இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0799கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளம் சுடும்

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:799)

பொழிப்பு (மு வரதராசன்): கேடு வரும் காலத்தில் கைவிட்டு ஒதுங்குகின்றவரின் நட்பு, எமன் கொல்லும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும்.

மணக்குடவர் உரை: கெடும்பொழுது கைவிடுவாரது நட்பைத் தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும்.
இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.

பரிமேலழகர் உரை: கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை - ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு; அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும் - தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.
(நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை ஈமத்தீயில் நினைப்பினும் நெஞ்சம் எரியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்.

பதவுரை: கெடுங்காலை-கெடுகின்ற காலத்தில்; கைவிடுவார்-விட்டு நீங்குகின்றவர்; கேண்மை-நட்பு; அடும்-கொல்லும், வருத்தும்; காலை-காலத்தில்; உள்ளினும்-நினைத்தாலும்; உள்ளம்-நெஞ்சம்; சுடும்-சுடும்.


கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கெடும்பொழுது கைவிடுவாரது நட்பை;
பரிப்பெருமாள்: கெடும்பொழுது கைவிடுவாரது நட்பை;
பரிதி: தனக்கு ஒரு விதனம் வந்த இடத்திலே கைவிடுவான் நட்பு;
காலிங்கர்: வாழும் காலத்து உடன்கூடி நட்புச் செய்து கெடும் காலத்துக் கைவிடுவாரது நட்பு;
பரிமேலழகர்: ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவார் முன் அவனோடு செய்த நட்பு;

'கெடும்பொழுது கைவிடுவாரது நட்பை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கெடுங்காலத்துக் கைவிடுவாரது நட்பை', 'துன்ப காலத்தில் கைவிடுகின்றவர்களுடைய உறவு', 'ஒருவன் கெடுங்காலத்து அவனை விட்டு நீங்குவாரது நட்பானது', 'துன்பம் வரும் காலத்தில் நீங்குவோருடைய நட்பு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கேடுற்ற காலத்தில் விட்டு நீங்குவாரது நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.

அடுங்காலை உள்ளினும் உள்ளம் சுடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் கொல்லுமதனினும்.
மணக்குடவர் குறிப்புரை: இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.
பரிப்பெருமாள்: தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்: அவர் சொல்லுதலினும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கேட்டிற்கு உதவாதார் நட்பைத் தவிர்க வென்றது.
பரிதி: தன் மரணாந்தமட்டும் நெஞ்சினைச் சுடும் என்றவாறு. [மரணாந்த மட்டும் - இறப்பு வரை]
காலிங்கர்: கூற்றுவன் வந்து அடுங்காலத்து நினைப்பினும் உள்ளம் சுடும். [அடுங் காலத்து - கொல்லுங் காலத்து]
பரிமேலழகர்: தன்னைக் கூற்று அடுங்காலத்து ஒருவன் நினைப்பினும், அந்நினைத்த உள்ளத்தைச் சுடும்.
பரிமேலழகர் குறிப்புரை: நினைத்த துணையானே இயைபில்லாத பிறனுக்கும் கூற்றினுங் கொடிதாம் எனக் கைவீடு எண்ணிச்செய்த நட்பின் கொடுமை கூறியவாறு. இனி, 'அவன் தானே ஆக்கிய கேடு தன்னை அடுங்காலை உள்ளினும், அக்கேட்டினும் சுடும்'. என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் ஆராய்ந்தால் நட்கப்படாதார் இவர் என்பது கூறப்பட்டது. [கைவீடு - கைவிட்டுவிடுதல்]

