இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0834



ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:834)

பொழிப்பு (மு வரதராசன்): நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாத பேதைபோல் வேறு பேதையர் இல்லை.

மணக்குடவர் உரை: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.

பரிமேலழகர் உரை: ஓதி - மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும்; உணர்ந்தும் - அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்து இல்லை.
(உம்மை முன்னும் கூட்டப்பட்டது. இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப.)

தமிழண்ணல் உரை: நூல்களைக் கற்று அவற்றின் நுண்பொருள்களை அறிந்தும், அங்ஙனம் கற்றவற்றைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தான் அப்புலமைக்கேற்ப ஒழுகாத பேதையைப்போல் அறிவிலாப் பேதையர் உலகில் வேறு யாரும் இலர். மற்றவர்க்குப் போதித்துவிட்டு, தாம் மட்டும் அவ்வாறு நடக்காதவர்களே உலகில் பலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல்.

பதவுரை: ஓதி-கற்று; உணர்ந்தும்-தெரிந்தும்; பிறர்க்கு-மற்றவர்க்கு; உரைத்தும்-சொல்லியும்; தான்-தான்; அடங்கா-அடங்கியொழுகாத; பேதையின்-பேதைபோல; பேதையார்-பேதையார்; இல்-இல்லை.


ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும்; [இசையச் சொல்லி - பொருந்தச் சொல்லி]
பரிப்பெருமாள்: நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும்;
பரிதி: சகல சாஸ்திரங்களையும் ஓது உணர்ந்தும் பிறர்க்குச் சொல்லியும்; [சகல சாஸ்திரங்கள் - நூல்கள் அனைத்தும்]
காலிங்கர்: கற்கக்கடவ நூல்கள் அனைத்தையும் கற்றும் அவற்றின் பொருள் முழுவதும் உணர்ந்தும், மற்று அவை பிறர்க்கு இவ்வண்ணமே உரைத்தும்; [கற்கக் கடவ நூல்கள் - கற்றற்குரிய நூல்கள்]
பரிமேலழகர்: மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும் அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும் அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்;
பரிமேலழகர் குறிப்புரை: உம்மை முன்னும் கூட்டப்பட்டது. [உணர்ந்தும் என்னும் உம்மையை ஓதி என்பதனோடும் கூட்டி ஓதியும் என்று உரைக்கப்பட்டது]

'நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'மனமொழி மெய்கள் அடங்குதற்கு ஏதுவாய நூல்களை ஓதியும் அவ்வடக்கத்தான் வரும் பயனை உணர்ந்தும் அதனை அறியலுறப் பிறர்க்கு உரைத்தும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்றும் உணர்ந்தும் கற்பித்தும்', 'நூல்களைக் கற்றும், தெளிந்தும், பிறர்க்குத் தெளிவாக எடுத்துக்கூறியும்', 'பல நூல்களைக் கற்றிருந்தும், கல்வியின் பயனை உணர்ந்திருந்தும், கல்வியறிவைப் பிறருக்கு உபதேசம் செய்தும்', 'நூல்களைக் கற்று அறிந்தும், பிறர்க்கு அவற்றைச் சொல்லியும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கற்றும் அறிந்தும் பிறர்க்கு எடுத்துக்கூறியும் என்பது இப்பகுதியின் பொருள்.

தானடங்காப் பேதையின் பேதையார் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை.
பரிப்பெருமாள்: தான் அடங்குதலைச் செய்யாத பேதையைப் போலப் பேதையார் உலகத்து இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: கல்வி உடையாரை அறிவுடையார் என்று உலகத்தார் கூறுவர் ஆதலின் அதனை மறுத்துக் கூறாராயினும் அடக்கம் இல்லையாயின் பேதையர் என்று கூறப்பட்டது.
பரிதி: தாம் அடங்காத பேதையினும் பெரிதான பேதையில்லை என்றவாறு.
காலிங்கர்: பின்னும் தான் அமைவு உடையன் ஆகாதான் யாவன்; அவனைப் போலப் பேதைமை உடையான் உலகத்து யாவரும் இல்லை.
பரிமேலழகர்: தான் அவையடங்கி ஒழுகாத பேதைபோல பேதையார் உலகத்து இல்லை. பரிமேலழகர் குறிப்புரை: இப்பேதைமை தனக்கு மருந்தாய இவற்றால் தீராமையானும், வேற்று மருந்து இன்மையானும், 'பேதையின் பேதையார் இல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பேதையது தொழில் பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்பு வகையால் கூறுப. [மருந்தாய - தீர்த்தற்குரிய; வேற்றுமருந்து இன்மையாலும்-பேதைமை ஒழிப்பதற்கு ஓதுதல் முதலியவன்றி வேறு மருந்து இல்லாமையாலும்]

'தான் அடங்குதலைச் செய்யாத பேதையார்போலப் பேதையார் உலகத்தில் இல்லை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'அவையடங்கி ஒழுகாத பேதை' பற்றிப் பேசுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தான்மட்டும் அடங்காத அறிவிலிபோல் அறிவிலி இல்லை', 'தன்னடக்கங் கொள்ளாத பேதை போலச் சிறந்த பேதையார் உலகத்தில் இல்லை', 'தான் அடங்கி நடக்காத முட்டாளைப் போன்ற முட்டாள்கள் வேறில்லை', 'தான் அவற்றிற்கேற்ப அடங்கி ஒழுகாராய் இருக்கும் அறியாதாரைப் போல அறியாதார் இலர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தான் அவற்றிற்கேற்ப ஒழுகாராய் இருக்கும் பேதை போலப் பேதையார் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றும் அறிந்தும் பிறர்க்கு எடுத்துக்கூறியும் தான் அவற்றிற்கேற்ப ஒழுகாராய் இருக்கும் பேதை போலப் பேதையார் இல்லை என்பது பாடலின் பொருள்.
கற்றவர் எப்படி பேதை ஆவார்?

