இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0912பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்புஇல் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்

(அதிகாரம்:வரைவில்மகளிர் குறள் எண்:912)

பொழிப்பு (மு வரதராசன்): கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விடவேண்டும்.

மணக்குடவர் உரை: தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது இன்பத்தை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக.
இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாம் தொகுத்துக் கூறினார்.

பரிமேலழகர் உரை: பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர் - ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது; நயன் தூக்கி நள்ளாவிடல் - ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக.
(பண்பு, சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும் அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பதுதோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: தனக்கு வரும் பொருளினை ஆய்ந்து பார்த்து அதற்கேற்ப இனியசொல் சொல்லும் பெண்டிரது நடக்கையைத் தெரிந்து, அவரோடு பொருந்தாது ஒழிக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்புஇல் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல்.

பதவுரை: பயன்-பயன், ஆதாயம்; தூக்கி-அளந்தறிந்து; பண்பு-நெறிப்பட, குணமாக; உரைக்கும்-சொல்லும்; பண்புஇல்--குணம் இல்லாத; மகளிர்-பெண்; நயன்-நன்மை, நடக்கை; தூக்கி-ஆராய்ந்து; நள்ளா-பொருந்தாமல், விரும்பாமல்; விடல்-விட்டொழிக, விடுக.


பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்புஇல் மகளிர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது;
பரிப்பெருமாள்: தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமில்லாத மகளிரது இன்பத்தை;
பரிதி: பொருளாசை கண்டு பண்பு சொல்லும் பண்பில்லாத மடவார்;
காலிங்கர் ('நள்ளார்' என்பது பாடம்): தாம் கருதிய பொருள் தமக்குப் பயன்படும் உபாயமே சீர்தூக்கிப் புறமே நெறிப்பட உரைக்கும் நெறியில் மகளிர்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு உள்ள பொருளை அளந்தறிந்து, அஃது எய்தும் துணையும் தம் பண்புடைமை சொல்லும் பண்பில்லாத மகளிரது;

'தமக்கு உளதாகும் பயனை நோக்கிக் குணமாகக்கூறும் குணமில்லாத மகளிரது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பயனளவு பார்த்து இனிது பேசும் பரத்தையரின்', 'ஒருவர்க்குள்ள பொருளை அளந்து பார்த்து அதனைப் பெற இனிய பண்புடையராகப் பேசும் பண்பற்ற விலைமகளிரின்', 'அடையக்கூடிய பொருட்பயனின் அளவுக்குத் தக்கபடி ஆசைப் பேச்சுகளைப் பேசுகிற உண்மையில்லாத வேசியர்களுடைய', 'அடையும் பயனை அளந்து அறிந்து அதனை அடையும் வரையில், நற்குண மொழிகளைப் பேசும் நற்குணமில்லாத பெண்களை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தமக்கு உளதாகும் பயனளவு நோக்கி இனிய பண்புடையராகப் பேசும் நற்குணமில்லாத மகளிரது என்பது இப்பகுதியின் பொருள்.

நயன்தூக்கி நள்ளா விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்பத்தை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாம் தொகுத்துக் கூறினார்.
பரிப்பெருமாள்: இன்பத்தை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனாலே கணிகையர் இலக்கண மெல்லாம் தொகுத்துக் கூறினார். இது, கணிகையர் கலவியைத் தவிர்க என்றது.
பரிதி: நயம், 'இத்தனையல்லோ' என்று கண்டு கைவிடுக என்றவாறு.
காலிங்கர் ('நள்ளார்' என்பது பாடம்): செய்யும் நசையை இது வெறும் பொய் நசை என்று சீர்தூக்கி, மற்று இவரோடு நட்புச் செய்யாது ஒழிக என்றவாறு. [நசை- விருப்பம்]
பரிமேலழகர்: ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து அவரைப் பொருந்தாது விடுக.
பரிமேலழகர் குறிப்புரை: பண்பு, சொல்லின்கண் அல்லது தங்கண் கிடவாமை தோன்றப் 'பண்பு இல் மகளிர்' என்றும், அவர்க்கு அது சாதி தருமமாதல் நூலானேயன்றி அவர் செயலானும் அறிந்தது என்பார், 'நயன் தூக்கி' என்றும் அவ்வறிவு அவரை விடுவதற்கு உபாயம் என்பதுதோன்றப் பின் 'நள்ளாவிடல்' என்றும் கூறினார்.

