பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன்று இல்
(அதிகாரம்:பேதைமை
குறள் எண்:839)
பொழிப்பு (மு வரதராசன்): பேதையரிடமிருந்து பிரிவு நேர்ந்தபோது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை. ஆகையால் பேதையருடன் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
|
மணக்குடவர் உரை:
மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான்.
இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
பரிமேலழகர் உரை:
பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல் - பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை; பேதையார் கேண்மை பெரிது இனிது - ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது.
(நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
பேதையின் உறவு பெரிதும் இனியது; பிரியுங்கால் யாதும் வருத்தம் இல்லை.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதையார் கேண்மை பெரிது இனிது; பிரிவின்கண் தருவது பீழை ஒன்று இல்.
பதவுரை: பெரிது-பெரிதாக, மிகவும்; இனிது-நன்றானது; பேதையார்-பேதைத்தனம் கொண்டவர்; கேண்மை-நட்பு; பிரிவின்கண்-நீங்குதல் வரும்போது; பீழை-துன்பம்; தருவது-கொடுப்பது; ஒன்று-ஒன்று; இல்-இல்லை.
|
பெரிதினிது பேதையார் கேண்மை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது:
பரிப்பெருமாள்: மக்கட்குப் பேதையாரது நட்பு மிகவும் இனிது: பிரிந்தவிடத்துத் வருவதொரு துன்பம் இல்லையாதலான்.
பரிதி: பேதையாருறவு நல்லது; அது ஏன் என்னில்;
காலிங்கர்: (8) மிகவும் இனிது இப்பேதையார் நட்பு என்னை காரணம் எனில்;
பரிமேலழகர்: ஆகலான் பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது.
'பேதையாரது நட்பு மிகவும் இனிது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பேதையின் உறவு பெரிதும் இனியது', 'முட்டாள்களின் உறவினால் மிகுந்த இன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிற சமயங்களிலும்', 'அறிவிலார் நட்பு மிகவும் நல்லது', 'அறிவிலார் நட்பு மிகவும் இனியதாகும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பேதையின் உறவு மிகவும் இனியது என்பது இப்பகுதியின் பொருள்.
பிரிவின்கண் பீழை தருவதொன்று இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான்.
மணக்குடவர் குறிப்புரை: இது பேதை காமந்துய்க்குமாறு கூறிற்று.
பரிப்பெருமாள்: பிரிந்தவிடத்துத் வருவதொரு துன்பம் இல்லையாதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காமம் துய்க்குமாறு கூறிற்று.
பரிதி: நல்லோரைப் பிரிந்தால் விதனம் உண்டு; பேதையாரைப் பிரிந்தால் விதனம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அவர் பிரிந்த பிரிவினிடத்து நெஞ்சுக்கு ஒரு துயரம் தருவது யாது ஒன்றும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: பின் பிரிவு வந்துழி அஃது இருவர்க்கும் தருவதொரு துன்பம் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: நாள்தோறும் தேய்ந்து வருதலின் துன்பம் தாராதாயிற்று. புகழ்வார் போன்று பழித்தவாறு. இதனான் அவரது நட்பின் குற்றம் கூறப்பட்டது.
'பிரிந்தவிடத்துத் தருவதொரு துன்பம் இல்லையாதலான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிரியுங்கால் யாதும் வருத்தம் இல்லை', 'அவர்களை விட்டுப் பிரிவது துன்பம் தரக்கூடியதல்ல', 'ஏனெனில் பிரிவு ஏற்பட்டால் ஒரு துன்பமும் அதனால் வருவதில்லை', 'பிரியுமிடத்துத் துன்பம் தரக்கூடியது ஒன்று இல்லை யாதலினால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிரியும்போது துன்பம் தருவது என்று ஒன்று இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பேதையின் உறவு பெரிதினிது; பிரியும்போது பீழை தருவது என்று ஒன்று இல்லை என்பது பாடலின் பொருள்.
ஏன் பெரிதினிது?
|
பேதையுடனான நட்பு முறிந்து போனாலும் நல்லதுதான்.
பேதையின் நட்பு மிகவும் இனிது; எவ்வாறு எனின் அவரது நிலையான பிரிவும் எத்தகைய துன்பமும் தராது ஆதலால்.
நட்பு அதிகாரத்தில் ......உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் (நட்பு 78) என்று ஒத்த உணர்ச்சியே உரிமை நட்பை உண்டாக்கும் எனச் சொல்லப்பட்டது. பின்னர் நட்பாராய்தல் என்ற அதிகாரத்தில் நட்பு கொண்டபோது தெரியாத பேதைமை பின்னர் உணரப்பட்டு அந்நட்பை நீங்குதல் நன்மை பயக்கும் என்று .......பேதையார் கேண்மை ஒரீஇ விடல் (நட்பாராய்தல் 797) எனக் கூறப்பட்டது. இங்கு அவரது தொடர்பு நீங்கினால் துன்பம் தொலைந்தது என மகிழ்ந்துகொள் எனப்படுகிறது.
