இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0837ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:837)

பொழிப்பு (மு வரதராசன்): பேதை பெருஞ் செல்வம் அடைந்தபோது, (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற. அவனுடைய சுற்றத்தார் பசியால் வருந்துவர்.

மணக்குடவர் உரை: அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்; பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து.
இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய, எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர்.
(எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)

தமிழண்ணல் உரை: அறிவிலாப் பேதையானவன் பெருஞ்செல்வத்தை எதிர்பாராமல் அடைவானானால், அச்செல்வத்தை எவ்வித உறவுமற்ற அயலார் உண்டு வயிறு நிறைய, அவனோடு நெருங்கிய அவனது உறவினர் பசியால் வாடுவர். பேதை பெற்ற செல்வம், தன்னை ஏமாற்றும் ஊருக்குப் பயன்படுமே தவிர, உறவுக்குப் பயன்படாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்.

பதவுரை: ஏதிலார்-இயைபில்லார், தொடர்பில்லார்; ஆர-உண்ண, துய்க்க, நிறைய; தமர்-தம்மவர், சுற்றத்தார்; பசிப்பர்-பசியால் வருந்துவர்; பேதை-பேதை; பெருஞ்செல்வம்-பெரிய செல்வம்; உற்றக்கடை-எய்தியவிடத்து.


ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்;
பரிப்பெருமாள்: அசலார் உண்ண, உற்றார் பசித்திருப்பர்;
பரிதி: அயலார் சுகித்திருப்பர்; உறவின் முறையார் பசித்திருப்பர்;
காலிங்கர்: அயலார் பலரும் உண்டு இனிது இருப்பத் தனக்கு இன்றியமையாத சுற்றத்தார் பலரும் பசியோடு வாழ்வர்;
பரிமேலழகர்: தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய, எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். [நிறைய - மன நிறைவாகத் துய்க்க]

'அயலார் உண்ண, உற்றார் பசியாநிற்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அயலவர் கொழுப்பர்; உறவினர் வாடுவர்', 'அயலவர் உண்டு கொழுக்க, உறவினர் பசித்து மெலிவர்', 'அயலார்களோ வயிறார உண்ண, உறவினரும் நட்பினரும் பசியோடிருப்பார்கள்', 'தம்மோடு தொடர்பில்லாதார் நன்கு உண்ண, தம்மோடு தொடர்புடைய சுற்றத்தார் பசித்திருப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அயலவர் நன்கு உண்ண உறவினர் பசியால் வாடுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
பரிப்பெருமாள்: பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இதுபேதை பொருள்பெற்றால் வழங்குந்திறங் கூறிற்று.
பரிதி: பேதை பெருஞ்செல்வம் பெற்ற இடத்து என்றவாறு.
காலிங்கர்: அக்குடிப்பிறந்த பேதையானவன் விதியினால் ஒரு பெருஞ்செல்வம் உற்ற இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி. [தெய்வத்தான் - இங்கு ஆகூழால் எனப்பொருள்படும்]
பரிமேலழகர் குறிப்புரை: எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.

'பேதையானவன் பெரிய செல்வத்தை உற்றவிடத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதை உரிமையால் பெருஞ்செல்வம் பெற்றால்', 'பேதை பெருஞ்செல்வத்தைப் பெற்றால்', 'முட்டாள் ஒருவன் பெருஞ்செல்வம் அடைந்தாலும்', 'அறிவிலான் பெரிய செல்வத்தை அடைந்த பொழுது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேதை பெருஞ்செல்வம் பெற்றபொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேதை பெருஞ்செல்வம் பெற்றபொழுது அயலவர் நன்கு உண்ண உறவினர் வாடுவர் என்பது பாடலின் பொருள்.
அவன் செல்வம்தானே, அதை யாருக்குக் கொடுத்தால் என்ன?

கண்முன்னே உற்றவன் பசித்திருக்க ஊருக்கெல்லாம் பெருவிருந்து படைப்பான் பேதை.

