இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0831



பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு
ஊதியம் போக விடல்

(அதிகாரம்:பேதைமை குறள் எண்:831)

பொழிப்பு (மு வரதராசன்): பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்குக் கெடுதியானதைக் கைக்கொண்டு ஊதியமானதைக் கைவிடுதலாகும்.

மணக்குடவர் உரை: அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின், அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல்.
இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: பேதைமை என்பது ஒன்று - பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று; யாது எனின் ஏதம் கொண்டு ஊதியம் போக விடல் - அதுதான் யாதென்று வினவின், தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல்.
(கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம்.)

மயிலை சிவமுத்து உரை: பேதைமை என்று சொல்லத்தக்கது ஒன்று உண்டு. அஃது யாதெனின் தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு தனக்கே நன்மை பயப்பனவற்றைக் கைவிடுதலாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேதைமை என்பதுஒன்று யாதுஎனின் ஏதம்கொண்டு ஊதியம் போக விடல்.

பதவுரை: பேதைமை-யாதும் அறியாமை; என்பது-என்று சொல்லப்படுவது; ஒன்று-ஒன்று (ஒரு குணம்); யாது-எது; எனின்-என்றால்; ஏதம்-கேடு, குற்றம்; கொண்டு-கைக்கொண்டு; ஊதியம்-ஆக்கம்; போக-நீங்க; விடல்- விடுதல்.


பேதைமை என்பதுஒன்று யாதுஎனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின்;
பரிப்பெருமாள்: அறியாமையென்று சொல்லப்படுவது யாதெனின்;
பரிதி: பேதைமை என்பது ஒன்று அது யாதெனில்;
காலிங்கர்: அறியாமை என்று சொல்லப்படுவது யாது எனின்;
காலிங்கர் மாற்றுரை: அல்லதூஉம் பேதைமை என்று சொல்லப்படுவதாகிய தீக்குணம் ஒன்று உண்டு; அஃது யாதோ எனின்;
பரிமேலழகர்: பேதைமை என்று சொல்லப்படுவது ஒருவனுக்கு ஏனைய குற்றங்கள் எல்லாவற்றினும் மிக்கதொன்று அதுதான் யாதென்று வினவின்;

'அறியாமையென்று சொல்லப்படுவதொன்று யாதெனின்' பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இத்தொடரிலுள்ள ஒன்று என்ற சொல்லை விளக்குவதில் உரையாசிரியர்கள் மாறுபடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பேதைமை என்ற நிலையின் இயல்பு யாது?', 'பேதைமை என்று சொல்லப்படுவதாகிய ஒன்று யாதென்றால்', 'முட்டாள்தனம் என்று சொல்லப்படுவது எதுவென்றால்', 'அறியாமை என்பது பிற குற்றங்க ளெல்லாவற்றினும் மிக்கதொன்று; அது யாதென்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பேதைமை என்று சொல்லப்படுவது ஒன்று உண்டு; அஃது யாதெனின் என்பது இப்பகுதியின் பொருள்.

ஏதம்கொண்டு ஊதியம் போக விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல்.
மணக்குடவர் குறிப்புரை: இது பேதைமையின் இலக்கணம் கூறிற்று.
பரிப்பெருமாள்: குற்றம் பயப்பனவற்றைக் கைக்கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: பேதைமையின் இலக்கணம் கூறுவார் முற்படத் தன் கருமம் அறியாமை என்று கூறினார்.
பரிதி: குற்றங்களை விளைத்துத் தனக்கு உண்டாகிய உதவியாளரைக் கெடுத்தல் என்றவாறு. [விளைத்து-உண்டாக்கி]
காலிங்கர்: குற்றமாகிய செயலைக் கொண்டு உறுதியாகிய செயலைச் செய்யாதே விடுதல் என்றவாறு.
காலிங்கர் மாற்றுரை: பிறர் குற்றம் முழுவதும் கைக்கொண்டு மற்று அவர் தமது நற்குணம் அனைத்தும் கழிய விடுதல் என்றவாறு. [கைகொண்டு - பற்றிக்கொண்டு]
பரிமேலழகர்: தனக்குக் கேடு பயப்பனவற்றைக் கைக்கொண்டு ஆக்கம் பயப்பனவற்றைக் கைவிடுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: கேடு - வறுமை, பழி, பாவங்கள், ஆக்கம் - செல்வம், புகழ், அறங்கள், தானே தன் இருமையும் கெடுத்துக் கோடல் என்பதாம். [இருமை- இம்மை, மறுமை]

'அது குற்றம் பயப்பனவற்றைக் கொண்டு நன்மை பயப்பனவற்றைப் போகவிடல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீமையைக் கொண்டு நன்மையை விடுதல்', 'தனக்குக் கேடு தருவனவற்றைக் கொண்டு ஆக்கந்தருவனவற்றைக் கைவிடுதல்', 'தீமையைப் பிடித்துக் கொண்டு நன்மையை விட்டுவிடுதல்', 'கெடுதியானவற்றைக் கைக்கொண்டு ஊதியமானவற்றைக் கைவிடுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கேடு தருவனவற்றைக் கொண்டு ஊதியமானவற்றை விடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பேதைமை என்று சொல்லப்படுவது ஒன்று உண்டு; அஃது யாதெனின் கேடு தருவனவற்றைக் கொண்டு ஊதியமானவற்றை விடுதல் என்பது பாடலின் பொருள்.
'ஒன்று' என்ற சொல் குறிப்பதென்ன?

