இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0800மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு

(அதிகாரம்:நட்பு ஆராய்தல் குறள் எண்:800)

பொழிப்பு (மு வரதராசன்): குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.மணக்குடவர் உரை: குற்றமற்றாரது நட்பைக் கொள்க; ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.

பரிமேலழகர் உரை: மாசு அற்றார் கேண்மை மருவுக - உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக - உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக.
(உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: குற்றமிலார் நட்பைக் கொள்ளுக; எது கொடுத்தாலும் ஒவ்வாதார் நட்பை உதறிக் தள்ளுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாசு அற்றார் கேண்மை மருவுக; ஒப்பு இலார் நட்பு ஒன்று ஈத்தும் ஒருவுக.

பதவுரை: மருவுக-கொள்க, பொருந்துக, ஏற்றுக்கொள்க; மாசற்றார்-கறைஅற்றார்; கேண்மை-நட்பு; ஒன்று-ஒரு பொருள்; ஈத்தும்-கொடுத்தும்; ஒருவுக-விடுக, விட்டுவிடுக; ஒப்பிலார்-பொருந்துதல் இலார், ஒவ்வாதார்; நட்பு-தொடர்பு.


மருவுக மாசற்றார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமற்றாரது நட்பைக் கொள்க;
பரிப்பெருமாள்: குற்றமற்றாரது நட்பைக் கொள்க;
பரிதி: குற்றமற்றார் நட்பு வேண்டினது கொடுத்தும் கூட்டிக் கொள்க;
காலிங்கர்: மனம் மாசு அற்றார் கேண்மையை மருவுக;
பரிமேலழகர்: உலகோடு ஒத்துக் குற்றமற்றார் நட்பினையே பயில்க; [உலகோடு ஒத்து - உலகத்தாரது ஒழுக்கத்திற்கு மாறுபடாது]

'குற்றமற்றாரது நட்பைக் கொள்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'உலகோடு ஒத்துக் குற்றமற்றார்' என உலகோடு ஒத்து என்ற தொடரையும் சேர்த்து உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குற்றம் அற்றாரது நட்பினை அவர் வேண்டியது ஒன்றனைக் கொடுத்தாயினும் பற்றிக் கொள்க', 'குற்றமற்றவர்களுடைய நட்பை விட்டுவிடாது அணைத்துக் கொள்ள வேண்டும்', 'குற்றமற்றவர் நட்பினைத் தேடி அடைக', 'குற்றமற்றார் நட்பினைப் பொருந்துக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குற்றமிலார் நட்பைக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.

ஒன்று ஈத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.
பரிப்பெருமாள்: ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்கு நிகரில்லாதார் நட்பினின்று நீங்குக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, குற்றம் அற்றார் நட்பைக் கொள்ளவேண்டும் என்பதூஉம், நிகர் அல்லாதார் நட்புத் தவிர வேண்டும் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: பொல்லாதார் நட்புச் சில கொடுத்தும் கைவிடுக என்றவாறு.
காலிங்கர்: தமக்குச் சிறந்தது யாதானும் ஒன்று கொடுத்தும் தமது நீர்மைக்கு ஒவ்வாதாராது நட்பினைக் கொள்ளாது நீங்குக என்றவாறு.
பரிமேலழகர்: உலகோடு ஒத்தலில்லார் நட்பினை அறியாது கொண்டாராயின், அவர் வேண்டியதொன்றனைக் கொடுத்தாயினும் விடுக.
பரிமேலழகர் குறிப்புரை: உலகோடு ஒத்தார் நட்பு இருமை இன்பமும் பயத்தலின், 'மருவுக' என்றும், அதனோடு மாறாயினார் நட்புத் துன்பமே பயத்தலின், அதன் ஒழிவை 'விலை கொடுத்தும் கொள்க' என்றும் கூறினார். இதனான் அவ்விருமையும் தொகுத்துக் கூறப்பட்டன.

