இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0836பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:836)

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கநெறி அறியாத பேதை ஒரு செயலை மேற் கொண்டால் (அந்தச் செயல் முடிவுபெறாமல்) பொய்படும்; அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

மணக்குடவர் உரை: ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின், அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும்.
புனைபூணல் - சிறைபடுதல்.

பரிமேலழகர் உரை: கை அறியாப் பேதை வினைமேற் கொளின் - செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின், பொய்படும் ஒன்றோ புனைபூணும் - அதுவும் புரைபடும், தானும் தளை பூணும்.
(புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: செயலாற்றும் முறைமை அறியாத பேதை ஒருவன், தனக்கு எல்லாம் தெரிந்ததுபோல் மேற்கொள்வானானால், அவன் நிலை பொய்யாகிப் போகும்; அதுமட்டுமா? அவனும் கைகளில் தளை பூட்டப்பட்டுச் சிறைப்படுவான். வெளிவர முடியாத சிக்கலில் மாட்டிக் கொள்வான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கையறியாப் பேதை வினைமேற் கொளின் பொய்படும் ஒன்றோ புனைபூணும்.

பதவுரை: பொய்படும்-தப்பும், பொய்யாய்விடும், புரைபடும் (பின் ஆகாவகை உள்ளழிதல்); ஒன்றோ-அதுமட்டுமா?; புனை-தளை, விலங்கு; பூணும்-மாட்டிக்கொள்ளும்; கையறியா-செய்முறை அறியாத, செய்ஒழுக்கம் அறியாத; பேதை-பேதை; வினை-செயல்; மேற்கொளின்-மேற்கொண்டால்.


பொய்படும் ஒன்றோ புனைபூணும் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பொழுது பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும்;
மணக்குடவர் குறிப்புரை: புனைபூணல் - சிறைபடுதல்.
பரிப்பெருமாள்: அஃது ஒன்றில் தப்பும்; ஒன்றில் செய்ய வல்லாரைத் தேடும். அல்லது தான் செய்து முடிக்க மாட்டான்;
பரிதி: பேதை பொய் சொல்வான் என்றதும் ஒன்றோ! உன்னை நம்போம்; வேறே யாம் புனையாகச் சொல்லியவை என்று வார்த்தையுங் கேட்பர்;
காலிங்கர்: அது பொய்யாய்விடும் ஒன்றோ; அன்றி இனி ஒன்றோ மேல் விளைவது அறியாது பிறர்க்குத் தான் புனையாதலைத் தன் மேலே ஏறட்டுக் கொள்ளும்;
பரிமேலழகர்: அதுவும் புரைபடும், தானும் தளை பூணும்;
பரிமேலழகர் குறிப்புரை: புரைபடுதல் - பின் ஆகாவகை உள்ளழிதல். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். அதனையும் கெடுத்துத் தானும் கெடும் என்பதாம். இதனான் அவன் செல்வம் படைக்குமாறு கூறப்பட்டது.

'பொய்யனென்னவும் பட்டுப் பிறர்க்குப் புனைபூணும்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவர் இப்பகுதிக்கு உரை நல்கினார். பரிப்பெருமாள் 'ஒன்றில் தப்பும்; ஒன்றில் செய்ய வல்லாரைத் தேடும். அல்லது தான் செய்து முடிக்க மாட்டான்' என்றார். 'பொய் சொல்வான் என்றதும் ஒன்றோ! உன்னை நம்போம்; வேறே யாம் புனையாகச் சொல்லியவை என்று வார்த்தையுங் கேட்பர்' என்பது பரிதியின் உரை. காலிங்கர் 'அது பொய்யாய்விடும் ஒன்றோ; அன்றி இனி ஒன்றோ மேல் விளைவது அறியாது பிறர்க்குத் தான் புனையாதலைத் தன் மேலே ஏறட்டுக் கொள்ளும்' என உரை செய்தார். பரிமேலழகர் 'புரைபடும், தானும் தளை பூணும்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொய் சொல்வான்; கைவிலங்கும் கொள்வான்', 'பொய் சொல்வது மட்டுமன்றிக் கையில் விலங்கும் மாட்டிக் கொள்வான்', 'அதனால் அவன் செய்யத் தெரியும் என்று சொன்னது பொய்யாவது ஒன்றோடல்லாமல் அந்த காரியமும் மற்றவர்களும் செய்ய முடியாதபடி சிக்குண்டாகிக் கெட்டுவிடும்', 'செய்வதும் பொய்யாய் வழுவடைதன் மாத்திரமன்றித் தானும் விலங்கு பூணுவான்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொய்யாய் விடுவது மட்டுமன்றி சிறைப்பட்டும் போவான் என்பது இப்பகுதியின் பொருள்.

