உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
(அதிகாரம்:நட்பாராய்தல்
குறள் எண்:798)
பொழிப்பு (மு வரதராசன்): ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமலிருக்கவேண்டும்; அதுபோல் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக.
இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.
பரிமேலழகர் உரை:
உள்ளம் சிறுகுவ உள்ளற்க - தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக; அல்லற்கண் ஆற்று அறுப்பார் நட்புக் கொள்ளற்க - அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக.
(உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம். 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.)
ச தண்டபாணி தேசிகர்:
ஆபத்துக்கு உதவாத சினேகத்தால் ஊக்கம் சுருங்குமாதலின் அச்சினேகத்தைக் கொள்ளற்க. தவறிக் கொண்டால் ஊக்கம் குறைதற்கு ஏதுவாய வினைகளை எண்ணற்க என்று உரைப்பாரும் உளர்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளம் சிறுகுவ உள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு கொள்ளற்க.
பதவுரை: உள்ளற்க-நினையாதொழிக; உள்ளம்-ஊக்கம், மனம்; சிறுகுவ-சுருங்குவதற்குக் காரணமானவை; கொள்ளற்க-கொள்ளாதொழிக; அல்லற்கண்-துன்பத்தில்; ஆற்று அறுப்பார்-துணை வலியாய் அமையாமல் கைவிடுபவர்; நட்பு-தோழமை.
|
உள்ளற்க உள்ளம் சிறுகுவ:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக; [சிறுகுமவற்றை - பெருமை குறைப்பவைகளை]
பரிப்பெருமாள்: தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக;
பரிதி: நினைக்கக் கடவானல்லன், தன் செல்வம் குறையின் காரியத்தை;
காலிங்கர்: சிறுமை உள்ளனவற்றை எஞ்ஞான்றும் உள்ளம் கருதற்க;
பரிமேலழகர்: தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக;
பரிமேலழகர் குறிப்புரை: உள்ளம் சிறுகுவ ஆவன, தம்மின் வலியாரோடு தொடங்கியனவும் பயனில்லனவும் ஆம்.
'தான் சிறுகுமவற்றை உள்ளத்தால் நினையாதொழிக' என்றும் 'தன் செல்வம் குறையின் காரியத்தை நினைக்கக் கடவானல்லன்' என்றும் 'தம் ஊக்கம் சுருங்குவதற்குக் காரணமாய வினைகளைச் செய்ய நினையாதொழிக' என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனம் சுருங்கும் எண்ணங்களை எண்ணாதே', 'தம் ஊக்கம் குன்றுதற்குக் காரணமாகிய இழிசெயல்களை நினையாதொழிக', 'மனதைக் குறுக்கிவிடக்கூடிய அற்பச் செயல்களை நினைப்பதும் தகாது', 'தம் ஊக்கம் குறைவதற்குக் காரணமானவற்றை நினைக்க வேண்டாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
ஊக்கம் சுருங்குதற்கு ஏதுவானவற்றை எண்ணாதொழிக என்பது இப்பகுதியின் பொருள்.
கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக.
மணக்குடவர் குறிப்புரை: இது தீக்குணத்தார் நட்பைத் தவிர்க வென்றது.
பரிப்பெருமாள்: அதுபோல, அல்லல் வந்தவிடத்து வலியறுப்பாரது நட்பைக் கொள்ளாதொழிக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இழிகுணத்தார் நட்புத் தவிர்க என்றது.
பரிதி: அதுபோலத் தனக்கு விதனம் செய்தார் நட்புச் செய்யக்கடவானல்லன் என்றவாறு.
காலிங்கர்: அல்லல் உற்ற இடத்துக் கீழ் அறுப்பாரது நட்பினையும் கொள்ளற்க என்றவாறு. [கீழ் அறுப்பாரது - மறையை வெளிப்போக்கிப் பிறர் அறியாதபடி தீங்கு செய்வர்]
பரிமேலழகர்: அதுபோலத் தமக்கு ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆற்று' என்பது முதனிலைத் தொழிற் பெயர். முன்னெல்லாம் வலியராவார் போன்று ஒழிதலின், 'ஆற்று அறுப்பார்' என்றார். எடுத்துக்காட்டு உவமை. கொள்ளின் அழிந்தேவிடும் என்பதாம்.
