இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0858இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிகலூக்கின் ஊக்குமாம் கேடு

(அதிகாரம்:இகல் குறள் எண்:858)

பொழிப்பு (மு வரதராசன்): இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும்.

மணக்குடவர் உரை: மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும்.
இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் - தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்; அதனை மிகல் ஊக்கின் கேடு ஊக்குமாம் - அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
(எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார். 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.)

இரா சாரங்கபாணி உரை: மாறுபாட்டினை எதிர்த்து நில்லாது சாய்ந்தொழுகல் ஒருவனுக்கு வளர்ச்சியாம். மாறுபாட்டுணர்ச்சியில் முனைவதில் ஒருவன் ஊக்கம் கொள்வானாயின் அவனை நோக்கிக் கேடு விரைந்து வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிகலூக்கின் கேடு ஊக்குமாம்.

பதவுரை: இகலிற்கு-மனவேறுபாட்டினை; எதிர்-ஏற்றுக்கொள்ளுதல்; சாய்தல்-ஒழிதல்; ஆக்கம்-மேன்மேல் உயர்தல்; அதனை-அதன்கண்; மிகல்-மேன்மேலுக்குதல்; ஊக்கின்-மேற்கொள்ளின்; ஊக்குமாம்-மேற்கொள்ளுமாம்; கேடு-அழிவு.


இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்:
பரிப்பெருமாள்: மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகுதல் ஆக்கமாம்:
பரிதி: மாறுபாட்டுக்குப் பொறுத்தல் ஆக்கம்;
காலிங்கர்: தம்முடன் பிறர் இகலும் இகலில் தான் எதிர்தலை சாய்ந்து ஒழுகுவது யாது, அது தமது ஆக்கத்தைக் கொணர்ந்து ஊக்கும்;
பரிமேலழகர்: தன் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை எதிர்தலையொழிதல் ஒருவனுக்கு ஆக்கம் ஆம்;
பரிமேலழகர் குறிப்புரை: எதிர்தல் - ஏற்றுக்கோடல், சாய்ந்த பொழுதே வருதலின், சாய்தல் ஆக்கம் என்றார்.

'மாறுபாட்டிற்குச் சாய்தொழுகுதல் ஆக்கமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாட்டுக்கு ஒதுங்குதல் முன்னேற்றமாம்', 'குரோதத்திற்கு மனதில் இடங் கொடுத்து விடாமலிருப்பது சேமம்', 'மாறுபாட்டிற்கு எதிராது விலகிப்போதல் செல்வ வளர்ச்சிக்கு ஏதுவாம்', 'மாறுபாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல் ஆக்கம் தரும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும் என்பது இப்பகுதியின் பொருள்.

அதனை மிகலூக்கின் ஊக்குமாம் கேடு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும்.
மணக்குடவர் குறிப்புரை: இது மாறுபாட்டிற்குச் சாய்ந்தொழுகல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அதனை மிகுதலை நினைக்கின் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாறுபாட்டிற்குச் சாய்க்க வேண்டுமென்றது.
பரிதி: மாறுபாட்டை மேற்கொள்ளுதல் கேடு என்றவாறு.
காலிங்கர்: இனி அங்ஙனம் தலை சாய்ந்து ஒழுகக் கருதாது மற்று அதனை இகலின் கண்ணே நெஞ்சு ஊக்கின், ஆங்கு அது கொணர்ந்து ஊக்குமாம் கேடு என்பதனை என்றவாறு.
பரிமேலழகர்: அது செய்யாது அதன்கண் மிகுதலை மேற்கொள்வானாயின் கேடும் தன்கண் வருதலை மேற்கொள்ளும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இகலிற்கு' எனவும், 'அதனை' எனவும் வந்தன வேற்றுமை மயக்கம்.

'அதனை மிகுதலை நினைக்கின் கேடு மிகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒதுங்காது நிமிர்ந்தால் கேடு வளரும்', 'அதற்கு (இடங் கொடுப்பதுடன்) அதனை மிஞ்ச விட்டுக் கோபங் கொண்டால் கேடுண்டாகும் என்பது நிச்சயம்', 'அதனை மிகுதியாக மேற்கொண்டாற் செல்வக்கேட்டினை அஃது உளதாக்கும்', 'அதனை ஏற்றுக்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இகலை மிகுதியாக மேற்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்; இகலை மிகலூக்கின் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்பது பாடலின் பொருள்.
'மிகலூக்கின்' என்பதன் பொருள் என்ன?

இகலுக்கு ஒதுங்கி நின்று மேற்செல்தல் முன்னேற்றமாம்.