பேதை பெரும் செல்வம் பெற்றால் தொடர்பு இல்லாத பலரும் நன்கு துய்க்க, அவனுடைய சுற்றத்தார் பசியால் வாடுவர்.
செல்வம் ஒரு நொடியில், இடம் மாறத்தகும் தன்மையது. அது யார்க்கும் எந்நிலைக் கண்ணும் வந்து சேரலாம். பேதை ஒருவனுக்கு நல்லூழால், எதிர்பாராமல் திரண்ட செல்வம் கிடைத்துவிடுகிறது. அதை வைத்து அவன் என்ன செய்வான்? அவனுக்கு யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது. எவர் எவரோ வந்து கொண்டாட்டமாய்த் தின்றுவிட்டுப் போவார்கள்; ஆனால் அவனைச் சார்ந்தவர்கள் ஒன்றும் கிடைக்காமல் பசித் துன்பத்தால் வாடுவார்கள். அவனுடைய பேதைமையால் அந்தச் செல்வம் வேண்டியவர்களுக்கு உதவாமல் வீணாகும்.

பெருஞ்செல்வம் உற்றக் கடை எனச் சொல்லப்பட்டதால் அது அவன் உழைத்து ஈட்டியது அல்ல; அது ஆகூழால் கிடைக்கப்பெற்றது என்பது பெறப்படும். ஏதிலார் என்ற சொல் முன்பின் அறியாதாரைக் குறிக்கும்.

அவன் செல்வம்தானே, அதை யாருக்குக் கொடுத்தால் என்ன?

பேதையானது முயற்சியானும் அறிவாற்றலானும் அல்லாமல், ஆகூழால், வந்தாலும் அது அவனுக்குரிய செல்வம்தானே? அதை அவன் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் செலவழித்தால் என்ன?
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு.... (இல்வாழ்க்கை 43) என்ற பாடலிலுள்ள ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிக்கும். அங்கு சுற்றம் காப்பது இல்வாழ்வான் கடமை என உணர்த்தப்பெற்றது. செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சுற்றத்தாரைத் தழுவி ஒம்புதல் வேண்டும். தன் குடியை ஓம்பிய பின்னும் செல்வ வலியுடையவன், நெருங்கிய பிறகுடிகளையும் பேணிக்காக்க வேண்டும். அதாவது இல்லறத்தான் தன் உறவுக் குடும்பம் காப்பதையும் இன்னொரு கடனாகக் கொள்வான். அதற்குச் சுற்றந் தழுவும் நல்லுணர்ச்சி இருக்க வேண்டும். ஆனால் பேதையானவன் பெருஞ்செல்வம் கிடைக்கும்பொழுது ஆரவார உணர்ச்சி பெருகி கண்மண் தெரியாமல் அதைச் செலவழிப்பான்; தன் வீட்டார் பட்டினி கிடக்க ஊரார்க்கெல்லாம் நாளும் பெருவிருந்து வழங்கிக் கொண்டாடிக் கொண்டிருப்பான்.
வறியஉறவினரைப் பேணுதல், தன்னை உலகத்தார்க்குக் காட்டிக்கொள்வதற்காக ஆரவாரமாகச் செலவழித்தல் என்றிவற்றில் சுற்றத்தைப் பேணுவதே முதன்மையாக இருக்கவேண்டும் என்பது பேதைக்குத் தெரிவதில்லை. தனக்குரிய செல்வத்தைத் ஒருவன் தன் விருப்பப்படி செலவழிக்கலாம் என்றாலும் தமக்கு உற்றவர் பசியுடன் இருக்கும்போது அயலார்க்குப் பெருஞ்சோறு கொடுப்பது பேதைத்தன்மையாம். பேதைமைக்குச் செல்வத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாது என்று சொல்ல வந்தது இக்குறள்.

பேதை பெருஞ்செல்வம் பெற்றபொழுது அயலவர் நன்கு உண்ண உறவினர் வாடுவர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பேதைமை உற்றார் உறாதார் வேறுபாடு அறியாது.

பொழிப்பு

பேதை பெருஞ்செல்வம் பெற்றால் அயலவர் மன நிறைவாக உண்ண, உறவினர் வாடுவர்.