'தன்னைப் பிறர் கொல்லுங் காலத்து நினைப்பினும் நினைத்த மனத்தினை அந்நட்புச் சுடும்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தன் மரணாந்தமட்டும் நெஞ்சினைச் சுடும்' என்பது பரிதியின் உரை. காலிங்கரும் பரிமேலழகரும் 'கூற்றுவன் வந்து அடுங்காலத்து நினைப்பினும் உள்ளம் சுடும்' என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் எமன் அடுங்காலத்து நினைத்தாலும் அந்நினைத்த உள்ளத்தை அந்நட்பு எமனைக் காட்டிலும் கொடியதாய் வருத்தும்', 'அழிவையே உண்டாக்கும்; குளிர்ச்சி மிகுந்த நேரமாகிய காலை வேளையில் அவர்களை நினைத்தாலும் மனம் கொதிக்கும்', 'சாகும்போது நினைத்தாலும் மனத்தை மிக வருத்தும்', 'இறக்கும் காலத்தில் நினைத்தாலும் நினைத்த உள்ளத்தைச் சுடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சாகும் காலத்தில் எண்ணினாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கேடுற்ற காலத்தில் விட்டு நீங்குவாரது நட்பு அடுங்காலை எண்ணினாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும் என்பது பாடலின் பொருள்.
'அடுங்காலை' என்ற சொல் குறிப்பது என்ன?

வேண்டிய காலத்தில் நட்பைக் கைவிட்ட செயலை எப்படி ஆற்றிக் கொள்வது?

தான் இறக்கும்சமயம்கூட கேடுவருங்காலத்து தன்னை நட்டவரை விட்டு நீங்கியவரது நட்பை எண்ணிப் பார்த்தாலும் ஒருவன் உள்ளம் வேதனையால் எரியும்.
தனக்கு நன்மை கிடைப்பதாக உள்ளவரையில் பழகிக் கொண்டிருந்துவிட்டு நட்டவர்க்கு கேடு சூழ்ந்த நிலையில் ஒதுங்கிவிட்டவரது செயலைத் தான் சாகும் வேளையில் நினைத்தாலும் ஆற்றமுடியாமல் உள்ளம் சுட்டெரிக்கும். நட்புக்குச் செய்யப்பட்ட கெடுதல் மறக்க முடியாதபடியான வேதனையாக இருக்கும். இறக்கும்போது எண்ணிணாலும் வருத்தம் மிகும்.
ஒரு நண்பன் என்பவன் உடுக்கை இழந்தவன் கை போல இடுக்கண் களைபவனாக இருக்கவேண்டும் என்று முன்னதிகாரத்தில் கூறப்பட்டது (788). அதாவது நண்பனுக்குத் துன்பம் நேர்கையில் விரைந்து வலியச் சென்று துணை நிற்கவேண்டும் எனச் சொல்லப்பட்டது. அவ்வாறன்றித் நண்பனுக்குக் கேடு வந்தபொழுது கைவிட்டுச் செல்பவனது நட்பைப்பற்றிச் சாகும் போது நினைத்தால் கூட நம் நெஞ்சைச் சுடும். சாகுந்தறுவாயில் பொதுவாக ஒருவர் தனக்குப் பிறரால் நேர்ந்த கொடுமைகளையெல்லாம் மன்னித்து மறந்து விட்டிருப்பார்கள். ஆனால் கேடுற்றவேளைக் கைவிடுவார் தொடர்பை சாவில் நினைத்தாலும் நெஞ்சு பொறுக்கமுடியாமல் வேகும் என்கிறது இப்பாடல்.

இக்குறளுக்கு பலவகையான உரைகள் உள. அவற்றுள் குறிக்கத்தக்கன:

