இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0856



இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

(அதிகாரம்:இகல் குறள் எண்:856)

பொழிப்பு (மு வரதராசன்): இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம்.



மணக்குடவர் உரை: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும் சாதலும் கெடுதலும் நணித்து.
நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.

பரிமேலழகர் உரை: இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை - பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை; தவலும் கெடலும் நணித்து - பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம்.
(மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: எதிர்த்து மாறுபடுவதில் மேன்மேற் செல்லுதல் நல்லதென்று கருதுவானது வாழ்க்கையானது விரைவில் பிழைபடுதலும் முழுதுங் கெட்டுப்போதலுங் கூடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து.

பதவுரை: இகலின்-மாறுபடுதற்கண்; மிகல்-மேன்மேலூக்குதல், மிகுதியாக (மாறுபடுதல்), வெல்லுதல்; இனிது-நன்றானது; என்பவன்-என்று கருதுபவன், என்று செய்பவன்; வாழ்க்கை-வாழ்வு; தவலும்-தவறுவதும்; கெடலும்-முற்றக்கெடுதலும்; நணித்து-கிட்டத்தில், விரைவில், சிறு பொழுதுள்.


இகலின் மிகல்இனிது என்பவன் வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் வாழ்க்கையும்;
பரிப்பெருமாள்: பிறருடன் மாறுபாட்டின்கண் மிகுதல் இனிதென்று கருதுமவனும், அவன் மனை வாழ்க்கையும்;
பரிதி: மாறுபாட்டிலே மிகுந்த குணமுடையார்க்கு;
காலிங்கர்: இது தமக்குத் தகாது என்று மீட்சி இன்றிப் பிறரோடு இகலின்கண்ணே மிகுதலையும் இனிதென்று கொள்பவரது வாழ்க்கை; [மீட்சி -திரும்புதல்]
பரிமேலழகர்: பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது உயிர் வாழ்க்கை;
பரிமேலழகர் குறிப்புரை: மிகுதல் - மேன்மேல் ஊக்குதல். 'இனிது' என்பது தான் வேறல் குறித்தல். [வேறல் - வெல்+தல்;வெல்லுதல்]

'பிறரொடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிது என்று அதனைச் செய்வானது வாழ்க்கை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீம்பு மிகுதியை விரும்புபவன் வாழ்வு', 'பிறரொடு மாறுபடுதலில் மேலும் முனைந்து நிற்றல் எனக்கு இன்பம் தரும் என்று கூறுபவன் வாழ்க்கை', 'மனத்தாபத்தை (அடக்காமல்) அதை மிகச் செய்து கோபங் கொள்ளுவதை நல்லதென்று கொண்டு விடுகிறவனுடைய நல்வாழ்க்கை', 'பிறரோடு மாறுபடுதற்கண் மிகுதல் எனக்கு இனிமையைத் தரும் என்று அதனைச் செய்வானது வாழ்க்கை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

தவலும் கெடலும் நணித்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாதலும் கெடுதலும் நணித்து. [நணித்து - அண்மையிலுள்ளது]
மணக்குடவர் குறிப்புரை: நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது. [சாயானாயின் - எதிர்த்து நிற்பானாயின்]
பரிப்பெருமாள்: சாதலும் கெடுதலும் அணித்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிரனிறை. இது சாயானாயின் உயிர்க்கேடும் பொருட்கேடு முண்டாமென்றது.
பரிதி: வாழ்வும் சிறுகுதலும் பிராணன் கெடுதலும் சடுதியிலே உண்டாம் என்றவாறு. [சடுதியிலே -விரைவிலே]
காலிங்கர்: குறைபடுதலும் கெட்டுவிடுதலும் நணித்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தவல் என்பது குறைதல்.
பரிமேலழகர்: பிழைத்தலும் முற்றக் கெடுதலும் சிறிது பொழுதுள் உளவாம். [சிறிதுபொழுதுள் - விரைவில்]
பரிமேலழகர் குறிப்புரை: பிழைத்தல் - வறுமையான் இன்னாதாதல். முற்றக் கெடுதல் - இறத்தல். இவற்றால் 'நணித்து' என்பதனைத் தனித்தனி கூட்டி, உம்மைகளை எதிரதும் இறந்ததும் தழீஇய எச்சவும்மைகளாக உரைக்க. பொருட்கேடும் உயிர்க்கேடும் அப்பொழுதே உளவாம் என்பதாம்.

