இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0838மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:838)

பொழிப்பு (மு வரதராசன்): பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்துப் பிடித்த ஒருவன் கள் குடித்து மயங்கினாற் போலாகும்.

மணக்குடவர் உரை: முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று, பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.

பரிமேலழகர் உரை: பேதை தன் கை ஒன்று உடைமை பெறின் - பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்; மையல் ஒருவன் களித்தற்று - அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும்.
('பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பேதை தன் கையில் ஒன்றைச் செல்வமாகப் பெற்றால், பித்தன் ஒருவன் கள்ளுண்டு மயங்கினாற் போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதைதன் கையொன்று உடைமை பெறின் மையல் ஒருவன் களித்தற்றால்.

பதவுரை: மையல்-பித்தினை உடைய; ஒருவன்-ஒருவன்; களித்துஅற்றால்-மகிழ்ந்து மயங்கினாற் போலும்; பேதை-பேதை; தன்-தனது; கை-கை; ஒன்று-ஒரு பொருள்; உடைமை-உடைமை; பெறின்-அடைந்தால்.


மையல் ஒருவன் களித்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் பின்பு கள்ளினை நுகர்ந்து களித்தாற் போலாவதொன்று;
பரிப்பெருமாள்: முன்னே பித்தாய் மயங்கிய ஒருவன் மது உண்டு களித்தாற்போலச் செய்வதறியானாம்;
பரிதி: பித்துக் கொண்டவன் களித்தற்கு ஒக்கும்;
காலிங்கர்: முன்னமே பித்து ஏறினான் ஒருவன் பின்னும் கள் உண்டு களித்த அத்தன்மைத்து; யாதோ எனின்;
பரிமேலழகர்: அவன் மயங்குதல் முன்னே பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும்.

'பித்தினை உடையானொருவன் அம்மயக்கத்தின்மேலே மதுவுண்டு மயங்கினாற்போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பைத்தியம் கட்குடித்த நிலை போலாகும்', 'அது பைத்தியம் பிடித்த ஒருவன் கள்ளையும் குடித்துவிட்டால் போலத்தான் இருக்கும்', 'பித்தன் ஒருவன் கள்ளைக் குடித்து மகிழ்ந்தாற்போலக் களிப்படைவான்', 'பித்தம் பிடித்த ஒருவன் (பைத்தியம்) கள்ளுண்டு மயங்கினால் போன்று நடப்பான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பித்து ஏறினான் ஒருவன் கள் உண்டு களித்தாற் போல்வது என்பது இப்பகுதியின் பொருள்.

பேதைதன் கையொன்று உடைமை பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து.
பரிப்பெருமாள்: பேதையானவன் கையகத்தே ஒருபொருள் உடையனாகப் பெற்றானாயின் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருள் பெற்றால் ஒழுகும் திறன் கூறிற்று.
பரிதி: பேதைக்கு ஒரு உடைமை பெறின்.
காலிங்கர்: தான் முன்னமே யாதும் அறியாப் பேதையுமாய்ப் பின்னும் அதன்மேலே தன் கையகத்து ஓர் உடைமையும் (பெறுமாயின்) செய்யும் முறைமை செய்யான் ஆம் என்றவாறு.
பரிமேலழகர்: பேதையாயினான் தன் கைக்கண்ணே ஒன்றனை உடைமையாகப் பெற்றானாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பெறின்' எனவே, தெய்வத்தான் அன்றித் தன்னாற் பெறாமை பெற்றாம். பேதைமையும் செல்வக் களிப்பும் ஒருங்கு உடைமையால் அவன் செய்வன, மையலும் மதுக்களிப்பும் ஒருங்குடையான் செய்வனபோல் தலை தடுமாறும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் செல்வம் எய்தியவழிப் பயன் கொள்ளுமாறு கூறப்பட்டது. [மதுக்களிப்பு - கள்ளுண்டதனாலாய மயக்கம்; தலை தடுமாறும் - முறைதவறும்]

'பேதை தன்கையின்கண் ஒன்றுடையனானவிடத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவிலிக்குப் பொருளும் கிடைக்குமாயின்', 'முட்டாளின் கையில் பொருளும் கிடைத்து விட்டால்', 'அறிவிலாதவன் தன் கையிடமாகப் பொருள் ஒன்று பெற்றால்', 'அறிவிலான் தன் கையில் ஒன்றனை உடைமையாய் பெற்றானாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேதையானவன் தன் கையில் பொருள் ஒன்று பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேதையானவன் தன் கையில் பொருள் ஒன்று பெற்றால் பித்து ஏறினான் ஒருவன் கள் உண்டு களித்தாற் போல்வது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

பேதை இழிவையும் தேடித் தருவான்.