'இன்பத்தை/நயம்/நசையை/ஒழுகலாற்றினை யாராய்ந்து பார்த்து அவரைச் சாராதொழிக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வஞ்சனையை அறிந்து ஒதுங்குக', 'நன்மையை ஆராய்ந்து பார்த்துத் தொடர்பு கொள்ளாது விடுக', 'வெகு சாமர்த்தியமான நடத்தையின் அந்தரங்கத்தை அறிந்து, அவர்களுடன் உறவு கொண்டுவிடாமல் விலக வேண்டும்', 'நன்மையை ஆராய்ந்து பொருந்தாது விலக்குக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நடக்கையைத் தெரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தமக்கு உளதாகும் பயனளவு நோக்கி இனிய பண்புடையராகப் பேசும் நற்குணமில்லாத மகளிரது நடக்கையைத் தெரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்க என்பது பாடலின் பொருள்.
'நயன்தூக்கி' என்றால் என்ன?

வஞ்சகப் பெண்டிரின் உள்நோக்கு உணர்ந்து விலகிக்கொள்.

தமக்குக் கிடைக்கக்கூடிய பயனை எடைபோட்டுப் பார்த்து அதற்குத்தக பண்புடையராய்ப் பேசும் குணமற்ற பெண்ணின் நோக்கத்தை அறிந்து அவர்களை விரும்பாதிருத்தல் வேண்டும்.
தம்மை அணுகி ஆசை ஆசையாய்ப் பேசும் குணமில்லாப் பெண்டிரின் நோக்கத்தை அறிந்து ஒதுங்கிச் செல்லச் சொல்கிறது இப்பாடல். வரைவில் மகளிர் ஒருவருடைய பொருள் மதிப்பு அறிந்து அதைப் பெறுகின்ற வரைக்கும் தான் பண்பாளராகத் தோன்றிப் பேசுவர். அவர் நோக்கமெல்லாம் பொருள் பறிப்பதுதான். எனவே அது பொருள்நோக்கிய உறவு என்பதை உணர்ந்து அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளாமல் விட்டுவிடவேண்டும்.
இங்கு பண்பில் மகளிர் என்றது பொருட்பெண்டிர் குறித்தது. அவரது பண்பு சொல்லளவில் மட்டும்தான். மற்றபடி அவர் பண்பிலாதவரே என்பது சொல்லப்பட்டது.

'நயன்தூக்கி' என்றால் என்ன?

'நயன்தூக்கி' என்றதற்கு இன்பத்தை யாராய்ந்து, 'இத்தனையல்லோ' என்று கண்டு, இது வெறும் பொய் நசை என்று சீர்தூக்கி, ஒழுகலாற்றினை ஆராய்ந்தறிந்து, செய்கைகளை ஆராய்ந்தறிந்து, பெறும் இன்பம் தீதாதலை ஆராய்ந்தறிந்து, நயத்தினைச் சீர்தூக்கிப் பார்த்து, வஞ்சனையை அறிந்து, வெகு சாமர்த்தியமான நடத்தையின் அந்தரங்கத்தை அறிந்து, (போலி மயக்கை) நன்றாக ஆராய்ந்து, நடக்கையைத் தெரிந்து, நன்மையை ஆராய்ந்து, அன்பினை ஆராய்ந்து பார்த்து, இன்பத்தை அளந்து பார்த்து, ஒழுக்க வகையை ஆராய்ந்தறிந்து, நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

பெண் ஒருத்தியுடன் தொடர்பு உண்டாக ஒருவனுக்கு வாய்ப்பு உண்டாகிறது. அவள் அவன்மீது விருப்பம் உள்ளவள் போல பண்பான சொற்களைப் பேசுகிறாள். அச்சொற்களைக் கேட்டு ஏமாந்து போக வேண்டாம்; அவள் நடக்கை எத்தன்மையது என்பதை ஆராய்ந்தறிந்து கொண்டு நட்பைத் தொடர்க என அறிவுறுத்தப்படுகிறது - பின்னர் அவள் வரைவில் மகளிர் எனத் தெரியவரலாம் என்பதால்.

'நயன்தூக்கி' என்ற தொடர் நடக்கையைத் தெரிந்து என்று இங்கு பொருள்படும்.

தமக்கு உளதாகும் பயனளவு நோக்கி இனிய பண்புடையராகப் பேசும் நற்குணமில்லாத மகளிரது நடக்கையைத் தெரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்க என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வரைவில்மகளிர் சொல்லளவில் மட்டுமே பண்புள்ளவராயிருப்பர்.

பொழிப்பு

தமக்கு உளதாகும் பயனளவு நோக்கி இனிமையாகப் பேசும் பண்பற்ற மகளிரின் நடக்கையைத் தெரிந்துகொண்டு தொடர்பு கொள்ளாது விடுக.