இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0851



இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்

(அதிகாரம்:இகல் குறள் எண்:851)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர்.

மணக்குடவர் உரை: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை, இகலென்று சொல்லுவார் அறிவோர்.
இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர்.
(மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று.இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மாறுபாடு என்னும் குணம் உயிர்களுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் இகல்என்ப.

பதவுரை: இகல்-மாறுபாடு; என்ப-என்று சொல்லுவர்; எல்லா உயிர்க்கும்--அனைத்து உயிருக்கும், உயிரினங்களுக்கும்; பகல்-பகுதல், பகுதிக்குணம் அதாவது (பிற உயிர்களோடு) கூடாமை; என்னும்-என்கின்ற; பண்பின்மை-குணமில்லாமை; பாரிக்கும்-பரப்பும், வளர்க்கும்; நோய்-துன்பம், குற்றம்.


இகல் என்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இகலென்று சொல்லுவார் அறிவோர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இகலென்று சொல்லுவார் அறிவோர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இகலாவது இதுவென்று கூறிற்று.
பரிதி: மாறுபாடு என்பது;
காலிங்கர்: தாம் பிறரோடு மாறுபட்டு ஒழுகும் மாறுபாடு என்று சொல்லுப சான்றோர்;
பரிமேலழகர்: இகல் என்று சொல்லுவர் நூலோர்.

இகலென்று சொல்லுவார் அறிவோர்/சான்றோர் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இகல் (மாறுபாடு) என்று அறநூலோர் கூறுவர்', 'மனத்தாபம் என்பதுதான்', 'இகல் என்று நூலோர் சொல்லுவர்', 'இகல் என்று கூறுவர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இகல் என்று சொல்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

எல்லா உயிர்க்கும் பகல்என்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை. [வேறுபடுதல்-கருத்து வேறுபடுதல்]
பரிப்பெருமாள்: எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை.
பரிதி: எல்லா உயிர்க்கும் எக்காலமும் பிரகாசமில்லாத பண்பின்மை தரும் நோய் என்றவாறு. [பிரகாசமில்லாத- ஒளியில்லாத]
காலிங்கர்: எவ்வுயிர்க்கும் இனிது மேவி ஒழுகாது வேறுபடுதல் என்னும் இப்பண்பின்மையைப் பரப்பும் நோயை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பகல் என்பது பகுதல் என்றது பாரித்தல் என்பது பரப்புதல்.
பரிமேலழகர்: எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்.
பரிமேலழகர் குறிப்புரை: மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும்கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீக்குணமாயிற்று. இதனான் இகலது குற்றம் கூறப்பட்டது.

'எல்லா வுயிர்க்கும் வேறுபடுதலாகிய குணமின்மையைப் பரப்பும் துன்பத்தை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லா உயிர்களுக்கும் பிற உயிர்களோடு மாறுபடுதல் என்னும் தீய பண்பை வளர்க்கும் குற்றம்', 'எல்லா மனிதர்களுக்கும் 'விரோதம்' என்ற அன்பின்மையை உண்டாக்கிப் பெருகச் செய்கிற ஒரு வியாதி', 'எல்லா மக்கட்கும், ஒருவரோடு ஒருவர் கூடாமையாகிய தீக்குணத்தை வளர்க்கும் நோய்', 'எல்லா உயிர்கட்கும் பிற உயிர்களோடு கூடாமை என்னும் கொடிய குணத்தை வளர்க்கும் நோயாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோய் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர் என்பது பாடலின் பொருள்.
'பாரிக்கும்' என்பதன் பொருள் என்ன?

உயிர்களிடை வன்மம் பாராட்டுவது பண்பில்லாத செயலாம்.

உயிர்களைக் கூடாது பிரிந்து நிற்கும் தீய குணத்தினை வளர்க்கும் நோயினை இகல் என்பர்.
நாம் நாளும் பலருடன் தொடர்பு கொள்கிறோம். அவ்விதம் தொடர்பு கொள்ளும்போது உராய்வுகள் உண்டாக நேரிடும். அதை உரிய வகையில் நேர்செய்யாவிடில் மாறுபாடுகள் தோன்றும். எண்ணத்தளவில் நிற்கும் மாறுபாட்டிற்குக் காரணமான வெறுப்பு அல்லது மனக்குறை இகல் என்று அறியப்படுகிறது. காரணத்தோடும் அல்லது காரணம் எதுவுமின்றியும் விளந்த மாறுபாடுகள் பகையுணர்வைப் பெருக்கும்.
பகையுணர்வுடன் ஒழுகினால் கலந்து வாழ்தல் இயலாது. பழகுபவர் அனைவரிடமும் வெறுப்புத்தான் மிகும். சினம் போன்று மாந்தரை நிலைகுலையச் செய்து மன அமைதியை இழக்க வைப்பது பகை உணர்வு. இதுவே பகல் என்னும் தீக்குணம் அதாவது பிரிந்து நிற்கும் பகுதிக்குணம்- பிறவுயிர்களோடு கூடாமையாம். கூடாமல் வேறுபட்டு ஒழுகுவது பண்பற்ற குணமாம். இது உயிர்களுக்கிடையான உறவுகள் கெட்டுவிட ஏதுவாகும். இகலைத் துன்பம் தரும் ஓர் நோய் எனச் சொல்கிறார் வள்ளுவர்.

இகல் என்பது எல்லா உயிர்களிடத்தும் பிரிவை வளர்க்கும் நோய் என்கிறது பாடல். 'ஏனைய உயிரினங்களில் பகைமை இயல்பான பிறவிக்குணம்; அது வேறுபாட்டால் விளைவதன்று; எனவே எல்லாவுயிர்க்கும் என்றது எல்லா மனிதர்க்கும் என்ற பொருளையே குறிக்கும்' எனச் சிலர் கருத்துரைத்தனர். அஃறிணையுயிர்கட்கும் இகல் விளைதலின் எல்லாவுயிர்க்கும் என்பது மனித உயிர் அல்லாதவற்றையும் குறிப்பதாகக் கொள்வது சிறந்தது.

'பாரிக்கும்' என்பதன் பொருள் என்ன?

'பாரிக்கும்' என்ற சொல்லுக்குப் பரப்பும், தரும், வளர்க்கும், பெருகச் செய்யும், விளைக்கும், பெருக்கும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இவ்வதிகரத்தில் பின்வரும் குறள் ஒன்றில் இகலை எவ்வநோய் என வள்ளுவர் குறிப்பார். எவ்வ நோய் என்பதற்குப் பெருந்துன்பந்தரும் தொழுநோய் என்றும் பொருள் கூறுவர். இது ஒரு தொற்றுநோய். மற்றவர்களுக்கும் பரவக் கூடியது. இகல் என்னும் எல்லா உயிர்களிடத்தும் பிரிவினை எனப்படும் பண்பற்ற தன்மையைப் பரப்பும் நோய் என்ற பொருளில் கூறியதால் பாரிக்கும் என்பதற்குப் பரப்பும் என்பது பொருத்தமான பொருள்.

'பாரிக்கும்' என்றது பரப்பும் என்ற பொருள் தரும்.

உயிர்களுக்குள் பிரிவினை என்னும் தீய பண்பைப் பரப்பும் நோயை இகல் என்று சொல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒட்டாத பகையுணர்வு இகல் எனப்படும்.

பொழிப்பு

உயிர்களுக்குள் பகையுணர்ச்சியைப் பரப்பும் நோயை இகல் என்று கூறுவர்.