இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0855



இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்

(அதிகாரம்:இகல் குறள் எண்:855)

பொழிப்பு (மு வரதராசன்): இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்.

மணக்குடவர் உரை: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான்.
சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ என்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.

பரிமேலழகர் உரை: இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யார் - வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்?
(இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: மனமாறுபாடு தோன்றியவழி அதற்கு எதிரே விட்டுக்கொடுத்து உடன்பட்டு வாழக் கூடியவரை, அதற்குத் தாமும் இசையாது அவ்விகலையே மிகப்பெரிதுபடுத்தும் தன்மையுடையார் யார்? ஒருவர் இணங்கி வரும்பொழுது, மற்றவர் எளிதில் இசைந்து வாழ்வர்.
தாம் வலிமையுடைய உயர்நிலையிலிருந்தாலும் வளைந்துகொடுத்து, ஒத்துப்போகக்கூடிய மனஉரம் உடையவர் என்பதற்கே 'சாய்ந்து ஒழுக வல்லார்' என்றார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை மிகலூக்கும் தன்மையவர் யாரே?

பதவுரை: இகல்-மாறுபாடு; எதிர்-எதிர் (மலையாது), ஏற்றுக்கொள்ளாது; சாய்ந்து-ஒதுங்கி; ஒழுக-நடந்து கொள்ள; வல்லாரை-திறமையுடையவரை; யாரே-எவரே; மிகல்-வெல்ல, (இகலின்) மிகுமாறு; ஊக்கும்-கருதும்; தன்மையவர்-இயல்பினை யுடையவர்.


இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை; [சாய்ந்து- எதிர்த்து நிற்காமல் ஒதுங்கி]
பரிப்பெருமாள்: இகலின் எதிர் சாய்ந்தொழுக வல்லாரை;
பரிதி: மாறுபாடெதிர்த்தால் பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவனை;
காலிங்கர்: தம்மொடு பிறர் வந்து இகலின் அவ்விகல் எதிர்மலையாது தலைசாய்ந்து ஒழுக வல்லாரை;
மிகல் என்பது மேம்பாடு; ஊக்குதல் என்பது தள்ளுதல்.
பரிமேலழகர்: தம் உள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை;

'மாறுபாடு தோன்றியவழி அதனை ஏற்றுக்கொள்ளாது சாய்ந்தொழுக வல்லாரை/பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாட்டுக்கு ஒதுங்கிப் போய்விடுவாரை', 'இகலை எதிர்த்து நிற்காமல் சாய்ந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவரை', 'மனத்தாபத்துக்கு மனதில் இடங் கொடுக்காமல் அதற்கு எதிராக ஒதுங்கி நடக்கத் திறமையுள்ளவர்களுக்கு', 'மாறுபாட்டிற்கு எதிர்க்காது விலகி நடக்க வல்லவரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை என்பது இப்பகுதியின் பொருள்.

யாரே மிகலூக்கும் தன்மை யவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெல்ல நினைக்கும் தன்மையவர் யார்தான்.
மணக்குடவர் குறிப்புரை: சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ என்றார்க்கு அவரை வெல்வாரில்லை யென்றார்.
பரிப்பெருமாள்: வெல்ல நினைக்கும் தன்மையவர் யாவர்தான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: சாய்ந்தொழுக வேண்டுமென்றார் அது தோல்வி யாகாதோ என்றார்க்கு அவரை வெல்வாரில்லை என்றது.
பரிதி: யார் தானும் வெல்வரோ என்றவாறு.
காலிங்கர்: மற்று யாரேதான் அவர் மேம்பாட்டைத் தள்ளும் தன்மையவர் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மிகல் என்பது மேம்பாடு; ஊக்குதல் என்பது தள்ளுதல்.
பரிமேலழகர்: வெல்லக்கருதும் தன்மையுடையார் யாவர்?
பரிமேலழகர்: இகலை ஒழிந்தொழுகல் வேந்தர்க்கு எவ்வாற்றானும் அரிதாகலின், 'வல்லாரை' என்றும், யாவர்க்கும் நண்பாகலின் அவரை வெல்லக் கருதுவார் யாவரும் இல்லை என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் இகலாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. [இகலாதார்க்கு-மாறுபடாதவர்க்கு]