  • 'தான் கேடுற்ற வேளை நண்பன் உதவாமல் கைவிட்டுச் சென்றுவிடுகிறான். தன்னை வேறொருவன் கொல்ல வருகிறான். அப்போது கைவிட்டவன் கேண்மையை நினைக்கிறான். தனக்கு நேர இருக்கும் கொலைத் துன்பத்தைக் காட்டிலும் கெடுங்காலைக் கைவிட்டவன் நட்பு நெஞ்சினைச் சுடுகிறது' - மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரது உரை.
  • பரிதி. 'கெடுங்காலைக் கைவிட்டவன் நட்பு தான் இறக்குமட்டும் சுடும்' அதாவது 'அத்தகைய கொடியோன் நட்பு சாகும்வரை கைவிடப்பட்டவன் நினைக்கிற போதெல்லாம் நெஞ்சைச் சுடும்; சாவிற்குப் பின்தான் மறக்கும்' என்றார்.
  • காலிங்கர் உரை 'வாழும் காலத்து உடன்கூடி நட்புச் செய்து கெடும் காலத்துக் கைவிடுவாரது நட்புக் கூற்றுவன் வந்து கொல்லுங்காலத்து நினைப்பினும் உள்ளம் சுடும்.
  • பரிமேலழகரது சிறப்புரை 'கேடு எய்தியபொழுது கைவிடப்பட்டவன் நிலையை சாகப்போகும் வேறொருவன் - மூன்றாம் ஒருவன் நினைத்துப் பார்க்கிறான். இறப்பை எதிர்கொள்ளும் அவனுக்குத் தன் நிலைமையைக் காட்டிலும் கைவிடப்பட்டவன் நிலை பெரிதாகி நினைக்கிற மனத்தையே சுடுகிறது' என்கிறது. இதில் கைவிடுபவன், கைவிடப்பட்டவன், இவர்களுக்கும் சாகப்போகும் இரங்குபவனுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. அந்நிலையிலே மிக வருந்துகிறான் என்ற கருத்தைத் தருவது.
  • தன்னைத் தானே கொல்லுங்காலத்து (தற்கொலை) உண்டாகும் துன்பத்தைவிட கெடுங்காலம் நீங்கியவரது நட்பை நினைத்தால் ஏற்படும் கொடுமை வருத்தம் மிகத்தரும்
  • 'சொல்லமைதிக்கேற்ப கைவிடுவார் கேண்மை விட்ட ஞான்று சுடுவதைக் காட்டிலும் சாஞான்று எண்ணினும் மிகச் சுடும் என்ற உரை சிறந்தது' என்று தண்டபாணி தேசிகர் கருத்துரைப்பார்.

'கேடுவருங்காலத்து தன்னை விட்டு நீங்கியவரது நட்பைக் கூற்றுவன் வந்து கொல்லுங்காலத்து எண்ணிப் பார்த்தாலும் ஒருவன் உள்ளம் வேதனையால் எரியும்' என்னும் உரை இக்குறளுக்குப் பொருத்தம்.

'அடுங்காலை' என்ற சொல் குறிப்பது என்ன?

அடுங்காலை என்ற தொடர் கொல்லுங்காலை என்ற பொருள் தரும். யார் யாரைக் கொல்லுவது என்பதில் உரையாசிரியர்கள் மாறுபடுகின்றனர். இதற்கு நட்புக்கொண்டவனைப் பிறன் ஒருவன் கொல்லுங்காலை என்றும், அவனைக் கூற்று கொல்லும்வரை அதாவது அவன் சாகும்வரை என்றும் அவன் தன்னைத்தானே கொல்லும்போதும் என்றும், கைவிடப்பட்டதை எண்ணிய மூன்றாமவன் இறக்கும் தறுவாயில் என்றும் விளக்கங்கள் தரப்பட்டன.
'அடுங்காலை' என்பது கூற்றுக் கொல்லும்போது அதாவது கைவிடப்பட்டவன் சாகும்பொழுது என்ற பொருள் நேரியது.

'அடுங்காலை' என்றதற்கு இங்கு '(கூற்றுக்) கொல்லும்போது' என்பது பொருள்.

கேடுற்ற காலத்தில் விட்டு நீங்குவாரது நட்பு சாகும் காலத்தில் எண்ணினாலும் நினைத்த உள்ளத்தை வருத்தும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நட்பாராய்தல் செய்யாத தொடர்பு தேவைப்படும் நேரத்தில் மறைந்து ஒடிவிடும்.

பொழிப்பு

துன்பக் காலத்துக் கைவிட்டவர் நட்பினை சாவும் நேரத்தில் நினைத்தாலும் நெஞ்சம் வேதனையுறும்.