'ஒரு பொருளைக் கொடுத்தாயினும் தனக்குநிகரில்லாதார்/பொல்லாதார்/தமது நீர்மைக்கு ஒவ்வாதார்/உலகோடு ஒத்தலில்லார் நட்பினின்று நீங்குக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்தோடு ஒத்துப் போகாத தீயார் நட்பினை அவர் வேண்டியது ஒன்றனைக் கொடுத்தாயினும் கைவிடுக', 'பொருத்தமற்றவர்களுடைய உறவைச் செலவு செய்தாகிலும் விலக்கிவிட வேண்டும்', 'உலகியல் அறியாது ஒன்றுக்கும் பற்றாதவரது நட்பினை எதாவது கொடுத்தாயினும் விட்டுவிடுக', 'ஒன்றினைக் கொடுத்தும் தீயவர் நட்பினை விடுக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஏதாவது கொடுத்தாயினும் தமது தன்மைக்கு ஒவ்வாதாராது தொடர்பினின்று நீங்குக என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
குற்றமிலார் நட்பைக் கொள்க; ஏதாவது கொடுத்தாயினும் ஒப்பிலார் தொடர்பினின்று நீங்குக என்பது பாடலின் பொருள்.
'ஒப்பிலார்' யார்?

மனம் ஒன்றாத நட்பை என்னத்தையாவது கொடுத்து நீங்கிவிடுக.

குற்றமற்றவர் நட்பினைக் கொள்க; ஒத்த பண்பு இல்லாதவர் நட்பினை எது கொடுத்தாயினும் விட்டு விடுக.
மனத்துக்கண் மாசில்லாதவரது அதாவது குறைகள் இல்லாத நல்லவரின் நட்பினை தேடிச் சென்று பெற்றுக்கொள்ளலாம்; அதற்கு மாறாக, தமது பண்புக்கு பொருந்தி வராதவர்களின் நட்பை 'ஒன்று ஈத்தும் ஒருவுக' - ஏதாவது கொடுக்க வேண்டியிருந்தாலும் கொடுத்து நீக்குக- எனக் கூறப்படுகிறது. முன்னர் இவ்வதிகாரத்தின் நான்காம் குறளில் நல்லாரின் நட்பைக் 'கொடுத்தும் கொளல் வேண்டும்' என்று சொல்லப்பட்டது. இங்கு 'ஈத்தும் ஒருவுக' என்று சொல்லப்படுகிறது.

மறவற்க மாசற்றார் கேண்மை.... (செய்ந்நன்றியறிதல் 106 பொருள்: மாசற்றார் கேண்மையை மறவாதீர்) என்று முன்னதிகாரப் பாடல் ஒன்று எதிர்மறை முகத்தால் சொல்லிற்று. இப்பாடல் மருவுக மாசற்றார் கேண்மை என உடன்பாட்டு முகத்தான் மாசற்ற நல்லோரின் நட்பையே நாட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
நாம் அறியாமல் நமது தன்மைகளுக்கும், குணநலன்களுக்கும் முரண்பட்டவருடன் நட்புறவு ஏற்பட்டிருக்கலாம்; அல்லது நட்பின் தொடக்கத்தில் குற்றமற்றவராக இருந்து காலப்போக்கில் மாசு படிந்த மனிதராக அவர் மாறியிருக்கலாம். அவருடன் கொண்ட நட்பை நீடித்து வைத்துக் கொண்டிருக்காமல் விரைவில் விலக்கிக் கொள்வதே நலம்; அப்படி அந்த நட்பை எளிதில் கைவிட முடியா நிலை ஏற்பட்டால் - நாம் விட்டாலும் அவர்கள் நம்மை விட்டு விலகாமல் இருந்தால்- அவர்களுக்கு ஏதேனும் ஒரு பொருளைக் கொடுத்தாவது உதறித் தள்ளவேண்டும் என்கிறது குறள்.

