இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0840



கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:840)

பொழிப்பு (மு வரதராசன்): சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாத காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.

மணக்குடவர் உரை: கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல்.
இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.

பரிமேலழகர் உரை: சான்றோர் குழாத்துப் பேதை புகல் - சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்; கழாக்கால் பள்ளியுள் வைத்தற்று - தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும்.
(கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு. இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பெரியோர் கூட்டத்தில் பேதை புகுவது கழுவாத காலைத் தூய்மையுடைய தவப்பள்ளியில் வைத்தது போலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்.

பதவுரை: கழாஅ-கழுவாத, அலம்பாத; கால்-அடி; பள்ளியுள்-தவப்பள்ளியில், அமளிக்கண், படுக்கையில், அமண்பள்ளி போன்ற தூயவிடத்தில்; வைத்துஅற்றால்-இட்டாற் போன்றது; சான்றோர்-சான்றோர்; குழாஅத்து-அவையின்கண்; பேதை-பேதை; புகல்-நுழைதல்.


கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும்;
பரிப்பெருமாள்: கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும்;
பரிதி: இவனை எழுப்பி அவரை இருத்துவர் ஒரு பெரியோன் வந்த காலத்துத் தலையில் வைத்த காலுடன் வாங்குவதுபோல;
காலிங்கர்: ஒருவன் மாசறக் கழுவாத காலைத் தூவெண் துகில் விரித்த சிறந்த படுக்கைமேல் சென்று வைத்த அத்தன்மைத்து;
பரிமேலழகர்: தூய அல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளிக்கண்ணே வைத்தாற் போலும். [தூய அல்ல- தூய்மையல்லாதன]
பரிமேலழகர் குறிப்புரை: கழுவாக்கால் என்பது இடக்கரடக்கு.

'கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற்போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கழுவாத காலைத் தவப்பள்ளியில் வைப்பதுபோல்', 'கழுவாத அசுத்தமுள்ள காலைச் சுத்தமான இடத்தில் வைத்ததுபோல் கருதப்படும்', 'தூய்மையற்றதை மிதித்துக் கழுவாத காலை நல்ல படுக்கையில் வைத்தாற்போலும்', 'கழுவாத காலைப் படுக்கையில் வைத்தல் போன்றது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கழுவாத காலுடன் வழிபடு தளத்துள் நுழைவதுபோல் என்பது இப்பகுதியின் பொருள்.

சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல்.
மணக்குடவர் குறிப்புரை: இது பேதை யிருந்த அவை யிகழப்படுமென்றது.
பரிப்பெருமாள்: சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடியிருத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பேதை யிருந்த அவையும் இகழப்படுமென்றது.
பரிதி: பெரியோர் கூட்டத்தில் பேதை சென்று நடுப்பட இருக்கில்.
காலிங்கர்: கல்வியால் மாசற விளங்கிய மனத்தூய்மை உடைய சான்றோர் அவையுள் நெஞ்சு அழுக்கு உடைய பேதை சென்று புகுதல் என்றவாறு.
பரிமேலழகர்: சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்;
பரிமேலழகர் குறிப்புரை: இதனால் அவ்வமளியும் இழிக்கப்படுமாறு போல, இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம். இதனான், அவன் அவையிடை இருக்குமாறு கூறப்பட்டது.

'சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிஞரின் அவைக்கு அறிவிலி போதல்', 'அறிவாளிகள் கூடியுள்ள சபையில் ஒரு முட்டாள் புகுவது', 'அறிவாற் சிறந்தோர் அவையில் மூடன் புகுதல்', 'சான்றோர் கூடியிருக்கும் அவையில் அறிவிலான் புகுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெரியோர் கூடியுள்ள அவையுள் பேதையாயினான் புகுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியோர் கூடியுள்ள அவையுள் பேதையாயினான் புகுதல் கழுவாத காலுடன் வழிபடு தளத்துள் நுழைவதுபோல் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பேதை நல்லோர் கூட்டத்தின் ஒழுங்கைக் கெடுக்கவல்லன்.

நல்லோர் கூடியுள்ள இடத்தில் பேதை புகுவது தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே, மாசுபடிந்த காலைக் கழுவாமல், எடுத்து வைப்பது போன்றதாகும்.
ஒருவன் தூய்மையில்லாத, கழுவாத, காலுடன் தொழுகைக்கான இடத்தில் நுழைகிறான். அதனால் பலர் பயன்படுத்தும் வழிபடு தளத்தில் தூய்மைக்கேட்டை உண்டுபண்ணி நறு மணத்தையும் கெடுக்கிறான். உள்ளே குழுமியுள்ளவர்கள் முகம் சுழித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிப் போவார்கள். அதுபோல பெரியோர்கள் கூடியுள்ள அவையில் பேதை ஒருவன் சென்றால் தன்னுடைய இழிவான நடத்தையால் அவ்வவையை மாசு படுத்திவிடுவான். அதன் பெருமை குன்றச் செய்வான். பெரியோரை இழிவு படுத்திப் பேசுவான். பேதை பெரியோர் இடத்தில் சேரத் தகுதியற்ற சிறுமைக்குணம் கொண்டவன்.