'அல்லல் வந்தவிடத்து வலியாகாதாரது நட்பினைக் கொள்ளாதொழிக' என்றும் 'அல்லல் உற்ற இடத்துக் கீழ் அறுப்பாரது நட்பினையும் கொள்ளற்க' என்றும் 'ஒரு துன்பம் வந்துழிக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக' என்றும் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'துன்பத்தில் கைவிடுவார் நட்பைக் கொள்ளாதே', 'அதுபோலத் தமக்குத் துன்பம் வந்த விடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாதொழிக', 'ஆகையினால் துன்ப காலத்தில் அருகிருந்து ஆறுதல் சொல்லக்கூட இல்லாது போனவர்களை நட்பாக மனதிலும் கொள்ளக் கூடாது', 'அதுபோல தமக்கு ஒரு துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ளாது ஒழிக' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
ஊக்கம் சுருங்குதற்கு ஏதுவானவற்றை எண்ணாதொழிக; தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம் என்பது பாடலின் பொருள்.
இரண்டு அறங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
|
ஊக்கம் குறையச் செய்யாதவர் நட்பையே பெறுக.
ஊக்கம் குறைதற்குக் காரணமானவற்றை எண்ணாமல் இருத்தல் வேண்டும்; தனக்குத் துன்பம் வருங்காலத்திலே கைவிட்டுப் போவார் நட்பை விட்டுவிட வேண்டும்.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்...(ஊக்கமுடைமை 596 பொருள்: நினைப்பன எல்லாம் உயர்வையே நினைக்க) என ஊக்கநிலை காட்டி முன்பு கூறப்பட்டது. இங்குத் தம் தாழ்நிலையைத் தாமே நீக்கிக் கொள்ளவேண்டும் என்ற பொருளில் 'உள்ளற்க உள்ளம் சிறுகுவ' எனச் சொல்லப்படுகிறது.
ஊக்கத்தினைக் குறைக்கச் செய்கின்றதாவது, 'ஏன் இப்படிச் செய்தோம்' என்று பின்னால் வருத்தப்பட வைக்கும் செயல். அப்படிப்பட்டதை எப்பொழுதும் எண்ணியும் பார்க்கவேண்டாம் எனச்சொல்கிறது பாடல். 'நமக்கு நண்பர் இருக்கிறார்; அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார் என்ற எண்ணத்தில், ஒருவர் சிலவற்றைச் செய்கிறார். ஆனால் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிற்கும் நண்பர் உதவ முடியாது. சில நட்பினர் நாம் துன்பங்களை எதிர்கொள்ளும் வேளையில், உதவ முடிந்தும், நம்மைக் கைவிடுகின்றவராயிருப்பர். அதுபோழ்து சிறுமைப்படுவதுதான் மிஞ்சும். அப்படிப்பட்ட நட்பைக் கொள்ளவும் வேண்டாம் எனவும் கூறப்படுகிறது.
நட்பை நம்பி எல்லாச் செயல்களிலிலும் ஈடுபடவேண்டாம் என்பதும் பெறப்படுகிறது.
ஆற்றறுப்பார் என்ற சொல்லுக்கு மணக்குடவர் ஆற்றல்-அறுப்பார் எனக்கொண்டு வலிமையில்லாதவர் என்று பொருள் கூறினார்.
பரிமேலழகர் ஆற்றுதல் (தாங்குதல்) அறுத்தார் எனக்கொண்டு தாங்குதல் இல்லாதார் அதாவது கைவிடுவார் என்று பொருள் உரைத்தார்.
வேறு சிலர் ஆறு-வழி, ஆற்றறுப்பார் வழியில் பிரிந்து போகின்றவர்கள் என்றும் வழித்துணையாவார் போல் வந்து நடுவழியிற் பிரிபவர் என்றும் நட்டாற்றில் விட்ட துணை'
என்றும் உரை வரைந்தனர். அமரகத்து ஆற்றறுக்கும்.... (தீ நட்பு 814 பொருள்: போர் வந்தபோது களத்தில் கீழே தள்ளிவிட்டு ஓடும் (குதிரை போன்று) ... ) என்னுங் குறளிலும் ஆற்றறுத்தல் என்ற தொடர் இப்பொருளிலே ஆளப்பட்டதால் வலிமையில்லாதவர்/கைவிடுவார் என்ற பொருள் சிறக்கும்.