பேதை தன்னிடத்து ஒரு உடைமையைப் பெற்றால், இயல்பிலேயே பித்துக்கொண்டுள்ள ஒருவன் கள்ளைப் பருகியது போல நிலை தடுமாறி ஒழுகுவான்.
ஒருவன் ஏற்கனவே கிறுக்குத்தனம் கொண்டவன். அவன் இவ்வாறுதான் ஒழுகுவான் என்று கணிக்கமுடியாது; ஏறுக்குமாறாக நடப்பவன்; அவன் கள்குடித்தால் என்ன ஆகும்? கொடுமைதான். மயக்கம் இன்னும் தலைக்கேறி அவனிருக்கும் இடமே தாறுமாறாகி விடும். அதுபோல பேதையின் கையில் ஆதாயமான பொருள் ஒன்று கிடைக்கப் பெற்றால், அவன் தலைகால் புரியாமல் தடுமாறுவான். அழிவும் இழிவுமான செயல்கள் ஆற்றத் தொடங்குவான்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

பேதையாரின் மற்றொரு இயல்பு கூறும் பாடல் இது.
பித்தனும் கள்ளின் கிறக்கமும், பேதையும் செல்வக் களிப்பும் ஒப்புக்கூறப்பட்டன. பேதைமையும் செல்வமும் சேர்ந்த சேர்க்கை, பித்தும் கள்ளும் சேர்ந்த சேர்க்கையோடொக்கும் எனச் சொல்லிக் கேட்டின் மிகுதி காட்டப்பட்டது. பித்தனைக் காண்பவர் தனக்கு அவன் ஏதாவது ஊறு செய்துவிடுவானோ என அஞ்சி ஒதுங்குவர். அவன் கள்குடித்தால், தான் என்ன செய்கின்றோம் எனத் தெரியாமல், கண்ணில் பட்டதைச் சிதைத்துக் கூத்தாடுவான். அதுபோல் பேதையின் கையிலே பொருள் ஒன்று கிடைத்தால். அப்பொருள் கிடைத்த களிப்பில் அதை உருட்டித் தெருட்டி பாழ்பண்னிவிடுவான். 'குரங்கு கையில் பூமாலை' என்ற பழமொழி சொல்வது போல தான் பெற்ற பொருளைப் பிய்த்து சின்னாபின்னமாக்கி விடுவான்.
பேதைக்கு கிடைக்கப்பெறும் உடைமை சிறுமையான ஒன்றானாலும் அவனுக்கு அது மிகப்பெரிதாகத் தோன்றும். அதனால் களிப்புற்றுத் தலைகால் புரியாமல் தடுமாறுவான். ஆனாலும் அதை வைத்து பயனுள்ள செயலைச் செய்யத் தெரியாது. அப்பொருள் கொண்டு வெறித்தனமான செயல்களில் ஈடுபடுவான். அவன் என்ன செய்யப்போகிறான் என்று பிறர் அறிந்துகொள்ள முடியாமல் அச்சத்தையும் திகைப்பையும் உண்டுபண்ணுவதுபோல நடப்பான். அவனது பேதைமை மேலும் மிகும்.

உடைமை என்று இங்கே குறிக்கப்படுவது வெறும் பொருட் செல்வம் மட்டும் அன்று: பொதுவாழ்வில் பெறும் பதவிகளும் நல்ல வாய்ப்புகளும் உடைமை என்று கூறுவதில் அடங்கும். மற்ற வாய்ப்புகளையும் இவ்வாறே பேதை பயன்படுத்தத் தெரியாமல் ஆட்டம் போட்டு வீணடிப்பான். இது இக்குறள் கூறும் செய்தி.

பேதையானவன் தன் கையில் பொருள் ஒன்று பெற்றால் பித்து ஏறினான் ஒருவன் கள் உண்டு களித்தாற் போல்வது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உடைமை பெற்ற பேதைமைக்கு களிப்பு வெறி ஏறிவிடும்.

பொழிப்பு

பேதை தன் கையில் பொருள் ஒன்று பெற்றால், பித்தன் ஒருவன் கள்ளுண்டு களித்தாற் போலும்.