இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0833நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:833)

பொழிப்பு (மு வரதராசன்): தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.

மணக்குடவர் உரை: நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையார் தொழில்.
இது பேதையார்செயல் கூறிற்று.

பரிமேலழகர் உரை: நாணாமை - நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும்; நாடாமை - நாடவேண்டுமவற்றை நாடாமையும்; நார் இன்மை - யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும்; யாதொன்றும் பேணாமை - பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்; பேதை தொழில் - பேதையது தொழில்.
(நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: வெட்கமின்மை நாட்டமின்மை உறுதியின்மை பேணுதலின்மை பேதையின் இயல்புகள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில்.

பதவுரை: நாணாமை-வெட்கப்படாமை; நாடாமை-நாடியறியாதிருத்தல்; நாரின்மை-அன்பு இல்லாமை; யாதொன்றும்-எந்த ஒன்றும், சிறிதாயினும்; பேணாமை-விரும்பிக் கொள்ளாமை; பேதை-பேதை; தொழில்-செயல்.


நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும்;
பரிப்பெருமாள்: நாணம் இன்மையும், தெரிந்துணராமையும், ஈரமின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும்;
பரிதி: நாணுதலின்மை, காரியம் எண்ணாமை, கிருபை இன்மை, யாதொரு பண்டமும் பேணாமை ஆகிய இந்நாலு குணமும்;
காலிங்கர்: செய்யத் தகாதன செய்தால் பிறர் சிரிப்பர் என்று நாணம் இல்லாமையும், நன்மையும் தீமையும் ஆராயாமையும், யாவர்மாட்டும் தன் நெஞ்சத்தோடு நட்பும் நயமும் இல்லாமையும் தவமும் ஞானமும் கல்வியும் முதலிய பெரும்பேறுகளில் யாதானும் ஒன்று தனக்கு வேண்டும் என்று பேணிக் கொள்ளாமையும் இப்படிச் சொல்லப்பட்டவை எல்லாம் மதிமயக்கை உடையது யாது; [மதி மயக்கை - அறிவை மயக்குவது]
பரிமேலழகர்: நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும் நாடவேண்டுமவற்றை நாடாமையும் யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும் பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்;
பரிமேலழகர் குறிப்புரை: நாணவேண்டுபவை - பழி பாவங்கள். நாடவேண்டுபவை - கருமங்களில் செய்வன தவிர்வன. முறிதல்: கண்ணறுதல். பேண வேண்டுமவை: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம் முதலாயின. [கண்ணறுதல் - கண்ணோட்டம் இல்லாமை]

'நாணவேண்டுமவற்றுக்கு நாணாமையும் நாடவேண்டுமவற்றை நாடாமையும் யாவர்மாட்டும் முறிந்தசொல் செயலுடைமையும் பேண வேண்டுமவற்றுள் யாதொன்றனையும் பேணாமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழிபாவங்கட்கு வெட்கப்படாமை, செய்வனவற்றை ஆராயாமை, உயிர்களிடத்து அன்பின்மை, காத்தற்குரிய ஒழுக்கம், கல்வி முதலியவற்றுள் எதனையும் காவாமை ஆகியவை', 'பழிபாவங்களுக்குக் கூசாமை, நன்மை தீமைகளை ஆராயாமை, அன்பில்லாமை, எந்தக் கொள்கையையும் கடைப்பிடித்துக் காரியம் செய்யாமை இவைகள் உள்ளது', 'வெட்கப்பட வேண்டியதற்கு வெட்கப்படாமையும், தேடியடைய வேண்டியதைத் தேடாமையும், அன்பு செய்தற்கு உரியர்பால் அன்பில்லாமையும், பேண வேண்டிய எதனையும் போற்றாமையும்', 'வெட்கப்படாமை, ஆராயாமை, அன்பின்மை, எதனையும் போற்றாமை ஆகிய இவை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், அன்பின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் என்பது இப்பகுதியின் பொருள்.

பேதை தொழில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதையார் தொழில்.
மணக்குடவர் குறிப்புரை: இது பேதையார்செயல் கூறிற்று.
பரிப்பெருமாள்: பேதையார் தொழில்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பேதையார் தொழில் கூறிற்று. இவை நான்கினானும் பேதையார் இலக்கணம் கூறியவாறு.
பரிதி: பேதை தொழில் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுவே பேதைதன் தொழில் என்றவாறு.
பரிமேலழகர்: பேதையது தொழில்.
பரிமேலழகர் குறிப்புரை: இவை பேதைமைக்கு எஞ்ஞான்றும் இயல்பாய் வருதலின் 'தொழில்' என்றார்.