வெல்ல நினைக்கும் தன்மையவர்/ மேம்பாட்டைத் தள்ளும் தன்மையவர் யார்தான் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வம்புக்குத் தூண்ட யாரால் இயலும்?', 'இகலுணர்ச்சியில் மேம்பட்டிருக்குமாறு தூண்டிவிடும் இயல்பினர் யாவர்? (ஒருவருமிலர்)', 'கோபமூட்டக் கூடியவர்கள் யாருமில்லை', 'வெல்ல நினைக்குந் தன்மையுடையவர் யாவர்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் சாய்ந்தொழுக வல்லாரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் என்பது பாடலின் பொருள்.
'சாய்ந்தொழுக வல்லார்' யார்?

வளைந்து கொடுத்து இகலைத் தவிர்த்துக் கொள்க.

மாறுபாட்டை எதிர்கொள்ளும்போது அதை இணக்கமான முறையில் சரிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் படைத்தவரை வெல்லக் கருதும் தன்மையுடையவர் எவரும் இலர்.
ஒருவருக்கு இகல் தோன்றும் நிலைமை உண்டாகிறது. அவர் அதை எதிர்த்து நின்று வெல்ல நினைக்கலாம், அல்லது இகலுக்கான காரணங்களை ஆராய்ந்து பகையைப் பேணிப் பெருக்காமல் தலைசாய்ந்து இகலுக்குத் தீர்வு கண்டு பகையுணர்வை நீக்கிக்கொள்ளலாம். இரண்டாவது சொல்லப்பட்டதை ஆங்கிலத்தில் உள்ள Stoop to conquer என்ற வழக்கிற்கு இணையானதாக எண்ணலாம். நாணல்போல் வளைந்து வெற்றிகொள்வது என்பது பொருள். வள்ளுவர் இதைத்தான் இப்பாடலில் பரிந்துரைக்கிறார்.
இகலுக்குத் தீர்வாக மலைதல் அதாவது மோதுதல் போக்கை மேற்கொள்ளச் சிலர் வழிகாட்டுவர். அதாவது இகலின் மிகல் காட்டச் சொல்வர். ஆனால் சாய்ந்தொழுகும் இயல்புடையவரை பகைமேல் மிகுவிக்கச் செய்ய யாராலும் முடியாது எனவும் வள்ளுவர் கூறுகிறார். இகலுக்கு எதிர் இகல் என்பதை வள்ளுவர் ஒப்பமாட்டார். சாய்ந்தொழுகுவதே எல்லாச் சூழ்நிலைகளிலும் வெல்லச் செய்யும் என்கிறார் அவர். அப்படி சாய்ந்தொழுகுவாரோடு உடன்பாட்டிற்கு இசையாது அவ்விகலையே பெரிதுபடுத்தி முனைந்து நிற்கும் தன்மையுடையார் யாவரும் இருக்கமாட்டார். அதனால்தான் இகலின் மிகுமாறு யார் ஊக்க இயலும்? எனக் கேட்கிறார் வள்ளுவர்.

'சாய்ந்தொழுக வல்லார்' யார்?

