இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்
(அதிகாரம்:இகல்
குறள் எண்:853)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்ப நோயை நீக்கிவிட்டால். அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும்.
|
மணக்குடவர் உரை:
மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின், அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும்.
இது தோற்றமுண்டா மென்றது.
பரிமேலழகர் உரை:
இகல் என்னும் எவ்வ நோய் நீக்கின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்; தவல் இல்லாத் தாவில் விளக்கம் தரும் - அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
(தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம்.)
தமிழண்ணல் உரை:
மனத்தை முறித்துக் கொள்கின்றதாகிய 'இகல்' எனப்படும் கடுந்துன்பத்தைச் செய்யும் நோயை, ஒருவன் தன மனத்தினின்றும் நீக்குவானாயின், அப்பண்புடைமை கெடுதலில்லாத குற்றமற்ற புகழாகிய ஒளியினை அவனது வாழ்நாளில் தரும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்.
பதவுரை: இகல்-மாறுபாடு; என்னும்-என்கின்ற; எவ்வ-துன்பத்தைச் செய்யும்; நோய்-பிணி; நீக்கின்-விலக்கினால்; தவல்-தவறு, அழிதல்; இல்லா-இல்லாத; தா- கேடு; இல்-இல்லாத; விளக்கம்-புகழ், ஒளி; தரும்-கொடுக்கும்.
|
இகல்என்னும் எவ்வநோய் நீக்கின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின்;
பரிப்பெருமாள்: மாறுபடுதலாகிய இன்னாத நோயை நீக்குவானாயின்;
பரிதி: மாறுபாடு என்கிற பொல்லா நோயை விடுவானாகில்;
காலிங்கர்: இகல் என்று சொல்லப்படும் துயர் விளைக்கும் நோயை ஒழிப்பின்;
காலிங்கர் குறிப்புரை: எவ்வம் என்பது துக்கம்.
பரிமேலழகர்: மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்;
'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் தன் மனத்தினின்று நீக்குமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மாறுபாடு என்னும் தொழுநோய் நீங்கினால்', 'மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் உள்ளத்தினின்றும் அகற்றினால்', 'தீராத வியாதியைப் போல, நீக்குவது கடினமான மனத்தாபத்தை நீக்கிவிட்டால்', 'மாறுபாடு என்னுந் துன்பத்தைக் கொடுக்கும் நோயை மனத்தைவிட்டு ஒருவன் நீக்குவானாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.
தவல்இல்லாத் தாவில் விளக்கம் தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும். [குற்றமற்ற ஒளி - பழிபாவங்கள் சிறிதும் இல்லாத புகழ்]
மணக்குடவர் குறிப்புரை: இது தோற்றமுண்டா மென்றது.
பரிப்பெருமாள்: அந்நீக்குதல் கேடில்லாத குறையற்ற ஒளியினைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தோற்றமுண்டாக்கும் என்றது.
பரிதி: ஒரு காலத்தும் கேடில்லாத புகழ் உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: பின் கெடுதலும் இன்றி மற்றும் தமக்கு ஓர் (வருத்தமும் இன்றி உலகத்துத் தம் பேர் விளங்குவதோர்) விளக்கத்தையும் தரும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: தா என்பது வருத்தம்.
பரிமேலழகர்: அவனுக்கு அந்நீக்குதல் எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: தவல் இல்லாமை, அருத்தாபத்தியான் அப்பொருட்டாயிற்று. தாஇல் விளக்கம் - வெளிப்படை. யாவரும் நண்பராவர், ஆகவே, எல்லாச் செல்வமும் எய்திக் கொடை முதலிய காரணங்களால் புகழ் பெறும் என்பதாம். [தாவில் விளக்கம் - கெடுதல் இல்லாத புகழ்; வெளிப்படை - இயல்பாகவே பொருள் விளங்கும் சொல்
'அந்நீக்குதல் கேடில்லாத குற்றமற்ற ஒளியினைத் தரும்/ கேடில்லாத புகழ் உண்டாம்/ தம் பேர் விளங்குவதோர் விளக்கத்தையும் தரும்/எஞ்ஞான்றும் உளனாதற்கும் ஏதுவாய புகழைக் கொடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அழிவில்லாத அறிவுவிளக்கம் உண்டாகும்', 'அது கேடில்லாத குற்றமற்ற புகழைக் கொடுக்கும்', 'அது நிச்சயமாகக் குற்றமற்ற புகழுடைய நல்வாழ்வைக் உண்டாக்கும்', 'அது தப்பாமல் அவனுக்குப் புகழைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற எவ்வநோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'எவ்வநோய்' என்பது என்ன?
|
மாறுபாட்டை நீக்கிவிட்டால் அகம் தூய்மை பெறும்.
மாறுபாடு என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்து நீக்கி விட்டால், ஒருவனுக்கு அது தப்பாமல் உள்ளத்தில் கேடற்ற ஒளியை ஏற்றும்.
மனமாறுபாடு என்று சொல்லப்படுவது ஒரு கொடிய நோய். அது மனத்தினின்று நீங்குமாயின், தவறாமல் அழியாத உள்ளொளியை அவனுக்காக்கும்.
பகைமை என்னும் அந்த நோய் இல்லாதவன் கெடுதல் ஏதுமின்றி தெளிவுடன் விளங்குவான்.
தவல் இல்லா என்ற தொடர் தவறாத என்ற பொருள் தரும்.
தாவில் விளக்கம் என்றதற்கு எஞ்ஞான்றும் குன்றாததும் அழிவற்றதுமான புகழ் எனப் பொருள் கூறுவர். அழியாத ஒளி எனவும் பொருள் கொள்வர்.
|
'எவ்வநோய்' என்பது என்ன?
'எவ்வநோய்' என்ற சொல்லுக்கு இன்னாத நோய், பொல்லா நோய், துயர் விளைக்கும் நோய், துன்பத்தைச் செய்யும் நோய், துக்கத்தை செய்கிற வியாதி, துன்ப நோய், கடுந்துன்பத்தைச் செய்யும் நோய், தொழுநோய், தீராத வியாதி, துன்பத்தைக் கொடுக்கும் நோய் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
முன்னர் 851ம் குறளில் 'இகல் நோய்' எனச் சொல்லப்பட்டது. இங்கு 'இகலென்னும் எவ்வநோய்' எனக் கூறப்படுகிறது. இது தொழுநோய் போன்ற கொடிய தன்மை உடைய ஒரு மனநோய் என்ற பொருளில் ஆளப்பட்டது. பின்னும் எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து (1241) என்று காமத்துப்பாலில் நெஞ்சோடுகிளத்தல் என்ற அதிகாரத்திலும் எவ்வநோய் குறிப்பிடப்பெறுகிறது.
'எவ்வநோய்' என்றது பெருந்துன்பம் தரும் நோய் எனப் பொருள்படும்.
|
மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் மனத்தினின்றும் நீக்கிவிட்டால் அது தவறாமல் அவனுக்கு அழிவற்ற உள்ளொளி உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.
இகல் நீக்கப்பட்டால் உள்ளொளி உண்டாகும்.
மாறுபாடு என்னும் கொடிய துன்பத்தைச் செய்யும் நோயை ஒருவன் உள்ளத்தினின்றும் அகற்றினால் அது தவறாமல் அழிவில்லாத மனஒளியைத் தரும்.
|