அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்
(அதிகாரம்:வரைவில்மகளிர்
குறள் எண்:911)
பொழிப்பு (மு வரதராசன்): அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல் ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
|
மணக்குடவர் உரை:
அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார் சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
பரிமேலழகர் உரை:
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய் தொடியார் - ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; இன்சொல் இழுக்குத் தரும் - அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.
(பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது. ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம்.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
அன்பினாலே ஒருவனை விரும்பாது, பொருள் பற்றி அவனை விரும்பும் நல்லணி பூண்ட மகளிரது இனிய சொல் தீமையைப் பயக்கும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும்.
பதவுரை: அன்பின்-அன்பினால்; விழையார்-விரும்பாதவர்; பொருள்-பொருள், உடைமை; விழையும்-விரும்புகின்ற; ஆய்-ஆராய்ந்த; தொடியார்-வளையலையணிந்த மாதர்; இன்-இனிய; சொல்-மொழி; இழுக்கு-கேடு, துன்பம்; தரும்-பயக்கும்.
|
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார்;
பரிப்பெருமாள்: அன்பால் கலத்தலின்றிப் பொருளால் கலக்கும் ஆய்தொடியார்;
பரிதி: அன்பினாலே விரும்பார் பொருளாசையால் விரும்புமவர் இன்பம்;
காலிங்கர்: ஆடவரை எஞ்ஞான்றும் நெஞ்சத்து அன்பினான் விரும்பாராய்ப் பொருளையே விரும்பிச் செல்லும் ஆய்தொடிப் பரத்தையர்;
பரிமேலழகர்: ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்; [விழையாது - விரும்பாமல்]
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் என்புழி 'இன்' விகாரத்தால் தொக்கது.
'ஒருவனை அன்புபற்றி விழையாது பொருள்பற்றி விழையும் மகளிர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அன்பின்றிப் பொருளை விரும்பும் பரத்தையரின்', 'ஒருவரை அன்பினால் விரும்பாமல் பொருள் பெறும் நோக்கத்தால் விரும்பும் பொது மகளிர்', 'அன்பு காரணமாக ஆசை கொள்ளாமல் பணம் காரணமாகப் பாசாங்கு ஆசை காட்டும் விலைமாதர்களுடைய', 'அன்பு காரணமாய் விரும்பாதவராய்ப் பொருள் காரணமாக விரும்பும் அழகிய வளையலை அணிந்த பெண்களின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
அன்பினால் விரும்பாமல் பொருளுக்காக விரும்பும் நல்லணி பூண்ட மகளிர் என்பது இப்பகுதியின் பொருள்.
இன்சொல் இழுக்குத் தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
பரிப்பெருமாள்: சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கணிகையர் கூட்டத்தினால் வரும் குற்றம் என்னை என்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: நல்லோர்முன் இழுக்குண்டாம் என்றவாறு.
காலிங்கர்: சொல்லிக்காட்டும் இன்சொல்லும் இழுக்கத்தைத் தரும் இத்துணை அல்லது விழுப்பம் தராதாம் ஆராயின் என்றவாறு.
பரிமேலழகர்: அது கையுறும் துணையும் தாம் அன்பு பற்றி விழைந்தாராகச் சொல்லும் இனிய சொல் அவனுக்குப் பின் இன்னாமையைப் பயக்கும்.[இன்னாமை - துன்பம்]
பரிமேலழகர் குறிப்புரை: ஆய்ந்த தொடியினையுடையார் என்றதனாலும், இனிய சொல் என்றதனாலும், அவர் கருவி கூறப்பட்டது. அச்சொல் அப்பொழுதைக்கு இனிதுபோன்று பின் வறுமை பயத்தலின் அது கொள்ளற்க என்பதாம். [கருவி - ஆய்தொடியும் இன்சொல்லும் பொது மகளிர்க்கு மயக்கும் சாதனம் (கருவி) என்று கூறப்பட்டன]
'சொல்லும் இன்சொல், பின்பு கேட்டினைத் தரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நயமான சொல் துன்பம் தரும்', 'கொஞ்சுகின்ற இனிய சொல் துன்பந் தரும்', 'பேச்சு இனிமையாக இருந்தாலும் அதனால் பின்னால் துன்பமே வரும்', 'இனிய சொற்கள் துன்பத்தைத் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
இனிய சொற்கள் கேட்டினைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
அன்பினால் விரும்பாமல் பொருளுக்காக விரும்பும் நல்லணி பூண்ட மகளிர் இன்சொல் இழுக்குத் தரும் என்பது பாடலின் பொருள்.