நல்லநட்பினர் கூடினால் உவகை கொள்வர். இனி இவரை யாம் எப்பொழுது கூடுவோம் என ஒருவர்க்கொருவர் நினைத்துக் கொண்டே பிரிந்து செல்வர். இப்பாடல் பிரிந்து பின் கூடும் நட்பு பற்றியது அல்ல; நட்பை முற்றிலும் விலக்கி நீங்குவதைச் சொல்வது. பழகினவர் யாராயிருந்தாலும் அவரை விட்டுப் பிரிதலென்பது எப்பொழுதும் துன்பந் தருவதே. ஆனால் பேதையரோடு கொண்ட நட்பை விலக்கிப் பிரியும் காலத்தில் அவருடன் நட்புச் செய்தவரது உள்ளம் சிறிதும் கலங்குவதில்லை. பேதையுடனான நட்பானது பிரிந்தால் நட்புச் செய்தார்க்குத் துன்பம் விளையாது; இனிதாகவே இருக்கும். நிலையாகப் பிரிந்தால் இன்னும் இன்பமாம்.
பேதை நன்மை தீமைகளை உய்த்து உணரமுடியாதவன். அதனால் கூடியிருந்த சமயத்தில் துன்பம் தரக் காரணம் ஆகிறான். அத்தகைய பேதையரிடமிருந்து நீங்குவது நன்றானதுதான் என்று வஞ்சப்புகழ்ச்சியாகக் கூறப்பட்ட, அதாவது புகழ்வார் போலப் பழிக்கும் குறள் இது. இக்குறளில் வரும் நகைக்குறிப்பு சுவையானதாக உள்ளது.
பரிமேலழகர் உரையில் 'பேதையாயினார் தம்முட் கொண்ட நட்பு மிக இனிது' எனச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இரு பேதையர் தமக்குள் கொண்ட நட்பு என்ற
பொருளில் அமைகிறது. ஆனால் இது உரைப் பாடபேதமாக இருக்கலாம் என்று கூறி 'பேதையாயினார் தம்முடன் கொண்ட நட்பு' என்ற பாடம் 'தம்முட்கொண்ட' எனப் படிக்கப்பெற்றுப் பதிக்கப்பெற்றிருக்கலாம் என்று தண்டபாணி தேசிகர் இதைத் தெளிவுபடுத்துவார்.
இக்கால வழக்கில் வழங்காத பீழை என்ற சொல் இக்குறள் தவிர்த்து 658, 843 ஆகிய குறள்களிலும் ஆளப்பட்டுள்ளது.
|
பிரிதல் ஏன் பெரிதினிது?
பேதையுடனான உறவு நமது செயல் ஆக்கத்தைக் கெடுக்கவல்லது.
பேதை நன்மை எது தீமை எது என்பதை அறியமாட்டான், அவனுக்கு எதை ஏற்றுக்கொள்வது, எதைத் தள்ளுவது என்பதும் தெரியாது. துன்பத்தைக் கைக்கொண்டு ஆதாயம் தருவதை உதறித் தள்ளுவான். இப்படிப்பட்டவனுக்குப் பிரிவினால் துன்பம் இல்லை. ஆனால் நட்புச் செய்தவனுக்கோ பேதையோடு நட்பு இருந்தவரை பல வகையான துன்பங்களைத் துய்த்தவனாதலால், அவன் பிரிவால் அவனுக்கு இப்போது துன்பம் ஏதும் இல்லை என்பது மட்டுமல்லாமல் அது மகிழ்வதற்கான காலமாகவும் ஆனது.
வாழ்நாளில் நாம் பலருடன் நட்புக்கொள்கிறோம். நட்பு கொண்டபோது ஒருவன் பேதை என்று தெரியாது; தெரிந்திருந்தால் நட்புச் செய்திருக்க மாட்டோம். முன்தெரியாத பேதைமை பின்னர் உணரப்பட்டால் அந்நட்பிலிருந்து எப்பொழுது விலகலாம் என்றுதான் தோன்றும். பழகிவிட்டதால் நட்பை எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணமும் உண்டாகும்.
பேதையினது செயற்பாடுகள் பொறுக்கமாட்டாத அளவு சென்றாலும் நம் தகுதியைக் காப்பதற்கும் பெருங்கேடு உண்டாகா வண்ணம் இருப்பதற்கும் ஆற்றிக் கொள்வதுதான் நல்லது.
அப்பேதை, தானே வெளியேறா விட்டால் 'ஒன்று ஈத்தும், ஒருவுக ஒப்பிலார் நட்பு' என்றதற்கிணங்க ஏதாவது கொடுத்து நீங்கச் செய்யலாம்,
பேதையே பிரிந்து செல்கின்றான் என்றாலோ அல்லது நாமே அவனது தொடர்பை நீக்கிக் கொண்டாலோ, எப்படியென்றாலும் அப்பிரிவு இனிதுதான்; தீராத்துயர் தீர்ந்த பேறாம். தெரியாமல் பழகத் தொடங்கினோம்; நல்ல வேளை; தப்பினோம் என்ற இன்பம் கிடைக்கும். அப்பிரிவு நிலையானது என்னும்போது மகிழ்ச்சி இன்னும்மிக உண்டாகும். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போன்றது என்பதால் அது பெரிதும் இனிதாகிறது.
|
பேதையின் உறவு மிகவும் இனியது; பிரியும்போது துன்பம் தருவது என்று ஒன்று இல்லை என்பது இக்குறட்கருத்து.
பேதைமை உடையாரிடம் கொண்ட நட்பின் பிரிவு தகுவதே.
பேதையின் உறவு பெரிதும் இனியதுதான்; பிரியுங்கால் யாதும் துயரம் தருவது இல்லை அல்லவா!
|