பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
(அதிகாரம்:வரைவில்மகளிர்
குறள் எண்:915)
பொழிப்பு (மு வரதராசன்): இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார்.
|
மணக்குடவர் உரை:
மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார், எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்.
இது புத்திமான் சேரானென்றது.
பரிமேலழகர் உரை:
மதி நலத்தின் மாண்ட அறிவினர் - இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; பொது நலத்தார் புல்நலம் தோயார் - பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.
(மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்'என்றும்,அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார்.)
சி இலக்குவனார் உரை:
மதிக்கப்பட்ட நன்மையினால் மாட்சிமைப்பட்ட அறிவினையுடையவர் பொருள் கொடுப்போர்க்கெல்லாம் பொதுவாயிருக்கும் அழகினையுடையாரின் புல்லிய நலத்தை நுகரார்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
மதிநலத்தின் மாண்ட அறிவினவர் பொதுநலத்தார் புன்னலம் தோயார்.
பதவுரை: பொதுநலத்தார்-பொது இன்பப் பெண்டிர்; புன்னலம்-புல்லிய நலம், இழிந்த இன்பம்; தோயார்-தீண்டார்; மதி-அறிவு; நலத்தின்-நன்மையால்; மாண்ட-மாட்சிமைப்பட்ட; அறிவினவர்-அறிவுடையவர்கள்.
|
பொதுநலத்தார் புன்னலம் தோயார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்;
பரிப்பெருமாள்: எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்;
பரிதி: எல்லார்க்கும் பொதுவான இன்பம் கொள்ளார்;
காலிங்கர்: யாவர் மாட்டும் பொதுப்படவரும் பொருள் காரணமாக நடிக்கும் பொது நலத்தாராகிய பொதுமகளிர் காட்டும் புல்லிய நலத்தைப் பொருந்தார்;
பரிமேலழகர்: பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிரது புல்லிய நலத்தைத் தீண்டார்.
'பொதுவாகிய நலத்தினையுடையவரது புல்லிய நலத்தைச் சேரார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொது இன்பப் பெண்டிரைத் தழுவார்', 'பொருள் வழங்குவார்க்கெல்லாம் தம் இன்பத்தைப் பொதுவாக்கும் விலைமகளிரின் இழிநலத்தைப் பொருந்தார்', 'பொது மக்கள் (யாருக்கானாலும் விலைக்கு விற்கவென்றே தம்மை) அழகுபடுத்திக் கொள்ளும் விலைமாதருடைய அற்பசுகத்தில் அகப்பட்டுக் கொள்ள மாட்டார்கள்', 'எல்லார்க்கும் பொதுவாக இன்பந்தருவாரது சிற்றின்பத்தில் திளைக்கமாட்டார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொதுமகளிரின் இழிந்தஇன்பத்தைப் பொருந்தார் என்பது இப்பகுதியின் பொருள்.
மதிநலத்தின் மாண்ட அறிவி னவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார்.
மணக்குடவர் குறிப்புரை: இது புத்திமான் சேரானென்றது.
பரிப்பெருமாள்: மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: புத்திமான்கள் சேரார் என்றமையால், பொருள் கருதுவார் சேரார் என்றார், பொருளைக் கெடுப்பர் ஆதலின்.
பரிதி: மதியினால் பெரியவர்; பலர் எச்சில் என்று கழிப்பர் என்றவாறு. [கழிப்பர்- நீக்குவர்]
காலிங்கர்: யார் எனின், தம் மதித்தூய்மையால் பெரிதும் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: இயற்கையாகிய மதிநன்மையான் மாட்சிமைப்பட்ட செயற்கை அறிவினையுடையார்; [செயற்கையறிவு- கல்வி கேள்விகளால் ஆகிய அறிவு]
பரிமேலழகர் குறிப்புரை: மதி நன்மை - முற்பிறப்புக்களில் செய்த நல்வினைகளான் மனம் தெளிவு உடைத்தாதல். அதனான் அன்றிக் கல்வியறிவு மாட்சிமைப்படாமையின், 'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், அவ்வறிவுடையார்க்கு அவராசையது பொதுமையும் மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றலின், 'தோயார்'என்றும் கூறினார். [புன்மை -இழிந்ததன்மை]
'மதிநலத்தாலே மாட்சிமைப்பட்ட அறிவுடையார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இயற்கையறிவோடு நூலறிவும் உடையவர்', 'இயற்கையறிவால் மாட்சிமைப்பட்ட கல்வியறிவினையுடையவர்', 'புத்திக் கூர்மையினாற் சிறந்த அறிவாளிகள்', 'இயற்கையான நல்லறிவோடு மாட்சிமைப்பட்ட கல்வியும் உடையார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
சிந்தனைத் திறனுடன் கூடிய நல்லறிவுடையோர் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
சிந்தனைத் திறனுடன் கூடிய நல்லறிவுடையோர் பொதுநலத்தார் இழிந்தஇன்பத்தைப் பொருந்தார் என்பது பாடலின் பொருள்.
'பொதுநலத்தார்' யார்?
|
அறிவுள்ளவன் பொதுமகளிரிடம் செல்வதுபற்றி நினைக்கமாட்டான்.