'சாதலும் கெடுதலும்/சிறுகுதலும் பிராணன் கெடுதலும்/குறைபடுதலும் கெட்டுவிடுதலும்/ பிழைத்தலும் முற்றக் கெடுதலும் நணித்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிதைதலும் அழிவதும் நாளாகாது', 'சிதறுதலும் முற்றும் கெடுதலும் விரைவில் ஏற்படும்', 'விரைவில் துன்பமும் நாசமும் அடைந்துவிடும்', 'தவறுதலும் அழிதலும் விரைவில் உண்டாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
'மிகல்இனிது' என்ற தொடரின் பொருள் என்ன?

பகைமைக்கு மேல்பகைமை என நடப்பவனது வாழ்க்கை விரைவில் முடிவை எய்தும்.

தன்னோடு மாறுபடுபவனை எதிர்த்து அவனினும் மிகுதியாக நிற்றலே இனியது என்று கருதுபவனது வாழ்க்கையானது விரைவில் சிதைந்து அழிந்துபோகும்.
இகல் என்பது மற்றவர் மீது எண்ணத்தளவில் நிற்கும் வெறுப்பு உணர்வு ஆகும். அது செயலளவில் மிகும்போது பகையாகிறது. ஒருவன் இன்னொருவனிடம் ஏதோ ஒரு காரணத்திற்காக வன்மம் பாராட்டுகிறான். இகலுக்கான காரணத்தை ஆராய்ந்து அதைக் களைய முயற்சிக்காமல் பகையை வளர்ப்பதில் மேலும் முனைந்து நிற்றல் தனக்கு இன்பம் தரும் அதாவது அதில் வெற்றி பெற்றுவிடுவேன் என்று கூறுகிறான் இவன். இவ்விதம் வேற்றுமையால் வரும் பகையுணர்வை மிகுவிப்பதால் மாறுபாடும் அழிவு வேலையும் பெருகி அவனது வாழ்க்கை விரைவில் தவறி நிலைகுலைந்து முற்றும் அழிந்து போய்விடும் என்கிறார் வள்ளுவர்.

சிலருக்கு மற்றவர்களுடன் பகையுறவிலேயே எப்பொழுதும் இருப்பது இனிக்கிறது. அதனால் இகலை மேலும் வளர்ப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். அதுவே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழி என்ற எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் அவ்விதம் நினைப்போரது வாழ்வு நிலை தாழ்தலும் உயிரழிவும் மிக அண்மையிலேயே உள்ளன என்பதை அவர்கள் அறியவேண்டும்.
இகல் அளவிலே பகைமையை வளரவிடாமல் ஒழித்துவிடவேண்டும் என்கிறது பாடல்.

'மிகல்இனிது' என்ற தொடரின் பொருள் என்ன?

'மிகல்இனிது' என்றதற்கு மிகுதல் இனிது, மிகுந்த குணமுடைமை, மிகுதல் எனக்கு இனிது, தனக்கு நல்லது, எனக்கு இனிது, வெல்லுதல் இனியது, மேன்மேலும் மிகுதிப்படுத்தி வளர்த்தலை இனிது, இன்பம், மிகுதியை விரும்புபவன், நல்லது, மேன்மேற் செல்லுதல் நல்லது, மிகுதல் எனக்கு இனிமையைத் தரும், ஊட்டி வளர்ப்பது, மிகுதல் தனக்கு நல்லது, மேம்பாடாகிய இன்பம் பெறுகின்றோம், வெல்லலாம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மிகல் என்பதற்கு மிகுதல் அதாவது பகையை ஊட்டி வளர்த்தல் என்று பலரும் வெல்லுதல் என்று மற்றவர்களும் பொருள் கூறினர். இவற்றுள் மிகுதல் என்ற பொருள் பொருத்தம். ஒருவன் இகல் மேற்கொண்டால் அதைத் தணிக்க முயற்சி செய்யாமல் மிகுவிப்பதற்கானவற்றையே செய்து அவற்றை அவர்களது 'வீரச்செயல்கள்' போல் எண்ணிக் களிப்படைவார்கள். அது மேன்மேலும் பகையை வளர்த்து அழிவைத்தான் விளைக்கும் என்கிறது பாடல்.

'மிகல்இனிது' என்ற தொடர் மேன்மேலும் மிகுதிப்படுத்தி வளர்த்தல் இனிது என்ற பொருள் தரும்.

மாறுபாட்டின்கண் முனைந்து நிற்றல் இனிதென்று கூறுபவனது வாழ்க்கை சிதைதலும் முற்றிலும் அழிந்து போய்விடுதலும் விரைவில் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வீம்புக்காக இகல் விரும்புவனைப் பழித்துரைக்கும் பா.

பொழிப்பு

மாறுபாட்டை மேன்மேலும் விரும்பி அது இனிது என்று கூறுபவன் வாழ்வு சிதறி விரைவில் அழியும்.