கையறியாப் பேதை வினைமேற் கொளின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கமறியாதா னொருபேதையான் ஒருகருமத்தை மேற்கொண்டானாயின்.
பரிப்பெருமாள்: பயன் அறியாப் பேதை ஒரு வினையை மேற்கொள்வன் ஆயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருள் செய்யும் திறன் கூறிற்று.
பரிதி: பேதை ஒரு காரியம் செய்யப் புகின் என்றவாறு.
காலிங்கர்: அவ்வினை செய்யத் தகும் ஒழுக்கம் அறியாப் பேதையானவன் ஒரு வினை செய்ய ஒருப்படும் ஆயின். [ஒருப்படும் ஆயின் - ஒப்புவானாயின்]
பரிமேலழகர்: செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின்,

'ஒழுக்கமறியாத/பயன் அறியாத/ செய்யும் முறைமை அறியாத பேதை ஒரு கருமத்தை மேற்கொள்வானாயின்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'செயலறியாத பேதை செய்யப் புகுந்தால்', 'செயல்முறை யறியாத பேதை ஒரு காரியத்தைச் செய்ய மேற்கொண்டால்', 'செய்யத் தெரியாத முட்டாள் செய்யத் தெரிந்ததாக காரியத்தை மேற்கொள்வான்', 'ஒன்றைச் செய்யும் வகையறியாத, அறிவிலி ஒரு காரியத்தை மேற்கொண்டால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செய்முறை அறியாப் பேதையானவன் செயல் மேற்கொள்வானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்முறை அறியாப் பேதையானவன் செயல் மேற்கொள்வானாயின் பொய்யாய் விடுவது மட்டுமன்றி புனைபூணும் என்பது பாடலின் பொருள்.
'புனைபூணும்' குறிப்பது என்ன?

செய்யத் தெரியாத தொழிலையும் செய்வதற்கு முற்படுவான் பேதை.

செய்முறை யறியாத பேதை ஒரு செயலைச் செய்ய மேற்கொள்வானாகில் அந்தச் செயல் தோல்வியில் முடிவதோடு தானும் தளைபூணுகின்ற துயரத்தை அடைவான்.
செய்யத் தெரியாத செயலையும் பேதை மேற்கொள்வான்; அதனால் அவன் எடுத்துச் செய்யும் செயல் முடிவு பெறாமலே பொய்த்துப்போகும். அது மட்டும் அல்ல, தனக்குத் தானே சிறையிட்டுக் கொள்ளும் குற்றத்தையும் ஏற்படுத்திக்கொள்வான். அவனை நம்பி எச்செயலையும் ஒப்படைக்க முடியாது. தாறுமாறான தவறுகளைச் செய்து, சிக்கல்களை உண்டாக்கி, செயல் முடிவுறாதபடி செய்து, அதிலிருந்து வெளியேறமுடியாதபடி அடைபட்டுப் போவான். அதாவது ஆழம் தெரியாமல் காலை விட்டு மாட்டிக் கொள்வான். பேதை ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால் செயலும் கெட்டு, அவனும் கெட்டுப் போவான்.

பொய்படும் என்பது செயல் முடிவுபெறாமலே பொய்த்துப் போய்விடுவதைக் குறிக்கும். தெரியாத தொழிலைத் தெரியும் என்று சொல்லி மேற்கொள்வதால் பொய்யன் ஆவன் என்றும் பொய்படும் என்பதற்குப் பொருள் கூறுவர். கையறியா என்றதற்கு செய்யும் முறைமை அறியாத என்றும் செய்ஒழுக்கம் அறியாத என்றும் பொருள் கூறுவர். இன்றும் வழக்கில் உள்ள 'கை பார்ப்பது' என்னும் தொடர் ஒழுங்காக/சரியாக உள்ளதா என ஆய்வதைக் குறிக்கும்.

‘பொய்படும் ஒன்றோ புனை பூணும்’ என்பது ......அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு (148), பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க...... (805) என்னும் குறள் நடையை ஒத்தது. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் மட்டுமன்று ஆன்ற ஒழுக்கமுமாம் என்றும் நோதக்க நட்டார் செயின் அதற்குக் காரணம் பேதைமை மட்டுமன்று பெருங்கிழமையுமாம் என்றும் பொருள் கொள்ளுதல் போலப் பேதை வினை மேற்கொளின், பொய்படுதல் மட்டுமன்று தளையும் பூணும் என இரண்டு விளைவுகள் உண்டாவதாகக் கொள்ளவேண்டும்.