கொடுப்பதைக் குறிக்கும் 'ஈ' என்ற சொல் தாழ்ந்தவர்க்கும், 'தா' என்ற சொல் ஒப்பானவர்க்கும் 'கொடு' என்ற சொல் உயர்ந்தோர்க்கும் உரியன என்பர். ஒன்று ஈத்தும் ஒருவுக என்றதில் 'ஏதாவது கேட்டானானால் கொடுத்து அனுப்பிவிடு' என்பதுபோன்ற இகழ்ச்சிக் குறிப்பு தெரிகிறது.

'ஒப்பிலார்' யார்?

'ஒப்பிலார்' என்ற சொல்லுக்குத் தனக்கு நிகரில்லாதார், பொல்லாதார், தமது நீர்மைக்கு ஒவ்வாதார், உலகோடு ஒத்தலில்லார், அறிவில்லாதவர், உலகத்தோடொத்த இயல்பில்லாதார், ஒத்த பண்பு இல்லாதவர், தமக்குப் பொருத்தமில்லாத பண்பினர், தூய்மையில்லாதார், ஒவ்வாதார், பொருத்தமில்லாதவர், பொருந்தாதார், உலகியல் அறியாது ஒன்றுக்கும் பற்றாதவர், தீயவர், மனம் பொருந்தாதார், உள்ளத்தால் பொருந்தாதவர், துன்பக்காலத்து உடனிருந்து ஒன்றாக அனுபவிக்கும் உரிமை இல்லாதார் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒப்பிலார் என்றதற்குக் காலிங்கர் 'தமது நீர்மைக்கு ஒவ்வாதார்' என்று உரைத்தார். 'பொருந்தாதவர்' அல்லது 'தன் தன்மைக்கு ஒவ்வாதார்' என்று ஒப்பிலார் என்றதற்குப் பொருள் கூறினர். நண்பர்கள் இருவருள் ஒருவர் மாறுபட்டவராயினும் நட்புக் கெடும். ஆகையால் இருவரும் ஒரு நிலையராய் இருக்கவேண்டும். அன்பு, அறிவு, பண்பு நலன்கள் போன்றவற்றில் ஒத்த சிந்தனை இல்லாமல் கருத்து முரண்பாட்டுடன் விளங்குபவருடன் எப்படி நட்பைத் தொடரமுடியும்? இப்படிப்பட்டவர் உலகியல் அறியாது ஒன்றுக்கும் பற்றாதவராக யாருடனும் ஒத்துவாழ விரும்பாதவராயும் இருப்பர். இத்தகையோரிடம் கொள்ளும் நட்பினால் துன்பம் மட்டுமே மிகும். இவரே ஒப்பிலார்.

'பரிமேலழகர் 'உலகத்தோடு ஒத்தல் இல்லார்' என்றது உணர்ச்சியான் ஒத்தலை ஆசிரியர் முன்னரே கூறினமையாலும். ஒவ்வாவிடத்து மிகுதிக்கண் மேற்சென்றிடித்தலும். அழிவினவை நீக்கலும் ஆறு உய்த்தலும் வேண்டுமாதலானும், தன் தன்மைக்கு ஒவ்வாதார் என உரை காணாது உலகத்தோடு ஒத்து வாராதார் என்றது மிகமிகச் சிந்தித்து கண்ட உரையாகும்' என்று பரிமேலழகர் உரையைத் தண்டபாணி தேசிகர் பாராட்டுவார்.

குற்றமிலார் நட்பைக் கொள்க; ஏதாவது கொடுத்தாயினும் தமது தன்மைக்கு ஒவ்வாதாராது தொடர்பினின்று நீங்குக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தனது தன்மைக்கு பொருந்துவரா என்று நட்புஆராய்தல் செய்து நண்பர்களைக் கொள்ளுவதும் தள்ளுவதும் நலம்.

பொழிப்பு

குறைகள் இல்லாத நல்லவரின் நட்பினை நாடிப் பெறுங்கள்; தமது பண்புகளுக்கு ஒப்ப முடியாதவரின் நட்பிலிருந்து விலை கொடுத்தாவது நீங்குக.