இப்பாடலிலுள்ள பள்ளி என்ற சொல்லுக்குப் அமளி (படுக்கை), படுக்கையறை, தவப்பள்ளி, தேவ அகம், அமண்பள்ளி, மடைப்பள்ளி, பள்ளிக்கூடம், தேவாலயம் எனப் பல்வேறு வகையாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர். குறளின் உவமை தூய்மையான இடம் குறிக்கவருவது என்பதால் இவை அனைத்துமே பொருந்தும். இவற்றுள்ளும் மிகத் தூய்மையாகப் பேணப்படுவது வழிபடு தளங்களே. எனவே தவப்பள்ளி என்ற பொருள் பள்ளி என்றதற்குப் பொருத்தமாகலாம்.

தூய்மையான இடத்தில் கழுவாத காலை வைப்பது போலாகும் என்கிறது குறள். 'கழுவாத கால்' என்று இடக்கரடக்கலாகச் சொல்லப்பட்டது. இடக்கரடக்கல் என்பது எந்த இடத்திலும் வெளிப்படையாகச் சொல்லத்தகாத இடக்கான வார்த்தைகளை அடக்கிச் சொல்லுதல் ஆகும். வெளிச்சென்று கழுவுதலைக் கால் கழுவுதல் என இடக்கரடக்கலாகக் கூறுவர். இங்கு மலம் முதலியவற்றை மிதித்த கால் எனக் கூறாது 'கழாஅக்கால்' என்று கூறினமையின் இஃது இடக்கரடக்கல் ஆயிற்று.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

புறந்தூய்மை நீரானமையும். மக்கள் உடலையும் இல்லத்தையும் நீரால் கழுவித் தூய்மையாக வைத்துக்கொள்வதை விரும்புவர். இன்றைக்கும் வீட்டினுள் நுழையுமிடத்தில் காலைக் கழுவுவதற்கு ஒரு கலமும் அதில் நீரும் வைத்திருப்பர். வீட்டிற்குள் நுழையுமுன் காலைக் கழுவிக்கொண்டுதான் செல்வர். இல்லத்தினுள்ளும் படுக்கையறையை மிகத் தூயதாகப் பாதுகாப்பர். இரவில் படுக்கச் செல்லுமுன் கால்களைக் கழுவித் தூய்மை செய்து பின் துயில் செய்யச் செல்வர். கழுவாத காலைப் படுக்கையில் வைத்தால், அந்த அமளி அருவருக்கப்படும். அதைப் பயன்படுத்தமாட்டார்கள். அதுபோலவே தூய்மையாகக் கட்டிக் காக்கப்படும் பிற இடங்களான வழிபடு தளங்கள் போன்றவற்றுள் புகுமுன் காலைக் கழுவித் தூய்மையாக்கிக் கொண்டே செல்வர். அழுக்காக இருந்தால் அவ்விடத்தை வெறுப்புடனே நோக்குவர். மனம் அங்கு தங்காது.

சான்றோர் அவையின் கண் பேதையாயினான் புகுதல் அத்தகைய இழிவைச் செய்யும் என்பதையுணர்த்த 'கழாக்கால் பள்ளியுள் வைத்தல்' உவமையாக்கப்பட்டது. அங்கு அமளி இழிக்கப்படுவது போல, பேதையின் நுழைவால் சான்றோர் அவையும் இழிக்கப்பட்டு வெறுத்தொதுக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது. அப்படி என்ன செய்துவிடுவான் பேதை? பேதைமைக் குணம் கொண்டவனுக்கு நீக்குப்போக்குத் தெரியாது. பெரியோர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அவையுள் நுழைந்து, தனக்குத் தோன்றியவாறு வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்கிவிடுவான். அவை-நடத்தைமுறையும் பெரியோர்-சிறியோர் வேறுபாடும் அறியாதவனாகையால் இழிவான சொற்களால் அனைவரையும் வசைபாடவும் செய்வான். சான்றோர் மனவருத்தம் கொள்ளும்படியாகிவிடும். அவையைவிட்டு அவனை வெளியேற்றுவது கடினம். அவனுக்கு நாணம் கிடையாது. சான்றோர்களாதலால் அவனைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் தயங்குவர். அதனால் அவர்களே அவையிலிருந்து வெளியேறும் நிலையும் உண்டாகிவிடும்.

பேதை உள்ள அவை இகழப்படும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

பெரியோர் கூடியுள்ள அவையுள் பேதையாயினான் புகுதல் கழுவாத காலுடன் வழிபடு தளத்துள் நுழைவதுபோல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பேதைமையுடையவன் சான்றோர் அவையில் இருக்கக்கூடாதவன்.

பொழிப்பு

பெரியோர் கூட்டத்தில் பேதை நுழைவது கழுவாத காலுடன் தவப்பள்ளியில் புகுவதுபோலாம்.