இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0797



ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

(அதிகாரம்:நட்பாராய்தல் குறள் எண்:797)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு ஊதியம் என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பிலிருந்து நீங்கி அவரைக் கைவிடுதலாகும்.

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல்.
இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்கு ஊதியம் என்பது - ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் - அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.
(நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் 'வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே' மாறு போலத் (நாலடி.180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.)

சி இலக்குவனார் உரை: ஒருவர்க்கு இலாபம் என்று சொல்லத் தகுந்தது அறியாதாரின் நட்பினை நீக்கிவிடுதலாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல்.

பதவுரை: ஊதியம்-ஆதாயம், இலாபம், பேறு; என்பது-என்று சொல்லப்படுவது; ஒருவற்கு-ஒருவர்க்கு; பேதையார்-அறிவுகேடர்; கேண்மை-நட்பு; ஒரீஇ-ஒழிந்து; விடல்-விடுதல்.


ஊதியம் என்பது ஒருவற்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு இலாபமென்று சொல்லப்படுவது;
பரிப்பெருமாள்: ஒருவனுக்கு இலாபமாவது;
பரிதி: ஒருவர்க்கு லாபமானது;
காலிங்கர்: உலகத்து உணர்வுடை ஒருவனுக்குப் பெரும்பேறு என்று எடுத்து உரைக்கப்படுவது யாதோ எனின்; [பெறும்பேறு - அடையும் செல்வம்]
பரிமேலழகர்: ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது;

'ஒருவனுக்கு இலாபமென்று/பேறு என்று சொல்லப்படுவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவர்க்கு வருவாய் என்பது யாது?', 'ஒருவனுக்கு ஊதியம் (இலாபம்) என்று சொல்லப்படுவது', 'ஒருவனுக்கு இலாபமான காரியம் என்று சொல்லப்படும்', 'ஒருவனுக்கு ஊதியம் என்பது என்ன என்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவர்க்கு ஆதாயம் என்பது என்பது இப்பகுதியின் பொருள்.

பேதையார் கேண்மை ஒரீஇ விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல்.
மணக்குடவர் குறிப்புரை: இது பேதையார் நட்பைத் தவிர்கவென்றது.
பரிப்பெருமாள்: அறிவிலாதாரோடு நட்பாகுதலை நீங்கிவிடுதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பேதையார் நட்புத் தவிர்க என்றது.
பரிதி: பொல்லாதார் நட்பை விடுதல் என்றவாறு.
காலிங்கர்: அறிவு கேடரது கெழுமுதலை செய்யாது தப்பிப் போதல் என்றவாறு. [அறிவுகேடரது- அறிவு திரிந்தவனது]
காலிங்கர் குறிப்புரை: ஒரீஇ என்பது நீங்கியொழிதல் என்பது.
பரிமேலழகர்: அறிவிலாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல்.
பரிமேலழகர் குறிப்புரை: நட்பு ஒழிந்தாலும் நீங்காக்கால் 'வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வே' மாறு போலத் (நாலடி.180) தீங்குவருதலின் 'விடல்' என்றும் நீங்கியவழித் தீங்கொழிதலேயன்றி இருமை இன்பத்திற்கு உரிமை எய்தலும் உடைமையின், அதனை 'ஊதியம்' என்றும் கூறினார்.

'அறிவில்லாதாரோடு நட்பாகுதலை நீங்கி விடுதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவிலார் நட்பை அகற்றிக் கொள்ளுதல்', 'அறிவில்லாதவரோடு நட்புக் கொண்டிருந்தால் அதனைவிட்டு நீங்குதலாம்', '(துன்ப காலத்தில் உதவாத) மூடர்களுடைய உறவை விலக்கிவிடுவது', 'அறிவிலார் நட்பினை நீக்கிவிடுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறிவு திரிந்தவரது நட்பை விட்டு நீங்குதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவர்க்கு ஆதாயம் என்பது பேதையார் கேண்மையை விட்டு நீங்குதல் என்பது பாடலின் பொருள்.
'பேதையார் கேண்மை' என்ற தொடரின் பொருள் என்ன?

அறிவு கேடரின் நட்பு நீங்குதல் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.

அறிவு திரிந்தவர்களுடன் செய்த நட்பிலிருந்து விலகிக்கொள்வது ஒருவருக்கு ஆதாயம் தருவதே.
நட்புச் செய்த ஒருவனுடன் பழகியபின் அவன் அறிவுகேடன் எனத் தெரிய வருகிறது. அப்பொழுது, அப்பேதையை ஒழிந்து நட்புச்செய்யாமல் தப்பிப்போதல் இழப்பு எனக் கருதவேண்டாம்; அது பெரிய ஆக்கம் அதாவது வருவாய் என்று எண்ணிக்கொள்க. கேட்டினும் உண்டோர் உறுதி.................(796) ....தோற்றவர் வென்றார்....(ஊடல் உவகை 1327) என்பன போன்ற குறள் நடையில் இங்கு இழப்பே ஊதியம் எனப்படுகிறது. பேதையரது நட்பை இழத்தல் என்பது ஒருவருக்கு கிடைத்த பயனேயாம்.
சிறிது பழகும்போதே ஒருவர் அறிவு திரிந்தவரா இல்லையா என்பது தெரிந்துவிடுமாதலால் நட்புறவில் முடியுமுன் அத்தகையரது நட்பைக் கழித்து விடுக என்கிறது பாடல்.
என்ன ஆதாயம் பெறப்படும்? பேதையரிடம் நட்புகொள்வதால் நம் நேரம் வீணடிக்கப்படும். அந்நட்பு நீங்கும்போது நேரம் கிடைத்து அதை ஆக்க வழிகளில் செலவிட்டு ஆதாயம் பெறலாம். அந்நட்பு நீடித்தால் வேங்கையோடு சந்தனமரமும் அழிவதுபோல் நட்டார்க்கு பேரழிவு உண்டாகலாம்; ....ஏதங்கொண்டு ஊதியம் போகவிடல்(பேதைமை 831 பொருள்....கேடு பயப்பனவற்றைக் கொண்டு ஊதியத்தைப் போகவிடல்) ஆகிவிடும்.