'புனைபூணும்' குறிப்பது என்ன?

'புனைபூணும்' என்றதற்குப் பிறர்க்குப் புனைபூணும், புனையாகச் சொல்லியவை, பிறர்க்குத் தான் புனையாதலைத் தன் மேலே ஏறட்டுக் கொள்ளும், புரைபடும், தானுங் குற்றத்தை அடைவான், தானும் இகழ்ச்சியாகிய பூணைப்புனையும், குற்றவாளியாகித் தளை பூணுவான், கைகளில் தளை பூட்டப்பட்டுச் சிறைப்படுவான், இகழ்ச்சியை அணியாகப் பெறுவான், கைவிலங்கும் கொள்வான், கையில் விலங்கும் மாட்டிக் கொள்வான், மற்றவர்களும் செய்ய முடியாதபடி சிக்குண்டாகிக் கெட்டுவிடும், நிறைவேறாமைக்குப் பிறர் மேல் பழிபுனைந்துரைத்தலும் செய்யும், தானும் விலங்கு பூணுவான், அவனும் விலங்கு அணிவான், கை விலங்கில் சிக்குவான், அந்தச் செயலாலேயே அவனும் அவமானமடைவான் எனப் பலவேறுபட்ட வகையில் உரையாளர்கள் பொருள் கூறினர்.

பெரும்பான்மையர் இத்தொடர்க்குத் 'தொழிலைச் செய்த தானும் விலங்கு பூட்டப்படுவான்' என்று பொருள் கூறினர். பரிதியின் உரை 'பொய் சொல்வான். வேறே யாம் புனையாகச் சொல்லியவை என்று வார்த்தையுங் கேட்பர்'; இது 'பேதையை வினைக்கண் ஈடுபடுத்தினவர் அவன் பொய் சொல்வான் என்பதையும், யாம் புனைந்துரையாகச் சொல்லியன இவை என்பதையும் கேட்பர்' என்ற கருத்துடையது. பரிப்பெருமாள் உரை 'பயன் அறியாப் பேதை ஒருசெயலை மேற்கொள்வானாயின். அதில் தவறு செய்வான், தன்னால் அதனை முற்றமுடிக்க மாட்டாமையான் செய்யக்கூடிய ஒருவரைத் தேடத் தொடங்குவான், இவையன்றித் தானே நேரே செய்து முடிக்கமாட்டான். எனவே அவனுக்குப் பொருள் செய்யத் தெரியாது' என்கிறது. 'தான் பிறர்க்குப் புனையாவான்' என்பது காலிங்கர் உரை.
பிறருக்காகச் சிறையும் புகும், பிறர்மேல் பழி புனைந்துரைத்தல் செய்யும் எனவும் புனைபூணும் என்பதற்கு விளக்கம் செய்தனர்.

புனைபூணல் என்றதற்கு மணக்குடவர் சிறைபடுதல் எனப் பதவுரையும் கூறியுள்ளார். இதற்கு விலங்கு பூண்டு சிறைப்படுதல் என்பது பொருளாகலாம்.
இக்குறள் பேதைக்குப் பொருள் செய்யும் திறன் இல்லை என்பதைச் சொல்லவந்தது. எனவே தொழில் செய்யும்போது குற்றப்பட்டுக் கைகளில் தளை பூட்டப்பட்டுச் சிறைப்படுவான் என்பதினும் செய்யத் தெரியாத தொழிலை மேற்கொண்டு, பிழைசெய்து, அதைக் குளறுபடி பண்ணி, அதிலிருந்து வெளியேறமுடியாதபடி சிக்கிக் கொள்வான் என்பது பொருத்தம். அதாவது புனைபூணும் என்றதற்குப் பேதை தனக்குத்தானே விலங்குகளைப் பூட்டிக் கொள்ளும் என்ற பொருள் தகும்.

செய்யும்முறை அறியாப் பேதையானவன் செயல் மேற்கொள்வானாயின் பொய்யாய் விடுவது மட்டுமன்றி சிறைப்பட்டும் போவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பேதைமையுடையவனுக்குப் பொருள் செய்யத் தெரியாது.

பொழிப்பு

செயல்முறை யறியாத பேதை ஒரு செயலை மேற்கொண்டால், அது பொய்யாய்விடுவது மட்டுமன்றி தனக்குத்தானே விலங்கும் மாட்டிக் கொள்வான்.