பேதைமை என்பது நல்லது கெட்டது அறிய இயலாத இயல்பு.

பேதைமை என்று சொல்லத்தக்கது ஒன்று உண்டு. அது என்னவென்றால் தனக்குக் கெடுதியானவற்றைக் கைக்கொண்டு தனக்கு நன்மை பயப்பனவற்றை விட்டுவிடுதலாம்.
பேதைமை என்பதன் தன்மையை ஒரு எடுத்துக்காட்டுடன் கூறுகிறது இப்பாடல். பேதைமை என்பது என்ன வென்றால், எது நன்மை தரும் எது தீமை பயக்கும் என அறியத்தெரியாமல் துன்பத்தை ஏற்றுக்கொண்டு ஆக்கத்தை இழத்தலைக் குறிக்கும் என்கிறது.

இவ்வதிகாரத்துப் பாடல்களில் பேதைமை என்பது அறிவுடைமைக்கு எதிர்ச்சொல்லாக அதாவது அறிவின்மை அல்லது மடமை என்ற பொருளில் பயிலப்படவில்லை. நல்லது-கெட்டது என்பவற்றை உய்த்துணரமாட்டாத மயக்க உணர்வு என்ற பொருளிலேயே இச்சொல் ஆளப்பட்டுள்ளது. பேதைமை என்ற சொல்லுக்குக் 'கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக்கோடல்‘ என்று இளம்பூரணர் விளக்கம் செய்வார்.
பேதையானவன் உய்த்துணர இயலாமல் பல சமயங்களில் தனக்குத்தானே பல தீங்குகளைச் செய்துகொள்கிறான் என்பதும், தனக்கு ஆக்கம் தருவனவற்றை இழக்கிறான் என்பதும் கூறப்பட்டன.

'ஒன்று' என்ற சொல் குறிப்பதென்ன?

'பேதைமை என்பதொன்றியாது எனின்' என்பது இனைத் துணைத்து என்பது ஒன்று இல்லை.... (விருந்தோம்பல் 87) என்றதைப் போன்ற தொடர் வழக்கு. இதில் ‘ஒன்று’ என ஒரு சொல் இடையில் பெய்யப்பட்டுள்ளதால் வாய்மை எனப்படுவது யாதெனின் (வாய்மை 291) வெண்மை யெனப்படுவது யாதெனின்’ (844) என்பனவற்றினும் வேறுபட்ட நடையாக உள்ளது இக்குறள்.
‘ஒன்று’ என்பது அது பயின்று வருமிடத்திற்கேற்ப இன்பம், துன்பம், குற்றம், வெறுப்பு முதலிய பொருள்களைச் சுட்டும். நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன் (கனவுநிலை உரைத்தல் 1216) என்ற பாடல் தலைவி வெறுப்புடன் கூறுவதாக அமைந்ததால் அங்கு 'ஒன்று' என்றது அதன் கொடுமை விளக்கி நின்றது. அதுபோல் அச்சொல் ....தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து (ஊடலுவகை 1325) என்பதிலும் ....தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்றில் (நினைந்தவர் புலம்பல் 1202) என்பதிலும் ‘ஒன்று’ என்பது இன்பத்தைச் சுட்டியது. பேதைமை என்பதொன்று யாதெனின் என்னும் இப்பாடலில் குற்றங்களில் இதனோடு ஒருங்கு வைத்து எண்ணத்தக்கது வேறு ஒன்று இல்லை என்பதைச் சொல்கிறது.

காலிங்கரின் வேற்றுரை 'அல்லதூஉம் பேதைமை என்று சொல்லப்படுவதாகிய தீக்குணம் ஒன்று உண்டு; அஃது யாதோ எனின் பிறர் குற்றம் முழுவதும் கைக்கொண்டு மற்று அவர் தமது நற்குணம் அனைத்தும் கழிய விடுதல்' என்கிறது. இதற்கு 'தம்மோடு பழகுவாரிடத்திலிருந்து தீமையை மேற்கொண்டு நன்மையைக் கைவிடுவான்' என்ற விளக்கமும் தந்தார். இதைத் தழுவியே பரிமேலழகர் உரையும் அமைகிறது.
'பேதைமை என்று சொல்லப்படுவதாகிய குணம் ஒன்று உண்டு' எனப் பேதைமை என்ற தனித்த இயல்பு கொண்ட மாந்தர் உண்டு என்பதைத் தெரிவிப்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

பேதைமை என்று சொல்லப்படுவது ஒன்று உண்டு; அஃது யாதெனின் கேடு தருவனவற்றைக் கொண்டு ஊதியமானவற்றை விடுதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

குற்றமானதை நல்லதென மயங்கி உணர்தல் பேதைமை.

பொழிப்பு

பேதைமை என்று சொல்லப்படுவது ஒன்று யாதென்றால் தனக்குக் கேடு தருவதைக் கொண்டு ஆக்கந்தருவதை விடுதல்.