கல்வியறிவு பெரிதும் கொண்டவரும்கூட பேதையாய் நடந்து கொள்கின்றனர்.

நூல்களைக் கற்றும், அவைகளை நன்கு உணர்ந்தும், கற்றுத் தெரிந்தவைகளைப் பிறர்க்குச் சொல்லி வந்தும், தாம் நின்று அடங்கி ஒழுகாத பேதையரைப் போன்ற பேதையார் உலகத்தில் இல்லை.
ஓதியது என்றால் படித்தது என்று பொருள்படும்; ஓதுதல் என்பதற்கு உரக்கச் சொல்லி உளத்திருத்தல் என்றும் பொருள் கூறுவர். அப்படி ஓதுவது, படித்ததன் பொருளை அறிந்துகொள்வது, அவற்றைப் பிறர்க்கு எடுத்துச்சொல்வது எல்லாம் ஒருவன் நன்கு ஒழுகுவதற்குத் துணை செய்தல் வேண்டும். இவற்றைப் பெற்றவன் பக்குவம் அடைந்து அறிந்தவற்றின்படி அடங்கி நடப்பான். அப்பொழுதும் அடங்காதானை, 'பேதையிற் பேதை' என்று கடுமையாகச் சாடுகிறார் வள்ளுவர்.
கல்லாதவன் கற்றால் திருந்தும் வாய்ப்பு உண்டு. படித்த பேதையோ யார் சொன்னாலும் கேட்கமாட்டான். வறட்டுப் பிடிவாதமாக இருந்து, அடங்காமல், மேலும் தன் பேதைமையைக் கூட்டிக் கொள்வான். பேதைமை ஒழிதற்குப் பதிலாக இவன் இன்னும் பேதையாகிக் கொண்டே போகிறான். இதனால்தான் பேதைமையை விலக்கக்கூடிய இம்மூன்றனையும் பெற்றிருந்தும் பேதையாயிருப்பவன் 'பேதையிற் பேதை' என்று பழிக்கப்படுகிறான். அவனைப் போன்ற பேதை உலகத்தில் வேறு யாரும் இல்லை அதாவது பேதைகளில் தலைமையானவன் என்கிறார் வள்ளுவர்.
தண்டபாணி தேசிகர் அடங்கா என்றதற்கு மனம் அடங்கா எனப் பொருள் கண்டு 'கற்றலும் அதனைப் பலகாற் கருதி உணர்தலும் மனம் அடங்க முதன்மையான வழிகள்; ஆதலின் அது செய்யாதானைப் பேதை என்றும், பிறர்க்கு உரைத்தக்கால் தான் நில்லாது பிறர்க்கு உரைக்க வந்து விட்டானே என்று பிறர் ஏளனம் செய்வார்களே என்று கருதியாவது அடங்கவேண்டியிருக்க அதுவும் செய்யாதவன் பெரும்பேதை என்றும் கூறினார்' என இக்குறளுக்கு விளக்கம் தந்தார்.

கற்றவர் எப்படி பேதை ஆவார்?

இவ்வதிகாரத்தில் பேதைமை என்ற சொல் அறிவற்றதைக் குறியாது; அறிவிருந்தும் பயன்படாத தன்மையையே காட்டுவதாகும். அதாவது பேதைமை என்பது அறிவுடைமைக்கு எதிர்ச்சொல் அல்ல. பேதைமை அதிகாரத்திலுள்ள அனைத்துப் பாடல்களையும் ஆராய்ந்தால் பேதைமை என்ற சொல்லால் வள்ளுவர் முழு மூடத்தனத்தைக் குறிக்கவில்லை என்பது விளங்கும். எந்த விதமான அறிவும் இல்லாத ஒரு மூடனை வள்ளுவர் பேதை என்ற சொல்லால் சுட்டவில்லை என்று இக்குறளும் தெரிவிக்கிறது. பிறர்க்கு எடுத்துக் கூறுமளவு பெரு நிலையில் வைக்கப்பட்டிருக்கும் ஓதி உணர்ந்தவர்களிலும் கற்றதைப் பயன்படுத்தத் தெரியாத பேதையார் உண்டு எனச் சொல்லும் இப்பாடல் அதற்கு ஓர் சான்றாகிறது. கல்வி பெற்றவர் எல்லாரும் அறிவாளிகள் அல்லர்.

படித்தும், அதை நன்கு உணர்ந்தும், மற்றவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லியும் கற்றவற்றைத் தனக்குப் பயன்படுத்தத் தெரியாததால் அவன் பேதை ஆகிறான்.

கற்றும் அறிந்தும் பிறர்க்கு எடுத்துக்கூறியும் தான் அவற்றிற்கேற்ப ஒழுகாராய் இருக்கும் பேதை போலப் பேதையார் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கற்றவற்றைப் பயன்படுத்தத் தெரியாதது பேதைமை.

பொழிப்பு

கற்றும் தெளிந்தும் பிறர்க்கு எடுத்துக்கூறியும் தான்மட்டும் அவற்றிற்கேற்ப ஒழுகாராய் இருக்கும் பேதை போலப் பேதையார் இல்லை.