பொருட்பொருளார் புன்னலம் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்
(அதிகாரம்:வரைவில்மகளிர்
குறள் எண்:914)
பொழிப்பு (மு வரதராசன்): பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார்.
|
மணக்குடவர் உரை:
பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தைத் தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்.
பரிமேலழகர் உரை:
பொருட் பொருளார் புன்னலம் - இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை; அருட் பொருள் ஆயும் அறிவினவர் தோயார் - அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார்.
(அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
பொருளையே முழுநோக்காகக் கொண்டொழுகும் பொதுமகளிரின் இழிந்த இன்பத்தை அருளொடு பொருந்திய பொருளை ஆராயும் அறிவுடையார் விரும்பார்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பொருட்பொருளார் புன்னலம் அருட்பொருள் ஆயும் அறிவினவர் தோயார்.
பதவுரை: பொருள்-உடைமை; பொருளார்-பொருள் அதாவது அர்த்தம் என்று எண்ணுபவர்; புன்னலம்-இழிந்த இன்பம்; தோயார்-தீண்டார்; அருள்-அருள்; பொருள்-உடைமை; ஆயும்-ஆராய்ந்து செய்யும்; அறிவினவர்-அறிவுடையவர்கள்.
|
பொருட்பொருளார் புன்னலம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தை;
பரிப்பெருமாள்: பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தை;
பரிதி: பொருட் பொருளால் அற்பமான இன்பத்தை;
காலிங்கர்: ஆடவரது பெருமையும் சிறுமையும் விரும்பாது பொருள் பொருள் என்று விரும்பி இருப்பவர் புல்லிய நலத்தை; [புல்லிய நலம்-இழிந்த இன்பம்]
பரிமேலழகர்: இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது புல்லிய நலத்தை;
பரிமேலழகர் குறிப்புரை: அறம் முதலிய நான்கும் பொருள் எனப்படுதலின், 'பொருட் பொருள்' என விசேடித்தார். புன்மை - இழிந்தார்க்கே உரித்தாதல். [விசேடித்தல் -அடையோடு கூடி வருதல்; இழிந்தார் -ஒழுக்கத்தால் இழிந்தார்]
'பொருளைப் பொருளாகக் கொள்வாராது புல்லிய நலத்தை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பொருளை ஆராயும் பரத்தையரை', 'பொருட்செல்வத்தை மட்டும் கருதுகின்ற விலைமாதருடைய அற்ப சுகத்தை', 'பொருட் செல்வத்தையே கருதும் மகளிரது இழிந்த இன்பத்தில்', 'பொருளாகிய பொருளையே விரும்பும் விலை மகளிரின் புல்லிய நலத்தை (அற்ப இன்பத்தை)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பொருள் ஒன்றே அர்த்தமுள்ளது என்று எண்ணும் மகளிரது இழிந்த இன்பத்தை என்பது இப்பகுதியின் பொருள்.
தோயார் அருட்பொருள் ஆயும் அறிவினவர்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்.
பரிப்பெருமாள்: தோயார், அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அருள் உடையாராம் அறிவு என்றமையால் இவரை அறன் அறிவார் சாரார் என்றது; என்னை அறத்தைக் கெடுப்பர் ஆதலின்.
பரிதி: விரும்பார், பிறவா நெறியான இன்பம் விரும்புபவர் என்றவாறு.
காலிங்கர்: பொருந்தார்; யார் எனின் அருளைத் தமக்குப் பொருளாகத் தெரிந்து உணரும் அறிவினை உடையோர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே இவ்வஞ்ச மகளிர்க்குக் கொடுக்கும் பொருளை வறியோர்க்கு ஈதல் தமக்கு வாய்ப்பதே என்று ஆயும் அறிவினர் கருத்து என அறிக.
