் சேர்க்கை இன்று இன்பமாய் இருக்கும்; பின்னர் வருத்தமாகும்' என்ற பொருளில் அமைந்தது. பரிதி அறிவாராயாதார் அழகியர் நட்பு கிடைத்தது அரிய பேறாகக் கருதுவர் என்ற பொருளில் 'அவர்களைத் தெய்வமாகக் கொள்ளுவர்' என்றார். காலிங்கரும் ஆராயும் அறிவு இல்லை என்பதால் 'தெய்வத்தன்மை உடைத்து என்பர்' என்றார். பரிமேலழகர் 'அவ்வஞ்சனை ஆய்ந்தறியும் அறிவுடையார் அல்லார்க்கு அணங்குதாக்கு என்று சொல்லுவர் நூலோர்' என்றார். மேலும் அவர் விரிவுரையில் 'அணங்கென்பது காமநெறியான் உயிர் கொள்ளும் தெய்வமகள்; தாக்கு என்பது அதன் தீண்டல்;. இவ்வுருவகத்தான் அம்முயக்கம் முன் இனிதுபோன்று பின் உயிர் கோடல் பெற்றாம். இது நூலோர் துணிவுஎன்பது தோன்ற அவர்மேல் வைத்துக் கூறினார்' என விளக்கினார். தேவநேயப்பாவாணர் 'முன் இன்பஞ் செய்வதுபோல் தோன்றிப் பின் வறுமையாலும் நோயாலும் வாழ்நாளைக் குறுக்கும் விலைமகளிர் முயக்கத்திற்கு, முன் இன்பமாகத் தோன்றிப் பின் உயிர் கவரும் காமினிப் பேயின் தழுவலை உவமங் கூறினார்' என்பார்.
அறிவிலாதவருக்கு, வரைவின் மகளிர் அணங்கென அதாவது தெய்வப்பெண்ணாக விளங்குதலின், அவர்களது மாய வலையில் சிக்கி உடல், பொருள் எல்லாவற்றையும் இழப்பர் என்பது இப்பாடல் கூறவரும் கருத்து.
அணங்குதாக்கு என்றதற்கு மோகினி பிடித்துக் கொண்டது அல்லது மோகினி மயக்கம் என நடைமுறை வழக்கில் சொல்வதுண்டு. அதுவே 'மோகினி பிடித்துக்கொண்டது என்று சொல்வர்' என்ற பொருளில் அணங்கென்ப எனச் சொல்லப்பட்டது.

அணங்கென்ப என்ற தொடர்க்கு இங்கு 'பேய்ப்பெண் என்று சொல்வர்' என்பது பொருள்.

மாயம் செய்வதில்வல்ல மகளிரது சேர்க்கை சிந்தனையற்றவர்க்குக் காமத் தெய்வம் போன்று என்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வரைவில்மகளிரிடம் பெறும் இன்பம் இறுதியில் துன்பத்திலேயே முடியும்.

பொழிப்பு

வஞ்சனையில்வல்ல மகளிரது தழுவல் ஆராய்ந்தறியும் அறிவுடையார் அல்லாதார்க்கு காமுறு தெய்வத்தின் பிடிப்பு எனச் சொல்லுவர்.