இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0917நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்

(அதிகாரம்:வரைவில்மகளிர் குறள் எண்:917)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக் கூடும் பொது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

மணக்குடவர் உரை: நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை.
இது நிறையில்லாதார் சேர்வரென்றது.

பரிமேலழகர் உரை: நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்.
(பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.)

சி இலக்குவனார் உரை: நெஞ்சினால் பிறவற்றை விரும்பி அவை காரணமாகக் கொடுப்பாரை உடலால் கூடுகின்றவர் தோள்களை ஒழுக்கத்தால் நிறைந்த நெஞ்சம் இல்லாதவர் சேர்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சில் பிறபேணிப் புணர்பவர் தோள் நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்.

பதவுரை: நிறை-நிறையுடைய, நெறியின்கண் நிறுத்துதல்; நெஞ்சம்-உள்ளம்; இல்லவர்-இல்லாதவர்; தோய்வர்-தீண்டுவர்; பிற-மற்றவற்றை; நெஞ்சில்-உள்ளத்தில்; பேணி-விரும்பி; புணர்பவர்-மெய்யாற் பொருந்துபவர்; தோள்-தோள்.


நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்:
மணக்குடவர் குறிப்புரை: இது நிறையில்லாதார் சேர்வரென்றது.
பரிப்பெருமாள்: நிறையுடைய நெஞ்சில்லாதார் தோய்வர்:
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நிறையில்லாதார் சேர்வரென்றது.
பரிதி: நிறைந்த அறிவில்லார் வரைவின் மகளிர் தோள் சேர்பவர்;
காலிங்கர்: தமது நற்குணம் நிறைவுடைய நெஞ்சம் இல்லாதார் முயங்குவர்;
பரிமேலழகர்: நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். [நிறை - காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்; திருந்திய - நெறிப்படுத்திய]
பரிமேலழகர் குறிப்புரை: பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார். [அதுவழி - புணர்ச்சியின்வழி]

'நிறையுடைய நெஞ்சில்லாதார்/நிறைந்த அறிவில்லார்/நற்குணம் நிறைவுடைய நெஞ்சம் இல்லாதார்/நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சுறுதியற்றவரே தீண்டுவர்', 'நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாத தீயவர்களே முயங்குவர்', 'மனதை அடக்கும் திறமையில்லாதவர்கள்தாம் தழுவுவார்கள்', 'மனத்தில் உறுதிப்பாடு இல்லாதவர்களே சேர்வர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாதவர்களே தீண்டுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பிறநெஞ்சில் பேணிப் புணர்பவர் தோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை.
பரிப்பெருமாள்: இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து அன்புற்றார் போலப் புணருமவரது தோளினை.
பரிதி: அது ஏதெனில் நம்மனத்துக்கு உவந்த நாயகரை மனதிலே வைத்து, இவரை மரப்பாவை போலப் புணர்வார் என்றவாறு. [உவந்த நாயகர் - மகிழ்ந்த தலைவர்; மரப்பாவை - பொம்மை]
காலிங்கர்: பிறவற்றை நெஞ்சின்கண் பேணிப் புணரும் பொதுமகளிர் தோளை என்றவாறு. [பேணி -விரும்பி]
காலிங்கர் குறிப்புரை: பிற என்ற பன்மை, பொன்னும் ஆடையும் பூவும் சாந்தும் முதலியன என அறிக.
பரிமேலழகர்: நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை;

'பிறவற்றை நெஞ்சின்கண் பேணிப் புணருமவரது தோளை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலவற்றைக் கருதிக்கூடும் பரத்தையரின் தோள்களை', 'மனத்தால் பிற பொருள்களை விரும்பி அவற்றைப் பெறுவதற்காக அன்புடையார் போல் நடித்து முயங்கும் பொது மகளிர் தோள்களை', '(கலவி இன்பத்துக்காக அல்லாமல்) வேறொன்றாகிய (பண ஆசைக்காகவே) புணருகின்ற விலைமாதருடைய தோள்களை', 'உள்ளத்தினால் பொருளை விரும்பி உடம்பினால் பிறரைப் புணரும் பெண்டிர் தோள்களை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளத்தினால் பிறவற்றை விரும்பி உடம்பினால் புணர்பவரது தோள்களை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிற நெஞ்சில் பேணி உடம்பினால் புணர்பவரது தோள்களை நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாதவர்களே தீண்டுவர் என்பது பாடலின் பொருள்.
'பிற நெஞ்சில் பேணி' குறிப்பது என்ன?

மனஉறுதியற்றோரே பொருட்பெண்டிரைக் கூடுவர்.