பரிமேலழகர்: அருளொடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் தீண்டார். [பொருளை - அறமாகிய பொருளை
பரிமேலழகர் குறிப்புரை: தாம் விரும்புகின்ற அறத்திற்கு அவர் மெய்ந்நலம் மறுதலையாகலின், 'தோயார்' என்பதாம். [அவர் மெய்ந்நலம் - பொது மகளிரது உடம்பைத் தழுவிப்பெறும் இன்பம்]
'அருளைப் பொருளாக ஆராயும் அறிவுடையார் தோயார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அருளை ஆராயும் அறிவினை யுடையவர் தழுவார்', 'அருட் செல்வமாகிய பேரின்பத்தை நாடுகின்றவர்கள், நினைக்கவும் மாட்டார்கள்', 'அருட்செல்வத்தை நாடும் அறிஞர், படியமாட்டார்', 'அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவினையுடையார் நுகரார் (அனுபவிக்கமாட்டார்)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அருளை ஆராயும் அறிவினையுடையவர் துய்க்கமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பொருட்பொருளார் இழிந்த இன்பத்தை அருளை ஆராயும் அறிவினையுடையவர் துய்க்கமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'பொருட்பொருளார்' யார்?
|
பொருள் பொருள் என்று அலையும் பொதுமகளிரை அருள் நாடுவோர் தொடமாட்டார்.
பொருட்செல்வத்தையே பொருளாகக் கருதும் பொதுமகளிரின் புன்மையை, அருட்செல்வத்தை நாடிநிற்போர் விரும்பார்.
பொருள் ஒன்றே பொருளுள்ளது அதாவது அர்த்தமுள்ளது என்று எண்ணுபவர் எனப் பொருட்பெண்டிர் இங்கு குறிக்கப்படுகிறார்.
பொருட்செல்வம் ஒன்றையே, பொருளாகக் கருதிடும் பொதுமகளிர் தரும் இன்பத்தை அருட்செல்வத்தை அடையும் வழியே ஆராயும் அறிவுடையவர் தீண்டமாட்டார், அது பொருள் இழப்பு மட்டுமன்றி அருளுக்கும் அழிவு தருவது என்பதால்.
பொது நலத்தாரோடு தோய்வதில் இன்பம் உண்டாகலாம்தான். ஆனால் அது புன்மையான இன்பம். அதாவது இழிவான இன்பம். அந்த இழிவை அருள் வாழ்வு நடத்த விரும்பும் அறிவினர் தொட விரும்பமாட்டார்கள் என ஆடவருக்கு அறிவுரை கூறுவதுபோல அமைந்தது இப்பாடல்.
தெ பொ மீனாட்சிசுந்தரம் இக்குறட்கருத்தை வேறொரு கோணத்தில் பார்க்கிறார். இக்குறளிலுள்ள 'அருட் பொருளாயும் அறிவினர்' என்பதில் ஓர் குறிப்பு உள்ளதெனக் கூறி, 'புல்லிய உயிர்களிடத்தும் அருள் பாராட்டி நிற்பார், ஆறறிவுடைய மக்களில் ஒருத்தியை, வெறும் காதற்கழிவிடம், என எண்ணி, அவளை, நாண் முதலிய உயிர்ப்பண்புகள் இல்லாத அறிவிலாப் பொருள்போல, நடத்துவது அழகோ?' என வள்ளுவர் வினவுவதாகத் தெரிகிறது' என்கிறார்.
மேலும் 'பரத்தரையரைப் பழியாது பரத்தையரைக் கெடுக்கும் ஆடவரைப் பழிப்பது போலும்!
'யானோ கெடுத்தேன்! பொருள் வேண்டிப் புன்னலம் விற்றார்' என்று விடை கூறினால், அவர்கள் வறுமையாலோ, அறியாமையாலோ பொருளை நாடி நின்றால், அதனைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களை அடிமையாக்குவது அருளன்று என்பர் போலும்.
தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில் (புலால் மறுத்தல் 256 பொருள்: பேதைமை காரணமாக அல்லது ஊன் தின்கை காரணமாக உலகங் கொல்லாதாயின், பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.) என்று கூறுகின்றமை போலப் பரத்தையரை வேண்டுவார், இல்லாக்கால், பரத்தையர் இலர் என்றும் கூறுகின்றனர் போலும்!