'சாய்ந்தொழுக வல்லார்' என்றதற்குப் பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவன், எதிர்மலையாது தலைசாய்ந்து ஒழுக வல்லார், பகையைப் பேணி அதிகமாக்காமல் தள்ளிப் போடுகிறவர், சாய்த்துக் கொண்டு போக வல்லார், எதிர்த்து நிற்காமல் சாய்ந்து நடக்க வல்லவர், விட்டுக்கொடுத்து உடன்பட்டு வாழக் கூடியவர், மூர்க்கத்தனமான பிடிவாதம் செய்யாமல் ஒருவழியாக ஒதுங்கி ஒழுகவல்லார், ஒதுங்கிப் போய்விடுவார், சாய்ந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவர், ஒதுங்கி நடக்கத் திறமையுள்ளவர், தாமே விலக்கி நடக்க வல்லவர், விலகி நடக்க வல்லவர், வளைந்து கொடுத்து (நாணல் போல்) வாழ வல்லவர், வெள்ளத்து நாணல்போற் சாய்ந்தொழுக வல்லார், வளைந்து கொடுத்து வெற்றிகாணும் தன்மையுடையார் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிதி பொறுமையினாலே வெற்றி கொள்ளுபவன் என்கிறார். சாய்ந்தொழுகல் என்பது எவ்வாறேனும் அமைதி பெறுவதல்ல. அது தோல்வியையும் கோழைத்தனத்தையும் குறிக்கும். சாய்ந்தொழுகல் என்பதற்குப் 'பகைவர் எதிர்த்தால் எதிர்த்து நில்லாமற் சாய்ந்து போதல்' எனவும் 'தம்மனத்துப் பகைமை தோன்றினால் சாய்ந்துபோதல்' எனவும் இரு திறமாக உரை காண்பர். ஒன்று பகைவரை எதிர்த்தும் மற்றொன்று பகைவரை எதிர்க்காமலும் விலகிப் போவதைக் கூறுகின்றன. இவற்றுள் பகைவரை எதிர்க்காமல் இகல் எழுந்த மனத்துள்ளேயே சாய்ந்தொழுகுவாரை வெல்வார் இலர் என்பது சிறந்தது என்பார் தண்டபாணி தேசிகர், ஏனெனில் மற்றவர்கள் சாய்ந்தொழுகுதல் பெருமையுடைத்து என்ற உண்மையறிய மாட்டாமையான் அவமதிக்கவும் செய்வர் என்பதால்.

மனதில் மாறுபாடு உருவானாலும், உள்ளிருந்து தூண்டும் பகை உணர்வைக் கட்டுப்படுத்தி அடக்குபவரே சாய்ந்தொழுகுபவர். இகலெதிர் சாய்ந்தொழுகல் அரிதான செயலாம்; அது எல்லார்க்கும் இயலாது. அதற்குத் தனித் திறமை வேண்டும். சாய்ந்தொழுகல் என்பது பகைவர்க்கு சிலவற்றை விட்டுக் கொடுத்து சிலவற்றில் ஒத்துப்போய் இரண்டு பக்கமும் இணங்கி தீர்வு காண்பதைச் சொல்வது. ஒருவர் தான் எந்நிலையிலிருந்தாலும் வளைந்துகொடுத்து, பகைவரால் ஏற்படும் இகலை வெல்வாரானால் அவர் சிறப்பான ஆற்றல் பெற்றவராயிருப்பர்; பெருங்காற்றுக்கும் பெருவெள்ளத்திற்கும் எதிர்சாய்ந்து கொடுக்கும் நாணலைப்போல, அவர் பகைமைக்குச்சாய்ந்து போதலின் அருமைதோன்ற 'ஒழுகவல்லார்' எனச் சொல்லப்பட்டார்.
மனத்திற் பகை தோன்றினாலும் அதை உடனே மறுத்து மாறின்றி நடக்க வல்லவரிடம்கு நட்பு பாராட்டவே அனைவரும் விரும்புவர். அவ்விதம் பகை தணிந்து, இருவருமே வெற்றி கொண்ட எண்ணத்துடன், அமைதிகாக்கப் பிரிந்து செல்வர். இதை இன்றைய மேலாண்மையாளர்கள் win-win situation என அழைப்பர். இந்த நிலையை எய்தச் செய்வார் சாய்ந்தொழுக வல்லார்.

'சாய்ந்தொழுக வல்லார்' என்றதற்குத் தம்மனத்தில் இகல் தோன்றின் அதற்குச் சாய்ந்து நடக்க வல்லவர் என்பது பொருள்.

மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் வளைந்துகொடுக்கும் ஆற்றல் படைத்தவரை இகலுணர்வில் மிகுமாறு தூண்ட யாரால் இயலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மையுள்ளவரது இகல் உணர்வைக் கிண்டிக்கிளற முடியாது.

பொழிப்பு

மாறுபாட்டுக்கு எதிர்த்து நிற்காமல் சாய்ந்து கொடுக்கும் ஆற்றல் படைத்தவரை வெல்லும் இயல்பினர் யாரும் இலர்.