மனத்திண்மை இல்லாதவரே, உள்ளத்தில் பிறவற்றின்மேல் நாட்டம்கொண்டு உடம்பால் தழுவுபவர் தோளைச் சேர்வர்.
நிறை என்பதற்குக் காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம் என்பது பொருள். இச்சொல் பொதுவாக மனத்தைக் கற்பு நெறியின்கண் நிறுத்தும் மகளிர் குணத்தைக் குறிப்பது. இங்கு ஆடவருக்குண்டான குணத்தைச் சொல்ல ஆளப்படுகிறது. நிறைநெஞ்சம் என்றது மனத்தை யொழுக்கநெறிக்கண்ணே நிறுத்தும் நெஞ்சத்தைக் குறிக்கும். நிறைநெஞ்சம் இல்லவர் என்ற தொடர் மனத்தை ஒருநிலையில் நிற்கச் செய்ய இயலாதவர் எனப் பொருள்படும். வள்ளுவர் பாலியலில் உறுதியற்ற உள்ளம் கொண்டோரை நிறையற்ற மாக்கள் என இகழ்கிறார். அத்தகைய மாந்தரே பொருட்பெண்டிருடன் கூடி இன்பம் பெற விழைவர். அம்மகளிரோ மனத்தை வேறிடம் வைத்து உடலைத் தழுவுபவராவர் என அவர்களையும் இப்பாடல் இகழ்கிறது. எனவே அவர்களுடன் சேர்வதால் இன்பமும் பெறமுடியாததாகிறது என்பதும் பெறப்படுகிறது.

'பிற நெஞ்சில் பேணி' குறிப்பது என்ன?

'பிற நெஞ்சில் பேணி' என்ற தொடர்க்கு இன்பமில்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பிவைத்து, தம்மனத்துக்கு உவந்த நாயகரை மனதிலே வைத்து, பிறவற்றை நெஞ்சின்கண் பேணி (பிற என்ற பன்மை, பொன்னும் ஆடையும் பூவும் சாந்தும் முதலியன), நெஞ்சிலே பிறவற்றை ஆசைப்பட்டு, நெஞ்சினாற் பிறர் பொருளை ஆசைபட்டு, பிற நன்மைகளைக் கருத்திற்கொண்டு, பொருள் கருதி, பலவற்றைக் கருதி, மனத்தால் பிற பொருள்களை விரும்பி, வேறொன்றாகிய (பண ஆசைக்காகவே), இன்பம் அல்லாத பிறவற்றை நெஞ்சில் விரும்பிக் கொண்டு, உள்ளத்தினால் பொருளை விரும்பி, அன்பு நீங்கலாகப் பிறவற்றின்மேல் ஆசை வைத்து, அன்பைத் தவிர மற்றை வருமானங்களை நெஞ்சில் எண்ணிக் கொண்டு, காதலாலும் மதிப்பாலும் உள்ளத்திற் கூடாமல் பொருளையும் அதனாற் பெறுவனவற்றையுமே விரும்பி, நெஞ்சத்திலே தாம் விரும்பும் பிற பொருளை அடைவதற்காக என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பலரும் இன்பமல்லாத பிறவாகிய பொருளை நெஞ்சினாலே விரும்பி வைத்து, அன்பு தவிர்த்த பிறவற்றின்மேல் ஆசை வைத்து என பிற பொருள்களைக் கூறினர். பரிதி தம்மனத்துக்கு உவந்த நாயகரை மனதிலே வைத்து என வேறொருவரை உள்ளத்தில் நினைத்துப் புணர்வர் என வேறுபாடான உரை தந்தார். 'பொருள் கொடுத்தானை எண்ணாது கொடுப்பார் பலரையுங் கருதுதலும் பொருள் விருப்பேயாதலால் 'பிறர்' என்ற பாடமும் கொள்ளத்தகும்' என்பார் தண்டபாணி தேசிகர்.

'பிற நெஞ்சில் பேணி' என்பதற்குப் பிற பலவற்றை மனத்தால் கருதி என்பது பொருள்.

உள்ளத்தினால் பிறவற்றை விரும்பி உடம்பினால் புணர்பவரது தோள்களை நன்னெறியில் மனத்தை நிறுத்தும் திண்மை இல்லாதவர்களே தீண்டுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வரைவில்மகளிர் உடம்பால் மட்டுமே கூடுவர்.

பொழிப்பு

மனத்தால் பிறவற்றை விரும்பி உடலால் கூடும் மகளிரது தோள்களை நெஞ்சுறுதியற்றவரே தழுவுவர்.