தமக்கு ஒரு துன்பம் வருவதன் முன்னெல்லாம் உறுதியாவார் (தாங்குவார்) போன்றிருந்து துன்பம் வந்தவிடத்து நீங்கிப் போதலால் 'ஆற்றறுப்பார்' என்று கூறப்பட்டது. ஆற்றறுப்பார்-வலியறுப்பார். அஃதாவது கைவிடுவார்.
|
இரண்டு அறங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஊக்கம் குறைவதற்கானவற்றை எண்ணாதிருக்க வேண்டும் என்ற ஒன்றும் துன்பம் வந்த போது கைவிடுகின்றவரின் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும் என்ற மற்றொன்றுமாக இரண்டு வாக்கியங்களைக் கொண்ட குறள் இது.
இவ்விரண்டு அறங்களுக்கும் தொடர்பு உள்ளதா? உண்டு என்றால் என்ன வகையான தொடர்பு?
இரண்டு வாக்கியங்களையும் தொடர்புபடுத்திச் சொல்லப்பட்ட உரைகளாவன:
- இரண்டு வாக்கியங்களுக்கான தொடர்பை விளக்கத் தண்டபாணி தேசிகர் காட்டும் உரை: 'ஆபத்துக்கு உதவாத சினேகத்தால் ஊக்கம் சுருங்குமாதலின் அச்சினேகத்தைக் கொள்ளற்க. தவறிக் கொண்டால் ஊக்கம் குறைதற்கு ஏதுவாய வினைகளை எண்ணற்க'.
- மு கோவிந்தசாமி 'மனஞ் சுருங்கும் நட்பை நினைக்கவும் கூடாது. துன்பத்துள் கைவிடுவார் நட்பைக் கொள்ளவும் கூடாது. உயர்வுள்ளல் என்றது ஆற்றறுப்பார் நட்பால் உள்ளஞ் சிறுக்கும்; எண்ணங்கள் மிகுமென்பதுமாம்' என்று தொடர்புபடுத்துவார்.
- 'உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்' எனப் புலியூர்க்கேசிகன் விளக்கஞ் செய்வார்.
- நட்பாளன் ஒருவன் நமக்கு ஊக்கம் குறையும்படி தாழ்வாக எண்ணச்செய்கிறானா? துன்பகாலத்திலே ஓடிப்போகிறானா? அவனது நட்பை விலக்கிவிடுக.
- நட்டாற்றில் கைவிட்டுவிடும் நட்பை நினைத்துப்பார்க்க கூடாது, நமக்கது உற்சாகத்தை தராது.
- ஊக்கத்தைச் சிதைக்கும் செயல்களை நினையாது, ஊறு வந்தபோது விலகுவோர் நட்பைத் தொடராது இருப்பது நல்வழி.
- சிறுமைப் படுத்தும் எண்ணங்களைக் கைவிடுவது போலச் சிறுமையுடையார் நட்பையும் கைவிடுக.
- எண்ணிக் கொண்டு இருக்க வேண்டாம் சிறுமைப்பட்ட எண்ணத்தை. தொடர வேண்டாம் துன்பத்தில் தொடர்பினைத் துண்டிக்கும் நட்பை.
- உற்சாகம் குன்றும் செயல்களை எண்ண வேண்டா; நம் துன்பக் காலத்தில் நம்மைக் கைவிட்டு விடுபவரின் நட்பைக் கொள்ள வேண்டா.
துன்பத்தில் கைவிடுவார் நட்பை விலக்குக; (அவரை நம்பி) ஊக்கம் குறைதற்கு ஏதுவாய செயல்களை எண்ணற்க
நட்டாற்றில் கைவிடுவாருடன் சேர்ந்து உயர்வான செயல்களை எண்ண முடியாது என்பது இரு வாக்கியங்களுக்கான தொடர்பாம்.
|
ஊக்கம் சுருங்குதற்கு ஏதுவானவற்றை எண்ணாதொழிக; தமக்குத் துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பினைக் கொள்ள வேண்டாம் என்பது இக்குறட்கருத்து.
நட்பாராய்தலில் துன்பத்தில் துணைநிற்பாரா என்று நோக்குக.
ஊக்கம் குன்றுதற்குக் காரணமாகிய செயல்களை எண்ண வேண்டாம்; துன்பம் வந்தவிடத்துக் கைவிடுவார் நட்பைக் கொள்ளவேண்டாம்.
|