இன்சொல் எப்படி இழுக்குத் தரும்?
|
இன்று அவளது சொல் இனிக்கும்; நாளை உனது வாழ்வே கசந்துபோகும்.
அன்பு பற்றி விரும்பாமல் பொருளுக்காக விரும்பும் பெண்ணின் இன்சொல் இழுக்குத் தரும்.
அப்பெண் தேர்ந்தெடுத்த நல்லணிகள் பூண்டு தோற்றம் தருகிறாள். அவளது கொஞ்சுமொழி உள்ளத்திற்கு இதமாய் உள்ளது; அது அவனை மயக்குகிறது. அதன்பின் அவளுடன் கூடுதலும் இன்பமாய் இருக்கிறது. ஆனால் அவ்வினிய சொற்கள் எல்லாம் அவன் கொடுக்கும் பொருளுக்காகத்தான். அன்பினால் அல்ல. அவள் பொதுமகள். அவன் தரும் பணத்திற்காகத் மயக்கு மொழி பேசுபவள் அவனது செல்வத்தை உறிஞ்சிவிட்டு பின் உதறித் தள்ளிவிடுவாள். அதன்பின் அவன் கேடுற்று தெருவில் அலையவேண்டியதுதான்.
அவன் கொடுக்கும் பொருளுக்காகத்தான் அவள் தன் பெண்மையை அவனுக்குத் தருகிறாள். அது அவனுக்கும் தெரியுமானாலும் காம விருப்பத்தால் அறிவுத் தெளிவு உண்டாகாமல் திரும்பத் திரும்ப அவளை நாடிச் செல்கிறான்.
வரைவின் மகளிர் தம்மை விரும்பி வரும் ஆடவரைச் சேர்ந்து அவரிடமிருந்து பொருள் பெற்று அதனால் அவன் கேடுறுவதற்குக் காரணமாகின்றனர்.
ஆய் தொடியார் என்ற தொடர் இங்கு பொருட்பெண்டிரைக் குறிப்பதற்காக வந்தது. ஆடவருள்ளத்தை ஈர்க்க வேண்டுமென்பற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட புறவணிகளைப் பூண்டு தோன்றுவர் என்பது உணர்த்தப்பட்டது. ஆடவரை மயக்கும் கருவிகளாக ஆய்தொடியையும் மயக்குமொழியையும் அப்பெண்டிர் பயன்படுத்துவர்.
|
இன்சொல் எப்படி இழுக்குத் தரும்?
கணிகையரின் இன்சொல் எவ்விதம் அவனுக்கு இழுக்கு உண்டாக்கும்? வரைவில் மகளிரிடம் செல்பவன் அவர்களது இன்சொல்லில் மயங்கி அவர்களைத் தழுவுவான். அம்மகளிர் பொருளுக்காகக் கூடுபவர் ஆதலால் அவரிடம் அன்பு இல்லை. தமது அன்பின்மையை மறைக்க இன்சொல் பேசுகின்றனர். அவளது இன்சொல் கேட்பதற்காக அவளிடம் செல்கிறான்.
இப்பொழுது இன்சொல் பேசிப்பேசி மயக்கி இழுத்து வைத்துக் கொள்கிறாள். அவனிடமுள்ள செல்வத்தைப் பிடுங்கும்வரை மயக்கும் பேச்சு வரும். பொருள் தீர்ந்தபின் அந்த இன்சொல் இருக்காது.
கொஞ்சுமொழியில் மயங்கி அவளிடம் வழக்கமாகச் செல்வதால் தன் பொதுக்கடமையை மறக்கிறான். பொருள் நீங்குகிறது. வறுமை உண்டாகிறது. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்படுகிறது. உடல் நோயும் தொற்றலாம். ஊரார் இழிவாகப் பேசுவர்.
அன்பு கனிந்தவராக அவள் கூறும்சொல் கேட்கச் செல்வது இவைபோன்ற கேடுகள் அவனுக்கு உண்டாக ஏதுவாகின்றது. அத்தகையோர் சொல்லில் மயங்காமை வேண்டும் என இக்குறள் அறிவுறுத்துகிறது.
|
அன்பினால் விரும்பாமல் பொருளுக்காக விரும்பும் நல்லணி பூண்ட மகளிர் இனிய சொற்கள் கேட்டினைத் தரும் என்பது இக்குறட்கருத்து.
வரைவில்மகளிர் அன்பில்லாதவர்கள்.
அன்பில்லாமல் பொருளையே விரும்பும் அழகிய அணி பூண்ட மகளிரின் இனிய சொற்கள் துன்பம் தரும்.
|