'பேதையார் தொழில்/பேதையது தொழில்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவிலியின் செயல்களாம்', 'முட்டாளின் நடத்தை', 'அறிவிலான் செயலாகும்', 'அறியாதாரின் தொழில்களாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேதையது தொழில் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், அன்பின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையது தொழில் என்பது பாடலின் பொருள்.
'தொழில்' என்ற சொல் குறிப்பதென்ன?

பேதையானவன் யாதொன்றையும் பொருட்படுத்த மாட்டாதவனாயிருப்பான்.

பழிக்கு வெட்கப்படாமை, வேண்டியவற்றைத் தேடிப் பெறாமை, அன்பின்மை, எதனையும் பாதுகாவாமை என்றிவை பேதையின் தொழில்கள்.
நாணாமை:
இச்சொல்லுக்கு ஒவ்வாத செயல்களில் நாணுதல் இல்லாமை என்பது பொருள். செய்யத் தகாதன செய்தால் பிறர் எள்ளுவர், இழிப்பர் என்று நாணம் கொள்ளாமை. பேதைக்கு வெட்கம், நாணம் இல்லை; அவன் தகாதவைகளைச் செய்ய நாண மாட்டான். பழி தீச்செயல்கள் செய்வதற்கு வெட்கப்படுவதில்லை.
நாடாமை:
தக்க கடமைகள் எவை என்றோ, தள்ளத்தக்கனவை, கொள்ளத்தக்கனவை எவை என்று ஆராயாமலிருப்பதைக் குறிப்பது, பேதையானவன் நாடி அடைய வேண்டியவற்றைத் தேடித் பெறாமலும் இருப்பான்.
நாரின்மை:
யாரிடத்திலும் அன்பு இல்லாமல் நடப்பது. யாவர்மாட்டும் ஒட்டுதல் இல்லாமல் இருப்பதைக் குறிப்பது. பேதையர் எவரிடத்திலும் கண்ணோட்டமின்றித் தன் விருப்பப்படி நடந்துகொள்வர்; கடுகடுத்துப் பேசுவர். பெற்றோர், மனைவி, பிள்ளைகள் இவர்களையும் அன்புடன் நடத்தமாட்டதவராவர். இதனால் எல்லோர் உறவையும் எளிதில் முறித்துக்கொண்டுவிடுவர்.
பேணாமை:
இது போற்றத்தக்கது எதனையும் போற்றாமல் விடுவதைச் சொல்வது, குடிப்பிறப்பு, பெருமை, ஒழுக்கம், நல்லநட்பு, வளம் முதலியவற்றைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியாமலிருப்பது குறித்தது. யாதொரு பொருளையும் கட்டிக்காக்கத் தெரியாமல் இருப்பான் பேதை.
இவை யாவும் பேதைக்கான அடையாளங்களாகும். இவை பேதைக்கு இயல்பாய் வருவதால் அவற்றைத் தொழில் என்கிறது குறள்.

'தொழில்' என்ற சொல் குறிப்பதென்ன?

இப்பாடலிலுள்ள தொழில் என்றதற்குத் தொழில், இயல்பு, செயல் எனப் பொருள் கூறினர். தொழில் என்பதற்கு நேர்பொருள் செயல் என்பது. இங்கு இயல்பு என்ற பொருளில் ஆளப்பட்டது.
நாணாமை நாடாமை நாரின்மை பேணாமை என்றிவை இயற்கைக் குணம் அல்லது வழக்கச் செயல் என்பது பற்றித் 'தொழில்' எனச் சொல்லப்பட்டது. 'நாணாமை முதலியன எதிர்மறைத் தொழிற் பண்புப் பெயர்கள். நாணாமையால் வளருவன தீச்செயல்கள், நாடாமையின் தொழில் அறியாது எதனையும் இயற்றுதல், நாணின்மையின் தொழில் 'நல்லார் தொடர் கைவிடல்'. யாதொன்றும் பேணாமையான் வரும் தொழில் வறியனாதல். ஆதலின் நாணாமை முதலியன அவற்றால் வினையும் தொழிற்பயனுக்கு ஆயினமையின் அவற்றையே தொழில் என்றதாம்' (தண்டபாணி தேசிகர்).

'தொழில்' என்ற சொல் இங்கு இயல்பு குறித்தது.

நாணமில்லாமையும், தெரிந்துணராமையும், அன்பின்மையும், யாதொரு பொருளையும் போற்றாமையும் பேதையது தொழில் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பழகும் பண்பாடு அறியாது விட்டேற்றியாக இருப்பது பேதைமைக் குணம்.

பொழிப்பு

நாணமில்லாமை, தெரிந்துணராமை, அன்பின்மை, யாதொரு பொருளையும் போற்றாமை இவை பேதையின் இயல்புகள்.