பகையுணர்விற்கு எதிர்நில்லாது, ஒதுங்கிச் செல்லுதல் ஒருவனுக்கு ஆக்கம் தரும்; அவ்விதம் விலகிச் செல்லாமல் அதனை மிகுத்துக் கொண்டால் அது அவனுக்குக் கேடுகளை ஊக்கப்படுத்தும்.
தன்னிடம் மாறுபாடு கொள்கின்றவனுக்கு எதிராக தாமும் வன்மம் பாரட்டவே எல்லோருக்கும் தோன்றும். அவ்விதம் தன் உள்ளத்திலும் மாறுபாடு தோன்றியபோது, அதை வளர்க்காமல் சாய்ந்து போதலே ஆக்கம் தரும் என்கிறார் வள்ளுவர். அப்படிச் செய்யாமல், அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடும் மிகுத்து வரும் எனவும் கூறுகிறார்.
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிகலூக்கும் தன்மை யவர் (855) என இவ்வாதிகாரத்து முந்தைய குறள் ஒன்றில் இகலெதிரே சாய்ந்தொழுக வல்லாரை யாரும் வெல்ல முடியாது என சொல்லப்பட்டது. இங்கு சாய்ந்தொழுகுவதால் ஆக்கம் வரும் என்றும் மாறுபாட்டால் கேடுண்டு என்று சாய்தலின் நன்மையும் மிகலின் தீமையும் ஒருங்கு உணர்த்தப்படுகிறது. இகல் தணிக்கப்பட வேண்டும் என்பதும் தனக்குள் தோன்றும் மனவேறுபாட்டை வளரவிடாமல் மாறுபாட்டுக்கு எதிரே மாறுபாடே காட்டி நிற்காமல் இயைந்து நடக்க முயல வேண்டும் என்பதும் வள்ளுவரது அறிவுரை.
மனவேற்றுமை இருவரிடத்தில் தோன்றும்போது இகல் உண்டாகிறது. எனவே இருவருமே சாய்ந்தொழுகுதல் நல்லது என்றாலும் இகல் பெரிதாவதற்குக் காரணம் இருவரில் ஒருவர் முனைப்புடன் மற்றவரை எதிர்த்து நிற்கத் தூண்டுவதே. அதனால் மற்றவர் சிறிது விட்டுக்கொடுத்துப் போவது நல்லது என்பது நடைமுறை இயன்மை.
'மாறுபாட்டினை எதிர்த்துச் செல்லாது விலகிப் போதல் ஒருவனுக்கு ஆக்கம் தருவதாகும்; அவ்விதம் விலகிப் போதலிலும் ஓர் அளவு வேண்டும். விலகிப் போகும் செயலை ஒருவன் மேலும் அதிகமாகச் செய்வானானால் அது அவனுக்குக் கேட்டினையும் ஊக்குவிக்கும்' என்றும் இப்பாடலுக்கு உரைப் பொருள் கூறினர். இது வள்ளுவர் கருத்தாக இருக்க முடியாது.

'மிகலூக்கின்' என்பதன் பொருள் என்ன?

'மிகலூக்கின்' என்றதற்கு மிகுதலை நினைக்கின், மேற்கொள்ளுதல், நெஞ்சு ஊக்கின், மிகுதலை மேற்கொள்வானாயின், அதிகம் பண்ணுகிறவனுக்கு, மிகுத்து நிற்பானாகில், வெல்லக் கருதினால், மேன்மேல் வளர்த்துக் கொண்டு போனால், எதிர்த்து நிற்பாராயின், ஒதுங்காது நிமிர்ந்தால், ஊக்கம் கொள்வானாயின், மிஞ்ச விட்டுக் கோபங் கொண்டால், மிகுமாறு ஊக்கப்படுத்தினால், மிகுதியாக மேற்கொண்டால், ஏற்றுக்கொண்டால், ஊக்கம் கொள்வானாயின், மேற்படுவதில் முனையின், மேலும் மேலும் வளர்த்துக்கொள்வானானால் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கு மாறுபாட்டை மிகுவிக்கக்கருதின் அல்லது வெல்லக் கருதின் என்றபடி பொருள் கூறப்பட்டது. சாய்ந்தொழுகினால் அது ஆக்கத்தைக் கொணர்ந்து ஊக்கும்; இகலின் கண்ணே மனது ஊக்கின், அது ஊக்குமாம் கேடு என்பது குறட்கருத்து. சிறிது விட்டுக் கொடுத்து இணங்கிப் போகாமல் அதாவது வேற்றுமையைப் பெரிதுபடுத்தாது, தான் முன்னதாக விட்டுக் கொடுப்பது சாய்ந்தொழுகலாம். அது ஆக்கம் தரும். அல்லாமல், 'இகலை'ப் பெரிதுபடுத்தினால், கேடும் பெரிதாக விளையும் என்பது செய்தி.

'மிகலூக்கின்' என்ற தொடர் மிகுதியாக மேற்கொண்டால் என்ற பொருள் தரும்.

மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்; இகலை மிகுதியாக மேற்கொண்டால் கேடும் அவனிடத்து வருவதில் முனையும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இகல் மேன்மேல் வளர்க்கப்பட்டால் அது கேட்டைத்தான் ஊக்கும்.

பொழிப்பு

மாறுபாட்டினை எதிர்த்து நில்லாது சாய்ந்தொழுகல் உயர்வு உண்டாக்கும்; மாறுபாட்டை மிகுதியாக மேற்கொண்டால் கேடு வளரும்.