ஒரீஇவிடல் என்பதற்கு 'நீக்கிவிடல்' என்பதுபோல ஒரு சொல்லாகக் கொண்டும். 'கெழுமுதலைச் செய்யாது தப்பிப் போதல்' என இருசொல்லாகக் கொண்டும் உரை கண்டனர். ஒருவுதல் தீமைகண்டுழி விலகுதலையும், விடல்-பின்னர் இணைய நேரினும் இணையாது முழுதும்துறத்தலையும் உணர்த்துவனவாகக் கோடல் தகும் (தண்டபாணி தேசிகர்).
குறளில் 'ஊதியம்' என்ற சொல் பயன், பொருள், ஆக்கம், வருவாய்(இலாபம்) ஆகியவற்றைக் குறிப்பதாக வந்துள்ளது. இரா இளங்குமரன் 'ஊதியம் என்பது பெருவழக்குச் சொல்லாக இந்நாள் உள்ளது. வேலைக்கு ஊதியம், ஊதியத்தின் மேல் ஊதியம் என்பவை உள. மிகுதல் பொருளது அது. ஊதும் வாய், பலூன் என்னும் ஊத்தாம் பெட்டி, குளிர்மிக்க ஊதைக் காற்று, மிகச் செலவழிக்கும் ஊதாரி, ஊதுகாமாலை, ஊத்தம் போடல், ஊதி விட்டது என்பனவெல்லாம் பருமை வழிப்பட்டவை' என்பார். இது மேல்வரவு, எதிர்பாரா வரவு என்பவை ஊதியம் உலகியல் பொருள். ஊதியம் ஆதாயம் அல்லது வருவாய் என்ற பொருள் தருவதாக இங்கு ஆளப்பட்டது.
ஊதியம் என்பது ஒன்றைப் 'பெறுவதை'க் குறிப்பது. ஆனால் ஊதியம் பேதையார் நட்பை 'இழத்தலால்' உண்டாகிறது என்று இக்குறள் சொல்கிறது.

'பேதையார் கேண்மை' என்ற தொடரின் பொருள் என்ன?

'பேதையார் கேண்மை' என்ற தொடர்க்கு அறிவில்லாதாரோடு நட்பாகுதல், பொல்லாதார் நட்பு, அறிவு கேடரது கெழுமுதல், அறிவிலாரோடு நட்பு, அறிவில்லாதவனுடனே சிநேகம், அறிவில்லானோடு நட்பு, அறிவில்லாதவருடன் செய்துகொண்ட நட்பு, அறிவிலாதாருடன் கொண்ட நட்பு, அறிவிலார் நட்பு, அறிவில்லாதவரோடு நட்புக் கொண்டிருத்தல், மூடர்கள் நட்பு, அறிவிலிகளின் நட்பு, அறியாதாரின் நட்பு, அறிவிலாதாரோடு தெரியாமற் செய்துகொண்ட நட்பு, அறிவற்றவர்களது நட்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பேதையார் என்ற சொல்லுக்கு அறிவிலார் என்றே பெரும்பான்மையர் பொருள் கூறினர். தண்டபாணி தேசிகர் 'அறிவு இருந்தும் செய்தக்க செய்யாமையும் தகாதன செய்தலும் பேதைமையாதல் போல முறுகிய நட்புணர்விருந்தும் உடுக்கையிழந்தவன் கைபோல உதவ வேண்டிய இவன் உதவாதிருத்தல் பேதைமையானாம்' என்ற கருத்தை வழிமொழிகிறார். குறளில் 'பேதைமை என்பது நல்லது-கெட்டது, ஊதியம் பயப்பது என்பவற்றை உய்த்துணரமாட்டாத மயக்க உணர்வேயாகும்' என்ற கருத்துடையவர் இவர்.
அறிவிலாரும் பேதையாரும் ஒன்றல்ல. பேதைமை என்பது முற்றும் அறியாமையைக் குறிப்பதாகாது. நண்பன் ஒருவன் அறிவுள்ளவன்தான்; நட்பாகத்தான் பழகுகின்றான். ஆனால் உதவி செய்ய வேண்டிய வேளையில் மனம் திரிந்து 'இவனுக்கு இப்பொழுது நாம் ஏன் உதவவேண்டும்? உதவினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்?' என்றபடி சிந்திப்பது அறிவு திரிதல் எனக் கொள்ளலாம். மனம் பேதலித்த தன்மை பேதைமை.
இத்தொடரிலுள்ள கேண்மை என்பதற்கு நட்பு என்பது பொருள்.

'பேதையார் கேண்மை' என்றது அறிவுதிரிந்தவரது நட்பு எனப்பொருள்படும்.

ஒருவர்க்கு ஆதாயம் என்பது அறிவு திரிந்தவரது நட்பை விட்டு நீங்குதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிவுகேடர்களின் நட்பு கேடு உண்டாக்கும் என்பதை மனதில் இருத்தி நட்பாராய்தல் வேண்டும்.

பொழிப்பு

அறிவு திரிந்தவரது நட்பை விட்டு நீங்குதல் ஒருவர்க்கு ஆதாயம் என்பதாம்.