தெளிவான சிந்தனைத் திறனுடன் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர், பொதுமகளிரின் இழிவான இன்பத்தில் திளைக்க மாட்டார்.
அறிவுச் சிறப்புடைய மாந்தர் பொருட்பெண்டிர் மாட்டுச் செல்ல விழையார். இப்பாடல் பொதுமகளிரின் இழிவான இன்பத்தில் தோய்பவனை அறிவின்மேல் வைத்துப் பழித்துக் கூறுகிறது. அறிவின் அடிப்படையிலேயே வள்ளுவர் வாழ்வியல் வகுத்தார் என்பது குறள் படிப்போர் நன்கு உணர்வர். கல்லா ஒட்பமும், கற்ற அறிவுக் கூறும் ஆகிய இரு நிலையும் ஒவ்வோரளவில் மாந்தர்க்கு உண்டு என்பதால், இங்கும் 'மதிநலத்தின் மாண்ட அறிவினர்' என்கிறார் அவர்.
அகத்தூய்மை, மற்றும் புறத்தூய்மை இவற்றில் உறுதியுடன் இருக்கும் அறிவுடையார் பொதுமகளிரிடம் பெறும் இன்பம் இழிவானது என்பதால் அவருடன் கூட்டுறவு கொள்ள விழையமாட்டார். கைப்பொருளும் மானமும் இழந்து, அறிவு சுருங்கி நடுத்தெருவில் நிற்கவேண்டுமா எனச் சிந்தித்துப் பொருள் பறிப்பாரான பாலியல் தொழிலாளர் இடம் சென்று இன்பம் பெறுவது பற்றி எண்ணமாட்டார்.
|
'பொதுநலத்தார்' யார்?
'பொதுநலத்தார்' என்றதற்கு எல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையவர், எல்லார்க்கும் பொதுவான இன்பம், யாவர் மாட்டும் பொதுப்படவரும் பொருள் காரணமாக நடிக்கும் பொது நலத்தாராகிய பொதுமகளிர், பொருள் கொடுப்பார்க்கெல்லாம் பொதுவாய ஆசையினையுடைய மகளிர், பொருள் கொடுக்கிறவர்களுக்கெல்லாம் பொதுவான வாசையினையுடைய பரஸ்திரீகள், பொருள் கொடுப்பாரெல்லார்க்கும் பொதுவாகிய நலத்தினையுடையார், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிர், பொருள் கொடுக்கும் அனைவருக்கும் தம் அழகைத் தரும் பொதுமகளிர், பொருள் கொடுப்போர் அனைவருக்கும் பொதுமையாகி நலன் அளிப்போர், பொது இன்பப் பெண்டிர், பொருள் வழங்குவார்க்கெல்லாம் தம் இன்பத்தைப் பொதுவாக்கும் விலைமகளிர், பொது மக்கள் (யாருக்கானாலும் விலைக்கு விற்கவென்றே தம்மை) அழகுபடுத்திக் கொள்ளும் விலைமாதர், (பொருள் தருவார்க் கெல்லாம்) இன்பத்தைப் பொதுவாக்கும் மகளிர், எல்லார்க்கும் பொதுவாக இன்பந்தருவார், பொருள் கொடுப்போர்க்கெல்லாம் பொதுவாயிருக்கும் அழகினையுடையார், பொதுவாக எல்லாருக்கும் இன்பம் தரும் பொதுமகளிர், பொதுப் பெண்டிர், பொருள் கொடுத்தாரெல்லாரும் பொதுவாக நுகர்தற்குரிய விலைமகளிர், பொருளுக்காகப் பலரோடு கூடி வாழும் பொதுமகள் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பொதுநலத்தார் என்பது தன் மெய்ந்நலத்தை பொதுமையில் வைத்துப் பொருள் கொடுப்போர் அனைவருக்கும் கொடுக்கும் பெண்டிரைக் குறிப்பதாகவே மாறுபாடில்லாமல் அனைவரும் உரைத்தனர். பரிதி 'அறிவுடையார் பொதுமகளிருடனான கூட்டுறவைப் பலர் எச்சில் என்று கழிப்பர்’ எனவும் பரிமேலழகர் 'அறிவுடையார்க்கு பொருட்பெண்டிரது பொதுமைத்தன்மையும் அவரது மெய்ந்நலத்தது புன்மையும் விளங்கித் தோன்றும் ஆதலின் அவரை நெருங்கார்' எனவும் விளக்கினர்.
'பொதுநலத்தார்' என்றது பொருட்பெண்டிரைச் சுட்டும் தொடராகும்.
|
சிந்தனைத் திறனுடன் கூடிய நல்லறிவுடையோர் பொதுமகளிரின் இழிந்தஇன்பத்தைப் பொருந்தார் என்பது இக்குறட்கருத்து.
வரைவில்மகளிர் மெய்ந்நலத்தை அறிவுடையார் தீண்டார்.
சிந்திக்கும் திறன் கொண்ட நல்லறிவாளர் பொதுஇன்பப் பெண்டிரைத் தழுவார்.
|