அருளாளர்கள், தம்மிடம் பொருள் இருந்தால், அவற்றைப் பரத்தையர்க்கும், புன்னலங்கருதித் தாராது, அருள் கருதி ஈந்து, அவர்களை உயர் நிலையில் வைத்தல் வேண்டும் என்பதும் அவர் குறிப்புப் போலும்'
எனவும் வள்ளுவர் உள்ளத்தை உய்த்துணர்பவர்போல் விளக்குவார் தெ பொ மீ.
|
'பொருட்பொருளார்' யார்?
'பொருட்பொருளார்' என்றதற்குப் பொருளைப் பொருளாகக் கொள்வார், பொருட் பொருளால், ஆடவரது பெருமையும் சிறுமையும் விரும்பாது பொருள் பொருள் என்று விரும்பி இருப்பவர், இன்பமாகிய பொருளை இகழ்ந்து பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிர், தனக்கின்பமானவர்களை இகழ்ந்து பொருள் கொடுப்பாரையே விரும்பும் பரஸ்தீரீகள், இன்பப்பொருளை யிகழ்ந்து பொருளையே பொருளாக விரும்பும் பொதுமகளிர், பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிர், தம்மை விரும்புவரையல்லாது அவர்தரும் பொருளையே மதிக்கும் பொதுமகளிர், இன்பப் பொருளை இகழ்ந்து பொருளையே பொருளாக எண்ணும் மகளிர், பொருளை ஆராயும் பரத்தையர், பொருளையே முழுநோக்காகக் கொண்டொழுகும் பொதுமகளிர், பொருட்செல்வத்தை மட்டும் கருதுகின்ற விலைமாதர், பொருளையே பொருட்டாகக் கொள்ளும் மகளிர், பொருட் செல்வத்தையே கருதும் மகளிர், பொருளாகிய பொருளையே விரும்பும் விலை மகளிர், பொருட்செல்வத்தையே பொருளாகக் கருதும் பொதுமகளிர், பொருளையே போற்றி மதிக்கும் பரத்தையர், பொருளையே இலட்சியமாகக் கருதும் இழிகுணத்தையுடைய விலைமகள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இத்தொடர் பொருளையே பெரிதாக எண்ணும் பொதுமகளிரைக் குறிப்பது. இவருக்குக் குறிக்கோள் பொருள் ஈட்டுவது; இம்மகளிரை நாடிவருவோரது குறிக்கோள் இன்பம் பெறுவது. முன்னவர்க்கு பொருளே பொருள். பின்னவர்க்கு இன்பமே பொருள். அதாவது பொருள் இழந்து இன்பம் பெறும் ஆண் இன்பத்தையே பொருளாகக் கருதுகிறான். பொதுமகள் பொருளையே பொருளாக மதிக்கிறாள்.
இத்தொடர்க்கு விளக்கம் அளிக்கும் பரிமேலழகர் 'இன்பமாகிய பொருளையிழந்து பொருளாகிய பொருளை விரும்பும் மகளிர்' என்றார். தண்டபாணி தேசிகர் இதைப் 'பிறன் கைப்பொருள் பெறுதலும், கற்பு மறந்து பிறனைக்கலத்தலும் குற்றமாயினும் அதனை மறந்து பிறனைக்கலப்பாரும் பெறுவது இன்பம் ஆதலின் அதனையும் பொருளென உடன் மதியாது பொருளையே மதிப்பார் என்னுங் கருத்தினது' என்பார்.
'பொருட்பொருளார்' என்றது வரைவில்மகளிர் குறித்த சொல்.
|
பொருளாகிய பொருளையே விரும்பும் மகளிரது இழிந்த இன்பத்தை அருளை ஆராயும் அறிவினையுடையவர் துய்க்கமாட்டார் என்பது இக்குறட்கருத்து.
பணம் பணம் என்று ஆலாய்ப் பறப்பவர் வரைவில்மகளிர்.
பொருளை ஆராயும் மகளிரின் இழிந்த இன்பத்தை அருளொடு பொருந்திய பொருளை ஆராயும் அறிவுடையார் துய்க்க விரும்பார்.
|